அறநிலையத்துறையில் கோஷ்டி சண்டையா..? - அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றம்! | More HRNCE Officials transferred - conflicts between the officers is the reason?

வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (19/11/2018)

கடைசி தொடர்பு:15:52 (03/12/2018)

அறநிலையத்துறையில் கோஷ்டி சண்டையா..? - அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றம்!

அறநிலையத்துறையில் கோஷ்டி சண்டையா..? - அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றம்!

மிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகிறார்கள். இதற்குக் காரணம் அறநிலையத்துறையில் நடக்கும் கோஷ்டிசண்டைதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இவற்றுக்குச் சொந்தமாக நான்கு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களும், நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களும் உள்ளன. இவற்றை நிர்வகிக்க அறநிலையத்துறையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் அறநிலையத்துறை தலைமையகம் உள்ளது. தமிழகமெங்கும் இருக்கும் கோயில்களும் அங்கிருக்கும் சொத்துகளும் இங்கிருந்தே நிர்வகிக்கப்படுகின்றன. இத்துறைக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆணையராக நியமிக்கப்படுவார். ஆணையருக்குக் கீழ் மூன்று கூடுதல் ஆணையர் பதவிகள் உள்ளன. கூடுதல் ஆணையர் (பொது) திருமகள் கவனித்து வருகிறார். கூடுதல் ஆணையர் (விசாரணை) பொறுப்பைக் கூடுதலாக இணை ஆணையர் சுதர்சன், கூடுதல் ஆணையர் (திருப்பணி) கவிதா கவனித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலை மோசடி வழக்கில் `முதல் தகவல் அறிக்கை' கூட போடப்படாமல் கவிதா கைது செய்யப்பட்டார். இதனால் அவரைப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது அறநிலையத்துறை தலைமை. இதையடுத்து, கூடுதல் ஆணையர் (பொது) திருமகள் வீட்டில் கடந்த மாதம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புன்னைவனநாதர் சிலை காணாமல் போனதாகக் கூறப்பட்ட வழக்கில்தான், திருமகள் வீட்டில் விசாரணை நடத்தினார்கள் அதிகாரிகள். கவிதா பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் கவனித்துவந்த திருப்பணி கூடுதல் ஆணையர் பொறுப்பும் கூடுதலாகத் திருமகளிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

அறநிலையத்துறை கோயில்

இந்நிலையில், கடந்த வாரம் மூன்று நாள்கள் அறநிலையத்துறை தலைமையகத்தில் அதிகாரிகளோடு ஆணையர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு திருமகளிடம் கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பு பறிக்கப்பட்டு, திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இணை ஆணையர் வான்மதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோல், கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் பிரிவு இணை ஆணையர் சுதர்சன் கூடுதல் ஆணையர் விசாரணை பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறநிலையத்துறை ஆணையர் டி.கே.ராமச்சந்திரனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்தப் பொறுப்பு சென்னை மண்டல இணை ஆணையர் லட்சுமணனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இன்று கூட்டம் நடைபெறுகிறது, அதில் சுதர்சனிடம் இருந்த பொறுப்புகள் மீண்டும் யாருக்குப் போகும் என்று தீர்மானிக்கப்பட இருக்கிறது. விசாரணை கூடுதல் ஆணையராக இருந்த சுதர்சனன் மீது பலரும் குற்றச்சாட்டுகளை கூறிவந்தநிலையில், அவரே முன்வந்து பொறுப்புகளை துறந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஒரு வருடமாகவே, அறநிலையத்துறையில் கோஷ்டி சண்டை நடந்துவருவதாகத் தெரிவிக்கிறார் அறநிலையத்துறை அதிகாரி ஒருவர். அவர் கூறுகையில்,``சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் துறை சார்ந்த விஷயங்களை இங்கிருக்கும் சிலர் அத்துமீறிக் கொடுத்து வருகின்றனர். அதை அடிப்படையாக வைத்தே, ரெய்டு நடக்கிறது. ஆணையருக்கு அடுத்தளவில் உள்ள பதவி கூடுதல் ஆணையர் பதவி. அந்தப் பொறுப்புக்கு வருவதற்குத்தான் சிலர் வேண்டும் என்றே கோஷ்டி மோதல் செய்து வருகின்றனர். இதனால், அறநிலையத்துறையின் வளர்ச்சிதான் பாதிக்கப்படுகிறது. இரண்டு கோஷ்டி மோதல்களால் திட்டப்பணிகளுக்கு அனுமதி கூட விரைவில் பெற முடியாத நிலையில்தான் அறநிலையத்துறை தற்போது உள்ளது'' என்கிறார்.

தற்போது, இரண்டு கோஷ்டிகளையும் தனித்தனியாக அழைத்துப் பேசிவருகிறார் அறநிலையத்துறை ஆணையர். இந்தக் கோஷ்டிப் பூசலுக்கு முடிவு எப்போது வரும்?


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close