``கைவிட்ட காங்கிரஸ்... கையிலெடுத்த பி.ஜே.பி!’’ - அரசியல் பகடையானாரா வல்லபபாய் படேல்? #StatueOfUnity | Politics behind the world's tallest statue, 600 ft bronze idolization of sardar vallabhai patel - StatueOfUnity

வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (31/10/2018)

கடைசி தொடர்பு:20:24 (31/10/2018)

``கைவிட்ட காங்கிரஸ்... கையிலெடுத்த பி.ஜே.பி!’’ - அரசியல் பகடையானாரா வல்லபபாய் படேல்? #StatueOfUnity

படேல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நேரு அமைச்சரவையில் இருந்த நாட்டின் முதல் உள்துறை அமைச்சர். படேலை மறக்கடிக்கச் செய்துதான் நேருவை காங்கிரஸ் பிரதமராக்கியதாகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரை முற்றிலும் கொள்கை முரண்கொண்ட பி.ஜே.பி எதற்காகத் தூக்கிக் கொண்டாட வேண்டும்? உலக வரலாற்றில் எத்தனையோ சிலைகளுக்குப் பின்னணியில் இருக்கும் அரசியல் போன்று இந்தச் சிலைக்கும் ஓர் அரசியல் உண்டு.

``கைவிட்ட காங்கிரஸ்... கையிலெடுத்த பி.ஜே.பி!’’ - அரசியல் பகடையானாரா வல்லபபாய் படேல்? #StatueOfUnity

ரசியலுக்கும் சிலைகளுக்கும் பன்னெடுங்காலத் தொடர்பு உண்டு என்பதைத்தான் படேல் சிலைத்திறப்பும் நிரூபிக்கிறது. உலகின் மிகப் பழைமையான சிலையான ரோமானியர்களின் இயற்கை தெய்வம் டயானா, சுற்றுச்சூழலை நாசமாக்கத் தொடங்கியவர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது என்பது அரசியல். நியூயார்க் நகரில் அமைந்துள்ள உலகின் மிக முக்கியமான சிலைகளில் ஒன்றான சுதந்திரதேவி சிலை, பிரெஞ்சு அரசால் அமெரிக்காவுக்கு நட்பின் அடிப்படையில் அனுப்பப்பட்டது. என்றாலும், பிற்போக்குச் சிந்தனை உடையப் பிரெஞ்சு ஆதிக்க சக்திகளுக்கு எதிராக 'எட்வார்ட் லபூல்' எனப்படும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான செயற்பாட்டாளர் சிந்தனையில் உதித்த யோசனைதான் இந்தச் சிலை என்கிற உண்மை அரசியலும் ஒருபக்கம் இருக்கிறது. அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு பலியாக்கப்பட்ட பெண்கள் எங்கே தங்கள் குலத்தைத் தண்டித்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில், அதுபோன்றவர்களுக்கு ஊர் எல்லையில் சிலைகளை உருவாக்கி தெய்வமாக வழிபட்டார்கள். தெய்வங்கள் உருவானதற்குப் பின்னணியிலும் இப்படி ஓர் ஒடுக்கப்பட்டோர் அரசியல் உண்டு. 

மோடி சர்தார் படேல் சிலை அரசியல்

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றை முடித்துவிட்டு ரயிலேறச் சென்ற தந்தை பெரியார் மீது செருப்பு வீசப்பட்டது. அதே இடத்தில் 30 ஆண்டுகள் கழித்து அவருக்காகச் சிலை எழுப்பப்பட்டது. உண்மையில் தனக்காகச் சிலை எழுப்பப்படுவதைப் பெரியார் வரவேற்றார். "எனக்குச் சிலை எழுப்பப்பட்டால் யாரிந்தக் கிழவன் என்கிற கேள்வி மக்களிடம் எழும். அவர்தான் பெரியார் என்பார்கள். யார் இந்தப் பெரியார் என்று கேட்பார்கள். 'சாதிக்கு எதிராகவும் கடவுள் மறுப்புக்காகவும் போராடியவன்' என்று சொல்வார்கள். அப்படியேனும் நம் கொள்கை மக்களிடம் சென்று சேர வேண்டும்" என்றார். அது பெரியார் சிலைகளுக்குப் பின்னணியில் இருந்த அரசியல்.

பெரியார்

நாடெங்கும் இருக்கும் அம்பேத்கர் சிலைகள் இந்துத்துவ அமைப்புகளால் உடைக்கப்பட்டும், பெயின்டுகள் வீசப்பட்டும் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில், அதற்கு முரணாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அம்பேத்கரின் கொள்கைகளைப் பற்றிப் பேசத் தொடங்கியது. முக்கிய முரணாக, 2017 டிசம்பர் மாதத்தில் டெல்லியில் உள்ள அரசின் அம்பேத்கர் ஃபவுண்டேஷனில் அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அந்தச் சிலையை நாட்டில் உள்ள இளைஞர்களுக்காக அர்ப்பணித்தார். அதற்கடுத்த 20 நாள்களில்தான், மகாராஷ்டிராவில் அம்பேத்கர் வணங்கிய பீமா கோரேகானில் கலவரம் வெடித்தது. கலவரத்துக்குக் காரணமானவர்களில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சம்பாஜி பீடே என்பவரும் அடக்கம். அவருக்கு ஆதரவாக அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியான பி.ஜே.பி செயல்பட்டதாகச் சொல்லப்பட்டது.

