அப்பாவி சிறைக்கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்ரவதை! உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குழு அறிக்கை தாக்கல் | Naked prisoners and torture! Advocate group report filed in the High Court!

வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (27/11/2018)

கடைசி தொடர்பு:12:28 (27/11/2018)

அப்பாவி சிறைக்கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்ரவதை! உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குழு அறிக்கை தாக்கல்

சிறைத்துறையின் பொறுப்பு என்பது, வரும் கைதிகளை நல்வழிப்படுத்துவதுதான். ஆனால், பல சிறை அதிகாரிகள் அப்படி நடந்து கொள்வதில்லை.

அப்பாவி சிறைக்கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்ரவதை! உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குழு அறிக்கை தாக்கல்

"தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகளில் பலர் மனரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மனநல சிகிச்சைகள் அளிக்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை வரும் டிசம்பர் 13-ம் தேதியன்று சமர்ப்பிக்க வேண்டும்’’ எனச் சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகச் சிறைச்சாலைகளின் தற்போதைய நிலையைக் கண்டறிய வழக்கறிஞரும் நீதிமன்ற மூத்த ஆலோசகருமான வைகை என்பவரது தலைமையில் ஒரு குழுவை நியமித்திருந்தது சென்னை உயர் நீதிமன்றம். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சிறைச்சாலைகள், சிறைக்கைதிகளின் நிலையைக் கண்டறித்து நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் அறிக்கை சமர்ப்பித்தார் வழக்கறிஞர் வைகை.

அந்த அறிக்கையில், தமிழகச் சிறைகளில் உள்ள சிறைக்கைதிகளில் மூன்றில் ஒருவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குச் சிகிச்சையளிக்க போதிய மருத்துவர்கள் சிறைகளுக்குள் இல்லையென்றும், சக கைதிகள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ``அவர்களை நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைத்திருப்பதில் எந்தப் பலனும் இல்லை, உடனடியாக அவர்களுக்குத் தேவையான சிகிச்சையளிக்க வேண்டும் இல்லையென்றால் நல்ல மனநல மருத்துவமனையில் அவர்களை அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும். மேலும், கைதிகளைச் சந்திக்க வரும் பார்வையாளர்களுடன் அவர்கள் உரையாடுவதற்கு தனியான இடம் ஒதுக்க வேண்டும்'' எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் வைகை. 

சிறைக்கைதி

அதன் தொடர்ச்சியாகவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இதுதொடர்பாக நம்மிடம் பேசினார் வழக்கறிஞர் புகழேந்தி. ``சிறையில் கைதிகள் இருக்கும் இடத்துக்கும் பார்வையாளர்கள் நிற்குமிடத்துக்கும் இடையே கம்பிகளும் மிகப்பெரிய இடைவெளியும் இருக்கும். ஒரு கைதியைச் சந்திக்க குறைந்தது அவர்கள் குடும்பத்தினர், நண்பர்கள் என மூன்று பேராவது வருவார்கள். ஒருபுறம் கைதிகள் 50 பேரும், மறுபுறம் பார்வையாளர்கள் 150 பேரும் ஒரே இடத்தில் ஒன்றாகப் பேச முற்படும்போது, யார் என்ன பேசுகிறார்கள் என்றே விளங்காது. அந்த இடம் ஒரே கூச்சலும் குழப்பமுமாகத்தான் இருக்கும். இதனாலேயே பல கைதிகள் மனமுடைந்து போவார்கள். தங்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதலான குடும்பத்தினருடன்கூடச் சரியாகப் பேச முடியாமல்போவது அவர்களுக்கு மிகப்பெரிய வேதனையைத் தரும். 

