UPI முதல் கூகுள் பே வரை... புஷ் பேமன்ட்கள் எப்படி எளிதில் நம்மை ஈர்க்கின்றன? | Why does the push payments easily attract the people

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (11/11/2018)

கடைசி தொடர்பு:10:10 (11/11/2018)

UPI முதல் கூகுள் பே வரை... புஷ் பேமன்ட்கள் எப்படி எளிதில் நம்மை ஈர்க்கின்றன?

வருங்காலத்தில் நாம் பணம் அனுப்பும் மற்றும் பெரும் முறையையே மொத்தமாக மாற்றியமைக்கவிருக்கின்றன இந்த புஷ் பேமன்ட்கள்

UPI முதல் கூகுள் பே வரை... புஷ் பேமன்ட்கள் எப்படி எளிதில்  நம்மை ஈர்க்கின்றன?

டிமானிட்டிசைசேஷன் எனப்படும் கொடுந்துயரம் நடந்து, கடந்த வாரத்துடன் முழுதாக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. அந்த நடவடிக்கையை எதற்காக எடுத்தோம் என்பதற்காக இந்த அரசு சொன்ன காரணங்களில் எதுவுமே நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அந்த நெருக்கடியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அரசு கொடுத்த ஒத்துழைப்பால் வேறொரு விஷயம் வெகுவேகமாக நடந்தது. அது பணமில்லா பரிவர்த்தனைகளின் தொழில்நுட்ப வளர்ச்சி. அதற்கு முன்புவரைக்கும் பணமில்லா பரிவர்த்தனைகள் என்றால் கார்டு பரிவர்த்தனைகளும், இணைய வங்கிப் பரிவர்த்தனைகளும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இன்று இவையிரண்டும் இல்லாமலேயே பணம் அனுப்பவும், பணம் செலுத்தவும் எக்கச்சக்க நடைமுறைகள் வந்துவிட்டன. ஒவ்வொருவரின் மொபைலிலும் அடங்கியிருக்கும் UPI ஆப்களே அதற்கு சாட்சி. டிமானிட்டைசேஷனுக்கு முன்பு நாம் பயன்படுத்திய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கும், அதற்குப் பின்பு நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பணப்பரிவர்த்தனை தொழில்நுட்பங்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. சொல்லப்போனால் இணைய பரிவர்த்தனைகளை அதுவரை செய்திராத நபர்களைக்கூட, இதன் உள்ளே இழுத்துவந்த பெருமையும் இவற்றிற்கே சாரும். இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் புஷ் பேமன்ட்ஸ். இன்று நாம் பணம் அனுப்புவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் QR கோடு டெக்னாலஜி, ஆடியோ மூலம் பணம் அனுப்பும் கூகுள் பேயின் டெக்னாலஜி, அரசின் UPI வசதி ஆகியவை எல்லாமே இந்த புஷ் பேமன்ட்களுக்கும் அடங்குபவைதான். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த புஷ் பேமன்ட்களின் ஆதிக்கம் எப்படி அதிகமானது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு இது எங்கிருந்து தொடங்கியது என்பதைப் பார்த்துவிடுவோம்.

Cashless Transactions

வாடிக்கையாளர்கள் தங்களுக்குள் உடனடியாகப் பணப்பரிமாற்றம் செய்வதற்காக மின்னணு பரிவர்த்தனைகள் 1970-களிலேயே உலகம் முழுவதும் வரத்தொடங்கிவிட்டது. தொழில்நுட்பம் வளர வளர இப்படி ரியல் டைமில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான RTGS (Realtime gross settlement systems) நடைமுறை உலகமெங்கும் வளர்ந்துவந்தது. அப்படி இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி பல்வேறு RTGS தொழில்நுட்பங்களையும், மாடல்களையும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தது. அப்படி 2007-ல் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கிய ஒரு மாடல்தான் Prepaid Payment Instrument (PPI). வங்கிகளின் Gift கார்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அதுபோலத்தான் இந்த PPI-களும். அதாவது, ப்ரீபெய்ட் முறையில் ஏற்கெனவே ஒரு கணக்கில் பணமோ அல்லது புள்ளிகளோ பதிவுசெய்யப்பட்டிருக்கும். அதைப் பயன்படுத்தி செலவு செய்யவோ அல்லது பொருள்கள் வாங்கவோ முடியும். இன்று மினி வங்கியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பேடிஎம்மே ஒருகாலத்தில் வெறும் PPI-தான்.

