வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (03/10/2018)

கடைசி தொடர்பு:10:57 (03/10/2018)

இந்தியாவில் கழிவறை வசதியில்லாத பெண்கள் வரிசையின் நீளம் தெரியுமா? #VikatanInfographics

மக்கள்தொகை அடிப்படையில், கழிவறை வசதி இல்லாத டாப் 5 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. கழிவறை இல்லை என்பது ஆண்களை விட பெண்களுக்கு அதிக துயரமும், சவாலும் அளிக்கக்கூடிய ஒரு விஷயம்.

இந்தியாவில் கழிவறை வசதியில்லாத பெண்கள் வரிசையின் நீளம் தெரியுமா? #VikatanInfographics

கடந்தவாரம் சேலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஓமலூரில் உள்ள கோட்ட கவுண்டம்பட்டியில் வசிக்கும் செல்லத்துரை என்கிற இளைஞர் தான் பணிபுரியும் வணிக வளாகத்திலுள்ள பெண்ணின் மீது காதல் கொள்கிறார். இருவரும் காதலிக்க அது திருமணமாக மாறியது. தன் காதலியை மனைவியாக வீட்டுக்கு அழைத்து வருகிறார் செல்லத்துரை. இரண்டு நாள்கள் அங்குத் தங்கியிருந்த புதுமணப்பெண்ணுக்கு அந்த வீட்டில் கழிவறை இல்லை என்பதையொட்டி கவலை எழுகிறது. இது விவாதமாக மாறி, அந்தப் பெண் தன் வீட்டுக்குச் சென்று விடுகிறார். போனவருக்குத் திரும்பவும் கணவன் வீட்டுக்கு வர மனமில்லை. இதனால் கலக்கமுற்ற செல்லத்துரை அருகிலுள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டில் கழிவறை உள்ளவர்களுக்கு இது சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய பெட்டிச் செய்திதான். ஆனால், உலகம் முழுக்க இன்னும் எத்தனை வீடுகளில் கழிவறை இல்லை என்பதை நாம் தெரிந்துகொண்டால் மட்டுமே இது எத்தனை பேருடைய வாழ்வாதாரப் பிரச்னை என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக, இந்தியாவில் எத்தனை வீடுகளில் கழிவறை இல்லை என்கிற தகவல்கள், பிரதமர் மோடியின் `தூய்மை இந்தியா' திட்டத்தின் இதுவரையிலான செயல்பாடு குறித்த ஓர் எளிய சித்திரத்தையும் நமக்குக் காட்டுகிறது. 

செல்லத்துரை மனைவியுடன், கழிவறை விவகாரம்

மக்கள்தொகை அடிப்படையில், கழிவறை வசதி இல்லாத டாப் 5 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. கழிவறை இல்லை என்பது ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகத் துயரமும், சவாலும் அளிக்கக்கூடிய ஒரு விஷயம், இந்தியாவில் அப்படி எத்தனை  பெண்கள் இதைத் தினசரி நேர்கொள்கிறார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் அந்த எண்ணிக்கை 35.5 கோடி எனக் காட்டுகிறது.

இந்தியாவில் கழிவறை வசதி இல்லாமல் வாழும் பெண்களை, ஒரே வரிசையில் நிற்க வைத்தால், பூமியை 4 முறை வலம் வரும் அளவுக்கு அந்த வரிசை நீளும் என்கிறது இந்த ஆய்வு. 

இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இந்தத் தரவுகள் உதவுமென்று எண்ணுகிறேன்.

 


டிரெண்டிங் @ விகடன்