வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (15/10/2018)

கடைசி தொடர்பு:19:30 (15/10/2018)

`உலகத்துக்கு 12 வருட டெட்லைன்... இது இறுதி எச்சரிக்கை!’ ஐ.பி.சி.சி. அறிக்கை ஏன் முக்கியம்?

`உலகத்துக்கு 12 வருட டெட்லைன்... இது இறுதி எச்சரிக்கை!’ ஐ.பி.சி.சி. அறிக்கை ஏன் முக்கியம்?

``காலநிலையும் பேரிடர்களும் கலாசாரத்துடன் தொடர்புடையன. காலநிலையைக் கலாசாரத்தின் ஒரு பகுதியாகக் கவனத்தில் கொள்ளவில்லையென்றால், பேரிடர்கள் ஏற்படுவதை நீண்ட காலத்துக்கு தவிர்க்க முடியாது. பசுமை வீடு வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால், அதை நிறைவேற்ற ஏராளமானதை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமுள்ளது" என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐ.நா-விடமிருந்து 'உலகத்தின் சாம்பியன்' விருதைப் பெறும்போது மோடி பேசியிருந்தார். 

ஐ.நா-வால் அமைக்கப்பட்ட ஐ.பி.சி.சி என்று அழைக்கப்படும் காலநிலை மாற்றத்துக்கான சர்வதேச அரசாங்கக் குழுவும் தற்போது இதே கருத்தை (The Intergovernmental Panel on Climate Change) முழு தரவுகளுடன் கடுமையாக எச்சரித்துள்ளது.

உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த, 2015-ம் ஆண்டில் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட 196 நாடுகள் கையெழுத்திட்டன. அதன்படி, பசுமைவீடு வாயுவான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை உலக நாடுகள் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில், இந்த ஒப்பந்தம், தங்கள் நாட்டின் வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் பாதிக்கிறது என்று கூறி கார்பன் டை ஆக்ஸைடை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இரண்டாவது இடத்திலுள்ள அமெரிக்கா கடந்த வருடம் வெளியேறுவதாக அறிவித்தது. 

மோடி

முன்னதாக, பாரிஸ் ஒப்பந்தத்தின்போது, உலக வெப்பமயமாதலின் அளவு 1.0 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்திருந்தது. அதாவது, தொழிற்புரட்சி (pre-industrial period) ஏற்பட்ட காலத்துக்கு (சுமார் 170 ஆண்டுகளுக்கு) முன்பு இருந்த அளவைவிட 1.0 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உலகத்தின் வெப்பநிலை உயர்ந்துள்ளது என்று கணக்கிடப்பட்டிருந்தது. அதனால், ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தின் காரணமாகத்தான் கேப்டவுன் நீர் வறட்சி, ஆர்டிக் காடுகளில் ஏற்பட்ட தீ விபத்து, அமெரிக்காவில் அடிக்கடி ஏற்படும் புயல்கள் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர். ஏற்கெனவே, உலகம் பருவநிலை மாற்ற பாதிப்பில்தான் இருந்துவருகிறது. எனவே, மனிதர்கள் வாழ்வதற்கு உயர்ந்துவரும் வெப்பநிலையின் அளவை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமா அல்லது 2.0 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமா என்று உலக அளவிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். மூன்று ஆண்டுகள் உழைப்பில் 6,000 ஆய்வுக் கட்டுரைகளைக் கவனத்தில் கொண்டு 40 நாடுகளைச் சேர்ந்த 91 ஆசிரியர்கள் (authors) மற்றும் மதிப்பாளர்கள் (review editors) அடங்கிய குழு ஆய்வு அறிக்கையை உருவாக்கினார்கள். உலகத்தில் மனிதர்களின் இருத்தியலை நிர்ணயிக்கும் அந்த அறிக்கை, தென்கொரியாவின் இன்சியோன் நகரில் கடந்த 8.10.2018-ம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. 

