"வியாபாரத் தலமாகிவிட்டதா வேளாங்கண்ணி பேராலயம்?" - புகாருக்கு விளக்கமென்ன? | Has Velankanni church turned to business city?

வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (19/10/2018)

கடைசி தொடர்பு:11:36 (19/10/2018)

"வியாபாரத் தலமாகிவிட்டதா வேளாங்கண்ணி பேராலயம்?" - புகாருக்கு விளக்கமென்ன?

லக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் மத வேறுபாடுகளின்றி அனைவராலும் தரிசிக்கப்படும் புனிதத் தலமாகும். சமீபத்தில், ஆரோக்கிய அன்னையின் ஆண்டுப் பெருவிழா வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆனால், இப்படி மாதாவை நாடி வரும் பக்தர்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு, கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட சேவையாகச் செய்யாமல் வியாபாரக் கண்ணோட்டத்தில் ஆலய நிர்வாகம் செயல்பட்டுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.  

வேளாங்கண்ணி

``வேளாங்கண்ணியில் திரும்பும் திசையெல்லாம் கண்ணில் படுவது தனியார் தங்கும் விடுதிகள்தாம். சாதாரண நாள்களில் காற்று வாங்கும் விடுதிகளின் வாடகையெல்லாம் சேர்த்து திருவிழாக் காலங்களில் கறந்துவிடுகிறார்கள். தனியார் விடுதிகள் அளவுக்கு மீறிப் பல ஆயிரக் கணக்கில் வாடகைப்பணம் வசூலிப்பதற்குத் தேவாலய நிர்வாகம்தான் காரணம். ஏனென்றால் ஆலயம் வசம் சுமார் 2 ஆயிரம் தங்கும் அறைகள் உள்ளன. அங்கு ஓர் அறைக்கு ஒருநாள் வாடகையாக ரூ.800 முதல் ரூ.3000 வரை வசூலிக்கிறார்கள். பக்தர்களின் நலனைப்பேண வேண்டிய ஆலய நிர்வாகமே அதிக வாடகை வாங்குவதால் தனியார் விடுதிகள் தங்கள் இஷ்டத்துக்கு ரூம் வாடகையை நிர்ணயித்துக் கொள்ளையடிக்கிறார்கள். 

கழிவறை

பேராலயம் சார்பில் நடத்தப்படும் உணவகங்களில் தரமற்ற உணவை அதிக விலைக்கு விற்கிறார்கள். பாதிரியார்கள் மற்றும் ஆலய ஊழியர்களுக்குச் சமைக்கப்படும் உணவு மீதமானால் அதைக்கூட ஆலய உணவகங்களின் கொண்டு வந்து விற்றுப் பணமாக்குகிறார்கள் எனப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ``போதிய வருமானம் இல்லாத எத்தனையோ கோயில்களில், அங்கு வரும் பக்தர்களுக்கெல்லாம் இலவச உணவு வழங்குகிறார்கள். ஆனால், கோடி கோடியாய் வருமானம் ஈட்டும் தேவாலய நிர்வாகம் ஏழைப் பக்தர்களுக்கு இலவச உணவு தந்தால் என்ன? அப்படித் தந்தால் அதைப் பக்தர்கள் பிரசாதமாய் பக்தியுடன் ஏற்றுக் கொள்வார்கள். இதனால் தனியார் உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை குறையும்" என்பதைப் புலம்பலாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.  

குளியல் பகுதி

``மாதா மீதுள்ள நம்பிக்கையால் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள் போன்றவர்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் பாதயாத்திரையாக, நிழல் கண்ட இடத்தில் உறங்கி, தண்ணீர் தெரிந்த இடத்தில் நீராடி, உணவு கிடைத்த இடத்தில் உண்டு, சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இலவசமாகத் தங்குமிடமோ, உணவோ ஆலய நிர்வாகம் தரவில்லை என்பதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். இயற்கை உபாதைளுக்குச் செல்ல கழிப்பறை கட்டணம் வசூலிப்பதை ஜீரணிக்க முடியவில்லை. இதற்கெல்லாம் தீர்வு எப்போது? அந்த மாதாவே அறிவார்!” இப்படியான புகார்கள் வாட்ஸ் அப்பில் வேகமாய் வலம்வந்துகொண்டிருக்கிறது.  

குளியல் தொட்டி

வேளாங்கண்ணியைச் சேர்ந்த சண்முகநாதன், ``ஏற்கெனவே `முச்சந்து' என்ற இடத்தில் வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்காக இலவசக் கழிப்பறைகள், குளியல் அறைகள் எல்லாம் அமைத்திருந்தார்கள். ஆனால், அவற்றையெல்லாம் தற்போது மூடிவிட்டார்கள். இப்போதுள்ள நிர்வாகத்துக்குப் பணமே பிரதானம். பல கோடி ரூபாய் பெருமானமுள்ள ஏழை, எளியவர்களின் இடங்களை மிரட்டி, உருட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கிவிட்டார்கள். மேலும், சிலருக்குச் சொந்தமான பட்டா இடத்தையும் ஆலய நிர்வாகம் அபகரித்துக் கொண்டதால் நீதிமன்றத்தில் சில வழக்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன” என்றார்.  

பேராயர்இப்புகார்கள் குறித்து வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகரிடம் விளக்கம் கேட்டோம், ``பேராலயத்துக்குச் சொந்தமான விடுதிகளில் குறைந்த கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.450 முதல் அறைகள் வாடகைக்குத் தருகிறோம். திருவிழா காலங்களில் கொஞ்சம் அதிகமாக இருக்கும். உள்ளுரைச் சேர்ந்த சிலர் ரூம்களைத் தங்கள் பெயரில் வாடகைக்கு எடுத்து, எங்களுக்குத் தெரியாமல் உள்வாடகைக்கு விட்டுவிடுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில் வாடகையை பக்தர்கள் தரும் காணிக்கையாகவே கருதுகிறோம். சனிக்கிழமைதோறும் சுமார் 2 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குகிறோம். திருவிழாவின்போது மக்கள் அதிகமாகக் கூடும் 5 இடங்களில் உணவகங்கள் அமைத்து ரூ.25க்கு உணவு வழங்கினோம். மற்ற நாள்களில் இரண்டு உணவகங்களில் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படுகிறது. கழிவறைகளின் பராமரிப்புக்குக் குறைந்த கட்டணமாக இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சிலரிடமிருந்து அப்போதைய சந்தை மதிப்பில் அவர்களது முழுச் சம்மதத்துடன் சில இடங்களை வாங்கியுள்ளோம். அவர்களின் வாரிசுகள் சிலர் தற்போது பணம் பறிக்கும் நோக்கத்துடன் பிரச்னை செய்கிறார்கள்.  

10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தந்துள்ளோம். இந்தாண்டு புதிதாக 4 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்கியுள்ளோம். உணவகங்கள் அனைத்திலும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்பார்வையில் சுகாதாரமான உணவு தயாரித்து வழங்கியுள்ளோம். சென்னையிலிருந்து சிறப்புப் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களைக் கடலிலும், கடற்கரையிலும் பணியில் அமர்த்தியதால் அன்னையின் அருளால் இந்தாண்டு எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. பொதுவாக அன்னையின் ஆண்டு விழா முடிந்தவுடன் நிர்வாகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இதுபோன்ற புகார்கள் எழுவதுண்டு. மாதாவுக்கும், மாதாவின் அருள்பெற வருவோர்க்கும் சேவை செய்வதே எங்கள் பணி.  அதைச் செவ்வனே செய்து வருகிறோம்” என்றார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close