``18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு... மேல்முறையீட்டுக்குச் சென்றால் என்னவாகும்?" - சட்ட வல்லுநர்கள்! | ADMK MLAs disqualification case is a complicated issue says Legal experts

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (26/10/2018)

கடைசி தொடர்பு:13:45 (26/10/2018)

``18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு... மேல்முறையீட்டுக்குச் சென்றால் என்னவாகும்?" - சட்ட வல்லுநர்கள்!

"இந்த 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம் தொடர்பான தீர்ப்பு, விதிமுறைகளுக்கு முரணானது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்குப் போனால் தீர்ப்பு மாறக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்!" - சட்ட வல்லுநர்கள்

``18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு... மேல்முறையீட்டுக்குச் சென்றால் என்னவாகும்?

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி, தமிழக ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்த டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால். சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து, சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணனை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்

இந்த வழக்கில் கடந்த ஜூலை 23-ம் தேதி விசாரணை தொடங்கி நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் மற்றும் 18 எம்.எல்.ஏ-க்கள் என மூன்று தரப்பினரின் சார்பில் பிரபல வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதங்கள் நடைபெற்றன. வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்த நிலையில், நீதிபதி சத்தியநாராயணன் அக்டோபர் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில், `தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும்' என்று உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தினகரன் தரப்புக்குப் பின்னடைவை  ஏற்படுத்தியிருப்பதாகக் கருதினாலும், அவரின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதற்கிடையே இந்தத் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிவதற்காக, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசினோம். ``தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி கொடுத்த அதே தீர்ப்புதான், மூன்றாவது நீதிபதி தீர்ப்பாகவும் வந்துள்ளது. இந்தத் தீர்ப்பை ஏதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். மேலும் இந்த விவகாரத்தில் ஒரு எம்.எல்.ஏ மேல்முறையீட்டுக்குச் சென்றாலும்கூட, அந்த வழக்கில் அந்த எம்.எல்.ஏ-வுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால், இதர 17 எம்.எல்.ஏ-க்களுக்கும் அந்தத் தீர்ப்பு பொருந்தக்கூடியது. அதேபோன்று வழக்கு தொடராத 17 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்குத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கான முகாந்திரமும் உள்ளது. எனவே, இந்த வழக்கு விவகாரம் சற்று சிக்கலானதுதான்" என்றார்.  

தினகரன்  ஆதரவு 18 எம் எல் ஏக்கள்

இதுகுறித்துப் பேசிய வழக்கறிஞர் விஜயன், ``18 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு 10-வது அட்டவணையின் கீழ் (கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகச் செயல்படுவது - voluntarily given up legislature party) வரும் என்று தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பும் வந்துள்ளது. வழக்கறிஞர் விஜயன்எனவே, `எவையெல்லாம் voluntarily given up legislature party-க்குள் வரும், எவையெல்லாம் வராது' என்ற விதிமுறைகள் உள்ளன. சட்டமன்றத்துக்குள் செய்யக்கூடிய செயல்கள் மற்றும் நன்னடத்தை போன்றவை இந்த வரம்புக்குள் வரும். குறிப்பாக, எடப்பாடியை எதிர்த்துத் தனி அணியாகச் செயல்பட்டபோது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எதிர்த்து வாக்களித்த விவகாரமும், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரமும் ஒரே மாதிரியானதுதான். ஆனால், சில நுண்ணிய விஷயங்களை இங்கே மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டியுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும் கட்சிக் கட்டுப்பாடுகளை மீறியே தன்னிச்சையாகச் செயல்பட்டார். சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி எதிராக வாக்களித்தனர். ஆனால், ஓ.பி.எஸ் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்குக் காரணம், எடப்பாடி தரப்பினரும், ஓ.பி.எஸ் தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக் கொண்டதுடன், ஒரே அணியாக இணைந்தனர். இந்த விவகாரத்தில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டிருந்தாலும் அவர்களையும் தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கும். 

உண்மையில் ஓ.பி.எஸ் விவகாரம்தான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கருதப்படும். ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்கு வெளியே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கோரி ஆளுநரிடம் மனு கொடுத்தனர். அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக அவர்கள் மனுகொடுக்கவில்லை. கட்சிக் கட்டுப்பாட்டை மீறவில்லை. சட்ட மன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளவில்லை. ஒரு தனிப்பட்ட நபருக்கு எதிராக மட்டுமே போர்க்கொடி தூக்கினார்கள். அது எப்படி voluntarily given up legislature party என்ற வரம்புக்குள் வரும்? அந்த அடிப்படையில்தான், நீதிபதி சுந்தர், `சபாநாயகரின் உத்தரவு செல்லாது' என மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார். எனவே, இந்த 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம் தொடர்பான தீர்ப்பு, விதிமுறைகளுக்கு முரணானது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்குப் போனால் தீர்ப்பு மாறக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close