மறக்கப்பட்ட நந்தினி... அறியப்படாத வைத்தீஸ்வரி... நீதி கேட்கும் இராஜலட்சுமி... கடக்கப்படும் மரணங்கள்! | On the line of salem rajalakshmi's murder, a drive to past to look into the sexual harassment and murder case of nandhini

வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (08/11/2018)

கடைசி தொடர்பு:15:37 (12/11/2018)

மறக்கப்பட்ட நந்தினி... அறியப்படாத வைத்தீஸ்வரி... நீதி கேட்கும் இராஜலட்சுமி... கடக்கப்படும் மரணங்கள்!

குற்றங்களுக்கான நீதி வழங்குவதில் ஏன் இத்தனை அலட்சியம்? ஏன் இவ்வளவு தாமதம்? ஏன் இத்தனை பாகுபாடு? 

மறக்கப்பட்ட நந்தினி... அறியப்படாத வைத்தீஸ்வரி... நீதி கேட்கும் இராஜலட்சுமி... கடக்கப்படும் மரணங்கள்!

ன் மீது திணிக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தலை எதிர்த்த காரணத்தால் சரவணன் என்பவரால் தலை துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறாள் ஆத்தூரைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ராஜலட்சுமி. ராஜலட்சுமி மீது நிகழ்த்தப்பட்ட கொடூரம் நந்தினியை நினைவுபடுத்தியது.

சிறுமி இராஜலட்சுமியின் பெற்றோர் சேலம் ஆட்சியருடன்

உண்மையில் சிறுமிகளின் மீது எந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டாலும் அது நந்தினியைத்தான் நினைவுபடுத்தும். 16 வயதுச் சிறுமி நந்தினிக்கு இளவயதுக் காதல், சாதிமறுத்துக் காதல். ஆறுமாதமாக அறிந்த மணிகண்டன் என்பவரை நேசித்தவள், 2017-ம் வருடம் தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் ஊர் கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தாள். பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன. நந்தினி வேறு சாதி என்பதால் அவளைத் திருமணம் செய்ய மறுத்து, நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்து மணிகண்டன் அவளைக் கிணற்றில் வீசியிருந்தார். அவள் வயிற்றில் கரு உருவாகி இருந்ததாகக் கூறப்படுகிறது. 2016 டிசம்பர் 31-ம் தேதி முதல் காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட நந்தினியைக் கண்டுபிடிக்கமுடியாமல் பத்துநாள்கள் கழித்து அவளுடைய பிணம் மிதந்த கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அந்தச் சம்பவம் வெளியே வந்தது. இருபது அடிக்கும் மேல் ஆழம் கொண்ட அந்த இருண்ட கிணற்றைப் பார்த்தவர்களின் மன அமைதியை இன்றும் அந்தச் சம்பவத்தின் நினைவுகள் களவாடிக்கொண்டிருக்கிறது.

அரியலூர் சிறுமி நந்தினி வீசப்பட்ட கிணறு

ராஜலட்சுமிக்கு இப்போது நடத்தப்படும் போராட்டங்கள், நந்தினிக்காகவும் நிகழ்ந்தன. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மூன்றே மாதத்தில் ஜாமீனில் வெளிவந்தார்கள். வழக்கின் விசாரணை போக்குபற்றி கடந்த பிப்ரவரி மாதம், வழக்கை நடத்திவரும் மாதர் சங்கத்திடம் விசாரித்தபோது ``நந்தினியின் அம்மா ராஜக்கிளியின் கோரிக்கையின்படி, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், தாங்களே அந்த வழக்கை சிறந்த முறையில் விசாரித்து வருவதாகக் கூறி அரியலூர் போலீஸார் மறுத்துவந்தனர். இதற்கிடையில் சம்பந்தப்பட்டவர்களின் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் தற்போது சிறுகடம்பூரில் உள்ள நந்தினியின் வீட்டின் முன்பே மிக தைரியமாக உலவிக்கொண்டிருக்கிறார்கள். வழக்கில் ஒரு சாட்சியமான தேவி என்பவரையும் அவர்கள் மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இன்றும் இந்த வழக்கு தொடர்பான வலுவான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கூடவே வழக்குப் பதிவானது, கேள்விவழி சாட்சி என்கிற அடிப்படையிலேயே செய்யப்பட்டிருக்கிறது. நேரடி சாட்சியமாக யாரையுமே போலீஸ் பதிவு செய்யவில்லை. இதனால் வழக்கு வலுவிழந்துவிடுமோ என்கிற அச்சம் ஒருபக்கம் இருக்கிறது” எனத் தெரிவித்தனர். 

