"சபரிமலை பயணத்துக்கு ஆதிவாசி சங்கப் பெண்கள் உதவுகிறார்கள்!'' - 'மனிதி' செல்வி | 'Manithi' Selvi talks about sabarimala issue

வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (18/12/2018)

கடைசி தொடர்பு:14:58 (18/12/2018)

"சபரிமலை பயணத்துக்கு ஆதிவாசி சங்கப் பெண்கள் உதவுகிறார்கள்!'' - 'மனிதி' செல்வி

"ஆண்கள் யாராவது எங்களைத் தடுத்து நிறுத்த முயன்றாலோ அல்லது தாக்க முயன்றாலோ, அதற்கு நாங்கள் கேரள அரசைத்தான் நம்பியிருக்கிறோம். எங்களுக்குப் பாதுகாப்பு தருவதாக மெயில் செய்திருக்கிறது கேரள அரசு!''

பரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, `மனிதி' என்ற பெண்கள் அமைப்பு, சென்ற அக்டோபர் மாதமே சபரிமலை செல்ல முற்பட்டது. ஆனால், அப்போது தங்களுடைய பாதுகாப்புக்காக தேவம்சம் போர்டுக்குப் பலமுறை தொடர்பு கொண்டும் அங்கிருந்து எந்த பதிலும் கிடைக்காததால் தங்கள் பயணத்தை ஒத்தி வைத்தது. இந்த முறை கேரள அரசு, இந்த அமைப்பின் சார்பாக சபரிமலைக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக மின்னஞ்சல் அனுப்பியிருப்பதால், வரும் 23-ம் தேதி சபரிமலைக்குச் செல்ல இருக்கிறார்கள். இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து `மனிதி' அமைப்பைச் சேர்ந்த செல்வியிடம் பேசினோம். 

சபரிமலை - பம்பை

"மாதவிடாய் என்கிற இயற்கை நிகழ்வு பெண்களின் உடலில் ஏற்படுவதால்தானே சபரிமலைக்குப் போகக் கூடாது என்று சொல்கிறார்கள்? சமூகத்தின் அந்த எண்ணத்தை மாற்றுவதற்காகத்தான் நாங்கள் சபரிமலைக்குப் போக விரும்புகிறோம். பெண்கள் தீட்டும் கிடையாது, புனிதமும் கிடையாது. நாங்கள் பெண்கள் அவ்வளவுதான்'' என்ற செல்வி, "ஆண்கள் சபரிமலைக்குச் செல்ல விருப்பப்பட்டால், அவர்களுக்கு வழிகாட்ட பல பேர் இருக்கிறார்கள். பெண்களுக்கு அப்படி யாரும் இல்லை. அதனால், `ஐயப்பனுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்குச் செல்ல விரும்புகிற பெண்கள் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்' என்று எங்கள் அமைப்பின் முகநூல் பக்கத்தில் போஸ்ட் போட்டிருந்தோம். தனியாகப் போனால் தாக்குதல் நடக்கும், குழுவாகப் போனால் பாதுகாப்பு என்று நினைத்த ஐயப்ப பக்தைகள் எங்களைத் தொடர்பு கொண்டார்கள். 

செல்விஎங்களைக் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களாகப் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு. எங்கள் அமைப்பில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள், மருத்துவர்கள் இருக்கிறார்கள், வீட்டு வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். ஏன், மாணவிகள்கூட எங்கள் அமைப்பில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை 15 பெண்கள் தொடர்பு கொண்டு சபரிமலை வர விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். தவிர, கர்நாடகா, ஒடிசா, மத்திய பிரதேசம், கேரளாவில் இருக்கிற ஆதிவாசி அமைப்பைச் சேர்ந்த பெண்கள் எல்லாம் சேர்ந்து கிட்டத்தட்ட 50 அல்லது 60 பேர், வரும் 23-ம் தேதி அன்று பம்பையில் இருப்போம்'' என்றார் விளக்கமாக.

