ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 14

- ஆண்டனி ராஜ்

படங்கள்:
ஏ.சிதம்பரம்

 
தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் இறுதி தீர்ப்பை எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்தார்கள். தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட நிபுணர்குழு ஆலைக்குள் ஆய்வுகளை நடத்தி அதன் அறிக்கையை தீர்ப்பாயத்தில் ஒப்படைத்து விட்டிருந்தது. தீர்ப்பு அறிவிக்கப்படுவதை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டது, தீர்ப்பாயம். அதாவது இந்த வழக்கை டெல்லியில் இருக்கும் மத்திய தீர்ப்பாயத்துக்கு மாற்றுவதாக அறிவித்தது.

நெருக்கடிகள் அதிகம்

பசுமை தீர்ப்பாய நீதிபதிகளான சொக்கலிங்கம், நாகேந்திரன் ஆகியோர் இந்த வழக்கை டெல்லியிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை பெஞ்சுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர். அந்த உத்தரவில், "இந்த தீர்ப்பாயம் நியமித்த நிபுணர்கள் தங்களுடைய அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். அதனை தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. எங்களுடைய சூழ்நிலை கருதி இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க விரும்பவில்லை என்று டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாய தலைவருக்கு தெரியப்படுத்தினோம். அவரது உத்தரவுப்படி, இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை பெஞ்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு விசாரணைக்காக இந்த வழக்கு பட்டியல் இடப்பட்டு இருக்கிறது.

ஆகவே, இந்த வழக்கின் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்கள் டெல்லியிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்த வழக்கின் ஆவணங்கள், நிபுணர்கள் குழு அறிக்கை ஆகியவற்றை தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பி வைக்கும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம்" என அந்த உத்தரவில் தெரிவித்து இருந்தனர்.

தடுக்கப்பட்ட வாய்ப்பு

ஆலை தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தவர்கள், தீர்ப்பாய நீதிபதிகளின் முடிவை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதிகளான சொக்கலிங்கம், நாகேந்திரன் ஆகியோர் பேசுகையில், "இந்த வழக்கை நாங்கள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தோம். ஆனால், சூழ்நிலை காரணமாக இந்த வழக்கை விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கான காரணங்களை வெளிப்படையாக தெரிவிக்க இயலாது. ஆனாலும், எங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு, தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது' என்றார்கள்.

அப்போது குறுக்கிட்ட ஸ்டெர்லைட் ஆலையின் வழக்கறிஞரான ராஜகோபால், 'நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள்' என்றார். அதற்கு நீதிபதிகள், 'நான் உங்களை பற்றி எதுவும் சொல்லவில்லை. இந்த வழக்கை இந்த தீர்ப்பாயம், தமிழ்நாட்டில் வைத்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை  ஆனால், சிலரது நடவடிக்கைகள் காரணமாக அது முடியாமல் போய்விட்டது. இந்த சமுதாயத்தில் இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்று மட்டுமே எங்களால் சொல்ல முடியும்.

ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதிபதியின் மனது சுத்தமாக இருக்க வேண்டும். மனதை கெடுக்கும் சம்பவம் நடந்தால், அதன் பின்னர் தீர்ப்பை பிறப்பிக்க முடியாது. எங்களை பொறுத்த வரையிலும், எங்களது கரங்களும், மூளையும் சுத்தமாக இருக்கின்றன. ஆனாலும் சிலர் எங்களது கவனத்தை சிதைத்து விட்டார்கள்" என ஆதங்கப்பட்டார்கள்.

ஏமாற்றத்தில் முடிந்த முடிவு

அதனை தொடர்ந்து வழக்கறிஞர் ஒருவர் எழுந்து, 'என்ன தான் நடந்தது? அவசரமாக இந்த வழக்கை டெல்லி தீர்ப்பாயத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன?' என்றதற்கு, 'நீங்கள் அதைப் பற்றி கேடக வேண்டிய அவசியம் கிடையாது. நாங்களும் அந்த காரணத்தை உங்களிடம் சொல்லப் போவதும் இல்லை. ஆனால் மனதை வருத்தும் சம்பவங்கள் நடந்து விட்டது' என்று மட்டும் குறிப்பிட்டனர். அப்போது எழுந்த வைகோ, 'இந்த தீர்ப்பாயம் இப்படி ஒரு முடிவை எடுக்கும் என நாங்கள் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்' என தெரிவித்தார்.

முடிவாக பேசிய தீர்ப்பாயத்தின் நீதிபதி சொக்கலிங்கம், 'நிபுணர் குழு எங்களிடம் அளித்த அறிக்கையை கூட நாங்கள் படிக்கவில்லை. அதனை அப்படியே டெல்லி தீர்ப்பாயத்துக்கு அனுப்பி வைத்து விட்டோம். அதனால் இருதரப்பினரும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு சென்று உங்கள் தரப்பு நியாயங்களை தெரிவியுங்கள்' என்று முடித்தார்.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், ஆலைக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி கலெக்டர், ம.தி.மு.க பொதுச்செய்லாளர் வைகோ, தேசிய தூய சுற்றுச்சூழல் அறக்கட்டளையை சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ், உள்ளூரை சேர்ந்த சமூக ஆர்வலரான பாத்திமா ஆகியோரும் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீப்பாயத்தின் முதன்மை பெஞ்ச் நீதிமன்றத்தை அணுகி தங்களது வாதத்தை மீண்டும் எடுத்து வைக்க இருக்கிறார்கள்.

பசுமை தீர்ப்பாயத்தின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த வைகோ, 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்திய மக்கள் இந்த தீர்ப்பாயத்தின் மூலமாக நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ஆனால் வழக்கு விசாரணை டெல்லிக்கு மாற்றப்பட்டு இருப்பது போராடிய மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. எங்களுக்கு இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தரக்கூடியதாக அமைந்து விட்டது' என்று படபடத்தார்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகள் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டு இருந்த வேளையில், ஸ்டெர்லைட் ஆலையை இயங்க அனுமதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக சட்ட போராட்டம் நடத்த வைகோ முடிவு செய்தார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி வைகோ சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், 2013 ஏப்ரல் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சீராய்வு செய்து திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். 2012 செப்டம்பர் 28-ல் ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

அந்த மனுவில் உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட ரீதியாக வைகோ எழுப்பி இருக்கும் கேள்விகள்...? நாளை பார்க்கலாம்...

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 13 ஐ படிக்க இங்கே க்ளிக் செய்க
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!