வெளியிடப்பட்ட நேரம்: 21:49 (03/12/2018)

கடைசி தொடர்பு:21:49 (03/12/2018)

சென்டினல் பழங்குடியினருக்கும் சிறையிலிருக்கும் சாய்பாபாவுக்கும் என்ன தொடர்பு? #VikatanInfographics

சென்டினல் பழங்குடியினரை ஆதரிப்பது சாதாரணமாகவும், உள்நாட்டுப் பழங்குடியினர் மீது அரசு நிகழ்த்திய வன்முறைகளை எதிர்ப்பது தேச துரோகமாகவும் கருதப்படுவது இந்தியாவில் மட்டும்தான்.

சென்டினல் பழங்குடியினருக்கும் சிறையிலிருக்கும் சாய்பாபாவுக்கும் என்ன தொடர்பு? #VikatanInfographics

ந்தமான் தீவுப்பகுதியைச் சேர்ந்த சென்டினல் பழங்குடியினர், கடந்த இரண்டு வாரங்களாகப் பேசுப்பொருளாக இருக்கிறார்கள். அனுமதிக்கப்படாத, பழங்குடி மக்களின் பிரதேசத்துக்குள் மத பிரசாரத்துக்காக நுழைந்ததற்காக அமெரிக்க மத போதகர் ஜான் ஆலன் சாவ், சென்டினல் பழங்குடியினரால் அம்பெய்திக் கொல்லப்பட்டார். ஸ்மார்ட்போன் காலத்திலும் இப்படியான பழங்குடியினர் வாழ்கிறார்களா என்று உலகமே வியந்தது. 

'ஜான் ஆலன் சாவ் கொலையில் பழங்குடியினர் மீது வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படாது' என உறுதியளித்திருக்கிறது இந்திய அரசு. எனினும், சென்டினல்களைப் பற்றித் தெரிந்தும் ஆலனை அங்கு அழைத்துச் சென்ற உள்ளூர் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து, கொல்லப்பட்ட ஆலனின் உடலை மீட்க முயன்றுகொண்டிருக்கிறது. 

உலகமே உற்று நோக்கும் இந்தச் சம்பவத்தில், இந்திய அரசு மானுடவியலாளர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த அதே வேளையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள குக்கிராமமான மாலியில் அரசு பாதுகாப்போடு அதானி குழுமத்துக்கு விளைச்சல் நிலங்களைக் கையகப்படுத்தி அளித்துக்கொண்டிருந்தது. சென்டினல் தீவுப் பழங்குடினர் ஆலனைத் தொடர்ந்து வெளியாட்கள் யாராவது வருகிறார்களா என்று தற்காத்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், ஜார்க்கண்ட் மாலி கிராமத்தின் பழங்குடியினர் அதானி குழுமத்தின் அதிகாரிகளின் காலில் விழுந்து தங்கள் நிலங்களுக்காக, வாழ்வாதாரத்துக்காக, கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். ஆனால், நாக்பூர் சிறையில் கழிவறைக்குச் செல்வதற்குக்கூட இரண்டு பேரின் துணை தேவைப்படுவதாக நொந்து தன் மனைவிக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் பேராசிரியர் சாய்பாபா. அவர் மாற்றுத்திறனாளி; அவரது உடல் 90 சதவிகிதம் இயங்குவதில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பழங்குடியினர்

பேராசிரியர் சாய்பாபா சென்டினல்களைப் போன்று, ஜார்க்கண்ட் பழங்குடியினரைப் போன்று, சத்தீஸ்கர், ஒடிஷா பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினர் மீதான இந்திய அரசின் பாதுகாப்புப் படையினர் தொடுத்த தாக்குதல்களை எதிர்த்துப் போராடியவர். எப்படி ஆலன் சென்டினல் தீவுகளுக்குள் நுழைந்ததை சென்டினல் பழங்குடியினர் எதிர்த்தனரோ, அதைப்போல, தங்கள் பகுதிகளை காலிசெய்து, 'வளர்ச்சி' என்ற பெயரில் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய மக்களுடன் நின்றவர் பேராசிரியர் சாய்பாபா. அதற்காக அவர் மீது தேசத் துரோக வழக்குத் தொடுக்கப்பட்டு, சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 

சென்டினல் பழங்குடியினரை ஆதரிப்பது சாதாரணமாகவும், உள்நாட்டுப் பழங்குடியினர் மீது அரசு நிகழ்த்திய வன்முறைகளை எதிர்ப்பது தேசத் துரோகமாகவும் கருதப்படுவது இந்தியாவில் மட்டும்தான். 