வழக்கறிஞர் புகழேந்திசிறைக்குள் கைதிகளாக இருக்கும் அனைவருமே திட்டமிட்டு கொலை செய்யக்கூடிய கொலைகாரர்களோ, கூலிப்படையினரோ அல்ல. சூழ்நிலை காரணமாக உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்தவர்கள், சிறு சிறு தவறுகளில் ஈடுபட்டவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் எப்படியாவது தவறுகளைத் திருத்திக்கொண்டு இனி சரியாக வாழ வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதுபோன்ற அலைக்கழிப்புகள் அவர்களுக்கு மேலும் மன உளைச்சலைத் தரும். தங்களிடம் இல்லாத புதிய பழக்கங்களைக் கற்றுக்கொள்வார்கள். 

பொதுவாக, காவல்துறையும் சிறைத்துறையும் அடிப்படையில் வேறானவை. சிறைத்துறையின் பொறுப்பு என்பது, வரும் கைதிகளை நல்வழிப்படுத்துவதுதான். ஆனால், பல சிறை அதிகாரிகள் அப்படி நடந்து கொள்வதில்லை. காவல்துறையினரைப் போன்று எப்போதும் கையில் கம்புடன் சுற்றுவது, அப்பாவி சிறைவாசிகளை அடித்துத் துன்புறுத்துவது, நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால், சிறையில் இருப்பதே அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையாக மாறிவிடுகிறது. அதுபோல விசாரணைக்கு அழைத்து வரப்பட்டு பல ஆண்டுகளாகச் சிறையில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். 

தவறே செய்யாமல் ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் மற்ற கைதிகளால் ஏளனப் பேச்சுக்கும் கேலிக்கும் உள்ளாவார்கள். 'செய்யாத தப்புக்கு சிறைக்கு வந்த நாம் ஏன் தவறு செய்துவிட்டு வரக்கூடாது' எனச் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். சாப்பாட்டுக்கு, குழம்புக்கு எனச் சிறைக்குள் பணம் கொடுத்தால்தான் சிறைக்கைதிகளுக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய வசதிகளே கிடைக்கும். பணம் இல்லாத பல சிறைவாசிகளை இது மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இதுபோன்ற விஷயங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். சிறைக் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் எனச் சிறை அதிகாரிகளுக்கு முதலில் கவுன்சலிங் தேவை. அதற்கடுத்ததாகக் கைதிகள் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க முறையாக, தனியாக இடம் ஏற்படுத்தித் தர வேண்டும். இவையிரண்டும் நடந்தாலே சிறைக்கதிகளுக்கு உண்டாகும் மனநலப் பிரச்னைகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும்’’ என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

``சிறையில் இருப்பவர்கள் ஒரே அறைக்குள் முடங்கி இருப்பதால் பிரிவு, வெறுமை அவர்களை வாட்டும். எப்போது சிறையை விட்டு வெளியே செல்வது என்கிற ஏக்கம் அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். தூக்கமின்மை பாதிப்பு ஏற்படும். குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என எப்போதும் சிந்தித்து, அதன் காரணமாக மனப்பதற்றத்துக்கு ஆளாவார்கள். மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

