மேகமலையில் தொடர்ந்து கொல்லப்படும் யானைகள்...வனத்துறையின் கவனத்துக்கு | Elephants get continuously killed in the Megamalai

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (05/11/2018)

கடைசி தொடர்பு:12:37 (05/11/2018)

மேகமலையில் தொடர்ந்து கொல்லப்படும் யானைகள்...வனத்துறையின் கவனத்துக்கு

கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் நடந்த யானைகள் கணக்கெடுப்பின் படி மொத்தமாக 27,312 யானைகள் இருந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டுக்கும் சராசரியாக 97 யானைகள் வீதம் இறந்துகொண்டிருக்கின்றன

மேகமலையில் தொடர்ந்து கொல்லப்படும் யானைகள்...வனத்துறையின் கவனத்துக்கு

ருபது ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்பிரிக்க யானைகள் 2013-ம் ஆண்டில் மட்டும் கொல்லப்பட்டிருப்பதாகக் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்த ஆய்வு மையம் ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு, 2012-ம் ஆண்டும், இதே அளவுக்கு யானைகள் கொல்லப்பட்டிருப்பதையும் தன்னுடைய ஆய்வின் முடிவில் தெரிவித்திருந்தது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து, தந்தத்துக்காகக் கொல்லப்படும் யானைகளின் எண்ணிக்கை இதைவிடவும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் யானைகள் இறப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில், விபத்தில் இறக்கும் யானைகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. வேண்டும் என்றே யானைகள் விபத்து ஏற்படுத்தப்படுவதாகக் கூறுகிறார்கள் வன ஆர்வலர்கள். அதை நிரூபிக்கும்விதமாகத் தமிழகத்தில் யானை உயிரிழப்புகள் அதிகரித்திருக்கின்றன.

ஆர்.டி.ஐ தகவலின்படி, ``2017-ம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு தமிழகத்தில் நடந்தது. 2,761 யானைகள் தமிழக வனப்பகுதிகளில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கோயில்களில் 39 யானைகளும், தனியார் வசம் 38 யானைகளும், வனத்துறை முகாம்களில் 47 யானைகளும், பூங்காக்களில் 5 யானைகளும் இருப்பதாகத் தெரியவந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 973 யானைகள் இறந்துள்ளன. கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் நடந்த யானைகள் கணக்கெடுப்பின்படி, மொத்தமாக 27,312 யானைகள் இருந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டுக்கும் சராசரியாக 97 யானைகள் வீதம் இறந்துகொண்டிருக்கின்றன'' என்று தகவல் கிடைத்துள்ளது.

மேகமலை

``தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வனவிலங்கு சரணாலயம் 630 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இந்தச் சரணாலயம் பெரியார் புலிகள் சரணாலயம் மற்றும் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்துக்கும் இடையே அமைந்துள்ளது. பெரும்பாலும் யானைகளின் இடப்பெயர்ச்சி மேகமலை வழியாகத்தான் இருக்கும். அப்போது மேகமலையில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழக்கின்றன. சமீபத்தில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பது அதிகரித்து உள்ளது. பெரியாறு நீர்மின் திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் மேகமலை வழியாக உயர் அழுத்த மின் கம்பிகள் வழியாக நெல்லை மாவட்டத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த மின் கம்பிகள் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதால் மிகவும் தாழ்வாகச் செல்கின்றன. இதில் சிக்கி யானைகள் உயிரிழக்கின்றன. வனப்பகுதியில் 20 முதல் 30 அடி உயரத்தில்தான் மின் கம்பிகள் செல்ல வேண்டும் என்பது தேசிய வன விலங்கு வாரியத்தின் விதி. ஆனால் இந்த விதிகளுக்கு முரணாக வனப்பகுதியில் தாழ்வாக மின் கம்பிகள் செல்கின்றன. எனவே, யானைகள் உயிரிழப்பு குறித்து விசாரிக்கவும், அடர்ந்த வனம், வன விலங்கு சரணாலயம், புலிகள் சரணாலயம், தேசியப் பூங்காக்களில் யானைகள் மற்றும் வன விலங்குகள் உயிரிழப்பைத் தடுக்க உயர் அழுத்த மின் கம்பிகளை அதிக உயரத்தில் கொண்டு செல்லவோ அல்லது தரையில் பதித்துச் செல்லவோ நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய மாநில அரசுகள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் கடந்த வாரம் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

யானைகள்

இதுகுறித்து வழக்கறிஞர் அழகுமணியிடம் பேசினோம். ``மேகமலையில் கம்பம் வடக்கு வனப்பகுதியில் பல யானைகள் இறந்துள்ளன. சமீபத்தில் கேரளாவில் வனக் கொள்ளையர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் தந்தம் உள்ளிட்ட பொருள்களுக்காக வணிக நோக்கத்தில் யானைகளைத் தமிழகத்தில் கொல்லப்படுவதாகக் கூறியுள்ளனர். வனத்தில் உள்ள மின்கம்பிகள் பாதுகாப்பான முறையில் தரையினுள் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல், வனவிலங்கு கட்டுப்பாட்டு அமைப்பினர்  யானைகள் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகளிடம் விசாரணையின் போது தெரிவித்தோம். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ``மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க வனத்துறையும் மின்சாரத்துறையும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கேரள காவல்துறையினர் கைது செய்துள்ள வனக் கொள்ளையர்களை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். தேசிய வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு புலனாய்வு அமைப்பினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்'' என்றார்.

அழகுமணி

``பாதுகாக்கப்பட வேண்டிய யானைகள் திட்டமிடப்பட்டு, விபத்து என்ற பெயரில் கொல்லப்படுகிறது. இது திட்டமிடப்பட்ட சதியாகவும் இருக்கலாம். தந்தத்துக்காகவும் தோலுக்காகவும் யானைகள் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. யானையைப் போல இன்னும் பல வன உயிரினங்கள் கொல்லப்படுவதையும் தடுக்க வேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, வனக் கொள்ளையில் ஈடுபடும் அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்'' என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத வன ஆர்வலர்.


டிரெண்டிங் @ விகடன்