வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (25/10/2018)

கடைசி தொடர்பு:11:37 (25/10/2018)

லவ் ஜிஹாத் உண்மையில் இருக்கிறதா..? தேசிய புலனாய்வு முகமையின் ரிப்போர்ட்

லவ் ஜிஹாத் உண்மையில் இருக்கிறதா..? தேசிய புலனாய்வு முகமையின் ரிப்போர்ட்

`வ் ஜிஹாத்' என்று எதுவும் இல்லையென தேசியப் புலனாய்வு முகமை சமீபத்தில் அறிவித்துள்ளது. `காதல்' என்ற பெயரில் இந்து மத பெண்களைக் காதலித்து அவர்களை இஸ்லாமிய ஆண்கள் கட்டாய மதமாற்றத்துக்கு ஆளாக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வலதுசாரி சிந்தனையுடைய பலரும் வைத்துவருகிறார்கள். இதை `லவ் ஜிஹாத்' என்றழைத்து வந்தனர். சரியாகத் திட்டமிட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடத்தப்படும் மாபெரும் `கட்டமைக்கப்பட்ட குற்றம்' என்றும் இதைச் சொல்கிறார்கள். 

இந்நிலையில், ஏற்கெனவே கேரளாவில் வழக்கு விசாரணையில் இருக்கும் 89 மதக்கலப்பு திருமணங்களில், விசாரணையில் உள்ள குறிப்பிட்ட 11 மதக்கலப்பு திருமணங்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது தேசியப் புலனாய்வு முகமை. இந்த 89 மதக்கலப்பு திருமண வழக்குகளில் பெரும்பாலானவை திருமணம் செய்துகொண்டவர்களின் பெற்றோர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் செய்யப்பட்ட வழக்குப் பதிவுகள். `லவ் ஜிஹாத்' குறித்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த 11 வழக்குகளின் விசாரணை, உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை சென்று `ஹாதியா' என்ற பெண்ணால் வென்றெடுக்கப்பட்ட பிரபல வழக்கை அடிப்படையாகக் கொண்டு விசாரிக்கப்பட்டது.

ஹதியா வழக்கு:-
 
கேரள மாநிலத்தைச் சேர்ந்த அகிலா அசோகன் என்ற 24 வயதான மருத்துவ மாணவி, 2016 ஜனவரியில் தனது வீட்டை விட்டு வெளியேறினார். `தெர்பியதுல் இஸ்லாம் சபா' என்ற இஸ்லாமியப் பாடசாலையில் சேர்ந்து இஸ்லாம் குறித்தான ஒரு பாடத்தைப் பயின்று வந்தார். மேலும், இஸ்லாமியப் படிப்பகம் மற்றும் அமைப்பு ஒன்றில் தஞ்சமடைந்தார். இஸ்லாமிய அமைப்பான பி.எஃப்.ஐ-யின் (Popular Front of India) மகளிரணி தேசியச் செயலாளரான ஏ.எஸ்.சைனபா வீட்டில் தங்கினார். இந்தக் காலகட்டத்தில்தான் அகிலா தனது பெயரை `ஹாதியா' என்று மாற்றிக்கொண்டார். இந்நிலையில் தன்னுடைய மகளைக் காணவில்லை என்று அசோகன் கேரள உயர்நீதிமன்றத்தில் `ஹேபியஸ் கார்பஸ்' வழக்கொன்று தொடுத்திருந்தார். குறிப்பிட்ட இஸ்லாமிய அமைப்புதான் தன் மகள் அகிலாவைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய வைத்து `ஹாதியா'வாக மாற்றியதாகக் குற்றச்சாட்டு வைத்தார். விசாரணையில் ஹாதியா தனது விருப்பத்தின் பேரிலேயே சைனபாவுடன் இருக்கிறார் என்று தெரியவந்ததால் அசோகன் கொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். 