கூகுள் பே

பேடிஎம் ஆரம்பகாலத்தில் என்ன செய்துகொண்டிருந்தது என்பது நினைவிருந்தாலே இந்த PPI-கள் குறித்து புரிந்துகொள்ள முடியும். முதலில் நம் வங்கிக்கணக்கில் இருந்து பேடிஎம்க்கு பணத்தை லோட் செய்வோம்; அதன்பின்னர் அந்தப் பணத்தை ரீசார்ஜ் செய்யவோ, பில் தொகை செலுத்தவோ பயன்படுத்துவோம். நம்மால் நேரடியாக பேடிஎம் கணக்கில் பணம் போடமுடியாது. வங்கிக்கணக்கில் இருந்து மட்டும்தான். இப்படித்தான் PPI மாடல் மூலம் இ-வாலட்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளரத்தொடங்கின. இந்த PPI மாடலில் கார்டுகள், கிப்ட் கூப்பன்கள், இ-வாலட்கள் அனைத்தும் அடங்கும். இந்த PPI மாடலிலேயே மொத்தம் நான்கு வகைகள் உண்டு. அதில் ஓப்பன் சிஸ்டம் பேமன்ட் முறையில் மட்டும்தான் ஒரு கணக்கில் இருந்து இன்னொருவரின் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பவே முடியும். மற்ற மூன்று முறைகளிலும் முடியாது. மேலும், நிறைய கட்டுப்பாடுகளும் இருந்தன. ஆனால், இந்த ஓப்பன் பேமன்ட் சிஸ்டம் முறையானது வங்கிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்ட ஒன்று. பேடிஎம் போன்ற தனியார் நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்தமுடியாது. இந்த சமயத்தில்தான் ரிசர்வ் வங்கி பேமன்ட் வங்கிகளை (Payment Banks) அறிமுகம் செய்தது. இதன்படி ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றால் விர்ச்சுவலாக மைக்ரோ வங்கி ஒன்றையே நடத்தலாம். இப்படி தனியார் நிறுவனங்கள் ஒருபுறம் பேமன்ட் வங்கிகளிடம் ஆர்வம் காட்ட, பிற வங்கிகளோ இன்னொருபக்கம் புதிய முயற்சிகளில் இறங்கின.

தனியார் நிறுவனங்களைப் போலவே PPI சேவைகள் வழங்க முடிவெடுத்து, இ-வாலட்களைத் தொடங்கின. ஒருமுறை பணப்பரிவர்த்தனை செய்யவேண்டுமென்றால் ஆன்லைன் கணக்கில் லாகின் செய்து, பாஸ்வேர்டு கொடுத்து பின்னர் அடுத்தவரின் கணக்கு விவரங்களைப் பிழையின்றி டைப் செய்து, பணம் அனுப்பிக்கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு பேடிஎம், ஆக்சிஜன் போன்ற நிறுவனங்களின் துரிதசேவை விரைவில் ஈர்த்தது. வெறும் மொபைல் எண் மட்டும் இருந்தாலே பிறருக்கு பணம் அனுப்பலாம்; பணம் பெறலாம் போன்ற அம்சங்கள் எளிதில் அனைவரையும் கவர்ந்தன. கூடவே QR கோடு மூலம் பணம் அனுப்பும் முறையும் பரவலாகிவந்தது. இப்படி புதுவிஷயங்கள் நிறைய மக்களைச் சென்றடைந்தாலும் அதனை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல், மீண்டும் நிறைய விஷயங்களுக்கு வங்கிகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தது. காரணம், ஒரு நிறுவனத்தின் ஆப் QR கோடு, இன்னொரு நிறுவனத்தின் ஆப்பில் பொருந்தாது. பேடிஎம்மில் இருந்து இன்னொருவரின் பேடிஎம்மிற்கு மட்டுமே பணம் அனுப்பமுடியும். வங்கிக்கோ வேறு கணக்கிற்கோ அனுப்பமுடியாது. இதேபோல வங்கிகளின் ஆப்களிலும் வெவ்வேறு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் இருந்ததால், ஏதேனும் ஒரு ஆப்பையே எல்லா விஷயங்களுக்கும் பயன்படுத்த முடியவில்லை. இந்த சிக்கல் ஓடிக்கொண்டிருந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது; டிமானிட்டைசேஷேன்.

