வருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்? #RCS | RCS messaging would replace SMS in our mobiles

வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (10/12/2018)

கடைசி தொடர்பு:10:08 (10/12/2018)

வருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்? #RCS

இதுவரைக்கும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகளுக்கு மட்டுமல்ல; வாட்ஸ்அப், மெசெஞ்சர் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் சேவைகளுக்கும் போட்டியாக வந்திருக்கிறது இந்த RCS.

வருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்? #RCS

ன்றைக்கு உலகத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் ஆபரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்டு; மிகப்பெரிய டெக் நிறுவனங்களுள் ஒன்று கூகுள். இன்றைக்கு சுமார் 200 கோடி மொபைல்கள் இந்த ஆண்ட்ராய்டில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. கூகுள்தான் அதன் அச்சாரமாக இயக்கிக்கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய பிரமாண்டக் கூட்டணியால் ஒரே ஒரு சின்ன விஷயத்தை மட்டும் வெற்றிகரமாக செய்யவே முடியவில்லை. அது மெசேஜிங் சேவை. AI தொடங்கி ஹார்டுவேர் வரைக்கும் எவ்வளவோ விஷயங்களை வெற்றிகரமாக செய்யும் கூகுளால் இந்த விஷயத்தில் மட்டும் வெற்றிபெறவே முடியவில்லை. ஆப்பிளின் எல்லா வசதிகளுக்கும், ஆண்ட்ராய்டில் ஒரு மாற்றைக் கொண்டுவரும் கூகுளால் ஆப்பிளின் ஐமெசேஜ் சேவைக்கு ஒரு மாற்றை வெற்றிகரமாக உருவாக்கவே முடியவில்லை. கூகுளின் கடந்தகால வரலாற்றைப் பார்த்தால் இது புரியும். 

2005-ல் முதன்முதலில் கூகுள் டாக் என்றொரு வசதியை உருவாக்கியது. பின்னர் 2008-ல் ஆண்ட்ராய்டு உருவான பின்பு இந்த சேவையை SMS அனுப்பும் வசதியுடன் இணைத்தது. பின்னர் 2011-ல் கூகுள் ஹேங்அவுட் வசதியை அறிமுகம் செய்தது. கூகுள் ப்ளஸ்ஸின் மெசஞ்சர் சேவையாக இது உருவானது. இதுவும் SMS அனுப்பப் பயன்பட்டது; பின்னர் 2016 முதல் ஹேங்அவுட்டின் SMS சேவையை நிறுத்தியது. இதற்குப் பதிலாக ஆண்ட்ராய்டு மெசேஜஸ் (Android Messages) என்ற சேவையைப் பயன்படுத்தச் சொன்னது. இப்படி இன்ஸ்டன்ட் மெசேஜிங் மற்றும் வீடியோ சாட்டிங்கிற்காக இவ்வளவு வசதிகள் எதற்கு யோசித்து, இறுதியாக கூகுள் அலோ மற்றும் டூயோ எனும் இரண்டு ஆப்களை அறிமுகம் செய்தது. அலோ, இன்ஸ்டன்ட் மெசெஞ்சர்; டூயோ வீடியோ காலிங் ஆப். இதில் டூயோவைத் தவிர, மற்ற அனைத்துக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, எதுவுமே செல்ஃப் எடுக்கவில்லை. இந்தக் குறையை சரிசெய்வதற்காகக் கூகுள் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த விஷயம் நடந்தது. அது RCS.

RCS சேவை

நாம் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகள் அனைத்தும் கடந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை. முதன்முதலில் வணிகரீதியாக SMS சேவை தொடங்கியது 1992-ல். அதற்குப்பிறகு 26 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அந்த SMS சேவையில் எந்தவொரு பெரிய மாறுபாடுகளும் இல்லை. அப்போது இருந்த அதே 160 கேரக்டர்கள்தான். அதே எழுத்து வடிவம்தான். அதற்குப்பிறகு வந்த MMS சேவையும் பெரியளவில் பயன்பாட்டில் இல்லை. மாறாக வாட்ஸ்அப், மெசெஞ்சர் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டன. இன்றைக்கு வங்கி, ஷாப்பிங் போன்ற வணிகரீதியான சேவைகளுக்கு மட்டும்தான் இந்த SMS சேவைகள் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. மற்ற பர்சனல் விஷயங்கள் அனைத்துக்கும் வாட்ஸ்அப்தான். இது SMS மூலம் வருமானம் பார்த்துவந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கே பெரிய அடி. இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக 2007-ல் முதன்முதலாக முன்மொழியப்பட்ட விஷயம்தான் RCS எனப்படும் Rich Communication Service. பின்னர் மொபைல்போன் ஆபரேட்டிங்குடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் அடங்கிய கூட்டமைப்பான GSMA இந்த RCS-க்கான வரையறைகளை 2008-ல் அறிவித்தது. இந்த வரையறையின்படி அனைத்து மொபைல் நிறுவனங்களும் RCS வசதிக்கு ஒத்துழைக்கும் வகையில் தங்கள் நெட்வொர்க்குகளை தயார்ப்படுத்த வேண்டும். ஆனால், இது ஏதோ ஓரிரு நிறுவனங்கள் மட்டும் இணைந்து நடத்திவிடமுடியாது. எனவே, அறிமுகம் ஆகி 7 ஆண்டுகள் கழித்தும்கூட பெரிய முன்னேற்றங்கள் எதுவும் இல்லாமல்தான் இருந்தது. இந்த சூழ்நிலையில்தான் 2015-ல் Jibe எனும் நிறுவனத்தை கையகப்படுத்தியது கூகுள். தகவல்தொடர்புத்துறையில் இயங்கிக்கொண்டிருந்த இந்நிறுவனத்தை கூகுள் வாங்கக் காரணமே இந்த RCS-ஐ ஆண்ட்ராய்டு மொபைல்களில் அறிமுகம் செய்வதற்காகத்தான். இதைக் கச்சிதமாக செய்தது கூகுள். 

