வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (21/11/2018)

கடைசி தொடர்பு:14:52 (21/11/2018)

`கஜா' புயல் பாதிப்பு.. போராட்டத்தில் மக்கள்.. என்ன சொல்கின்றன கட்சிகள்?#VikatanInfographics

தமிழக அரசுத் தரப்பில் `கஜா' புயல் ஏற்படுத்திய பாதிப்புகளையும், நிவாரணமாக அளிக்கப்படும் தொகையைக் குறித்தும் முதலமைச்சர் அறிக்கை வெளிவந்துள்ளது.

`கஜா' புயல் பாதிப்பு.. போராட்டத்தில் மக்கள்.. என்ன சொல்கின்றன கட்சிகள்?#VikatanInfographics

ளத்தில் மீண்டும் கைகோத்து நின்றுகொண்டிருக்கிறது சிவில் சமூகம். டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பை உருவாக்கிச் சென்றுள்ளது `கஜா' புயல். உணவு, நீர், மின்சாரம் எதுவும் இல்லாமல் தங்கள் வாழ்வாதாரம் முழுவதையும் `கஜா' புயலுக்கு இரையாகக் கொடுத்துவிட்டு நிற்கதியாய் நிற்கின்றனர் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள்.  

புயல் அறிவிப்பு வெளியானவுடனேயே, அ.தி.மு.க அமைச்சர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தற்காலிகமாகப் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இரவு முழுவதும் விழித்திருந்து, ``மக்கள் உறங்கும்வரை நாங்கள் விழித்திருப்போம்" என்றார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் புதிதாகக் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன்வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு, `கஜா' புயல் வருவதற்கு முன்பு முன்னெச்சரிக்கையுடன் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

அமைச்சர் தங்கமணி ``கஜா புயல் மட்டுமன்றி தமிழகத்தில் அரசியல் புயலையும் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக விரட்டியடித்து வருகிறார்" என்று பேட்டியளித்தார். மற்றோர் அமைச்சரான கே.டி.ராஜேந்திர பாலாஜியோ ஒருபடி மேலேபோய், ``தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கஜா புயல் கூஜா புயலாக மாறிவிட்டது" என்றார். ஆனால், புயல் வருவதற்கு முன்பு, அரசு தயார் நிலையில் வைத்திருப்பதாகச் சொல்லப்பட்ட மருத்துவக் குழு, தீயணைப்புப் படையினர், மின்வாரிய ஊழியர்கள் முதலான யாரையும் புயல் அடித்து ஓய்ந்து, கடுமையான சேதங்கள் ஏற்பட்ட பின்னர் மக்களால் காண முடியவில்லை. 

'கஜா' புயல்

பல கிராமங்கள் தொலைத்தொடர்பு மட்டுமல்லாமல், சாலை வழித்தொடர்பிலும் துண்டிக்கப்பட்டு இருந்தன. மக்களுக்கான அத்யாவசியப் பொருள்கள் அவர்களைச் சென்றடையவில்லை. ஏறத்தாழ 46 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பி வாழும் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்த மக்களின் வாழ்வாதாரம் கடும்பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன; பயிர்கள் அழிந்துள்ளன. ஏராளமான கால்நடைகள் இறந்துள்ளன. 

கரையோரம் வாழும் மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு வந்த `ஓகி' புயலின் போது, ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலரும் உயிரிழந்தனர். இந்த முறை முன்னேற்பாடுகளால் அத்தகைய துயரம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் புயலுக்குப் பின்னர், அரசின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை எழுப்பியுள்ளது. 

`` `கஜா'வைச் சந்திக்க நாகை தயார்!' எனப் புயலுக்கு முன்பு திட்டவட்டமாகப் பேட்டியளித்த அமைச்சர் ஓ.எஸ் மணியனின் வாகனம் மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வட்டாட்சியரை முற்றுகையிட்டதால், காவல்துறையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பட்டுக்கோட்டை அருகிலுள்ள புனல்வாசல் கிராமத்தில் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். ஏற்கெனவே புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள்வதற்குள் ஆட்சியாளர்களால் தாக்கப்பட்டுள்ளனர். 

தமிழக அரசுத்தரப்பில் `கஜா' புயல் ஏற்படுத்திய பாதிப்புகளையும், நிவாரணமாக அளிக்கப்படும் தொகையைக் குறித்தும் முதலமைச்சர் அறிக்கை வெளிவந்துள்ளது. எனினும் ஒவ்வொரு முறையும் அரசு தரும் கணக்குகளுக்கும், கள நிலவரங்களுக்கும் பல மடங்கு வித்தியாசம் நிலவியதைக் கடந்த காலங்களில் தமிழகம் பார்த்திருக்கிறது. 

