வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (07/11/2018)

கடைசி தொடர்பு:16:07 (07/11/2018)

1901- 2018 வரை... ராயல் என்ஃபீல்டு கடந்து வந்த பாதை! #VikatanInfographics

என்ஃபீல்டு நிறுவனம் 1900 ஆண்டு வரை சைக்கிள், குவாட்ரி சைக்கிள், ட்ரை சைக்கிள் மற்றும் புல் வெட்டும் இயந்திரங்கள் மட்டுமே தயாரித்தது.

1901- 2018 வரை... ராயல் என்ஃபீல்டு கடந்து வந்த பாதை! #VikatanInfographics

ப... டப... டப... டப... என்ற சத்தம் கேட்கும்போதே பலருக்கு மனதில் ஒருவித கம்பீரம் பிறக்கும். ஆண்கள் அனைவரும் தங்களை கெத்தாக வெளிக்காட்டிக்கொள்ள விரும்பும் வாகனமாகக் கருதப்படுவது என்ஃபீல்டு ரக புல்லட்டுகள்தாம். ராயல் என்ஃபீல்டு ஓட்டும்போது நாம்தான் ராஜா என்ற நினைப்பில் மற்றவர்களைத் திமிராகப் பார்த்துச் செல்வோம். 

சென்னை என்றாலே கார் தொழிற்சாலைகள் என்று மட்டுமல்ல, இருசக்கர வாகனத்தின் பெயரையும் சொல்வோம். காரணம், ராயல் என்ஃபீல்டு புல்லட். இந்திய வாடிக்கையாளர்கள் மனதில், ராயல் என்ஃபீல்டு புல்லட்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மக்களின் மனதுக்கு ஏற்றபடி அடிக்கடி தன்னை ராயலாக மாற்றிக்கொண்டு புதுவித என்ட்ரியையும் கொடுத்துவருகிறது. ராயல் என்ஃபீல்டில் கெத்தாகப் பயணம்செய்யும் பலருக்கு, வண்டி பற்றிய தகவல்கள் மட்டுமே தெரியுமே தவிர, அவற்றின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

50 ஆண்டுகளையும் தாண்டி இந்தியாவில் வெற்றிகரமான மோட்டார் சைக்கிள் நிறுவனமாக இருப்பதற்குக் காரணம், அதன் மீது இருக்கும் `லைஃப் ஸ்டைல்’ இமேஜ்தான். அன்றாட போக்குவரத்துக்கான பைக்குகள் சூழ்ந்திருக்கும் இந்திய மார்க்கெட்டில், தனித்துவத்தோடு தெரிய விரும்புவர்களுக்கான சாய்ஸாகத் தொடர்ந்து இருந்துவருகிறது ராயல் என்ஃபீல்டு. 

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டின் தலைமையகம் சென்னைதான் என்று பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இந்த வண்டி பிறந்தது என்னவோ இங்கிலாந்தில்தான். இங்கிலாந்தில் உள்ள ரெட்டிட்ச், வொர்செஸ்டர்ஷைர் பகுதியில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது என்ஃபீல்டு நிறுவனம். Enfield Manufacturing Co. ltd. என்ற பெயரில் இந்த நிறுவனம் இயங்கிக்கொண்டிருந்தது. Made like a Gun என்பதுதான் இவர்களின் அப்போதைய முத்திரையாக வலம்வந்தது. 1893 - 1900 ஆண்டு வரை சைக்கிள், குவாட்ரி சைக்கிள், ட்ரை சைக்கிள் மற்றும் புல் வெட்டும் இயந்திரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அப்போதெல்லாம் ராயல் என்ஃபீல்டு என்றால் `பைக்' என்று சொல்ல மாட்டார்கள். முதன்முதலாக 1901-ம் ஆண்டு ராயல் என்ஃபீல்டு தனது முதல் மோட்டார்சைக்கிளை தயாரிக்கிறது. அது 2.5bhp பவர் தரும் இன்ஜினைக் கொண்டிருந்தது. அதன் பிறகு, 1916-ம் ஆண்டில் முதல் உலகப்போரில் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டன. பிறகு, துப்பாக்கிப் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிளை என்ஃபீல்டு அறிமுகம்செய்தது. அதன் பிறகு, 1931-ம் ஆண்டில்தான் புல்லட் அறிமுகமானது. அப்போதும் புல்லட் என்பது வெறும் சைக்கிள்தான். 1932-ம் ஆண்டில் முதன்முதலாக புல்லட் `பைக்' என்ற வடிவில் கம்பீரமாக அறிமுகமானது.