பழங்குடி இனத்தவர் இந்தியா முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். இந்திய வரைபடத்தின் கிழக்குப்பகுதியும், மத்திய பகுதியும் பழங்குடியினர் பெரிதும் வாழும் பகுதிகள். இந்திய மக்கள்தொகையில் பழங்குடியினர் எட்டு சதவிகிதமாக உள்ளனர். இந்தியாவின் சாதிய, நிலவுடைமைக் கட்டமைப்பு பழங்குடியினரையும், தலித்துகளையும் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக மாற்றியது. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களில் பழங்குடியினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அணைகள், சுரங்கங்கள், அரசுத் தொழிற்சாலைகள், தனியார் தொழிற்சாலைகள், காட்டுயிர் பாதுகாப்பு என்று பல காரணங்கள் பழங்குடி மக்களை இடம்பெயரச் செய்தன. இந்தியாவில் அதிக அளவில் இடம்பெயரச் செய்யப்பட்ட மக்கள் பழங்குடியினர்தான் என்கின்றன ஆய்வுகள். 

தங்கள் பகுதிகளுக்கு வரும் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் பழங்குடியினரின் வாழ்வை மேம்படுத்தவில்லை. மாறாக அவர்களுக்கு ஒரு சீருடை அணிவித்து, வளர்ச்சித் திட்டங்களில் தினக்கூலிகளாக இணைத்துக்கொண்டது இந்திய அரசு. தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில், அதானி குழுமம் கட்டப்போகும் நிறுவனம், மின்சாரம் உற்பத்தி செய்து வங்காள தேசத்துக்கு விற்கப்போகிறது. அதை எதிர்த்தே அந்த மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

சென்டினல் பழங்குடியினரும் உள்நாட்டுப் பழங்குடியினரும்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்திக்கொண்டிருக்கும் அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம், ஒடிசாவில் பாக்ஸைட் கனிம வளத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறது. அப்பகுதியைச் சார்ந்த 'கோண்ட்' இனப் பழங்குடியினர்  தெய்வமாக வழிபடும் மலையில் இந்தத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

பழங்குடியினரை ஊரைவிட்டுக் காலிசெய்யவும், நிலங்களைக் கையகப்படுத்தவும் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  ஒடிசா பகுதியில் 'பச்சை வேட்டை' என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை உலகின் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டித்தன; பழங்குடி மக்களைத் தண்டிக்க, அவர்களுள் சிலரை வைத்து இந்திய அரசு உருவாக்கிய 'சால்வா ஜூடும்' என்ற ஆயுதக்குழு பல பழங்குடி கிராமங்களைச் சூறையாடியது. உச்ச நீதிமன்றம் மத்திய அரசையும் சத்தீஸ்கர் மாநில அரசையும் கடுமையாகக் கண்டித்ததால் 'சால்வா .ஜூடும்' அமைப்பு கலைக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் வாச்சாத்தி என்ற பழங்குடி கிராமத்தில் 1992-ம் ஆண்டு சந்தன மரங்களைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி, வனத்துறையினரும் காவல்துறையினரும் சோதனை நடத்தினர். இதில் நடத்தப்பட்ட வன்முறையில் 18 பழங்குடிப் பெண்கள் வனத்துறையினராலும் காவல்துறையினராலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.   

தமிழ்நாடு - கர்நாடகா எல்லையிலுள்ள காட்டுப் பகுதியில், வீரப்பன் மற்றும் அவருடைய கூட்டாளிகளைப் பிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதலின்போது, பல்வேறு பழங்குடி மக்கள் பாதிக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி சதாசிவம் ஆணையம் பழங்குடியினர் மீது காவல்துறை நடத்திய மனித உரிமை மீறல்களை உறுதி செய்தது. சமீபத்தில், கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியைச் சார்ந்த மது என்ற பழங்குடி இளைஞன் கொல்லப்பட்டதை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. 

இந்தியாவில் ஒவ்வொரு பழங்குடி இனத்தின் மீதும் இப்படியான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 'வளர்ச்சி' என்ற பெயரில், இந்த வன்முறைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. இந்தியா என்ற நாடு உருவாவதற்கு முன்பிருந்தே, பல நூற்றாண்டுகளாகத் தனிப் பாரம்பர்யம் கொண்டவர்களாக வாழ்ந்து வரும் பழங்குடியினரின் ரத்தக்கறைகளின் மீது வளர்ச்சி என்ற சாம்ராஜ்யம் எழுப்பப்படுகிறது. குரலற்ற பழங்குடிகளுக்கு ஆதரவாகப் பேசும் பேராசிரியர் சாய்பாபா போன்றவர்களுக்குச் சிறைத்தண்டனைதான் பரிசாக அளிக்கப்படுகிறது.     

அந்தமானில் சென்டினல் பழங்குடியினர் ஜான் ஆலன் சாவ்-க்கு தண்டனை அளித்துவிட்டனர். இந்தியாவின் உள்நாட்டில் அவர்களைப் போன்றே வாழ்ந்த பழங்குடிகளின் உரிமைகளைப் பறித்தவர்களுக்கு யார் தண்டனை தரப்போகிறார்கள் என்னும் கேள்விக்கு பதிலே இல்லை.      


டிரெண்டிங் @ விகடன்