நந்தினி வீடு

ராஜலட்சுமி மீது தொடுக்கப்பட்ட வன்முறை குறித்தான பிரச்னை தீவிரமாகியிருக்கும் இந்தச் சூழலில் நந்தினி வழக்கின் நிலைகுறித்த கேள்வி இயல்பாகவே எழுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்களிடம் பேசியதில், ``நான்கு பேருமே இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால், இருவர் மட்டுமே குற்றவாளிகள்; மற்ற இரண்டு பேர் குற்றவாளிகளுக்கு உடந்தை என்பதாகவே பதிவாகியுள்ளது. கொல்லப்பட்ட சமயத்தில் அந்தப் பெண் கருவுற்றிருந்ததாகக் கூறப்பட்டது பற்றியும் காவல்துறை விரிவாக விசாரிக்கவில்லை. அதனால் இந்த விசாரணை, குற்றவாளிகள் தரப்புக்குச் சாதகமாகும் சூழலில்தான் இருக்கிறது. நாங்கள் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி-க்கு விசாரணையை மாற்றக்கோரி முறையிட்டது குறித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றனர். கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு முன்பு இருந்த அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது.  

நந்தினி வழக்கு குறித்து ஏதேனும் பதிவுகள் கிடைக்கிறதா என கூகுள் செய்தபோது, கண்ணில் பட்டது வைத்தீஸ்வரியின் பெயர். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி. சிதம்பரத்தை அடுத்த பரதூர் காலனியில் வசித்துவந்தார். கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். நந்தினிக்கு இழைக்கப்பட்டதும் வைத்தீஸ்வரிக்கு இழைக்கப்பட்டதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கொடூரம். ஆனால், விசாரணை நிலையில்தான் இந்த போக்ஸோ (POCSO) வழக்கு இன்னும் இருப்பதாகவும் குற்றவாளியாகச் சொல்லப்பட்ட நபர், தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார் என்பதும் தவிர்த்து வேறு எந்த விதமான தகவலையும் பெறமுடியவில்லை.

வைத்தீஸ்வரி மற்றும் குற்றவாளி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நான்கு வயதுக் குழந்தை ஒன்று பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகப் புகார் ஒன்று வந்ததை அடுத்து குழந்தையின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்த அந்தப் பகுதி அரசு மருத்துவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். ``இப்படியான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நிறையவே நடக்கின்றன அவற்றில் ஒருசில மட்டுமே நம் கவனத்துக்கு வருகின்றன. நான் இதுவரை இதுபோன்று 15 சம்பவங்களை காவல்நிலையத்துக்குப் புகார் கொடுக்க அனுப்பியிருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு வழக்கு தொடர்பாக மட்டும்தான் மகிளா கோர்ட்டிலிருந்து விசாரணைக்காக அழைக்கப்பட்டேன். பல வழக்குகள் காவல் நிலையத்திலேயே நீர்த்துப்போய்விடுகின்றன” என்றார். வார்த்தைகளில் அடக்கிவிடமுடியாத அளவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

ஒப்புமைபடுத்துவதற்கில்லை என்றாலும், சென்னை மாங்காட்டைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி ஹாசினி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்குத் தூக்குத்தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிக்கான மேல்முறையீட்டு அவகாச காலத்தில் தற்போது இந்த வழக்கு இருக்கிறது. குற்றங்களுக்கான நீதி வழங்குவதில் ஏன் இத்தனை அலட்சியம், ஏன் இவ்வளவு தாமதம், ஏன் இத்தனைப் பாகுபாடு? 

ஆண்ட்ரியூ சேசுராஜ்நலச் செயற்பாட்டாளர் ஆண்ட்ரியூ சேசுராஜ் கூறுகையில், ``நந்தினிக்கு நிகழ்த்தப்பட்டது, சாதிய புத்தியால் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை. ராஜலட்சுமி விவகாரத்தில் `எனக்கும் கீழானவள் என்னைவிட வலிமை குறைந்தவள் எனக்கு `நோ' சொல்லிவிட்டாள். என்னைக் காட்டிக்கொடுத்துவிட்டாள்’ என்கிற மனநிலையில் நடத்தப்பட்ட சாதிமுகம் உடைய ஒரு கொடூரக் கொலை. ஆனால், இரண்டுமே போக்ஸோதான் (POCSO). போக்ஸோ சட்டத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய திருத்தத்தின்படி, மூன்று மாதத்துக்குள் மொத்த வழக்கும் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது ராஜலட்சுமி வழக்கும் அப்படித்தான் முடிக்கப்படவேண்டும். ஆனால், நிறைய பாலியல் வன்முறை வழக்குகள் எப்படிக் கையாளப்படவேண்டும் என்பதே தெரியாததால் தொடக்கத்திலேயே தாமதப்படுத்தப்படுகின்றன. சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகளை எப்படிக் கையாள்வது என்று காவல்துறைக்குத் தனிப்பயிற்சி கொடுத்துள்ளோம். ஒரு குழந்தையால் குற்றம் சுமத்தப்பட்டால் விசாரணை எதையும் தொடங்காமலேயே முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யலாம். அப்படிக் குற்றம் பதிவுசெய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர் தரப்பு நினைத்தால்கூட வழக்கைத் திரும்பப் பெறமுடியாது. அந்த அளவுக்கு வழக்கு வலுப்பெற்றுவிடும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகளை மகிளா நீதிமன்றங்கள்தான் நடத்துகின்றன.

