வெளியிடப்பட்ட நேரம்: 12:09 (14/11/2018)

கடைசி தொடர்பு:12:09 (14/11/2018)

இந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா கேஸ் ஹைட்ரேட்ஸ்? #GasHydrates

அப்போதெல்லாம் என்ன ஆனாலும், எண்ணெய் உற்பத்திக்காக அரபு நாடுகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு. ஆனால், தற்போது இவையெல்லாம் பழங்கதைகள்.

இந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா கேஸ் ஹைட்ரேட்ஸ்? #GasHydrates

``2030-ல் கச்சா எண்ணெய், நிலக்கரிக்கு அடுத்து மூன்றாவது மிகப்பெரிய ஆற்றல் மூலமாக இயற்கை எரிவாயுதான் இருக்கும்" என சமீபத்தில் கணித்திருக்கிறது சர்வதேச ஆற்றல் மையம் (IEA). கடந்த நூற்றாண்டின் பொருளாதார மாற்றங்களில் கச்சா எண்ணெய்தான் மையமாக விளங்கியது. தற்போது அந்த மையம் இயற்கை எரிவாயுவை நோக்கி நகர்ந்துவருகிறது. இது உலக நாடுகளுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கும் பொருந்தும். இந்தியாவின் இந்த இயற்கை எரிவாயு புரட்சியில் அதிகம் பங்களிக்கும் விஷயமாக கேஸ் ஹைட்ரேட்ஸ் இருக்கும் எனக் கணிக்கின்றனர் விஞ்ஞானிகள். அப்படியென்றால் என்ன? இதுகுறித்து தெரிந்துகொள்வதற்கு முன்பு அமெரிக்காவின் Shale Boom பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.


``Energy Independence" - 1973-ல் இருந்து அமெரிக்காவின் கனவு இது. ஆனால், 45 வருடங்கள் கழித்தும்கூட அந்தக் கனவு இன்னும் பலிக்கவில்லை. ஆனால், அதற்கான நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்திருக்கிறது இந்த ஆண்டில் வெளிவந்த அமெரிக்க ஆற்றல் தகவல் மையத்தின் (EIA)அறிக்கை. அந்த அறிக்கை 2022-ம் ஆண்டு அமெரிக்காவானது, தான் இறக்குமதி செய்யும் எரிசக்தி அளவை விடவும் அதிகமான அளவுக்கு எரிசக்தியை ஏற்றுமதி செய்யும் எனக் கணித்திருக்கிறது. அதாவது அமெரிக்காவானது தற்போது போல, ஆற்றல் மூலங்களுக்காகவும், எண்ணெய் வளங்களுக்காகவும் பிற நாடுகளிடம் கையேந்த வேண்டிய தேவையில்லாமல் தன்னிறைவு அடைந்துவிடும் என்பதே இதன் அர்த்தம். 

சவுதி அரேபியா, குவைத், இராக், வெனிசுலா, இரான் ஆகிய ஐந்து நாடுகள்தாம் 1960-களில் உலகின் பெரும்பாலான எண்ணெய்த் தேவையைப் பூர்த்தி செய்துவந்தன. அமெரிக்காவும் எண்ணெய் வளங்களுக்காக இவற்றைச் சார்ந்தே இருந்தது. அந்த சமயத்தில் எகிப்தும், சிரியாவும் இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருந்த தங்கள் நாட்டுப்பகுதிகளை மீட்பதற்காக அந்நாட்டின்மீது 1973-ல் போர் தொடுத்தன. இதில் அமெரிக்காவும், பிற மேற்குலக நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதவளித்தன. இதனை எதிர்த்த மத்தியக்கிழக்கு நாடுகள், இந்த நாடுகளுக்கு எண்ணெய் அனுப்புவதை நிறுத்தின. இதனால் அமெரிக்காவில் எண்ணெய்விலை தாறுமாறாக உயர்ந்தது. இந்த சமயத்தில்தான் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன், ``இன்னும் பத்தே ஆண்டுகளில் அமெரிக்கா எரிசக்தி துறையில் சுதந்திரம் அடையும்" என அறிவித்தார். அதன்பிறகு 1979-ல் இரானில் கிளர்ச்சி ஏற்பட்டபோதும், இதேபோல உலகம் கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் பாதித்தது. 

