"முப்பது வருஷ மரத்துக்கு 600 ரூபாய்தானா?" -கஜாவில் சிக்கிய விவசாயிகள் | Gaja cyclone hit farmers questions the crop compensation amount

வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (21/11/2018)

கடைசி தொடர்பு:12:28 (21/11/2018)

"முப்பது வருஷ மரத்துக்கு 600 ரூபாய்தானா?" -கஜாவில் சிக்கிய விவசாயிகள்

`கஜா’ என்ற சொல்லுக்கு வளம் என்று பொருள். ஆனால், தற்போது டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயல் முரணாக அத்தனை வளங்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டது. முப்பது வருடங்களாக வளர்த்த தென்னை மரங்கள் ஒரே இரவில் வேரோடு சாய்ந்து கிடக்கிறது என்று கதறுகிறார்கள் விவசாயிகள். பேரிடர் கால நிவாரணங்களை அரசும் பொதுமக்களும் மேற்கொண்டு வருகிறார்கள். வெள்ளத்தால் பாதித்த இடங்களுக்கு உணவுகளும் இன்னபிற தேவைகளும் வெளியூர்களிலிருந்து சென்றபடி இருக்கின்றன. ஆனால், மக்களே மக்களை மீட்டெடுத்துக் கொண்ட பிறகுதான் அவர்களது வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் பணிகளை அரசு மேற்கொள்ளும் என்பதாகத் தெரிகிறது. `அதுவும் அரைகுறையாகவே நிகழும்’ என்று புகார் கூறுகிறார்கள் விவசாயிகள்.

கஜா புயல் பாதிப்பு பற்றி அய்யாக்கண்ணுவழக்கறிஞரும் விவசாயியுமான அய்யாக்கண்ணு இதுபற்றிக் கூறுகையில், ``ஒரு ஹெக்டேர் அளவில் எங்களுக்கு நிலங்களில் பயிரிட ரூ.73,000/- முதல் ரூ.80,000/- வரை செலவாகும். ஆனால், தமிழக விவசாயத் துறையின் கணக்கீட்டின்படி ஒரு ஹெக்டர் அளவிலான நெல் பயிருக்கு ரூ.42,441/- செலவாகிறது, சோளப்பயிருக்கு ரூ.33,000/- என்றே நிர்ணயித்துள்ளனர். தற்போது கஜா புயலால் நாங்கள் பயிரிட்ட நிலங்களும் மரங்களும் முற்றிலுமாகச் சேதமடைந்திருக்கின்றன. சேதமடைந்திருக்கும் பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.13,000/- என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த இழப்பீடு பெயரளவில் அறிவிக்கப்பட்டிருப்பதாகவே எங்களுக்குத் தெரிகிறது. இது எந்தக் கணக்கின் அடிப்படையில் தரப்படும் இழப்பீடு என்றும் தெரியவில்லை. மேலும் புயலால் சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை அப்புறப்படுத்துவதற்கு ரூ.500/- மற்றும் அந்தத் தென்னை மரத்துக்கான இழப்பீடாக ரூ.600/- என்று அரசு அறிவித்திருக்கிறது. சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்காக மரங்களை அப்புறப்படுத்துவதாகச் சொன்ன அரசு அப்போது ஒரு மரத்துக்கான இழப்பீடாக ரூ.6000/- என அறிவித்தது. அந்த மரத்துக்கும் இந்த மரத்துக்கும் அப்படியென்ன வித்தியாசம் என்று விவசாயிகளாகிய எங்களுக்குத் தெரியவில்லை. வீழ்ந்த ஒவ்வொரு தென்னை மரத்துக்கும் முப்பது வயது வரை இருக்கும். அதற்கு மதிப்பு வெறும் ரூ.1100/- மட்டுமா?.

கஜா புயல் பாதிப்பு

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலாக்கத்தை அடுத்து ஸ்வராஜ் அபியான் கீழ் உச்சநீதிமன்றத்துக்குத் தாக்கல் செய்த ரிட் மனு 857 ன்படி வறட்சி அல்லது வறட்சி போன்ற (புயல் போன்ற பாதிப்புகள் உள்ளடங்கும்) காலகட்டங்களில் மக்களுக்குப் பேரிடர் காலநடவடிக்கையாகச் செய்ய வேண்டிய செயல்களை தமிழக அரசு தற்போது அமல்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் விவசாயிகளாகிய எங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். அரசு பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ் பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கப்பட்டது. எத்தனையோ புயல்களைக் கடந்துவந்தும் இந்த நிவாரண நிதிகள் எப்படிச் செலவாகிறது என்கிற எவ்வித வெளிப்படை அறிக்கையையும் அரசு இதுவரை வெளியிட்டதில்லை. அதை வெளியிட்டால் விவசாயிகளுக்கான நிவாரணம் எவ்வளவு தரலாம் என்பதும் தெரியவரும். ஆனால், விவசாயிகள் மிஞ்சிப்போனால் ஒருநாள் போராடிவிட்டு அடுத்தவேளைக் கஞ்சிக்காக மறுநாள் உழைக்கச் சென்றுவிடுவார்கள் என்கிற அலட்சியப் போக்கில் அரசு இருப்பதால்தான் இப்படிப் பயிர்களுக்கான நிவாரணப் பணிகளும் அலட்சியமாகவே மேற்கொள்ளப்படுகிறது” என்றார். 

பயிர்ச் சேத நிவாரணம் குறித்து தமிழக விவசாயத்துறை இயக்குநரகம் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் தரப்பு என இருவரையும்  தொடர்புகொண்டோம். இருதரப்பிலிருந்தும் தெளிவான பதில்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்