வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (29/10/2018)

கடைசி தொடர்பு:19:51 (29/10/2018)

சபரிமலை விவகாரம்: அமித் ஷாவுக்கு தொடரும் எதிர்ப்பு!

சபரிமலையின் புனிதத்தைப் பாதுகாப்பதில் பி.ஜே.பி-யினர் வலிமையான பாறைபோன்று நிற்பார்கள். இதைக் கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி அரசுக்கு ஓர் எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன. இங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது போன்ற சூழ்நிலை நிலவுகிறது.

சபரிமலை விவகாரம்: அமித் ஷாவுக்கு தொடரும் எதிர்ப்பு!

பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, சபரிமலை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அமித் ஷாவின் கருத்து நீதிமன்ற அவமதிப்பு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கேரள மாநிலத்தில் பி.ஜே.பி-யினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலம் சிவகிரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, ``கேரளாவில் ஐயப்ப பக்தர்களுக்கும்  அந்த அரசுக்கும் இடையே கடுமையான போராட்டம் நடைபெறுவதாகவும் போராட்டக்காரர்களை ஒடுக்க நினைத்தால் கேரள அரசு பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் அவர், “நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களிலும் விதவிதமான பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் சபரிமலையில் பெண்கள் சென்று வழிபட எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலையின் புனிதத்தைப் பாதுகாப்பதில் பி.ஜே.பி-யினர் வலிமையான பாறைபோன்று நிற்பார்கள். இதை, கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி அரசுக்கு ஓர் எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன. இங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது போன்ற சூழ்நிலை நிலவுகிறது. மக்களால் பின்பற்றக்கூடிய உத்தரவையே மாநில அரசும் நீதிமன்றங்களும் பிறப்பிக்க வேண்டும். மக்களின் மத நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அந்த உத்தரவுகள் இருக்கக் கூடாது” என்றார்.

பினராயி விஜயன் - கேரள முதல்வர்- சபரிமலை விவகாரம்

அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்குப் பதிலளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ``எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளத் தயார். எங்களைப் பொறுத்தவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இதுபோன்ற சூழலில், நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும்வகையில் பி.ஜே.பி தலைவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அமித் ஷாவின் பேச்சு உச்ச நீதிமன்றம், அரசமைப்பு சட்டம் மற்றும் நீதித்துறையின் மீதான தாக்குதலாக உள்ளது” என்று குறிப்பிட்டார். இதேபோன்று, அமித் ஷாவின் கருத்து நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும் என்று எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன. 

"சபரிமலைக்கு பெண்கள் சென்றதன் பின்னணியில் பி.ஜே.பி-க்குத் தொடர்பு உள்ளது" என்பதை அமித் ஷாவின் இந்தப் பேச்சு வெளிப்படுத்தி விட்டதாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் கட்சியின் தலைவரான அமித் ஷாவின் இத்தகைய கூற்று, பி.ஜே.பி - ஆர்.எஸ்.எஸ்ஸின் நீதிமன்ற அவமதிப்பாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தினால், கேரள அரசை கவிழ்ப்போம் என்றரீதியில் அமித் ஷா கூறியிருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானச் செயல்" என்று அக்கட்சி குறைகூறியுள்ளது. 

அபிஷேக் சிங்வி - காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, "சபரிமலை விவகாரத்தில் அமித் ஷாவின் இத்தகைய பேச்சு, ஒரு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை மிரட்டும் செயல். அரசைத் தேர்ந்தெடுத்த மக்களை அவமதிக்கும் செயல். மேலும், இத்தகைய அறிவிப்பின் மூலம் ஜனநாயகத்தைப் பலவீனமடையச் செய்யும் நடவடிக்கையில் பி.ஜே.பி ஈடுபட்டுள்ளது. சி.பி.ஐ, தேர்தல் ஆணையம், மத்திய கண்காணிப்பு ஆணையம், மத்திய புலனாய்வு அமைப்பு போன்ற தன்னாட்சி அமைப்புகளின் அதிகாரத்தில் தலையிடும் நடவடிக்கையின் அடுத்தகட்டமாகவே, அமித் ஷா இவ்வாறு பேசியுள்ளார்" என்றார்.

``அரசியல் லாபத்துக்காக மத உணர்வுகளை பி.ஜே.பி பயன்படுத்திக்கொள்ளும் ஒரு முயற்சியாகவே அமித் ஷாவின் பேச்சு உள்ளது. மத்தியப் பிரசேதம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் சூழலில், அரசியல் ஆதாயத்துக்காக பி.ஜே.பி இதுபோன்று செயல்படுகிறது. தேர்தல் எப்போதெல்லாம் நடைபெறுமோ, அப்போதெல்லாம் இதுபோன்ற செயல்களை பி.ஜே.பி மேற்கொள்ளும்" என்றார்.

"உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான அமித் ஷா-வின் கருத்துகளைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர வேண்டும்" என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

சபரிமலை விவகாரம் தொடர்பாக அமித் ஷா தெரிவித்த கருத்து பற்றி, தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜனைத் தொடர்பு கொண்டோம். அவர், "சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில், பாரம்பர்ய நம்பிக்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பி.ஜே.பி-யின் நிலைப்பாடு. அதைத்தான் எங்கள் கட்சியின் தேசியத் தலைவரும் குறிப்பிட்டுள்ளார். மற்றபடி, கேரள அரசை மிரட்டும் வகையில் எல்லாம் அவர் பேசவில்லை" என்று கூறி முடித்துக்கொண்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்