புஷ் பேமன்ட் UPI

நாடு முழுக்க பணத்தட்டுப்பாடு நிலவிய சூழலில் மக்களுக்கு இருந்த ஒரேவழி டிஜிட்டல் பரிவர்த்தனைகள்தான். இந்த நெருக்கடியைப் புரிந்துகொண்ட மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், எளிதாக்கவும் பல்வேறு முயற்சிகள் எடுத்தது. இதில் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் நேஷனல் பேமன்ட் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா (NPCI) மிக முக்கியப் பங்கு வகித்தது. விளைவாக UPI, USSD பேமன்ட் அம்சங்கள் அறிமுகமாகின. கூடவே இன்னொரு நல்ல விஷயமும் நடந்தது; அது 2017-ல் அறிமுகமான Bharat QR. அதாவது இந்தியாவில் QR கோடு மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் அனைத்திற்கும் ஒரே பொதுவான தொழில்நுட்பம். இதன்படி ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு QR கோடை வைத்திருக்க வேண்டியதில்லை. எல்லோருமே பாரத் QR தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்தாலே போதும். வாடிக்கையாளரின் ICICI வங்கி ஆப்பின் QR கோடை, கடையில் இருக்கும் ஆக்சிஸ் வங்கியின் ஆப்பில் ரீடு செய்யமுடியும். இந்த வசதி வந்தது வங்கிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் பெரும் வரமாக அமைந்தது. இன்று கடைகள் தோறும் தொங்கும் QR கோடுகளுக்கு இந்த மாற்றம்தான் அடிப்படை. இந்த சமயத்தில்தான் பீம் ஆப்பும் வெளியாகி UPI முறையில் நடந்துகொண்டிருந்த பணப்பரிமாற்றத்தை மேலும் எளிதாக்கியது. இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புதிய புஷ் பேமன்ட்கள் இப்படித்தான் உருவாகின. சரி, அடிக்கடி புஷ் பேமன்ட்கள் எனக் குறிப்பிடுகிறேனே? அப்படியென்றால் என்ன எனக் கேட்கிறீர்களா?