மோடி நிறுவிய அம்பேத்கர் சிலை

இன்று நர்மதா நதிக்கரையோரம் 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபபாய் படேல் சிலையை நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த ‘ஒற்றுமைச் சிலை’, உலகின் மிக உயரமான சிலையாகும். சுதந்திர தேவி சிலையைவிட இரண்டு மடங்கு உயரம் அதிகம். பிரதமர் மோடி, ``குஜராத்தின் முதல்வராக நான் இருந்த காலம் முதலே எனக்கு இந்தச் சிலைவைக்கும் எண்ணம் இருந்தது. வல்லபபாய் படேல் இல்லையென்றால் நாம் ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரைப் பார்க்கக்கூட விசா எடுக்க வேண்டியநிலை உருவாகியிருக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ``இந்தியா ஒருங்கிணைந்த தேசமாக இருக்குமா? இந்தியா என்னும் தேசம் இன்னும் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியவர்கள் அனைவருக்கும் இந்தச் சிலைதான் பதில்” என்றார் பிரதமர். ஆனால், ஒற்றுமைப்படுத்தியதற்காக மட்டும்தான் இந்தச் சிலையா? 2013-ல் பிரதமர் தேர்தலுக்கு முன்புதான் படேல் சிலைக்காக இரும்பு திரட்டும் இயக்கம் மோடியால் தொடங்கப்பட்டது. இத்தனைக்கும் படேல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நேரு அமைச்சரவையில் இருந்த நாட்டின் முதல் உள்துறை அமைச்சர். படேலை மறக்கடிக்கச் செய்துதான் நேருவைக் காங்கிரஸ் பிரதமராக்கியதாகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரை முற்றிலும் கொள்கை முரண்கொண்ட பி.ஜே.பி எதற்காகத் தூக்கிக் கொண்டாட வேண்டும்? உலக வரலாற்றில் எத்தனையோ சிலைகளுக்குப் பின்னணியில் இருக்கும் அரசியல் போன்று இந்தச் சிலைக்கும் ஓர் அரசியல் உண்டு.  

சிலை

'It's a statue of Ironies and not iron' என்கிறார் சமூகவியலாளர் சிவவிஸ்வநாதன். ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேசியிருக்கும் அவர் "ஒன்றரைக் கோடி படேல் சமூகத்தினர் இருக்கும் குஜராத்தில் அவர்களுக்கான உயர்கல்வி, இடஒதுக்கீடு மற்றும் அரசு வேலைவாய்ப்பு குறித்த கோரிக்கைகளும் போராட்டங்களும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இந்த இடஒதுக்கீட்டுக்காகத் தொடர்ந்து போராடிவரும் ஹர்திக் படேல், ஆளும் பி.ஜே.பி-க்கு குஜராத்தில் மிகப்பெரும் தலைவலியாகவே பார்க்கப்படுகிறார். அவருக்குக் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. வல்லபபாய் படேல் சிலை திறக்கப்படவிருக்கும் இந்த நாளில்தான், குஜராத்தில் பி.ஜே.பி-க்கு எதிரான மிகப்பெரும் மாநாடு ஒன்றை ஹர்திக் படேல் நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தார். இதில் பி.ஜே.பி-யிலிருந்து வெளியேறிய முக்கியத் தலைவர்களான யஷ்வந்த் சின்ஹாவும் சத்ருகன் சின்ஹாவும் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி மற்றும் அல்பேஷ் தாக்கூர் ஆகிய மூன்று இளைஞர்கள்தான் இடஒதுக்கீடு மற்றும் ஒடுக்கப்பட்டோர் அரசியலுக்கான முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை மிக உறுதியாக நம்பிக்கொண்டிருக்கும் பி.ஜே.பி-க்கும் பிரதமருக்கும் சொந்த மாநிலமான குஜராத்தில் இப்படியொரு சிக்கல் நிலவுவது, தேர்தல் அரசியலுக்கான இடையூறாகவே பார்க்கப்படுகிறது. இதனால் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட படேல் சமூக மக்களின் வாக்குவங்கி கேள்விக்குறியாகியிருக்கும் இந்தச் சூழ்நிலையில், இரும்பு மனிதரின் உயரமான சிலையை தாங்கள் நிறுவுவது வாக்குவங்கியை உயர்த்தும் என்பது பி.ஜே.பி-யின் கணிப்பு. இதற்குச் சர்வதேச அடையாளம் என்கிற முலாம் பூசப்பட்டுள்ளது அவ்வளவே” என்கிறார். 

சர்தார் வல்லபபாய் படேலைக்  கைவிட்டது காங்கிரஸின் தவறு. அவரைக் கையிலெடுத்துக்கொண்டது பி.ஜே.பி-யின் தவறு.

- கோபாலகிருஷ்ண காந்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்