ஏற்கெனவே, இங்குப் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகரித்திருக்கும் சூழலில் மகிளா நீதிமன்றங்கள் சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகளையும் நடத்த வேண்டும் என்பதால் வழக்குகளைக் கையாள்வதற்குக் காலதாமதமாகிறது. மேலும் இங்குள்ள நீதிமன்றங்களில் குற்றவாளிகளும் பாதிக்கப்பட்டவர்களும் ஒரே சமயத்தில் விசாரிக்கப்படுகிறார்கள். அதனால் இருவரும் சந்தித்துக் கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும். அது பாதிக்கப்பட்டவர்களுக்கு மனரீதியான பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால் வழக்கும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், போக்ஸோ சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவரும் குற்றவாளியும் நேரடியாக எந்த வகையிலும் சந்தித்துக் கொள்ளக் கூடாது. இது எந்த வழக்குகளிலும் பின்பற்றப்படுவதே இல்லை.

ஐ.பி.சி 164-ன்படி பாதிக்கப்பட்டவர்கள் தனக்கு நடந்ததைப் பதிவு செய்வது மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடக்கவேண்டும். ஒருவேளை மாஜிஸ்திரேட்டின் நேர அவகாசம் இல்லையென்றால் பதிவுசெய்வது தாமதமாகும். இதனாலும் வழக்கு தாமதப்படும். ஆய்வுப் பரிசோதனைக்கான வசதிகள், தமிழகத்தில் இல்லாத சூழலில் தடயங்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும். அதனாலும் காலதாமதம் ஏற்படலாம். இவற்றையெல்லாம் தவிர்க்க மற்ற எந்த வழக்குகளையும்விட போக்ஸோ வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து விசாரிக்கப்பட வேண்டும். சிறார் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கெனத் தனிநீதிமன்றம் அமைக்கப்படவேண்டும். சிறார் பாதுகாப்புக்கான காவல் அதிகாரிகள் தனியே நியமிக்கப்பட வேண்டும். மேலும், அண்மைக்காலமாகத் தொடர் பாலியல் குற்றங்கள் நிறையவே அதிகரித்திருக்கின்றன. அதனால் இந்தக் குற்றங்களுக்கு எதிராகப் போராடும் செயற்பாட்டாளர்களுக்கு ஒரே வழக்கில் தொடர்ச்சியாக கவனம் செலுத்துவது முடியாமல் போகலாம். அந்தச் சூழலில் அந்தந்த மாவட்டவாரியான செயற்பாட்டாளர்களை இதில் கவனம் செலுத்தவைப்பது நல்லதாக இருக்கும். நந்தினி வழக்கின் நிலை போன்ற சூழல் ஏற்படாது. மேலும் ஒரு வழக்கு மூன்று மாதத்துக்கு மேல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் சூழலில், அதுபற்றி வார்னிங் கொடுக்கும் வகையிலான அலாரம் வசதிகளைக் காவல்துறை தனது குற்ற ஆவணக் கோப்புப் பராமரிப்புத் தளத்தில் ஏற்படுத்தலாம். அது சிறார் பாலியல் வழக்குகள் இன்னும் துரிதமாக நடைபெற வழிவகை செய்யும்” என்றார்.   

நந்தினியைக் கொன்ற மணிகண்டன் வைத்தீஸ்வரி வழக்கில் கைதாகி இருக்கும் அவரது காதலன் மற்றும் இராஜலட்சுமியைக் கொன்ற சரவணன்

நந்தினி மறக்கப்பட்டாள்...

வைத்தீஸ்வரி அறியப்படாமலே போனாள்...

இனி ராஜலட்சுமி நிலை என்னவாகும்?

ஆதிக்கம்சூழ் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவளாகப் பெண்கள் மட்டுமே இருக்கமுடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்