வெளியிடப்பட்ட நேரம்: 20:49 (11/10/2018)

கடைசி தொடர்பு:22:05 (11/10/2018)

நிர்வாகிகள் நீக்கம், அதிரடி மாற்றம்... ரஜினி மக்கள் மன்றத்தில் என்னதான் நடக்கிறது?

நிர்வாகிகள் நீக்கம், அதிரடி மாற்றம்... ரஜினி மக்கள் மன்றத்தில் என்னதான் நடக்கிறது?

1996-ம் ஆண்டிலிருந்தே ரஜினி அரசியலுக்கு வருவதாகச் சொல்லப்பட்டு வந்தநிலையில், கட்சி தொடங்க இருப்பதாக 10 மாதங்களுக்கு முன்னர் அறிவித்து ரசிகர்களைச் சந்தித்து போட்டோ எடுத்தார். `ரஜினி ரசிகர் மன்றம்' என்ற பெயரை, அரசியலுக்கு வருவதால் 'ரஜினி மக்கள் மன்றம்' என்று பெயர் மாற்றம் செய்து, அதற்கான சின்னத்தையும் அறிமுகம் செய்தார். கட்சிப் பெயரைக்கூட ரஜினி அறிவிக்காத நிலையில், ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் எனப் பலரும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

'ரஜினி மக்கள் மன்றம்' எனப் பெயர் மாற்றம் செய்ததும், மன்றத்துக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள்தான். மன்றம் ஆரம்பித்து ரசிகர்களை இணைக்கும் திட்டத்துக்காக இளைஞர்களை மன்றத்துக்குள் கொண்டு வர புதிய இணையதளம், ஆப்ஸ், முகநூல் பக்கம் ஆகியவை தொடங்கப்பட்டன. மன்றத்துக்கான நிர்வாகிகள் நியமனம் முழுமை அடைவதற்கு முன்பே, சில மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்புகள் வந்தன. ரசிகர் மன்றங்களில் பல ஆண்டுகளாக இருந்து வரும் நிர்வாகிகளைப் புறக்கணித்துவிட்டு, தனக்கு வேண்டப்பட்டவர்களை அந்தப் பதவிகளில் நியமித்துவருவதாக, ரஜினி மக்கள் மன்றத் தலைமை நிலைய நிர்வாகியாக இருந்துவரும் டாக்டர் இளவரசன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, பதவிநீக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் பலர், ரஜினி வீட்டின் முன் கூடி தங்கள் ஆதங்கத்தை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ரஜினி மன்ற அதிகாரிகள் நீக்கம்

நிர்வாகிகள் நீக்கம், மன்றத்தில் அதிரடி மாற்றம் என ரஜினி மக்கள் மன்றம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்தநிலையில், ரஜினி மக்கள் மாநில அமைப்பில் உள்ள டாக்டர் இளவரசன் மற்றும் ஏ.ஜே.ஸ்டாலினைச் சந்தித்தோம். ரஜினி மன்ற நிர்வாகிகள், டாக்டர் இளவரசன் மீது கூறியபுகார் குறித்து அவரிடம் பேசினோம். ''அரசியலுக்கு வருவதற்கு நல்ல அடித்தளம் தேவை. அதைத் தலைவர் ரஜினி நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் பூத் வாரியாக மன்றத்தை வலுப்படுத்தும் நோக்கில் மாநில அளவில் புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் தலைவர். அப்படி நியமிக்கப்பட்டவர்கள்தான் நானும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராஜசேகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்த ஏ.ஜே.ஸ்டாலினும்.