இயற்கை எரிவாயு குழாய்

அப்போதெல்லாம் என்ன ஆனாலும், எண்ணெய் உற்பத்திக்காக அரபு நாடுகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு. ஆனால், தற்போது இதெல்லாம் பழங்கதைகள். எண்ணெய் வளத்துக்காக அரபு நாடுகளையே முழுவதுமாக சார்ந்திருக்க வேண்டிய நிலை தற்போது இல்லை; முதலில் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே பெருமளவில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்துகொண்டிருந்த அமெரிக்கா இன்று பிறநாடுகளின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்யுமளவுக்கு வளர்ந்துவிட்டது. கடந்த வருடம் அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்க ஆற்றல் தகவல் மையத்தின் கணக்கின்படி 2017-ல் கச்சா எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியாவையே, அமெரிக்கா முந்திவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் ரஷ்யாவையும் முந்திவிட வாய்ப்பு அதிகம். அமெரிக்க எரிசக்தி துறையின் கணக்கின்படி இந்த ஆண்டே ரஷ்யாவை விடவும் அதிகம் எண்ணெய் உற்பத்தி செய்திருக்கிறது அமெரிக்கா. இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணம், எனப்படும் நேச்சுரல் கேஸ் இயற்கை எரிவாயு. இன்று கச்சா எண்ணெய்யை விடவும் இந்த இயற்கை எரிவாயுதான் அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த மாற்றத்தை ஷேல் ஆயில் பூம் என அழைக்கின்றனர் நிபுணர்கள். இதுதான் அமெரிக்கா எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற உதவியது. தற்போது இந்தியாவுக்கும் அப்படியொரு வாய்ப்பு வந்திருக்கிறது. அதன் பெயர் கேஸ் ஹைட்ரேட்ஸ்.

இந்தியாவுக்குக் கிடைத்த ஆற்றல் தங்கம்

எப்படி அமெரிக்காவின் ஆற்றல் தேவையை, அங்கிருந்த இயற்கை எரிவாயு பூர்த்தி செய்ததோ, கிட்டத்தட்ட அதேபோல இந்தியாவிலும் எரிசக்தி புரட்சி ஏற்படக் காரணமாக இருக்கப்போகிறவைதான் இந்த கேஸ் ஹைட்ரேட்ஸ். தற்போது இந்தியாவில் இரண்டு விதத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. முதலாவது, நம் நாட்டிலேயே இயற்கை எரிவாயுவை எடுப்பது; இரண்டாவது வெளிநாட்டிலிருந்து இயற்கை எரிவாயுவை LNG (Liquefied natural gas) ஆக வாங்கி, பின்னர் வேதிமாற்றங்கள் செய்து விநியோகம் செய்வது. ஏற்கெனவே இந்தியா, ரஷ்யா, கத்தார், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயற்கை எரிவாயுவை LNG-யாக இறக்குமதி செய்து விநியோகித்து வருகிறது. உள்நாட்டிலிருந்து இயற்கை எரிவாயுவை எடுக்கும் பணியை ONGC கவனித்துவருகிறது. இதனை தொழிற்சாலைகளுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகிக்கும் பணியை GAIL இந்தியா நிறுவனம் கவனித்துக்கொள்கிறது. இதெல்லாம் இதுவரையிலும் இருக்கும் நடைமுறை. தற்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் கேஸ் ஹைட்ரேட்ஸ் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.

கேஸ் ஹைட்ரேட்ஸ் என்பவை பனிக்கட்டி போன்ற ஒரு படிக திடப்பொருள்; இவை கடலின் அடியில் இருக்கும் குளிர்ச்சியான சூழ்நிலையாலும், அதிக அழுத்தத்தாலும் உருவாகும். இவற்றை மீத்தேன் ஹைட்ரேட்ஸ் என்றும் அழைக்கலாம். இந்த ஹைட்ரேட்ஸ்களின் சிறப்பு என்னவென்றால், இவையனைத்திலும் ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகள் இருக்கும். அதாவது இயற்கை எரிவாயு. சுருக்கமாகச் சொல்லப்போனால் கடலுக்கடியில் இயற்கை நமக்காக ஒளித்துவைத்திருக்கும் ஒரு ரகசிய இயற்கை எரிவாயு கிடங்குதான் இந்த கேஸ் ஹைட்ரேட்டுகள். இவற்றிலிருந்து வேண்டுமளவுக்கு இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யமுடியும். கச்சா எண்ணெய் உற்பத்தியைப் பொறுத்தவரைக்கும் இந்தியா தன்னிறைவு அடைய வாய்ப்பே இல்லை. ஏனெனில், நம்மிடம் இருக்கும் எண்ணெய்வளம் அவ்வளவுதான். ஆனால், இயற்கை எரிவாயு விஷயத்தில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. காரணம், நம்மிடம் அவ்வளவு வளம் கொட்டிக்கிடக்கிறது. எனவே, அமெரிக்காவைப் போல எதிர்காலத்தில் இந்தியாவும் எரிசக்தி விஷயத்தில் தன்னிறைவு பெறலாம். இதெல்லாம் சரி; இயற்கை எரிவாயுவை இந்தியா எரிபொருளாக ஏற்றுக்கொள்ளுமா?