Rich Communication Service

அதுவரைக்கும் எந்தவொரு மெசேஜிங் ஆப்பும் ஹிட் ஆகாத சோகத்திலிருந்த கூகுளுக்கு இந்த RCS முறை நம்பிக்கையளித்தது. இதை 'Android Messages' ஆப்பில் செயல்படுத்துவதன் மூலம் அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் இதைக் கொண்டு சேர்த்திட முடியும் என நினைத்தது. என்னதான் ஆண்ட்ராய்டு ஆப், ஆண்ட்ராய்டு OS எல்லாம் கூகுளுடையது என்றாலும், இந்த RCS-ஐ கூகுளால் மட்டுமே அனைவரிடமும் கொண்டு சேர்த்திட முடியாது. காரணம், இந்த RCS என்பது ஒரு இணையம் சார்ந்த ஆப்போ அல்லது மென்பொருளோ அல்ல; இது ஒரு கம்யூனிகேஷன் புரொட்டோகால். அதாவது தகவல்தொடர்பு முறை. இந்த RCS என்பது உயிர் என்றால், 'Android Messages' ஆப் இதன் உடல். அவ்வளவே! எனவே இந்த RCS-ஐ அனைத்து பயனாளர்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டுமென்றால் இணையம் மட்டும் போதாது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அவசியம். அது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள, இந்த RCS எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

RCS-ல் SMS போல வெறும் எழுத்துகள் மட்டுமே இருக்காது. வாட்ஸ்அப் போலவே இதில் படங்கள் அனுப்பலாம்; வீடியோக்கள் ஷேர் செய்யலாம்; க்ரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், QR கோடு போன்ற அனைத்தையும் பயன்படுத்தலாம். கூடவே உதவுவதற்காக கூகுள் அசிஸ்டன்ட், இன்ஸ்டன்ட் ரிப்ளை செய்ய AI, நாம் சாட் செய்யும் ஆன்லைனில் இருக்கிறாரா எனப் பார்க்க உதவும் வசதி, நிறுவனங்கள் அனுப்பும் மெசேஜை 'Verified' அக்கவுன்ட்கள் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளும் அம்சம் என அனைத்தும் இருக்கும். இத்துடன் வீடியோ கால் வசதியும் இணைக்கப்படலாம். இது அனைத்தும் நாம் தற்போது SMS அனுப்ப பயன்படுத்திக் கொண்டிருக்கும் 'Messages' ஆப்பிலேயே செய்யமுடியும். இவ்வளவும் எப்படி சாத்தியம்? இங்கேதான் இணைய வசதியும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

RCS

உதாரணமாக 'Good Morning' என்ற செய்தியை A என்ற பயனாளர் B என்பவருக்கு RCS மூலம் மெசேஜ் அனுப்புகிறார் என வைத்துக்கொள்வோம். இந்த மெசேஜ் ஆனது முதலில் RCS Hub-ற்கு அனுப்பப்படும். பின்னர் அங்கிருந்து அந்தச் செய்தி சென்றுசேர வேண்டிய B என்ற பயனாளருக்கு அனுப்பப்படும். அந்த B பயனாளர் வைத்திருக்கும் மொபைல் போனில் RCS வசதி இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. A அனுப்பிய அந்த மெசேஜ் உடனே B-க்குச் சென்றுசேர்ந்துவிடும். இதற்கு SMS கட்டணங்கள் எதுவும் கிடையாது. காரணம், இந்த மெசேஜ் இணைய உதவியுடன் டெலிவரி செய்யப்பட்டதால் அதற்கான டேட்டா கட்டணம் மட்டுமே. இதுவே ஒருவேளை, B என்ற பயனாளரின் மொபைல் RCS இல்லையெனில், மெசேஜ் அப்படியே செல்லாது. RCS மெசேஜ் SMS ஆக மாறி பின்னர் டெலிவரி செய்யப்படும். இதற்கு SMS கட்டணம் வசூலிக்கப்படும். இந்த இடத்தில் மெசேஜை டெலிவரி செய்தது தொலைத்தொடர்பு நிறுவனம்தான். கூகுள் கிடையாது. எனவேதான் இந்தக் கட்டணம். இப்படி இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை ஆகிய இரண்டையும் பயன்படுத்தக்கூடியது RCS. இந்த அம்சத்தை ஏற்கெனவே ஐபோன் யூசர்கள் தங்கள் ஐமெசேஜ் சேவையில் பார்த்திருக்கலாம். கிட்டத்தட்ட இதேபோலத்தான் அதுவும். அதற்கான ஆண்ட்ராய்டு வெர்ஷன்தான் இந்த RCS சேவை. இதற்கு 'Chat' எனப் பெயரிட்டிருக்கும் கூகுள், இதைச் செயல்படுத்துவதற்காக உலகம் முழுவதும் மொத்தம் 55 தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கைகோத்திருக்கிறது.