திட்டமிட்டுத் தவறு செய்பவர்கள், தொடர்ச்சியாக சிறைக்குச் செல்பவர்களுக்கு பெரியளவில் மனப்பாதிப்புகள் இருக்காது. சூழ்நிலையின் காரணமாகத் தவறு செய்து, முதன்முறையாகச் சிறைக்குச் சென்றவர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள் இனி எப்படிப் பார்ப்பார்கள், இந்தச் சமூகம் இனி நம்மை எப்படிப் பார்க்கும், நம்மை இனி வேலையில் வைத்துக்கொள்வார்களா, பொருளாதாரத்துக்கு என்ன செய்வது போன்ற சிந்தனைகளால் அவதிக்குள்ளாவார்கள். சிலருக்குத் தற்கொலை எண்ணம்கூட ஏற்படும். ஏற்கெனவே ஆன்டி சோஷியல் பெர்சனாலிட்டியாக இருப்பவர்கள், மேலும் குற்றம் செய்யக் கூடியவர்களாக மாறிவிடுவார்கள். போதைப் பழக்கம் உள்ளவர்கள் என்றால், சிறைக்குள் அதற்கான வாய்ப்பு கிடைத்தால் முழுமையாக அடிமையாகிவிடுவார்கள். சிறையில் மற்றவர்களுடன் பேசுவது, விளையாடுவது, சிறு சிறு வேலைகள் செய்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டால் இது போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். தூக்கம் இல்லாமல் அடிக்கடி தற்கொலை எண்ணம் வந்தால் உடனடியாக சிறைகளில் உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் மன நல மருத்துவர்களுக்குப் பரிந்துரைப்பார்கள். அவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்’’ என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன்.`` சிறைகளில் சமூக சேவகர் (Social Welfare Officer) மற்றும் உளவியல் ஆலோசகர் பணியிடங்கள் இருக்கின்றன. ஆனால், இவ்விரண்டு பணியிடங்களும் முறையாகப் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது. ஒரு சில சிறைச்சாலைகளில், சமூக சேவகர் மற்றும் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் கைதிகளுடன் பேசுவதே கிடையாது. அவர்களின் பிரச்னைகளைப் பற்றி உரையாடுவது கிடையாது. அவர்களின் குடும்பத்தினருடனும் உரையாட அனுமதிப்பதில்லை. அதேபோல, சிறையில் அவர்கள் உழைத்ததற்கான முழு ஊதியத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தைச் சிறை எடுத்துக் கொள்கிறது. அது சரியல்ல. முழுவதையும் அவர்களுக்கே கொடுத்துவிட வேண்டும். அந்தப் பணத்தை அவர்களின் குடும்பத்துக்கு, அவர்கள் கொடுக்கும்போது அவர்களின்  குடும்ப உறவு மேம்படும். 

 கைதிகளுக்குச் சுகாதாரமான உணவும், சுத்தமான இருப்பிடமும் கிடைத்துவிட்டாலே அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் பாதி சரியாகிவிடும். மாவட்ட நீதிபதிகளும் தலைமை குற்றவியல் நடுவர்களும் சிறைகளை அவ்வப்போது பார்வையிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், அவர்கள் அதைச் செய்வதே இல்லை. சிறைகளுக்குச் சென்று, கைதிகளுடன் உரையாடி முறையான  அறிக்கைகளைச் சமர்ப்பித்தால்  பிரச்னைகள் தீர்ந்துவிடும். தண்டனை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்குத்தான் இருக்கிறது. சிறைத்துறைக்கு இல்லை. கைதிகளை மனமாற்றம் செய்து நல்வழிப்படுத்த வேண்டிய கடமை மட்டுமே சிறைத்துறைக்கு இருக்கிறது. அதை, அவர்கள் செய்ய முன்வர வேண்டும்’’ என்கிறார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன்.

சிறை

சிறைக்குள் கைதிகள் சொகுசாக, வசதியாக இருப்பது போன்ற சில காட்சிகள் சமீபத்தில்  வெளியானது. அது தொலைக்காட்சிகளில் மிகப்பெரிய விவாதமாகியது. அவர்கள் எல்லாம் வசதி படைத்த, அதிகாரம் படைத்த ஒருசில சிறைக்கைதிகள் தான். அவர்களைத் தாண்டி சூழ்நிலையால் சிறைவாசத்தை அனுபவித்து வருபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். கொலை செய்வதையும், கொள்ளை அடிப்பதையும் தொழிலாகவே கொண்டிருப்பவர்களுக்கு மன உளைச்சலோ, மன சம்பந்தமான பாதிப்புகளோ வருவதற்குக் கண்டிப்பாக வாய்ப்பில்லை. உணர்ச்சிவசப்பட்டுத் தவறு செய்தவர்களே அது போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகுகிறார்கள். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, சிறையில் இருக்கும் அனைத்து கைதிகளையுமே நல்வழிப்படுத்த வேண்டிய கடமை சிறைத்துறைக்கு இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close