டிஜிட்டல் முறையில் நாம் பணம் அனுப்பும் / பெறும் முறையை அடிப்படையாக வைத்து இரண்டு பிரிவாகப் பிரிக்கிறார்கள். ஒன்று புல் பேமன்ட் (Pull). மற்றொன்று புஷ் பேமன்ட் (Push). சிறிய உதாரணம் மூலம் பார்த்துவிடுவோம். சில ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும் கடைகளில் டிஜிட்டலாகப் பணம் செலுத்தவேண்டும் என்றால் கார்டுகள்தான் ஒரே வழி. அந்தக் கார்டை நாம் எப்படிப் பயன்படுத்துவோம்? முதலில் நம்முடைய கார்டை கடைக்காரரிடம் கொடுப்போம்; அடுத்தது அவர் PoS இயந்திரத்தில் ஸ்வைப் செய்வார். அடுத்து எவ்வளவு பணம் என்பதை டைப் செய்துவிட்டு, பின் நம்பர் கேட்பார்; அல்லது நாமே டைப் செய்வோம். இறுதியாக நம் அக்கவுன்ட்டில் இருந்து பணம் எடுக்கப்படும். இதில் கடைக்காரர் நம்முடைய கார்டை வாங்கி, அதிலிருந்து பணம் எடுத்துக்கொள்கிறார். இது புல் பேமன்ட். அதாவது நம்முடைய கார்டில் இருக்கும் பணத்தை கடைக்காரர் எடுத்துக்கொள்கிறார். நம்முடைய பர்ஸில் இருந்து அவர் எடுத்துக்கொள்வதாக கற்பனை செய்து கொள்ளுங்களேன். இங்கே நம்முடைய கார்டு விவரங்கள் மற்றும் பின் நம்பர் ஆகிய இரண்டையும் கடைக்காரரின் PoS இயந்திரத்தில் நாம் விர்ச்சுவலாக கொடுக்கிறோம். ஒருவேளை அந்த PoS இயந்திரத்தில் ஸ்கிம்மர் இருந்தாலோ அல்லது நம்முடைய பாஸ்வேர்டு கடைக்காரருக்கு தெரியவந்தாலோ அல்லது அதிகமான தொகையை டைப் செய்தாலோ நமக்குதான் சிக்கல். ஆனால், புஷ் பேமன்ட்டில் அப்படியில்லை. கடைக்காரருக்கு எந்தவொரு விவரமும் தெரியாது; தெரியவும் தேவையில்லை. உதாரணமாக கூகுள் பே (Tez) மூலம் கடைக்காரருக்கு பணம் அனுப்புகிறோம் எனில் அவருடைய QR கோடோ அல்லது UPI ஐடியையோ நாம்தான் ஆப்பில் என்டர் செய்வோம். வங்கி விவரங்கள், எவ்வளவு பணம் என்பதையும் நாம்தான் என்டர் செய்வோம். எந்தவொரு விவரமும் கடைக்காரருக்கு தெரியாது. அதாவது இங்கே நம் பர்ஸில் இருக்கும் பணத்தை இங்கே நாம் எடுத்துக் கொடுக்கிறோம். இந்தப் பாதுகாப்பும், எளிமையும்தான் புஷ் பேமன்ட்டின் சிறப்பம்சம். இப்போது நீங்கள் பயன்படுத்தும் QR கோடு, UPI ஆப், கூகுள் பே அனைத்தையும் கற்பனை செய்து பாருங்கள்; புஷ் பேமன்ட் எப்படி செயல்படுகிறது எனப் புரியும்.

