சிலைக் கடத்தல் விவகாரம்... ஆட்டம் காணும் அறநிலையத் துறை? | HRNCE higher official Thirumagal arrest in idol theft case

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (17/12/2018)

கடைசி தொடர்பு:17:50 (17/12/2018)

சிலைக் கடத்தல் விவகாரம்... ஆட்டம் காணும் அறநிலையத் துறை?

அறநிலையத்துறையின் ஆணையருக்கு அடுத்த இடம் இந்தப் பதவி தான். மேலும், முன்னாள் ஆணையர் தனபால் நேரடி ஐ.ஏ.எஸ் இல்லாத போதும் ஆணையராக பதவியில் அமர்த்தப்பட்டார். அவரைப் போலவே திருமகளும், அறநிலையத்துறையின் ஆணையராக வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

சிலைக் கடத்தல் விவகாரம்... ஆட்டம் காணும் அறநிலையத் துறை?

சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில், அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் திருமகள், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் திருமகள், சிலை மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் அறநிலையத்துறையே ஆட்டம் கண்டிருக்கிறது. கடந்த ஜூலை 30-ம் தேதி அறநிலையத்துறையின் மற்றொரு கூடுதல் ஆணையர் கவிதா, காஞ்சிபுரம் சிலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜாமீனில் இருக்கும் கவிதா, அறநிலையத்துறை பொறுப்பில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் திருமகளின் கைது அறநிலையத்துறையை ஆட்டம் காணச்செய்திருக்கிறது.

திருமகள்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த புன்னைவனநாதர் சிலை காணாமல் போனதாக ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற திருப்பணியின்போது, அங்கிருந்த புன்னைவனநாதர் கற்சிலை மாற்றப்பட்டு, அதற்குப்பதிலாக வேறுஒரு புதிய சிலை வைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு இந்த வழக்கை மாற்றியது. இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். 

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார் திருமகள். மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆறு வாரக் காலத்துக்கு திருமகளைக் கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது. இதையடுத்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு இந்த வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்தியது. கோயில் இந்நாள், முன்னாள் செயல் அலுவலர்களிடம் விசாரணை நடத்தியது. கோயில் குருக்களிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. திருமகளின் வீட்டுக்குச் சென்றும், கோயிலிலும் இருமுறை அவரிடம் விசாரணை நடத்தியது போலீஸ். அப்போது, திருமகள் பல்வேறு தவறான தகவல்களை போலீஸாரிடம் கூறியதாக தெரிகிறது. புன்னைவனநாதருக்கு திருப்பணியே நடைபெறவில்லை என்றும்  சிலை மாற்றப்பட்டதற்கும், தனக்கும் தொடர்பில்லை என்றும் போலீஸிடம் தெரிவித்திருக்கிறார்  திருமகள்.

கபாலீஸ்வரர் கோயில்

ஆனால், புன்னைவனநாதர் சந்நிதியிலும் திருப்பணிகள் நடந்ததற்கான வீடியோ ஆதாரத்தைச் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் சிலர் கொடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோ காட்சியில் புன்னைவனநாதருக்கு நடந்த திருப்பணியில் அதிகாரி திருமகள் கலந்துகொண்டது கண்டறியப்பட்டது. மேலும், திருப்பணிகள் நடந்தது தொடர்பான ஆவணங்களைக் கேட்டபோது அவற்றை அழித்துவிட்டதாகவும் திருமகள் பதில் அளித்தார். மாற்றப்பட்ட பழைமையான மரகத மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் எங்கே போனது எனத் தெரியவில்லை.
அந்தச் சிலைகளை பூமிக்குள் புதைத்துவிட்டதாக கோயில் அர்ச்சகர்கள் சிலர் கூறினார்கள். ஆனால், அதிலும் உண்மை இல்லை என்று சந்தேகம் உள்ளது. மாற்றப்பட்ட மரகத மயில் சிலைகள் உள்ளிட்ட  மூன்று சிலைகளும் வெளிநாட்டுக்குக் கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு உள்ளது. 
சிலையை மாற்ற ஒப்புதல் அளித்த முத்தையா ஸ்தபதியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, அறநிலையத்துறையின் அலுவலகத்தில் உள்ள இரண்டு இணை ஆணையர்கள் திருமகளுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். இதன்பிறகுதான் திருமகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியது போலீஸ் தரப்பு. இதனால் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் திருமகள். அவரோடு இந்த வழக்கில், 2004 திருப்பணிக் கமிட்டித் தலைவராக இருந்த டிவிஎஸ் வேணு சீனிவாசன், அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால், ஸ்தபதி முத்தையா ஆகியோரும் ஜாமீனுக்கு விண்ணப்பித்திருந்தனர். திருமகள் தவிர மற்ற மூவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். இந்த நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் திருமகள் கைது செய்யப்பட்டிருக்கிறார். கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். 

