வீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay | World Food Day is held annually on the 16th of October

வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (16/10/2018)

கடைசி தொடர்பு:11:01 (16/10/2018)

வீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay

ணவு, உடை, உறைவிடம் மூன்றும் மனிதனின் அத்தியாவசியத் தேவைகள். இதில் முதன்மையானது உணவு. மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் உணவே பிரதானத் தேவை. இந்தியாவில் தினமும் 30 கோடிக்கும் அதிகமான மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள். 18 கோடிக்கும் அதிகமானோர் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உணவை வீணடிப்பதைத் தடுக்கவும், பிறருக்கு உதவி செய்ய விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும்  உலக உணவு தினம் (World Food Day) கொண்டுவரப்பட்டது. 

Food

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 16-ம் தேதி உலக உணவு தினம்  கடைப்பிடிக்கப்படுகிறது. 1945-ம் ஆண்டு ஐ.நா. சபையால், கனடாவில் உள்ள கியூபெக் நகரில், உலக உணவு மற்றும் விவசாயக் கழகம் (FAO) நிறுவப்பட்டது. அதன்பின், 1979-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் உலக உணவு தினம் அறிவிக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு வருடமும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு “OUR ACTIONS ARE OUR FUTURE. A #ZERO HUNGER WORLD BY 2030 IS POSSIBLE” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உணவுதினம் கொண்டாடப்படுகிறது. 

Food

உலகிலேயே அதிகமாக இந்தியாவில், 38% பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கிராமப்பகுதியினர் 41 சதவிகிதமும், நகர்ப்பகுதியினர் 31 சதவிகிதமும் அடங்கும். இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ள குழந்தைகளில் 72 சதவிகிதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 27 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் காணப்படுகின்றனர். 2015-ம் ஆண்டு கணக்குப்படி, உலகளவில் நாடுவிட்டு நாடு இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 24 கோடியே 40 லட்சம் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த 2000-ம் ஆண்டைக் காட்டிலும் 40% அதிகமானது. உலக அளவில் வளர்ச்சியடையாத நாடுகளில் 98% குழந்தைகளுக்குப் போதுமான அளவு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைப்பதில்லை. வளரும் நாடுகளில் 15 குழந்தைகளில் ஒரு குழந்தைக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை. உலகம் முழுவதும் கடந்த வருடம் 821 மில்லியன் மக்கள் பசியின் கொடுமையை அனுபவித்து வந்துள்ளனர். அதாவது 10 பேரில் ஒருவர் உணவு இன்றி தவித்துள்ளனர். 2016-ம் ஆண்டு 815 மில்லியனாக இருந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது.

உயிரினங்களில் மனிதனைத் தவிர, வேறு எந்த உயிரினமும் உண்ண உணவில்லாமல் பசியால் இறப்பதில்லை. பறவைகளும், விலங்குகளும் தனது உணவையோ, இரையையோ வீணடிப்பதில்லை. ஆனால், மனிதன் மட்டுமே உணவுப் பொருள்களை வீணடிக்கிறான். உலகின் உணவு உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உணவு, அதாவது 1.3 பில்லியன் டன் உணவு வீணாக்கப்படுகிறது. குறிப்பாக உணவை வீணடிப்பதில், இந்தியர்கள் முதலிடத்தில் இருக்கின்றனர். பல்வேறு நாடுகளில், சரிபாதி உணவு ஒவ்வொரு வருடமும் வீணாக்கப்படுகிறது. பெரும்பான்மையாக வீணடிக்கப்படும் உணவுப்பொருள்களில் பழங்களும், காய்கறிகளும் அடங்குகின்றன. இந்தியாவில் கோயில் விழாக்கள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், திருமணங்கள் எனப் பல்வேறு நிகழ்வுகளில் பரிமாறப்படும் உணவுகளில், பாதிக்கு மேல் குப்பைக்குத்தான் போகின்றன. இந்தியாவில் ஏழை மக்களுக்கு மூன்று வேலை உணவு என்பது வெறும் கேள்விக்குறியாகவே உள்ளது. நாம் வீணாக்கும் உணவைப் பிறருக்கு கொடுப்பதன் மூலம் அவர்களின் ஒருவேளை பசியைப் போக்க முடியும். நம்மால் முடிந்த அளவு உணவை வீணாக்காமல் பிறருக்கு கொடுத்து மகிழ்வோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க