Push payments

இப்படி UPI, QR கோடு போன்றவற்றிற்கு அரசு கொடுத்த ஒத்துழைப்பு மற்றும் கூகுள், பேடிஎம் போன்ற தனியார் நிறுவனங்களின் புதுமையான முயற்சிகள் போன்ற இரண்டும் குறுகிய காலத்தில் ஒன்றாக இணையவே தற்போது பிற இணைய பரிவர்த்தனைகளை விடவும் சக்கைப்போடு போடுகின்றன புஷ் பேமன்ட்கள். இதுவரைக்கும் வங்கிகள் மட்டுமே கையாண்டு கொண்டிருந்த பரிவர்த்தனைகள் இன்று இவற்றின் வாயிலாக சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. சரி, புஷ் பேமன்ட்கள்தான் இனி எதிர்காலமா? நிச்சயமாக! ஆனால், இத்தோடு நின்றுவிட மாட்டோம். இதிலேயே அடுத்தகட்டத்தை, பரிணாமத்தை நோக்கி நகர்ந்திருப்போம். அப்படியென்றால் புல் பேமன்ட்களின் நிலை? இப்போதைக்கு சிக்கலுக்குரியதுதான். உதாரணமாக கார்டு பேமன்ட்களின் ராஜாவான மாஸ்டர்கார்டு, விசா போன்றவை இந்தியாவில் தன்னுடைய மதிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகின்றன. இந்தியாவில் தற்போது வளர்ந்துவரும் ரூபேவின் வளர்ச்சி,  பணப்பரிமாற்ற விஷயத்தில் நுழையும் இதுபோன்ற மாற்று தொழில்நுட்பங்கள் போன்றவை அவற்றிற்குப் பின்னடைவுதான். இத்தனைக்கும் இந்நிறுவனங்கள் புஷ் பேமன்ட்களில் இறங்காமல் இல்லை. விசா எப்போதோ mvisa என்ற சேவையைத் தொடங்கிவிட்டது. ஆனால், இந்த நிகழ்கால போட்டியாளர்கள் இவர்களை எளிதில் விஞ்சிவிடுகின்றனர். சமீபத்தில் அறிமுகமான கூகுள் பே இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் பேமன்ட் சர்வீஸ்களில் ஒன்று. காரணம் அதன் எளிமையும், மார்க்கெட்டிங் உத்திகளும்தான். வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஸ்க்ராட்ச் கார்டுகளை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது கூகுள் பே. இதேபோல பேடிஎம், போன்பே, அமேசான் பே போன்றவையும் புதுப்புது உத்திகள், சலுகைகள் மூலம் எளிதில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துவிடுகின்றனர். இதுபோக வாட்ஸ்அப்பும் விரைவில் UPI சேவையைத் தொடங்கவிருக்கிறது.

இந்த புஷ் பேமன்ட்கள் பாதுகாப்பு விஷயத்தில் கில்லிதான். ஆனால், வணிக ரீதியில் புல் பேமன்ட்களைவிடவும் குறைவான வருமானத்தையே ஈட்டித்தரும். உதாரணமாக கார்டு பரிவர்த்தனைகளில் கிடைக்கும் கமிஷனை விடவும், இந்த புஷ் பேமன்ட் பரிவர்த்தனைகளில் கிடைக்கும் கமிஷன் குறைவு. பிறகு எப்படி இவர்களால் வெற்றிகரமாக இயங்க முடிகிறது? இதுகுறித்து இந்தியாவின் முன்னணி பேமன்ட் சர்வீஸ் நிறுவனமான YAP நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான பிரபுவிடம் கேட்டோம்.

"இதிலும் கமிஷன் கிடைக்கும். ஆனால், அது மிகக்குறைவான அளவுதான் இருக்கும். எனவே இதில் பேமன்ட் நிறுவனத்தை விடவும் அதன் பயனர்களுக்குத்தான் லாபம் அதிகம். இன்று கடைக்காரர் ஒருவர் புஷ் பேமன்ட்களைப் பயன்படுத்துகிறார் என்றால் அவருக்குச் செலவே இல்லை. PoS இயந்திரம் வேண்டும், இணையம் வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. வெறும் மொபைல் அல்லது QR கோடு மட்டுமே இருந்தால் போதும். மேலும், இதில் கமிஷனும் குறைவு என்பதால் அவருக்கும் லாபம். உதாரணமாக கார்டு ஒன்றில் ஒருவர் அவருக்குப் பணம் செலுத்தும்போது அவருக்கு 100 ரூபாயில் 80 ரூபாய் வருகிறது என்றால், இதில் 98 ரூபாய் வரும். மேலும் பாதுகாப்பும் மிக அதிகம். எனவே P2P, P2M (payment to Merchant) ஆகிய இரு இடங்களிலும் இதனை எளிதாகப் பயன்படுத்தலாம்." என்றவர் புல் பேமன்ட் நிறுவனங்களின் சரிவு குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