'கஜா' புயல்

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே, மீண்டும் ஒரு சிவில் சமூகமாக இணைந்து நிவாரணங்களை வழங்கி டெல்டா பகுதி மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். நிவாரணங்களை ஏற்றி வந்த வாகனத்தில் இளநீர் ஏற்றி அனுப்பி நன்றிக்கடன் செலுத்தினர் தஞ்சைப் பேராவூரணி விவசாயிகள். அரசு செய்ய வேண்டியவற்றை மக்கள் செய்து கொண்டிருக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூன்று நாள்களுக்குப் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார். இதனை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ``புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க முடியாத அளவுக்கு இரக்கக் குணம் இல்லாத முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் நிவாரணங்களைப் பெறுவதற்காக மக்கள் நடத்தும் போராட்டங்களைப் பற்றிக் கூறியுள்ள ஸ்டாலின், போராடும் மக்களைக் காவல்துறையினர் கைது செய்வதைக் கண்டித்துள்ளார். 

ஜெயக்குமார் - கஜா புயல்டெல்டா கிராமங்களில் மக்கள் ஆங்காங்கே நிகழ்த்தும் போராட்டங்களைப் பற்றி தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். ``பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடுவது போன்று, ஒன்றும் தெரியாதது போல நடிப்பதில் தேர்ச்சி பெற்ற கட்சி திமுக. முதலில் அரசு எடுத்த முன்னேற்பாடுகளை உணர்வுபூர்வமாக ஸ்டாலின் பாராட்டியது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக இருந்தது. ஸ்டாலின் அப்படிச் சொன்னது பலரிடமும் சென்றுசேர்ந்தது. `அம்மாவின் அரசு பிரமாதமாகச் செயல்படுகிறது' என்று எதிர்க்கட்சித் தலைவரே சொன்னதால், அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதையே சொன்னார்கள். இப்படியிருக்க, தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தலை அறிவிக்கவுள்ளது. ஏற்கெனவே எங்கள் கட்சிக்கு அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பு நன்றாக உள்ளது. இப்படியான சூழலில் அரசு நிர்வாகத்தைப் பாராட்டியது, அவர்களுக்கு எதிராகத் திரும்பும் என்பதைக் கணித்து, திட்டமிட்டு அரங்கேற்றிய சதிதான் மறைமுகமாக மக்களைத் தூண்டி ஆட்சிக்கு எதிராகப் போராடச் செய்வது. மக்களை அரசுக்கு எதிராகப் போராடத் தூண்டுவதில் ஸ்டாலினுக்கு உடந்தையாக இருப்பது டிடிவி தினகரன். இருவருக்கும் ஏற்கெனவே இருக்கும் தொடர்பு இதுபோன்ற மக்கள் பிரச்னையிலும் தலையீடாக மாறியுள்ளது. சுனாமிக்குப் பிறகு மக்கள் இவ்வாறு சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்க, அவர்களைத் தூண்டிவிடுவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இருக்கிறது. கேரளப் பெருவெள்ளத்தின் போது ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து மக்களோடு செயல்பட்டதுபோல இங்கும் நிகழ வேண்டும். காலையில் ஒன்று, மாலையில் வேறொன்று எனப் பேசிக்கொண்டிருக்கக் கூடாது" என்றார். 

திருச்சி சிவா - கஜா புயல்

இதுபற்றி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவிடம் கேட்டபோது, ``எதிர்க்கட்சித் தலைவர் மிகுந்த பொறுப்புஉணர்வுடன் பாராட்ட வேண்டியதைப் பாராட்டுகிறார்; சுட்டிக்காட்ட வேண்டியதைச் சுட்டிக்காட்டுகிறார். களத்தில் நேரடியாகச் சென்று பார்த்தால் தெரியும், மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் என்று. மக்களை யாரும் தூண்டிவிட வேண்டும் என்ற அவசியமே இல்லை. சாலையில் பத்து நிமிடம் பயணம் செய்து மக்களைச் சந்தித்தாலே அதை உணர முடியும். ஒரு அமைச்சர் சேதமே இல்லை என்று பேட்டியளிக்கிறார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பாதிக்கப்பட்ட இடங்களில் பணி செய்வதோடு, மக்களுக்குத் தேவையான பொருள்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறார். முதல்வர் எந்த முகாமையும் நேரில் சென்றுபார்க்கவில்லை. அ.தி.மு.க-வினருக்கு நிவாரணங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் களத்தில் இருக்கிறார்; தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் அவருடன் உள்ளனர். மற்றவர்கள் தமிழகம் முழுவதும் பொருள்களைத் திரட்டும் பணியில் இருக்கிறோம். உண்மையில் இந்த அரசின் பணியைக் குறைத்திருப்பது நாங்கள் தான்!" என்றார்.