Natural Gas

புதிய வளம்... புதிய பயணம்!

இந்தியா மட்டுமல்ல; மொத்த உலகமும் எண்ணெய்க்குப் பதிலாக, மாற்று ஆற்றல் மூலங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இதற்கு இரண்டு காரணங்கள், முதலாவது எதிர்கால ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு கச்சா எண்ணெய் கிடைக்குமா, அதன் விலை இப்போது போலவே இருக்குமா எனத் தெரியாது. இரண்டாவது, சுற்றுச்சூழல். இன்று உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் பெரும்பாலான சூழலியல் சீர்கேடுகள் பெட்ரோல், நிலக்கரி போன்ற மரபுசார் ஆற்றல் மூலங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் ஏற்பட்டதே. மேலும் 2015-ல் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் 190-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி இந்த அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறும் கார்பனின் அளவைக் குறைக்கவேண்டும். அதற்கு ஒரேவழி சூரிய ஒளி, காற்று, கடல் அலை என மரபுசாரா ஆற்றல் மூலங்களை, எரிசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்துவதுதான். ஆனால், இவற்றிற்கு ஆகும் செலவு மிக அதிகம். அதேசமயம், இயற்கை எரிவாயுவுக்கு ஆகும் செலவு இதோடு ஒப்பிடும்போது குறைவுதான். எனவேதான் அமெரிக்கா, ரஷ்யா உட்பட பெரும்பாலான நாடுகள் இயற்கை எரிவாயுவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. அதில் இந்தியாவும் ஒன்று. இதன்மூலம் பிறநாடுகளை எண்ணெய் வளத்துக்காகச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் குறையும். இப்படி அரசியல், சூழலியல் மற்றும் பொருளாதாரம் என எல்லா வகையிலும் பயனளிப்பதுதான் இந்த இயற்கை எரிவாயுவின் சிறப்பு. இதனை `Gas Based Economy' என அழைக்கிறது இந்தியா.

Gas Flame

கடந்த ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ``இந்தியாவின் மொத்த எரிசக்தி தேவையில் 6.5 சதவிகிதம் இயற்கை எரிவாயு மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. உலகளவில் இந்த சராசரி 24 சதவிகிதமாக இருக்கிறது. எனவே இந்தியா கூடியவிரைவில் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும். 2030-ல் இந்த அளவு 30 சதவிகிதமாக உயரும்." எனத் தெரிவித்தார். இந்த இலக்கை உள்நாட்டில் கிடைக்கும் இயற்கை எரிவாயு வளங்கள் மூலமே எட்டிவிட முடியாது. கேஸ் ஹைட்ரேட்களின் உதவியும் தேவை. ஆனால், அதில் நிறைய சிக்கல்களும் இருக்கின்றன. அதற்கு முன்பு இந்தியாவின் கேஸ் ஹைட்ரேட்கள் குறித்துத் தெரிந்துகொள்வோம்.

இந்தியாவின் கடல் பகுதியில் கேஸ் ஹைட்ரேட்ஸ் இருப்பதை உணர்ந்த இந்திய அரசு 2000-மாவது ஆண்டு National Gas Hydrates Programme (NGHP) என்ற திட்டத்தை தொடங்கியது. இதன்படி கேஸ் ஹைட்ரேட்ஸ் இருக்கலாம் எனச் சொல்லப்படும் அந்தமான், கோதாவரி பகுதி, மகாநதி பகுதி ஆகிய இடங்களில் வல்லுநர் குழு 2006-ல் ஆராய்ச்சி செய்தது. அதன்படி இந்தியக் கடற்கரைப் பகுதியில் 1894 ட்ரில்லியன் கனமீட்டர் அளவுக்கு கேஸ் ஹைட்ரேட்டுகள் இருப்பதாகத் தெரியவந்தது. பின்னர் இதுகுறித்த ஆராய்ச்சியை விரிவுபடுத்த NGHP-2 திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி மீண்டும் இந்தியாவின் கடல்பகுதிகளில், ஆற்றுப்படுகைகளிலும் சோதனை செய்யப்பட்டது. இதுதவிர 2014-ம் ஆண்டு கேஸ் ஹைட்ரேட்கள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சி மையத்துடனும் (USGS), ஜப்பானுடனும் இந்தியா கைகோத்தது. இந்தக் கூட்டு முயற்சியின் விளைவாக 2016-ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு, கிழக்கு மற்றும் அந்தமான் கடல்பகுதிகளில் 1894 டிரில்லியன் கனமீட்டர் அளவுக்கு கேஸ் ஹைட்ரேட்டுகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதுவரைக்கும் உலகளவில் கண்டறியப்பட்ட கேஸ் ஹைட்ரேட்டுகளிலேயே இதுதான் பரப்பில் மிகப்பெரியது. அதைத் தொடர்ந்து இதுதொடர்பான ஆராய்ச்சிகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