அந்த ஆய்வு அறிக்கை, உலக நாடுகள் களத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை, மிக வேகமாகவும் மிகத் தீவிரமாகவும் செய்ய வேண்டும் என்ற எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையானது, உலக வெப்பமயமாதலின் அளவைக் கட்டாயமாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவில் கட்டுப்படுத்த வேண்டும், 2.0 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் பட்சத்தில் கணக்கில் கொள்ள முடியாத அளவுக்கு உலகம் மிகப்பெரிய அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது. 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வு என்பதும் மோசமான நிலைதான், ஆனால் அதற்குக் குறைவாகக் கட்டுப்படுத்துவதற்கு வழியில்லை. இந்த நிலையில், 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரித்தால் உலகில் என்ன நடக்கும், 2.0 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரித்தால் என்ன நடக்கும் என்று ஆய்வு அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், 'உலக வெப்பத்தின் அளவு 2 டிகிரி அளவுக்கு அதிகரித்தால், 2100 வது ஆண்டில் இருக்கும் கடல் மட்டத்தின் அளவு 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும்போது இருப்பதைவிட 10 செ.மீ அதிகமாக இருக்கும். 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்ந்தால் பனிக்கட்டிகள் இல்லாத ஆர்ட்டிக் கடல் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும். 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்தால் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பனிக்கட்டிகள் இல்லாத ஆர்ட்டிக் கடல் உருவாகும். 

ஐ பி சி சி

வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும் பட்சத்தில் 70 - 90 சதவிகித பவளப் பாறைகள் அழியும். 2 டிகிரி அளவுக்கு உயர்ந்தால் 99 சதவிகித பவளப் பாறைகள் அழிந்துவிடும். வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும்பட்சத்தில் பாதி பூச்சியினங்கள் அழியும். 2.0 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும் பட்சத்தில் பெரும்பாலான பூச்சியினங்கள் அழியும். 

1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும் பட்சத்தில் கடலை ஒட்டி வாழும் சில கோடி மக்கள், அவர்கள் வாழிடங்களை விட்டு வெளியேற வேண்டும். 2.0 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும் பட்சத்தில் பல கோடி மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும். 1.5 டிகிரி செல்சியஸைவிட வெப்பநிலை அதிகரிக்கும்பட்சத்தில் ஏற்படும் பாதிப்பு நீண்ட காலத்துக்கு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் அல்லது மீண்டும் திரும்ப முடியாத அழிவாக இருக்கும். 

தற்போது வெளியேற்றப்படும் கார்பனின் அளவிலேயே வரும் காலங்களில் உலகம் இயங்கினால் 2032-ம் ஆண்டிலேயே வெப்ப உயர்வின் அளவு 1.5 டிகிரி செல்சியஸை எட்டிவிடும்' என்று அறிக்கையில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, உலக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்காக, நிலம், மின்சாரம், தொழிற்சாலை, கட்டுமானங்கள், போக்குவரத்துகள், நகரங்கள் ஆகியவற்றில் வேகமாகவும் தொலைநோக்குப் பார்வையுடனும் முழுமையான மாற்றம் கொண்டு வர வேண்டும். முழுமையான மாற்றம் என்பது கடந்த 100 ஆண்டுகளில் நாம் பயணித்த பாதையிலிருந்து பெரிதும் மாறுபட்டதாக இருக்க வேண்டும். மனிதர்களால் உருவாக்கப்படும் கார்பன் டை ஆக்ஸைட்டின் அளவை 2010-ல் இருந்ததைவிட 2030-க்குள் 45 சதவிகிதம் குறைக்க வேண்டும். 2050-க்குள் 0 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். அதாவது, மக்களால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு, கார்பன் டை ஆக்ஸைட் இயற்கையாகவே வெளியேறக்கூடிய அளவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இதெல்லாம் நடந்தால்தான் வெப்பமயமாதலின் அளவை 1.5 டிகிரி அளவுக்குள் கட்டுப்படுத்த முடியும். இந்தப் பூமியின் நிலையை இன்னும் மோசமாகாமல் தடுக்க மனிதர்களுக்கு இன்னும் 12 ஆண்டுகளே இருக்கின்றன. ஆனால், அதற்கு நம்முடைய வாழ்வியல் முறைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கான மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது' என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மனிதர்களால் ஏற்படும் பருவநிலை மாற்றம்

அந்த ஆய்வு அறிக்கையில் இந்தியா போன்ற கடலோர நாடுகளுக்கு ஏற்படும் பேரழிவுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரித்தாலே இந்தியா போன்ற கடலை ஒட்டிய நாடுகள் மற்றும் விவசாயத்தை முக்கியப் பொருளாதாரமாகக் கொண்ட நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். பயிர் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும். 2050-ம் ஆண்டுக்குள் பல மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள். ஐ.பி.சி.சி-யின் அறிக்கை இந்தியாவுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதுகுறித்து பேசிய மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர் ஹர்ஷவர்த்தன், 'பருவநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு எந்த ஆய்வு அறிக்கைக்காகவும் இந்தியா காத்திருக்கவில்லை. உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த இந்தியா ஏற்கெனவே முயற்சிகளைத் தொடங்கிவிட்டது' என்று தெரிவித்துள்ளார். பூவுலகின் நண்பர்கள் - சுந்தர்ராஜன்

