சிறையில் மோசமடைந்த `மாவோயிஸ்ட்' பத்மாவின் உடல்நிலை! நடவடிக்கையைத் தூண்டிய விகடன் | Vikatan action to save maoist comrade padma's health condition who is jailed in puzhal

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (21/12/2018)

கடைசி தொடர்பு:17:06 (21/12/2018)

சிறையில் மோசமடைந்த `மாவோயிஸ்ட்' பத்மாவின் உடல்நிலை! நடவடிக்கையைத் தூண்டிய விகடன்

இப்படியான நோயாளிகளுக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். இது எதுவும் சிறையில் இருக்க வாய்ப்பில்லை. மருத்துவர்களும் எல்லா நேரங்களிலும் அங்கே இருப்பதில்லை. இப்படியான ஆரோக்கியமற்ற சூழலில் நோயாளியைச் சிறையில் வைத்திருப்பது நிச்சயம் மனித உரிமை மீறல்தான்.

சிறையில் மோசமடைந்த `மாவோயிஸ்ட்' பத்மாவின் உடல்நிலை! நடவடிக்கையைத் தூண்டிய விகடன்

டிசம்பர் 20... விகடன் அலுவலகத்துக்கு ஒரு பதற்றமான தகவல் வந்தது... தமிழகத்தைச் சேர்ந்த அமைப்பான பெண்ணுரிமைக் கழகத்தின் தலைவர் பத்மா.. புழல் சிறையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அதீத இருதயத்துடிப்பு நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். பலநாள்களாகத் தகுந்த சிகிச்சை கிடைக்காமல் துடித்துக்கொண்டிருக்கிறார். அவரது விரல்களில் ஏற்கெனவே நீலம் பாய ஆரம்பித்துவிட்டது. சிறைக்கு வெளியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்படி வாதாடிப் பார்த்தோம். தற்போது மேலும் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகச் சிறைத்தரப்பிலிருந்தே சொல்கிறார்கள். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எஸ்கார்ட் போலீஸ் இல்லை என்று சொல்கிறார்கள். தற்போது அவரது உயிரை எப்படியாவது காப்பற்ற வேண்டும்” என்றார்கள்.

அதையடுத்து, நாம் களமிறங்கினோம்! 

பத்மாவுக்கு SVT(Supraventricular tachycardia) எனப்படும் அதீத இருதயத் துடிப்பு நோய் இருக்கிறது. அதற்கு அவருக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதால்தான் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக அவரின் கணவர் விவேக் கூறினார். சரணடைந்த அவர், பிணை மறுக்கப்பட்டு புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சிறையில் அவர் உடல்நிலை மோசமானதை அடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஒருநாள் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டு திருப்பி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  இதுபோன்ற அதீத இருதயத் துடிப்பு இருக்கும் நோயாளிகள் மருத்துவர் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்கிற சூழலில், அவரைச் சிறையிலேயே அடைத்துவைத்திருப்பதற்கு எதிராகப் பல்வேறு மனிதநேயச் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தனர். நோயின் தீவிர அறிகுறிகளில் ஒன்றாக பத்மாவின் விரல்கள் நீலமாகத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது. இருந்தும் அவர் சிறையிலேயே தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார். 

விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் உயிர்நேயம் என்பது முக்கியம் இல்லையா? எஸ்கார்ட் காவல் இல்லை என்பதைக் காரணம் காட்டி உயிர் நேயத்தை அப்படியே விட்டுவிடுவார்களா என்று தார்மிக மனித உரிமை அடிப்படையில் புழல் பெண்கள் சிறைச்சாலை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நடந்ததை அறிய முற்பட்டோம். ஆனால், அங்கிருப்பவர்களை நம்மால் தொடர்புகொள்ளவே முடியவில்லை. அடுத்து, சிறைத்துறை டி.ஐ.ஜி-க்குத் தொடர்புகொண்டோம். அவர் போனை எடுக்கவேயில்லை. கடைசியாக, சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறைத் தலைவர் அசுதோஷ் சுக்லாவை தொடர்புகொண்டோம். ``பத்மாவின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றும் எஸ்கார்ட் போலீஸ் இல்லாததால் பத்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார்களே” என்று கேட்டதற்கு `உங்களுக்கு வந்தது தவறான செய்தியாக இருக்கும். எஸ்கார்ட் போலீஸ் இருக்கிறார்கள்.” என்றார். 