குறைவான விலை, சுற்றுச்சூழலுக்கு உகந்தது என நிறைய சிறப்பம்சங்கள் இருந்தாலும் இயற்கை எரிவாயு விஷயத்திலும் சில குறைபாடுகள் இருக்கின்றன. குறிப்பாக இயற்கை எரிவாயு எடுக்கும் பிராக்சரிங் முறையும் சூழலியலுக்கு உகந்ததல்ல; அதுவும் கேஸ் ஹைட்ரேட்ஸ் என்றால் இன்னும் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. கடலுக்கு அடியில் தற்போது அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் இந்த ஹைட்ரேட்டுகளின் தன்மை, அவற்றிலிருந்து இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் முறை போன்றவை குறித்தெல்லாம் நிறைய ஆராய்ச்சிகள் செய்யவேண்டும். மேலும், நிலத்துக்கு அடியில் இருக்கும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு போதுமான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. ஆனால், கடலுக்கடியில் இருக்கும் கேஸ் ஹைட்ரேட்ஸிலிருந்து எரிவாயுவைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் எங்குமே முழுமையாகத் தயாரிக்கப்படவில்லை. அதற்கான பணிகளும் உலகளவில் நடந்துகொண்டிருக்கின்றன. இவைதான் இந்தத் துறையில் தற்போது இருக்கும் சவால்கள்.

கேஸ் ஹைட்ரேட்ஸ்

இப்போதைய நிலையில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, கனடா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த கேஸ் ஹைட்ரேட்ஸ் ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கின்றன. ஆனால், இதுவரை யாரும் வணிக ரீதியில் வெற்றிகரமாக கேஸ் ஹைட்ரேட்ஸிலிருந்து இயற்கை எரிவாயுவைப் பிரித்தெடுத்ததில்லை. ஆனால், 2025-க்குள் இது நடந்துவிடலாம். நடந்துவிட்டால் கச்சா எண்ணெய் சார்ந்து இயங்கும் இந்தியாவின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை எரிவாயுவை நோக்கி மாறும்.

இந்தியாவுக்கு கேஸ் ஹைட்ரேட்ஸ் எந்தளவுக்குப் பயனளிக்கும்?

இந்தியா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் என்றைக்கும் எண்ணெய் வளம் இருந்ததில்லை. எனவே கச்சா எண்ணெய்க்காகப் பிற நாடுகளையே சார்ந்திருக்க வேண்டியதிருந்தது. ஆனால், கேஸ் ஹைட்ரேட்ஸ் அவர்களுக்குக் கிடைத்துள்ள வரம். இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் சர்வதேச அளவில் அதிகரிக்கும் கச்சா எண்ணெய்யின் விலை, இந்தியப் பொருளாதாரத்தில் நேரடி விளைவுகளை ஏற்படுத்தும். அதுவே இந்தியாவின் எரிசக்தி துறையில் கச்சா எண்ணெய்யின் பங்கு குறைந்தால், பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். இதுதவிர்த்து நாம் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயம் இந்தியாவின் சூழலியல். ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் பகுதிகளில் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்தபோது பல்வேறு சூழலியல் பிரச்னைகளைச் சந்தித்தன. இந்த நெருக்கடி, அதிக மக்கள் அடர்த்தி கொண்ட இந்தியாவுக்கும் உண்டு. பொருளாதார காரணங்களுக்காக இதை மறந்துவிடக் கூடாது. இயற்கை எரிவாயு பயணத்தில் இந்தியாவின் பங்கு என்ன என்பது இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க