திருமகள்
யார் இந்த திருமகள்?


இந்து  சமய அறநிலையத்துறையின் முதல் பெண் அதிகாரியாகப் பொறுப்பேற்றவர் திருமகள்.பி.எஸ்.சி - எம்.எல் படித்து  டி.என்.பி.எஸ்.சி மூலம் அறநிலையத்துறைக்குத் தேர்வானவர். இவருடைய கணவர் தமிழக அரசுப் பணியிலும், மகன் மத்திய அரசுப் பணியிலும் உள்ளனர். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சிதம்பரம் கோயிலிலும், கபாலீஸ்வரர் கோயிலிலும் செயல் அலுவலராகப் பணியாற்றியவர். சீனியர் அதிகாரியாரியான திருமகள் அறநிலையத்துறையின் விசாரணைக்கான கூடுதல் ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார்.
அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வரும் குற்றங்கள் குறித்து இவர்தான் விசாரணை நடத்துவார். அப்போது, தனக்கு வேண்டியவர்களைக் காப்பாற்றியும், சிலரை வேண்டும் என்றே பல வருடங்களுக்குப் பணியிடை நீக்கம் செய்தும் திருமகள் உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிலர், இப்போதுதான் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். எங்கே தன்னுடைய இடத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று, தனக்குக் கீழிருந்த பலரையும் பணிநீக்கம் செய்திருக்கிறார் என்கிறது அறநிலையத்துறை வட்டாரம். இதையடுத்து, துறை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் (பொது) என்ற பதவிக்கு வந்தார். அதாவது, அறநிலையத்துறையின் ஆணையருக்கு அடுத்த இடம் இந்தப் பதவி தான். மேலும், முன்னாள் ஆணையர் தனபால் நேரடி ஐ.ஏ.எஸ் இல்லாத போதும் ஆணையராகப் பதவியில் அமர்த்தப்பட்டார். அவரைப் போலவே திருமகளும், அறநிலையத்துறையின் ஆணையராக வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான், அறநிலையத்துறையின் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில்தான், கபாலீஸ்வரர் கோயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார் திருமகள்.

கடந்த 2004-ம் ஆண்டு கபாலீஸ்வரர் கோயிலில் சிலை காணாமல் போன விவகாரத்தை வெளியில் கொண்டுவந்தது ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன். சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்ததும் இவர்தான். திருமகள் கைது குறித்து ரங்கராஜன் கூறுகையில், ``சிலை மாற்றப்பட்டது குறித்து எனக்குத் தகவல் வந்தது. அதையடுத்து கோயிலுக்குச் சென்று பார்த்தபோது சிலை மாறியதை நான் உறுதிப்படுத்தினேன். அதனால்தான் கடந்த ஆண்டு பிரமாணப்பத்திரத்தில் இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினேன்.

ரங்கராஜன் நரசிம்மன்

இந்த ஆண்டு சிலை மாற்றப்பட்டது குறித்து வழக்கு தொடர்ந்தேன். மயில் வாயில் பூ இருந்த இடத்தில், இப்போது பாம்பு இருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதைக் கவனிப்பார்கள். சிலையின் தற்போதைய படங்கள் உள்ளன. பழையப் படங்களை கோயில் தரப்பில் சமர்ப்பிக்கவில்லை. அதை அழித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் இந்தக் கைது நடவடிக்கையே நடந்திருக்கிறது'' என்றார்.

கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமகளுக்கு, இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளனர் நீதிபதிகள்.