பிரபு"தற்போது கார்டு பேமன்ட்களில் கோலோச்சும் நிறுவனங்களுக்கு இந்தியாவில் மட்டும் இல்லை. உலகம் முழுவதுமே சரிவு இருக்கிறது. இது இப்போது மட்டும் இல்லை. எந்தெந்த நாடுகளில் எல்லாம் அந்நாட்டின் சொந்தத் தொழில்நுட்பம் வளர்கிறதோ அங்கெல்லாம் இவை சரிவை சந்திக்கின்றன. அப்படித்தான் மாஸ்டர்கார்டு, விசா போன்றவை தற்போது இந்தியாவிலும் சரிவை சந்தித்துக்கொண்டிருக்கின்றன. புஷ் பேமன்ட்களைப் பொறுத்தவரை 99 சதவீதம் அவற்றில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பேயில்லை. எங்கள் நிறுவனத்தில் கடந்த இரண்டு வருடங்களில் ஒரே ஒரு முறைகேடைக்கூட இதில் கண்டதில்லை. காரணம், புஷ் பேமன்ட்கள் டெக்னிக்கலாக அவ்வளவு வலுவானவை. இதில் ஏமாற்ற ஒரே வழி, வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது மட்டும்தான். உதாரணமாக சரவணபவனில் புஷ் பேமன்ட் மூலம் பணம் செலுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது பணம் செலுத்துவதற்கான UPI முகவரியோ QR கோடோ அந்தக் கடையின் பெயரில் இல்லாமல் வேறொருவரின் பெயரில் இருக்கிறது என்றால், உடனே அதுகுறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கவேண்டும். காரணம், கடையின் பெயரை சொல்லி தனிநபர்கள் தங்களின் முகவரியைக் கொடுக்க வாய்ப்புள்ளது. இது எல்லா இடத்திலும் பொருந்தும். எனவே புஷ் பேமன்ட்கள் எவ்வளவுதான் பாதுகாப்பானது என்றாலும் மக்களும் விழிப்புஉணர்வுடன் இருக்கவேண்டியது அவசியம்.

கூகுள் பே

கடந்த இரண்டு ஆண்டுகளில் புஷ் பேமன்ட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், இவையனைத்தும் நகர்ப்புறங்களில் மட்டும்தான். இன்னும் இரண்டாம்நிலை, மூன்றாம்நிலை நகரங்களில் இவற்றின் தாக்கம் அதிகமில்லை. இதுகுறித்து அரசு கூடுதல் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் பட்சத்தில், மக்களுக்குப் பாதுகாப்பான பணப்பரிவர்த்தனைகளுக்கான சிறந்த வழியாக இது இருக்கும். இப்போது QR கோடு, UPI ஐடி மூலம் பணம் அனுப்புவது போலவே வருங்காலத்தில் மிஸ்டுகால் மூலமாகப் பணம் அனுப்புவதற்கான ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. மேலும், வருங்காலத்தில் பணப்பரிமாற்றங்களுக்கு கார்டுகளே தேவைப்படாத நிலை உருவாகிவிடும். சாம்சங் பே, ஆப்பிள் பே போன்றவைதான் அப்போது முக்கியப்பங்கு வகிக்கும். இவற்றில் ஒரே ஒருமுறை நம் கார்டுகளைப் பதிவுசெய்து வைத்துக்கொண்டால் போதும். பின்னர் எங்கெல்லாம் பணம் செலுத்த வேண்டுமோ அங்கெல்லாம் போனை அருகில் வைத்து Tap செய்தாலே பணம் அனுப்பிவிட முடியும். இதற்கு Host Card Emulation எனப்பெயர். இது எதிர்காலத்தில் அதிகளவில் பயன்பாட்டிற்கு வரும்" என்கிறார் பிரபு.

இன்னும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உள்ளே இறங்கும்பட்சத்தில் இந்த புஷ் பேமன்ட்கள் நிச்சயம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். வீ ஆர் வெயிட்டிங்!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்