இது தொடர்பாக சூழலியல் செயற்பாட்டாளர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனிடம் பேசும்போது, 'தற்போது மிகக் கடைசியான நேரத்தில் இருக்கிறோம். இனிமேல், இந்தியாவில் எக்காரணத்தைக் கொண்டும் புதிதாக அனல்மின் நிலையங்களை அமைக்கக் கூடாது. ஏற்கெனவே, செயல்பாட்டிலுள்ள அனல்மின் நிலையங்களின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவைப் படிப்படியாகக் குறைத்து முழுவதுமாக நிறுத்த வேண்டும். மின்சாரம் முழுவதையும் புதுப்பிக்கத்தக்க (renewable energy) ஆற்றல் மூலமே தயாரிக்க வேண்டும். குறிப்பாக, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் கடல் நீர் மட்டத்தின் மேல் சோலார் தகடுகள் பதித்து மின்சாரம் தயாரிக்கும் முறையைக் கொண்டுவரவேண்டும். சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதற்கு இந்தியா ஏற்ற நாடு. குறிப்பாகச் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான தன்மைகள் தமிழ்நாட்டில் மிக அதிகமாக உள்ளது. சூரிய மின் உற்பத்திக்கான செலவும், அந்தத் திட்டம் அமைக்கப்படுவதற்கான கால நேரமும் குறைவு.

இந்தியாவுக்கென்று தனியாகக் காலநிலைச் சட்டம் கொண்டு வர வேண்டும். எல்லாத் திட்டங்களுக்கும் காலநிலைச் சட்டம் மையமாக இருக்க வேண்டும். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளின் காலநிலையைக் கணிப்பது கடினம். எனவே, இந்தியாவுக்கென்று தனியாகக் காலநிலை மாதிரி அவசியம். முக்கியமாக, உணவு உற்பத்தியில் உணவு பயன்பாட்டில் பெரும் மாற்றங்கள் தேவை. பெரும் மழைப் பொழிவையும் பெரும் வறட்சியையும் தாங்கக்கூடிய சிறுதானிய உணவு வகைகளை நோக்கி மக்கள் நகர வேண்டும். சிறுதானிய உணவுகளுக்கு மக்களைப் பழக்கப்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். இதை மிகத் தீவிரமாகப் பின்பற்றினால்தான் உலக வெப்பமயமாதலில் இருந்து மனிதர்கள் தப்பிக்க முடியும். கார்பன் டை ஆக்ஸைடைக் கட்டுப்படுத்துவதில் காடுகளின் பங்களிப்பு மிக முக்கியமாக உள்ளது. எனவே, காடுகளின் அளவை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஐ.பி.சி.சி அறிக்கையும் உலக அளவில் காடுகளின் அளவை மிக அதிக அளவில் அதிகரிக்க வேண்டும் தெரிவித்துள்ளது' என்று தெரிவித்தார். 

காற்று மாசுபாடு

ஆனால், கள யதார்த்தம் என்பது இந்தியாவில் வேறு மாதிரியாக இருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் மின்தேவை 3,81,540 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி, 65 சதவிகித மின்சாரம் அனல்மின் நிலையம் மூலமாகவே தயாரிக்கப்படுகிறது. 20 சதவிகித மின்சாரம் மட்டுமே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே தூத்துக்குடி, எண்ணூர், உடன்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. அதில், உடன்குடி அனல்மின் நிலையம் சமீபத்தில்தான் பயன்பாட்டுக்கு வந்தது. எனவே, அனல்மின் நிலையங்களின் பயன்பாட்டை எந்த அளவுக்கு உடனே நிறுத்த முடியும் என்று தெரியவில்லை. மேலும், பெட்ரோலிய பொருள்களின் இறக்குமதியைக் குறைப்பதற்காக இந்தியாவின் பல பகுதிகளை பெட்ரோலிய உற்பத்தி மண்டலங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக, கடந்த அக்டோபர் 1-ம் தேதி இந்தியாவின் பல மாநிலங்களில் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த அனுமதியின்படி, தமிழகத்தில் மரக்காணம் தொடங்கி வேளாங்கண்ணி 731 சதுர கி.மீட்டர் பரப்பளவுக்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும், தமிழக கடலோரப் பகுதிகளில் 2,574 சதுர கி.மீ மற்றும் 1,794 சதுர கி.மீ என இரு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்குப் பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள். இவை அனைத்தும் இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக உள்ளன. 

