சுஜாத் புகாரி, அச்யுதனந்த், ஜமால்... பெருகி வரும் ஊடகவியலாளர்கள் மீதான குற்றங்கள்! #VikatanInfographics | Rise in crime against the journalists around the world - International Day to End Impunity for Crimes Against Journalists

வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (02/11/2018)

கடைசி தொடர்பு:09:11 (03/11/2018)

சுஜாத் புகாரி, அச்யுதனந்த், ஜமால்... பெருகி வரும் ஊடகவியலாளர்கள் மீதான குற்றங்கள்! #VikatanInfographics

படுகொலைகளுக்கு அப்பால், ஊடகவியலாளர்கள் மீதான அரசியல் அழுத்தங்களும் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன.

சுஜாத் புகாரி, அச்யுதனந்த், ஜமால்... பெருகி வரும் ஊடகவியலாளர்கள் மீதான குற்றங்கள்! #VikatanInfographics

வ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தான் வெளிப்படுத்த விரும்பும் கருத்தைப் பதிவுசெய்வதற்குச் சுதந்திரம் அளிக்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19-ம் பிரிவு. அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் இந்த அடிப்படை உரிமையின் கீழ் இயங்கி வருகின்றன நம் ஊடகங்கள். சட்டம், உரிமையை வகுத்துத் தந்திருந்தாலும், இந்தியா முழுவதும் ஊடகவியலாளர்கள் தங்கள் பணிகளைச் செய்வதற்காகவும், அதைச் செய்யும்போது கொல்லப்பட்டு வரும் நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

ஜமால்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ம் தேதி அன்று, ஐநா சபை ``ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சர்வதேச தின"த்தைக் கடைப்பிடிக்கிறது. ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதும், அவர்களைக் கொலைசெய்ய உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதும் உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துபவர்களைத் தடுக்காத நாடுகள் பட்டியலில் இந்தியா 14-வது இடத்தைப் பெற்றுள்ளது.

மூன்று நாள்களுக்கு முன்பு, சத்தீஸ்கர் பகுதியில் தேர்தல் நடத்துவதை எதிர்த்த நக்சலைட்களின் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹு கொல்லப்பட்டார். செய்தி சேகரிக்கச் சென்ற அவர், தனது வீட்டுக்குப் பிணமாகத் திரும்பினார்.

சில மாதங்களுக்கு முன்பு, 'ரைசிங் காஷ்மீர்' பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரி மர்ம நபர்களால் காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டார். 'சுஜாத் புகாரியைக் கொன்றது யார்?' என்ற விசாரணை நடந்துகொண்டிருக்கும் வேளையில், காஷ்மீரின் முன்னாள் பி.ஜே.பி அமைச்சர் லால் சிங் ``காஷ்மீர் பத்திரிகையாளர்கள் தங்கள் எல்லையை மீறாமல் எழுத வேண்டும்; மீறினால் சுஜாத் புகாரியின் நிலைதான் ஏற்படும்" என்று பொது நிகழ்ச்சி ஒன்றிலேயே பேசி சர்ச்சையைக் கிளப்பினார்.

ஊடகவியலாளர்கள்

இந்தியாவின் நிலை இப்படியிருக்க, துருக்கியில் இருக்கும் சவுதி அரேபியாவின் தூதரகத்துக்குச் சென்ற சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி, அத்தூதரகத்தில் வைத்தே சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். மற்றொரு நாட்டில் வைத்து, தன் தூதரகத்தில் சொந்தக் குடிமகனையே கொலை செய்திருக்கும் சவுதி அரேபிய அரசு மீது பல்வேறு கண்டனங்களும், போர் மூளும் அபாயமும் உருவாகியுள்ளது. ஜமால் கஷோகிஜி, சவுதி அரேபிய மன்னர் முகமது பின் சல்மானைக் கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜமால் கஷியோகிஜியின் படுகொலையைப் போல, இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கான இயக்கமாகக் கௌரி லங்கேஷின் கொலைக்குப் பிறகு பலரும் திரண்டனர். சாதி, மதம் குறித்த தொடர் விமர்சனங்களை முன்வைத்தவர் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ். பெரும் அழுத்தங்களுக்குப் பிறகு, கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்புடையவர்கள் என்று சிலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மாநகரங்களில் வசிக்கும் ஊடகவியலாளர்களின் நிலையே மோசமாக இருக்கும் சூழலில், கிராமப் புறங்களில் இயங்கி, அங்குள்ள மக்களின் செய்திகளை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் குறித்த தகவல்கள் இப்போது வரையிலும் தொகுக்கப்படவில்லை.

படுகொலைகளுக்கு அப்பால், ஊடகவியலாளர்கள் மீதான அரசியல் அழுத்தங்களும் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம், 'நக்கீரன்' இதழின் ஆசிரியர் கோபால் அவர்களின் கைது. 'நக்கீரன்' கோபால் கைது செய்யப்பட்டு, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2018-ம் ஆண்டில், தேசத்துரோக வழக்கின் கீழ் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்ட இரண்டாம் நிகழ்வு இது.  

இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் அரசு மீது விமர்சனங்களை முன்வைக்கும் ஊடகவியலாளர்கள் பலரும் அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். 'கருத்துச் சுதந்திரம்' என்பது வெறும் சட்ட அளவில் நின்று விடாமல், ஊடகவியலாளர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கானச் சூழல் இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் உருவாக வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்