பின்னர், ஆகஸ்ட் 2016ம் ஆண்டு, தன் மகளை இஸ்லாமியர் ஒருவருக்குக் கட்டிவைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க உள்ளார்கள் என்று குற்றம் சாட்டி தனது இரண்டாவது மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் ஹாதியாவின் தந்தை அசோகன். இதனடிப்படையில் ஹாதியா இந்தியாவைவிட்டு வெளியேறாமல் இருப்பதைக் கண்காணிக்க காவல்துறைக்கு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது உயர்நீதிமன்றம். மேலும், அவரை கொச்சியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்குமாறும் உத்தரவிட்டது. அடுத்த செப்டம்பர் மாதமே சைனபாவுடன் தங்க ஹாதியாவுக்கு அனுமதியளித்தது நீதிமன்றம். டிசம்பர் 19, 2016 அன்று ஹாதியா, ஷஃபின் ஜஹான் என்பவரை இஸ்லாமிய முறையில் திருமணம் செய்துகொண்டார். இந்த ஷஃபின் ஜஹான் என்பவர் பி.எஃப்.ஐ.யின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்தவர். அவர் மீது ஏற்கெனவே 4 குற்றவியல் வழக்கு இருந்தது. இதனையடுத்து அசோகன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், கடந்த ஆண்டு மே 2017 அன்று ஹாதியா - ஷஃபின் திருமணத்தை ரத்து செய்து, வைக்கம் பகுதியில் இருக்கும் பெற்றோரோடு ஹாதியாவை அனுப்பிவைத்தது கேரள உயர்நீதிமன்றம்.    

ஹாதியா, லவ் ஜிஹாத் வழக்கு

ஹாதியாவுக்குக் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஹாதியாவின் தந்தை அசோகனோ, வீட்டை விட்டு வெளியே அனுப்பவோ பிறரைச் சந்திக்கவோ ஹாதியாவை அனுமதிக்கவில்லை. கிட்டத்தட்ட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது போல ஹாதியாவை முடக்கி வைத்திருந்தனர். இதனிடையில் அசோகனின் தூண்டுதலின்பேரில் யோகா மையம் ஒன்று ஹாதியாவைக் கூட்டிச்சென்று மீண்டும் இந்துவாக மாற்ற முயன்றது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஷஃபின் ஜஹான். பின்னர் மார்ச் 08,2018 `ஹாதியாவின் திருமணம் செல்லும். 24 வயதான பெண் ஒருவர் தனது விருப்பத்திற்கேற்ப யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். விரும்பிய மதத்தைப் பின்பற்றிக் கொள்ளலாம்' என்று தீர்ப்பு வழங்கியது.   

`` `லவ் ஜிஹாத்' என்பது கட்டமைக்கப்பட்ட பிம்பம்":-

இந்நிலையில், பெயர் வெளியிட விரும்பாத தேசியப் புலனாய்வு முகமையின் மூத்த அதிகாரி ஒருவர், ``விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 11 மதக்கலப்பு வழக்குகளில் இருக்கும் ஒரே ஒற்றுமை, பி.எஃப்.ஐ அமைப்பில் உள்ள நபர்கள்தான் இவர்கள் அனைவருக்கும் மதமாற்றம் செய்ய உதவியிருக்கிறார்கள். ஆனால், கட்டாயப்படுத்தி அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர் என்பதற்கான குற்றம் சாட்டும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. பி.எஃப்.ஐ கட்சியின் நபர்கள் அவர்களுக்கு உதவிதான் செய்திருக்கிறார்கள், இது சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் வராது. சட்டப்படி கேரளாவில் ஆண் பெண் யார் வேண்டுமானாலும் எந்த மதத்தையும் பின்பற்றலாம்." எனக் கூறியிருந்தார்.  

இதுகுறித்து பி.எஃப்.ஐ யின் சட்ட ஆலோசகர் கே.பி.முஹமர் ஷரீஃப் கூறுகையில்:- " 'லவ் ஜிஹாத்' என்பது வலதுசாரி இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம். தற்போது நடந்த விசாரணையில் 'லவ் ஜிஹாத்' என்றெதுவும் இல்லையெனவும், அது வெறும் கதை என்பது தெள்ளத்தெளிவாகி விட்டது." என்றார்.


டிரெண்டிங் @ விகடன்