வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (08/11/2018)

கடைசி தொடர்பு:17:31 (08/11/2018)

``இந்த தீபாவளிக்குச் சென்னை என்ன ஆனது?" - மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை

2018 தீபாவளி நாள் அன்று கண்டறியப்பட்ட காற்று மாசின் அளவை 2017-ம் ஆண்டு தீபாவளி நாளோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைந்து காணப்பட்டது.

``இந்த தீபாவளிக்குச் சென்னை என்ன ஆனது?

இந்த தீபாவளிக் கொண்டாட்டம் பலருக்கும் புதிதாகத்தான் இருந்திருக்கும். முன்பு எப்போதும் இல்லாத வகையில் தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்கும் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லை. தீபாவளியன்று பட்டாசுகளைக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் வெடிக்க வேண்டும் எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் காலை 6 முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த முறை தீபாவளி விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதற்கு முக்கியக் காரணம் சுற்றுச்சூழல் பாதிப்புகள்தாம். சமீப காலமாக இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. அது தொடர்பான செய்திகளை அடிக்கடி பார்க்க முடிகிறது. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது பெரும்பாலும் மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தீபாவளிக்கு முன்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பு சென்னையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? முந்தைய வருடங்களுடன் ஒப்பிடும்போது காற்று மாசின் அளவு எப்படி இருந்தது? தீபாவளியன்று காற்றின் தரம் எப்படி இருந்தது என்பது தொடர்பாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். 

சென்னையில் காற்று எப்படி இருந்தது ? 

தீபாவளி


சென்னையைப் பொறுத்தவரையில் இயல்பாகவே காற்றில் கலந்திருக்கும் மாசுபாட்டின் அளவானது தீபாவளி சமயங்களில் அதிகரிப்பது வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்று. இதைத் தீபாவளி அன்றும் அடுத்த நாள் காலையிலும் நன்றாகவே உணர முடியும். கடந்த வருடம் தீபாவளியன்று இரவில் மெரினா கடற்கரையில் அதன் தாக்கத்தைக் கண் கூடாகவே பார்க்க முடிந்தது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்குச் சுற்றிலும் புகை இருந்தது. தொலைவில் இருந்து பார்த்தாலே தெரியும் கலங்கரை விளக்கத்தில் இருக்கும் விளக்கின் ஒளியைப் பார்க்கவே முடியவில்லை. இந்த வருடமும் அப்படிதான் இருக்கும் என நினைத்தால் இந்த முறை கொஞ்சம் நிலைமை பரவாயில்லை என்றுதான் தோன்றியது. இந்த வருடம் மெரினா கடற்கரையில் வானத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. காற்றிலும் அவ்வளவாகப் புகை நெடி இல்லை.

`காற்றில் மாசு'- என்ன சொல்கிறது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

சென்னையைப் பொறுத்தவரையில் திருவல்லிக்கேணி, பெசென்ட் நகர், நுங்கம்பாக்கம், தி. நகர் மற்றும் சௌகார்பேட்டை என மொத்தம் ஐந்து இடங்களில் இது தொடர்பான அளவீடுகள் எடுக்கப்பட்டுள்ளன. தீபாவளி சமயங்களில் ஏற்பாடும் காற்று மாசு மற்றும் ஒலி மாசு என இரண்டுமே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் கண்காணிக்கப்பட்டுள்ளது. 31.10.2018 அன்று வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பாணையின் அடிப்படையில் தீபாவளிக்கு 7 நாள்கள் முன்பும் 7 நாள்கள் பின்னரும் காற்றில் மாசின் அளவைக் கண்டறிய முடிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். மேலும் அதே ஐந்து இடங்களில் ஒலி மாசின் அளவும் கண்காணிக்கப்பட்டது.

காற்று மாசுபாட்டைப் பொறுத்தவரையில் சௌகார்பேட்டை பகுதியில் அதிகபட்சமாக மிதக்கும் நுண்துகள்களின் (PM 10) அளவு 114 மைக்ரோகிராம் / கன மீட்டர் என்ற அளவில் இருந்தது. மிகக்குறைந்த அளவாக நுங்கம்பாக்கம் பகுதியில் 48 மைக்ரோகிராம் / கன மீட்டர் என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலியின் அளவு மிகக் குறைவாக சௌகார்பேட்டை 68 டெசிபல் என்ற அளவிலும் அதிகமாக தி. நகர்ப் பகுதியில் 89 டெசிபல் என்ற அளவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவீடுகள் மட்டுமன்றி வேறு சில தகவல்களையும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

2018 தீபாவளி நாள் அன்று கண்டறியப்பட்ட காற்று மாசின் அளவை 2017-ம் ஆண்டு தீபாவளி நாளோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைந்து காணப்பட்டது.

மிதக்கும் நுண்துகள்கள் (PM 10) 48 முதல் 114 மைக்ரோகிராம் / கன மீட்டர் (06.11.2018) என்ற அளவில் இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு மிதக்கும் நுண்துகள்களின் அளவு 387 முதல் 777 மைக்ரோகிராம் / கன மீட்டர் (06.11.2018) என்ற அளவில் இருந்தது.(நிர்ணயிக்கப்பட்ட அதிக அளவு 100 மைக்ரோகிராம் / கன மீட்டர் )

அனைத்து காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களிலும் நுண்துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டே இருந்தது. சௌகார்பேட்டை கண்காணிப்பு நிலையத்தில் மட்டும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விடச் சற்றுக் கூடுதலாக இருந்தது. (114 மைக்ரோகிராம் / கன மீட்டர் )

அனைத்து காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களிலும் கந்தக டை- ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை -ஆக்ஸைடு நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மிகவும் குறைந்தே காணப்பட்டது.

வளிமண்டல ஒலி மாசின் அளவு தீபாவளிக்கு முன் (31.10.2018) 58 -லிருந்து 75 டெசிபல் என்ற அளவில் இருந்தது. தீபாவளி அன்று (06.11.2018) 68-லிருந்து 89-டெசிபல் என்ற அளவில் இருந்தது. 

மேலும் இந்த முறை காற்று மாசு அளவு குறைந்ததற்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு மக்கள் ஒத்துழைப்பும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உட்பட இதர அரசுத் துறைகளின் விழிப்பு உணர்வு பிரசாரமும் காவல் துறையின் தீவிர கண்காணிப்புமே காரணம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அளவீடுகளைப் பார்க்கும்போதும், அளவீடுகளை முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதும் பல வகைகளில் காற்று மாசு மற்றும் ஒலி மாசு குறைந்துள்ளது தெரிகிறது. உண்மையாகவே மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்தார்களா, அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா தெரியவில்லை !. எதுவாக இருந்தாலும் காற்றில் மாசுபாடு குறைந்திருப்பது நல்ல விஷயம்தானே. 

படங்கள்: சங்கர்.த.