இளவரசன்

பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் என்ற ஒரே வேலைதான் எங்களுக்குத் தரப்பட்டது. அதற்காக முழுமையாகச் செயல்பட்டோம். இதையடுத்து, அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து, பூத் கமிட்டி குறித்த அறிக்கையைச் சமர்பிக்கச் சொல்லி இருந்தேன். பெரும்பாலான மாவட்டங்களில் பூத்கமிட்டி வேலைகள் நன்றாக நடப்பதாகத் தகவல்கள் வந்தன. மாவட்ட நிர்வாகிகள் கொடுத்த தகவல்களை எடுத்துக் கொண்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். அப்போதுதான், பூத்கமிட்டி முறையாக அமைக்கவில்லை என்றும், பொய்யான கணக்குகளைக் கொடுத்ததும் தெரியவந்தது. இதைத் தலைவர் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். புள்ளிவிவரங்களோடு தலைவரிடம் எடுத்துச் சொன்னதும், தலைவர் அதிர்ச்சியாகிவிட்டார். அதனால், இதற்குக் காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி தலைவர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த நமசிவாயம் மீது எஃப்.ஐ.ஆர் இருப்பதால், அவரை மாற்றிவிட்டு பாபு என்பவரை நியமித்தோம். கடந்த ஒன்பது மாதங்களாக ஐந்து சதவிகிதம்கூட பூத் கமிட்டி வேலைகளைப் பாபு முடிக்கவில்லை. இதற்கான முறையான விளக்கத்தையும் பாபு தெரிவிக்கவில்லை. இதையடுத்து பாபுவை சென்னைக்கு அழைத்து, அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு குறித்து விளக்கினோம். மாவட்டப் பொறுப்பாளரின் கீழ் 20 பேரை நியமித்து, இவர்களுடன் இணைந்து செயல்பட சொன்னோம். ஆனால், இதற்கு பாபு ஒத்துக்கொள்ளவில்லை. பணமோசடி உள்ளிட்டவற்றில் பாபு பெயரில் எஃப்.ஐ.ஆர் இருப்பதால், இனிமேல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது என்று எடுத்துக் கூறினோம். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் புரிந்துகொள்ளாமல், மன்ற விதிகளை மீறி போயஸ் கார்டனில் உள்ள தலைவர் வீட்டுக்கு 20 பேருடன் சென்றிருக்கிறார். அப்போது தலைவர் வீட்டில் இல்லாததால், ஊடகங்களை அழைத்து பேட்டி கொடுத்துவிட்டு ராஜினாமா செய்திருக்கிறார்.

தேனி மாவட்ட மகளிரணியினர் கொடுத்த புகாரையடுத்து, மாவட்டச் செயலாளர் புஷ்பராஜ் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக இளைஞர் அணிச் செயலாளராக இருந்த கணேசன் நியமிக்கப்பட்டார். அதுபோலவே, புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளராக இருந்த சங்கர் மாற்றப்பட்டு மாநிலச் செயலாளராக இருந்த பிரபாகர் நியமிக்கப்பட்டார். ஒழுங்கு நடவடிக்கை தேவைப்பட்ட இடங்களிலேயே இதுபோன்ற மாற்றத்தைக் கொண்டுவந்தோம். மேலும், முக்கிய நிர்வாகிகளாக என்னுடையச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், நியமிக்கப்பட்டிருக்கும் புது நிர்வாகிகளில் பலரும், ஏற்கெனவே மன்ற உறுப்பினர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் நான் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை யாராவது சொல்ல முடியுமா? அதேபோல், தி.மு.க நிர்வாகியுடன் தொடர்பு உள்ளதாகக் கூறுகிறார்கள், அதிலும் உண்மை இல்லை.

எங்களுடைய குறிக்கோள் எல்லாம், தலைவரை முதலமைச்சராகக் கொண்டுவருவதுதான். அதற்காகத்தான் அடிமட்டத்திலிருந்து வேலையைத் தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் உள்ள 66,573 பூத் கமிட்டிகளில் இதுவரை 40,000-க்கும் அதிகமான பூத்கமிட்டியை அமைத்துள்ளோம். ஒவ்வொரு பூத்கமிட்டியிலும் 30 பேர் இருக்கிறார்கள். அதுபோலவே, மாவட்டம், நகரம், ஒன்றியம் என அனைத்து மட்டத்திலும் ஐ.டி செல் உருவாக்கித் தொடர்ந்து இயங்கி வருகிறோம். விரைவில் கட்சி குறித்த அறிவிப்பைத் தலைவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்