Royal Enfield

1939-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது 125cc, 250cc, 350cc, 570cc ஆகிய CC கொண்ட பைக்குகளை பிரிட்டிஷ் ராணுவத்துக்கு என்ஃபீல்டு நிறுவனம் வழங்கியது. இரண்டாம் உலகப்போரில் ஏர்ஃபோர்ஸ் வீரர்களுக்காக `FLYING FLEA' என்ற பைக் அறிமுகப்படுத்தினார்கள். 1952-ம் ஆண்டில் இங்கிலாந்தில் பைக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அப்போது, மெட்ராஸ் மோட்டார் நிறுவனமும் என்ஃபீல்டு இங்கிலாந்து நிறுவனமும் இணைந்து பைக்கை இந்தியாவில் தயாரிக்க  ஒப்பந்தம் போட்டார்கள். இந்திய அரசாங்கம், காவல் துறை மற்றும் ராணுவத் துறையின் பாதுகாப்புப் பணிக்காக 800, 350சிசி வகை புல்லட்டை தேர்வுசெய்கிறார்கள். அப்போதுதான், ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் தன்னுடைய பயணத்தை ஆரம்பிக்கிறது. 

1956-58களில் சென்னையில் உள்ள திருவொற்றியூரில் 2.96 ஏக்கர் பரப்பளவில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது,  இந்தியாவில் 91 இடங்களில் விற்பனை மையம் தொடங்கப்பட்டது. 1970-ம் ஆண்டில் என்ஃபீல்டு இங்கிலாந்து நிறுவனம் சந்தையிலிருந்து முழுமையான தனது சேவையை நீக்கிக்கொண்டது. இந்தியா என்ஃபீல்டு நிறுவனம், மெட்ராஸ் மோட்டார் நிறுவனத்தால் தொடர்ந்து இயக்கப்பட்டது. இதனால் 1984-ம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு புல்லட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1994-ம் ஆண்டில் ஐச்சர் நிறுவனம் என்ஃபீல்டு இந்தியா நிறுவனத்தை வாங்கி, மீண்டும் `ராயல் என்ஃபீல்டு' எனப் பெயர் சூட்டியது. அப்போது 1995-ம் ஆண்டில் முதல் புல்லட் க்ளப் பெங்களூரில் தொடங்கப்பட்டது. 40 மோட்டார்சைக்கிள்கள் உலகின் மிக உயரமான மோட்டார்  சாலை என அழைக்கப்படும் கர்டுங்கலா பகுதிக்கு 1997-ம் ஆண்டில் டெல்லியிலிருந்து பயணித்தது. இதன் தொடக்கமே Himalayan Odyssey உருவானது. 

ராயல் என்ஃபீல்டு

ஒவ்வொரு முறையும் புதிய புதிய வடிவில் வலம்வந்த என்ஃபீல்டு, 2009-ம் ஆண்டில் க்ளாசிக் 500 மற்றும் க்ளாசிக் 350 என்ற மாடல் இந்தியாவில் வெளியாகி மக்களைத் தன்வசப்படுத்தியது. மக்களின் விருப்பத்துக்கேற்ப மாடல்கள் வந்ததால் விற்பனையும் வளர்ச்சியடைந்தது. 2011-ம் ஆண்டில் தனது இரண்டாவது தொழிற்சாலையை ஒரகடம் அருகில் 50 ஏக்கர் பரப்பளவில் கட்டினார்கள். தொடர்ந்து 2016-ம் ஆண்டில் அட்வெஞ்சர் ரக ஹிமாலயன் பைக் வெளிவந்தது. பயணம் செய்வதற்கு பல்வேறு வாகனங்கள் இருந்தாலும், தொலைதூரப் பயணங்களுக்குச் செல்லும் பலரும் ராயல் என்ஃபீல்டையே விரும்பினர் 2017-ம் ஆண்டில் முதன்முறையாக 650cc ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட கான்டினென்ட்டில் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் மாடல் அறிமுகமானது. இதையடுத்து, இந்த ஆண்டு 2018-ல் கலிஃபோர்னியாவில் இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகள் விற்பனைக்கு வந்தன. இந்தியாவில் 2 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், ட்வின் சிலிண்டர் இன்ஜின்கொண்ட இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் GT 650 பைக்குகள் இந்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் நிலையில் தனது அடுத்த பைக் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு தனது க்ளாசிக் 350 மற்றும் க்ளாசிக் 500 பைக்குகளை அப்டேட் செய்வதாகவும் தகவல்கள் வந்திருந்தன.

ஒவ்வொரு மோட்டார்சைக்கிள் நிறுவனமும், சின்னச் சின்ன மாற்றங்களுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை `புத்தம் புதிய பைக்’ என்று பழைய பைக்கையே வெளியிடுவர். ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் அடிக்கடி மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால், மாற்றங்கள் செய்கிறது என்றால் அது `ஜஸ்ட் லைக் தட்’ மாற்றமாக இருக்காது. பெயருக்கு ஏற்றபடி, உண்மையிலேயே பெரிய மாற்றங்களுடன் புதிய பைக்காக விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராயல் என்ஃபீல்டு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்