``எங்கள் அமைப்பின் முகநூல் பக்கத்தில், சபரிமலை போகப்போவது பற்றிய தகவலை வெளியிட்டதும், `வாவர் மசூதிக்குச் சென்றுவிட்டுதானே ஐயப்பனை தரிசிக்கச் செல்வீர்கள்?' என்று கேலித் தொனியில் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். சபரிமலைக்குப் போவதற்கு முன்னால், பக்தர்கள் பள்ளி வாசல் போய் வாவரை தொழுதுவிட்டுப் போவதுதான் நடைமுறை. அதனால், நாங்களும் அதைச் செய்வோம். அதில் எங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. மற்றபடி, சபரிமலையில் சிறு வழிப் பாதை, பெருவழிப் பாதை என்று இரண்டு வழிகள் இருக்கின்றன. எங்களைக் கேரள அரசு எந்த வழியில் அழைத்துக்கொண்டு செல்லப் போகிறது என்று தெரியவில்லை. ஆன்லைன் புக்கிங் செய்தவர்களுக்குத் தனி வழி இருப்பதால், அப்படிச் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம்'' என்றவரிடம், "சபரிமலைக்கு வருகிற பெண்களை திருப்பி அனுப்ப அங்கு காத்திருக்கும் பெண்கள் அமைப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?" என்றோம். 

ஆலயம்

``இதற்குத்தான் கேரளாவில் இருக்கிற பெண்கள் சிலரிடமும், ஆதிவாசி சங்கத்தைச் சேர்ந்த பெண்களிடமும் உதவி கேட்டிருக்கிறோம். நாங்கள் ஏதோ திட்டமிட்டு கேரள மக்களின் நம்பிக்கையை, சபரிமலையின் புனிதத்தைக் கெடுக்க வந்திருப்பதாக அங்கிருக்கிற பெண்கள் நினைக்கலாம். அதனால், அவர்களிடம் ஆதிவாசி சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் எங்கள் சார்பாகப் பேசி கன்வின்ஸ் செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஆண்கள் யாராவது எங்களைத் தடுத்து நிறுத்த முயன்றாலோ அல்லது தாக்க முயன்றாலோ, அதற்கு நாங்கள் கேரள அரசைத்தான் நம்பியிருக்கிறோம். எங்களுக்குப் பாதுகாப்பு தருவதாக மெயில் செய்திருக்கிறது கேரள அரசு'' என்கிறார் செல்வி. 

``எல்லா இடங்களிலும் பெண்களும் ஆண்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் உச்சநீதிமன்றம் அப்படியொரு தீர்ப்பை வழங்கியது. நிறைய பெண்ணுரிமைகள் வெறும் எழுத்தாக மட்டுமே இருந்து வருகின்றன. சபரிமலை தீர்ப்பும் அப்படியாகி விடக் கூடாது என்பதற்காகவே நாங்கள் சபரிமலைக்குச் செல்லப் போகிறோம்'' என்கிற செல்வியும், மற்ற பெண்களும் ஐயப்பனுக்கு விரதமிருப்பது, வழிபடுவது தொடர்பான விஷயங்களை மூத்த குருசாமிகளிடம் கற்றும் வருகிறார்கள். 

பக்தர்கள்

சபரிமலைக்குச் செல்லும் வழியில் மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால், மிருகங்களால் ஆபத்து நேரிடும் என்று சொல்பவர்களுக்கான பதிலாக செல்வி, "இந்த வார்த்தையில் இருக்கிற அக்கறை புரிகிறது. ஆனால், அன்றைக்கு மாதிரி இன்று சபரிமலை காடாக இல்லை. பக்தர்கள் தொடர்ந்து சென்று வருவதால், கொடிய மிருகங்கள் எல்லாம் எங்கே சென்றது என்றே தெரியவில்லை. அடுத்தது, அந்த மலையிலும் பழங்குடிப் பெண்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் மாதவிடாய் வரத்தான் செய்கிறது. அவர்களை எந்த மிருகமும் தூக்கிச் செல்லவில்லையே'' என்றார். .


டிரெண்டிங் @ விகடன்