கூகுளுடன் கைகோத்திருக்கும் நிறுவனங்கள்

இந்தியாவில் ஏர்டெல்லும், ஜியோவும் இதில் அடக்கம். RCS சேவையை ஒத்துழைப்பதற்காக சாம்சங், எல்.ஜி, லாவா, HTC, லெனோவா உள்ளிட்ட 11 மொபைல் உற்பத்தியாளர்கள் தயாராக இருக்கின்றன. கூகுளின் ஆண்ட்ராய்டு போலவே, மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறது. ஆனால், இன்னும் ஆப்பிள் இதற்கு ஓகே சொல்லவில்லை. இதுகுறித்து அந்நிறுவனம் என்ன முடிவு எடுக்கும் எனத் தெரியவில்லை. ஒருவேளை ஆப்பிள், RCS-ஐ சப்போர்ட் செய்யவில்லை எனில், ஆண்ட்ராய்டு பயனாளர்களிடம் இருந்து வரும் RCS மெசேஜ்கள் அனைத்தும் ஐபோன்களுக்கு வெறும் SMS-களாக மட்டுமே வரும். பின்னர் இமேஜ், வீடியோ போன்ற பிறவசதிகளுக்கு வழக்கம்போல வாட்ஸ்அப்பைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே, இதில் ஆப்பிள் என்ன முடிவு எடுக்கவிருக்கிறது என்பது மிக முக்கியம். இல்லையெனில் ஆண்ட்ராய்டு டு ஐமெசேஜில் நடக்கும் அதே 'Blue Bubble', 'Green Bubble' ஆட்டம் இனியும் தொடரும்.

Android Messages

கடந்த இரண்டு ஆண்டுகளாக பேசப்பட்டுக் கொண்டிருந்த இந்த RCS வசதியை முதல்முறையாக பிக்ஸல் மொபைல்களில், வெரிசான் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இணைந்து சாத்தியப்படுத்திவிட்டது கூகுள். சாம்சங்கும் அதனுடைய சொந்த மெசேஜிங் ஆப்பில், கூகுளின் RCS-க்கு ஒத்துழைப்பு அளிக்கத்தயாராகி வருகிறது. இதேபோல மற்ற நிறுவனங்களும் முழுவீச்சில் தயாராக இன்னும் சில மாதங்கள் பிடிக்கலாம். அதன்பின்பு நம்முடைய வழக்கமான SMS-கள் அனைத்துக்கும் குட்பைதான். நிறைய வசதிகள், ட்ரெண்டிங் அப்டேட்கள் என இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தாலும் ஆண்ட்ராய்டு RCS இப்போதும் ஐமெசேஜை நெருங்கவில்லை. காரணம், ஐமெசேஜ் போல இந்த RCS Chat முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டதல்ல; நம்முடைய சாதாரண SMS-கள் போல, பிறரால் எளிதில் ஊடுருவிப் பார்க்கக்கூடிய ஒன்றுதான். மேலும், நிறைய நாடுகளில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகமிருப்பதால் இந்த RCS-ஐ முழுமையாக என்க்ரிப்ட் செய்வது என்பது இயலாத காரியமே. இது இதன் மிகப்பெரிய மைனஸ். இந்த RCS ஆட்டத்தில் கூகுளைத்தவிர ஆதாயம் அடையப்போகும் இன்னொரு நபர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள். வாட்ஸ்அப் போன்ற OTT சேவைகளால் தங்களுடைய SMS வருவாயை முழுவதுமாக இழந்திருந்த இந்நிறுவனங்களுக்கு இந்த RCS வசதி புதியதொரு வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது. இதற்கு முன்பு புதிய ஆப், புதிய வசதி எனப் பலமுறை மெசேஜிங் விஷயத்தில் கால்வைத்து சறுக்கியிருக்கிறது கூகுள். ஆனால், இந்தமுறை அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்