வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (09/10/2018)

கடைசி தொடர்பு:21:04 (09/10/2018)

`ஆதாரங்களை வைத்தே கட்டுரை வெளியிட்டோம்... இனியும் வெளியிடுவோம்'' - 'நக்கீரன்' பொறுப்பாசிரியர்! #VikatanExclusive

`ஆதாரங்களை வைத்தே கட்டுரை வெளியிட்டோம்... இனியும் வெளியிடுவோம்'' - 'நக்கீரன்' பொறுப்பாசிரியர்! #VikatanExclusive

ளுநரின் பணிகளில் தலையிட்டதாக நக்கீரன்' இதழின் ஆசிரியர் கோபால் மீது ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை புனே செல்வதற்காக மீனம்பாக்கம் விமான நிலையம் சென்ற அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், உண்மையில் நக்கீரன்' கோபாலின் கைதுக்குப் பின்னணியில், நக்கீரன் இதழில் வெளியான அட்டைப்படக் கட்டுரை விவகாரம் இருந்ததுதான் காரணம் எனத் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை போலீஸ் காவலில் வைக்க முடியாது என எழும்பூர் நீதிமன்றம் இன்று மாலை விடுவித்தது.   

நக்கீரன் கோபால் கைது

இந்தக் கைது நடவடிக்கை குறித்து 'நக்கீரன்' இதழின் பொறுப்பாசிரியர் கோவி.லெனினிடம் பேசினோம்...

"அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக,  அ.தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு முறையும் இப்படியான கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை அதிகமாக உள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 'நக்கீரன்' அலுவலகம் மீது திட்டமிட்டுத் தாக்குதலை நடத்தினார்கள். அ.தி.மு.க-வின் 2001 தேர்தல் அறிக்கையிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'நக்கீரன்' இதழ் மீது நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி கொடுக்கும் அளவில்  எங்களுடைய பத்திரிகையைக் குறிவைத்துத் தாக்கினார்கள். 

கோவி லெனின், நக்கீரன் பொறுப்பாசிரியர்

தற்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கிவரும் தமிழக அரசை, மத்தியில் ஆட்சி அதிகாரப் பீடத்தில் உள்ளவர்களும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் கட்டுப்படுத்தி வருகிறார்கள் என்பது இந்த அரசு மீது உள்ள குற்றச்சாட்டு. அதன் அடிப்படையில் ஆளுநர் மாளிகை அறிவுறுத்தலின்படி காவல்துறையினர் இப்படியான கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருந்த நிர்மலா தேவி தவறான ஒரு அணுகுமுறையை மாணவிகளிடம் கையாண்டுள்ளார். அவருடைய அந்த நடவடிக்கையால் கல்வித்துறையின் செயல்பாட்டின் சீர்கேடு நமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதை அம்பலப்படுத்தும் வகையில் முதல்முறையாக இந்தச் செய்தியை ஆடியோ மூலம் 'நக்கீரன்' வெளியிட்டது.

நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக 'நக்கீரன்' தொடர்ந்து கட்டுரை வெளியிட்டு வந்த இந்தச் சூழலில், நிர்மலா தேவிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியும் 'நக்கீரன்' இதழில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தரும் தகவலின் அடிப்படையில், ஆதாரங்களுடன் செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இதில், யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டுகளையும் வைக்கவில்லை. தனிப்பட்ட நபர்கள் குறித்து எதுவும் பேசப்படவில்லை.

இந்தச் செய்திக்குப் பின்னணியில் உள்ள தகவல்கள் தகுந்த ஆதாரங்களுடனே வெளியிட்டு வந்தோம். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அழைத்துப்பேசி எங்கள் ஆசிரியர் மீது இப்படியான நடவடிக்கையை எடுத்துள்ளனர். இது ஒரு பத்திரிகையின் மீது, கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல். ஒவ்வொரு முறையும் நக்கீரன் மீது நடத்தப்படும் இப்படியான தாக்குதல்களைச் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வந்துள்ளோம். இந்த விவகாரத்தையும்  'நக்கீரன்' அப்படியே எதிர்கொள்ளும். மேலும், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இந்தத் தாக்குதலுக்குப் பத்திரிகைத்துறை மற்றும் ஊடகங்களைச் சார்ந்தவர்கள், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனக் குரல் கொடுத்து வருகின்றனர். இதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இங்கு பாசிச சக்திகளுக்கு இடமில்லை என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கைது நடவடிக்கைளைக் கண்டு பயந்து செய்தியை வெளியிடாமல் இருக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் உண்மைச் செய்திகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்" எனத் தீர்க்கமாகப் பேசி முடித்தார் கோவி.லெனின்.