வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (07/11/2018)

கடைசி தொடர்பு:19:32 (07/11/2018)

இடைத்தேர்தலால் உதறலில் எடப்பாடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

இடைத்தேர்தலால் உதறலில் எடப்பாடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

மிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப்போகும் தேர்தலாக மாறியிருக்கிறது `20 தொகுதிகளின் இடைத்தேர்தல். எடப்பாடி பழனிசாமி `சர்கார்’ நீளுமா, வீழுமா என்பதைத் தீர்மானிக்கப்போகும் தேர்தலாகவும் பார்க்கப்படுவதால், திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் குறித்து டெல்லிவரை இப்போதே எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளுடன் மு.கருணாநிதி மற்றும் ஏ.கே. போஸ் மறைவால் காலியான திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் எப்போது வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மட்டுமன்றி அனைத்து தரப்பினரிடையேயும் எழுந்துள்ளது. ஆனால், இதுவரை தேர்தல் ஆணையம் அதுபற்றி எந்தவோர் அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் ஜனவரி மாதத்துக்கு முன்பாக இந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தத் தொகுதிகளில் எப்போது தேர்தல் நடந்தாலும், சரவண பவன் மினி இட்லி போல, இது மினி சட்டமன்றத் தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. தமிழக மக்களைப் பொறுத்தவரை, எப்போதுமே நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு நிலைப்பாட்டையும், சட்டமன்றத் தேர்தலில் வேறொரு நிலைப்பாட்டையும் எடுத்து, அதற்குத் தகுந்த மாதிரி வாக்களிப்பார்கள். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் `வாஷ் அவுட்' ஆன தி.மு.க-வை தமிழக மக்கள், 2016 சட்டமன்றத் தேர்தலில் 89 தொகுதிகளில் வெற்றிபெற வைத்தார்கள். எனவே, தற்போது 20 தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் என்பது, அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்பதைவிடவும் தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இடைத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்த முடிவுகளை வைத்து தமிழக மக்களின் மனநிலையைக் கணிக்க முடியும். எனினும், இடைத்தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகப் பிரதிபலிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போதுள்ள நிலையில், தமிழக சட்டசபையில் 109 எம்.எல்.ஏ-க்களின் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மொத்தம் 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 20 இடங்கள் காலியாக இருப்பதால், தற்போது 214 எம்.எல்.ஏ-க்களே பதவியில் உள்ளனர். அந்தவகையில், இப்போதைய சூழலில் ஆட்சிக்கு 108 உறுப்பினர்களின் ஆதரவு போதுமானது. அது என்ன மாயமோ, மந்திரமோ அரசைக் காப்பாற்றிக் கொள்வதில் எடப்பாடி பழனிசாமி கில்லாடியாக இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த வெர்சனாக இருப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு, அவர் தொடர்ந்து பல்புகளைக் கொடுத்துவருகிறார். பல் இல்லாத பாம்பாகத் தெரிந்தவர், இப்போது அனகோண்டா ரேஞ்சுக்கு எந்தவிதமான ஆபத்துகள் வந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து வந்து கொண்டிருக்கிறார்.

இடைத்தேர்தல் - மு.க.ஸ்டாலின்

இந்தச் சூழ்நிலையில், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால், குறைந்தது எட்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அப்போதுதான் அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றி, எஞ்சியுள்ள இரண்டாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்ய முடியும். அப்படி ஒருவேளை வெற்றிபெற முடியாவில்லை, எடப்பாடியின் ராஜா வேஷம் கலைய வேண்டிய நிலை உருவாகும். அதன் காரணமாகவே வெளிப்புறத் தோற்றத்தில், ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று எடப்பாடி உறுமிக் கொண்டாலும், இடைத்தேர்தலை நினைத்து அவருக்குச் சற்றே உதறல் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ, மற்ற எல்லாக் கட்சிகளை விடவும் முந்திக்கொண்டு, 20 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார். தனது கட்டுப்பாட்டில் செயல்படும் மாநில உளவுத்துறையையும் இந்தத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏவிவிட்டு, அங்குள்ள சூழல் குறித்து ஆராய ஆரம்பித்துவிட்டார் அவர்.

துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வமோ ஒருபடி மேலேபோய், ``இடைத்தேர்தலில் ஏழோ, எட்டோ எங்கள் இலக்கு அல்ல. இருபது தொகுதிகளுமே எங்கள் இலக்கு" என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். `நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன்’ என்பதைப் போல, `அடித்தால் இருபதுதான்’ என்பதை அ.தி.மு.க-வினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆக, இதுவரை பயந்து பதுங்கிக் கொண்டிருந்த பழனிசாமி - பன்னீர் பிரதர்ஸ், தற்போது பாய்ச்சலுக்குத் தயாராகி விட்டார்கள். இன்னொருபுறம், `அ.தி.மு.க-வின் உண்மையான தொண்டர்கள் தங்கள் பக்கம்தான் உள்ளனர்' அந்தக் கட்சிக்குச் சொந்தம் கொண்டாடி வரும் டி.டி.வி. தினகரனைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் அவரின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் தேர்தலாகவே இருக்கும். ஜெயலலிதா போட்டியிட்டு முதல்வராகி, பின்னர் மறைந்த ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்ற தினகரன், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சி அடையாளத்துடன் இதைச் சந்திப்பார். இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க இடங்களைக் கைப்பற்றி, வெற்றிபெறா விட்டால், அ.ம.மு.க கூடாரத்தில் உள்ள அ.தி.மு.க. அதிருப்தியாளர்கள், கூண்டைத் திறந்து கொண்டல்ல, உடைத்துக்கொண்டே கிளிகள் பறப்பது போன்று வெளியேறிவிடக்கூடிய அபாயம் உள்ளது.

எனவே, அ.ம.மு.க. நிர்வாகிகளும் முன்கூட்டியே களத்தில் இறங்கித் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டார்கள். `ஏற்கெனவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வெற்றிபெற்ற தொகுதிகள் என்பதால், இடைத்தேர்தலிலும் எங்களுக்கே வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ என்ற நம்பிக்கையில் சுழல்கிறார்கள் தினகரன் ஆதரவு அணியினர். 

இடைத்தேர்லைப் பொறுத்தவரை, எப்போதுமே பிரதான எதிர்க்கட்சிதான் ஆவலாக எதிர்நோக்கியிருக்கும். 2016 பொதுத்தேர்தலில் விட்டதைப் பிடிக்கும் மனநிலையுடன் களம் காண வேண்டிய தி.மு.க.வின் இடைத்தேர்தல் வியூகமோ இப்போதுவரை பூடகமாகவே இருந்து கொண்டிருக்கிறது. அடிப்படையில், அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கும் எதிர்க்கட்சியாக தி.மு.க. சரிவரசெயல்படவில்லை என்ற பொதுவான எண்ணம் தமிழக மக்களிடையே நிலவுகிறது. இத்தகைய சூழலில் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தி.மு.க-வுக்குக் கிடைத்திருக்கும் ஒரு ஜாக்பாட் என்றே கூறலாம். `மக்கள் எங்கள் பக்கம்தான்’ என்று இதுநாள்வரை வார்த்தைகளில் மட்டுமே தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் சொல்லிக் கொண்டிருப்பதை நிரூபித்துக்காட்டும் வாய்ப்பாய் இத்தேர்தல் அமையும் என எதிர்பார்க்கலாம். தவிர, கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கட்சி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் என்பதால், 20 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் அவரும், தி.மு.க. நிர்வாகிகளும் தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால், ஸ்டாலின் இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

இடைத்தேர்தல் - டி.டி.வி.தினகரன்

ஆர்.கே. நகரைக் கோட்டை விட்டதற்கே இன்னமும் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள். இப்போது வரவிருக்கும் இடைத்தேர்தலிலும் சோபிக்கத் தவறினால், அந்தப் பழியும் ஸ்டாலின் மீதான விமர்சனமாகவே முடியும்.

`இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து சட்டமன்றத் தேர்தலை மதிப்பிட முடியாது’ என்று எவ்வளவுதான் கம்பு சுற்றினாலும் வேலைக்கு ஆகாது. 'அ.தி.மு.க-வை வெல்ல தி.மு.க-வால்தான் முடியும்’ என்ற மக்களின் எண்ணமே தி.மு.க-வின் பலம் என்பதை உணர்ந்து ஸ்டாலின் செயல்படுவாரா என அந்தக் கட்சியின் தொண்டர்கள் எதிர்நோக்கியுள்ளனர். எனவே, இப்போதைய நிலையில் வெற்றியை ஈட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஸ்டாலின். ஆனால், இன்னமும், `தேர்தல் வரட்டும்... அப்புறம் பார்க்கலாம்...’ என்ற மோடிலேயே தி.மு.க. இருப்பதாகவே தெரிகிறது. அந்தவகையில், `தி.மு.க. இன்னும் அதிக வேகம் காட்ட வேண்டும்’ என்பது கட்சித் தொண்டர்களின் ஆசையாக இருக்கிறது.

`` `பழனிசாமியா, தினகரனா, ஸ்டாலினா...?' தமிழ்நாட்டின் அரசியல் அச்சு யாரைச்சுற்றி இனிச் சுழலப்போகிறது? என்பதை, இந்த  இடைத்தேர்தல் முடிவுகள் கோடிட்டுக் காட்டும்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். எனவே, எதிர்வரும் இடைத்தேர்தல் பல குழப்பங்களுக்கு விடையளிக்கும் தேர்தலாக இருக்கப்போகிறது என்பது உறுதி!


டிரெண்டிங் @ விகடன்