ஐ.பி.சி.சி அறிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கருத்துதான் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. `இந்த அறிக்கையை யார் வடிவமைத்தது என்று முதலில் நான் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் உலகம் சிறப்பாக இருப்பதைப்போல ஓர் அறிக்கை என்னால் அளிக்க முடியும்' என்று கூலாகத் தெரிவித்தார். முன்பு ஒருமுறை, உலக வெப்பமயமாதல் என்பதே புரளி என்று பேசியிருந்தார்.

சூரிய ஆற்றல் மற்றும் சூழலியல் நடவடிக்கைகளில் பிரான்ஸூடன் இணைந்து செயல்படுவதாலும், 2022-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்துவிடுவதாக அறிவித்ததாலும்தான் பிரதமர் மோடிக்கு 'உலகத்தின் சாம்பியன்' விருது ஐ.நா-வால் வழங்கப்பட்டது. ஆனால், அவரின் கீழ் செயல்படும் அரசுதான் தற்போது அதிகளவில் சூழலியல் சிக்கல்களைக் கொண்ட நியூட்ரினோ திட்டம், எட்டுவழிச்சாலை, பெட்ரோலிய உற்பத்தி மண்டலங்கள், அணுமின் நிலையங்கள் ஆகிய திட்டங்களை அமல்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்திவருகிறது என்பது நகைமுரண். 

ஹைட்ரோகார்பன்

தன் இனத்தின் இறுதி அத்தியாயத்தை எழுதக்கூடிய நிலையில்தான் மனித இனம் தற்போது இருந்துவருகிறது. ஆயிரக்கணக்காண வருடங்களைக் கடந்த மனித இனம், கடந்த 150 ஆண்டுகளில் வளர்ச்சி என்ற பெயரால் இயற்கைக்கு இழைத்த அநீதிக்கான தண்டனையை இன்னும் பிறக்காத அடுத்த தலைமுறைக்குப் பரிசாக அளிப்பதற்குக் காத்துக்கொண்டிருக்கிறது.


பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா அளித்த ஒப்புதல்

இந்தியா அதனுடைய கார்பன் அளவை, 2005-ல் இருந்த அளவிலிருந்து 2030-ம் ஆண்டுகளுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஓர் அலகிற்கான கார்பன் வெளியேற்ற அளவை 33-35 % குறைப்பதற்கு ஒப்புப்கொண்டுள்ளது. மேலும், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 40 சதவிகிதம் நிலத்துக்கு மேலே உள்ள ஆற்றலின் (non-fossil fuels) மூலம் உற்பத்தி செய்யப்படும் என்று ஒப்புக்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா, நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதை முழுவதுமாகக் குறைத்துவிட்டு விரைவாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டும். 2022-ம் ஆண்டுக்குள் சூரிய சக்தியின் மூலம் 100 ஜிகாவாட் மின்சாரமும், காற்றாலை மூலம் 60 ஜிகாவாட் மின்சாரமும், உயிரி கழிவுகளிலிருந்து 10 ஜிகாவாட் மின்சாரமும், நீர் சக்தியின் மூலம் 5 ஜிகாவாட் மின்சாரமும் தயாரிக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் 5 மில்லியன் ஹெக்டேர் அளவுக்குக் காடுகளின் அளவை அதிகரிக்க இந்தியா ஒப்புக்கொண்டது.  


பாரிஸ் ஒப்பந்தத்தில் உலக நாடுகளின் பங்கு

2025-ம் ஆண்டுக்குள் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை 2005-ல் இருந்ததைவிட 26-28 சதவிகிதம் குறைப்பதாகவும், கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியாக வளரும் நாடுகளுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அளிப்பதாகவும் அதிபர் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த நடவடிக்கை பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் என்று கூறி 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. 

கார்பன் டை ஆக்ஸைடைக் கட்டுப்படுத்துவதற்காக வளர்ந்த நாடுகள் 100 பில்லியன் டாலர் நிதி அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள், 2030-ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தின் அளவை 1990-ம் ஆண்டில் இருந்ததைவிட 40 சதவிகித அளவுக்குக் குறைப்பதாக ஒப்புக்கொண்டது. 

2040-ம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களை நிறுத்துவதாக பிரான்ஸ் அறிவித்தது. பல நடவடிக்கைகள் மூலம் 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் நியூட்ரல் (carbon neutral) அளவை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளதாக அந்நாடு உறுதியளித்தது. 


டிரெண்டிங் @ விகடன்