அப்படியென்றால், ``உடல்நிலை மோசமாகியிருக்கும் மாவோயிஸ்ட் பத்மாவைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா” என்று கேட்டோம். 

பத்மா

``தேவைப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதில் மட்டும் வந்தது. ஆனால், பத்மாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகச் சிறையிலிருந்தே அழைப்பு வந்ததை பத்மா தரப்பு ஆதாரத்துடன் கூறியநிலையில், சிறைத்துறைத் தலைவரின் தகவல் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது.  

சிறைத்துறைத் தலைவரின் இந்தப் பதிலை அறிந்த  பத்மாவின் வழக்கறிஞர் நேரடியாக அவருக்குத் தொடர்புகொண்டு கேள்விகளை எழுப்பினார். உடல்நிலை சரியில்லாமல் போன மூன்று மணிநேரத்துக்குப் பிறகு  பலமுனைகளில் இருந்துவந்த கேள்விகளை அடுத்து, பத்மா அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மீண்டும் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். தற்போதுவரை அவர், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். `இன்னும் அவர் உடல்நிலை பலவீனமாகவே இருப்பதாகவும் ஒருவார்த்தைகூட வாய்திறந்து பேசமுடியாத சூழலிலும் இருப்பதாகவே’ பத்மாவின் நிலைபற்றி தற்போது அவரது சகதோழர்கள் தெரிவிக்கின்றனர்.

யார் இந்தத் தோழர் பத்மா? 

ரவீந்திர்நாத்

மதுரையில் ஒட்டப்பட்டிருந்த ஆபாச போஸ்டர்களுக்கு எதிராகவும் பெண்கள் மீதான பாலியல் வழக்கில் கைதான பிரேமானந்தா சாமியாருக்கு எதிராக முட்டை வீசியும் பெண்கள் உரிமைகளுக்காகக் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருப்பவர். இவர்மீது தமிழக போலீஸாரும் ஆந்திர போலீஸாரும் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர். தமிழக போலீஸ் இவர்மீது கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கி பொடா சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களைத் தொடர்ந்து ஏவி சிறையில் அடைத்தது. பின்னர் பத்மா பிணையில் வெளிவந்தார்.  

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஈரோடு அருகே உள்ள ரயில் நிலையத்தில் ஆந்திர போலீஸார் இவரை தேடப்படும் தீவிரவாதி என்று காரணம்காட்டி, கைதுசெய்து அழைத்துச் சென்றனர். அது தமிழகக் காவல் துறைக்குத் தெரிவிக்கப்படாமல் மேற்கொண்ட நடவடிக்கை என்பதால், ஆந்திர போலீஸாரின் கடத்தல் செயலாகவே பார்க்கப்பட்டது. மேலும், பத்மாவுக்கு மிக  நீண்டகாலமாக இருதய நோய்ப் பிரச்னை இருந்துவந்த சூழலில், ஆந்திர போலீஸாரின் அந்த நடவடிக்கையைப் பலரும் கண்டித்தனர். பின்னர், ஆந்திர போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று குரல்வலுத்த சூழலில், சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தார். 

இதற்கிடையே கிருஷ்ணகிரி மலைக்காட்டிலும் ஊத்தங்கரைக் காடுகளிலும் ஆயுதப் பயிற்சி கொடுத்ததாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் ஊத்தங்கரைக் காடுகளில் பயிற்சிகொடுத்த வழக்கில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று சொல்லப்பட்டு காவல் துறை அவரைத் தேடுவதாக அறிவித்தது. இந்த நிலையில்தான் கடந்த 7 டிசம்பர் 2018 அன்று பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் பத்மா சரணடைந்தார். சரணடைந்த அவர், புழல் பெண்கள் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார். 

``நிச்சயம் மனித உரிமை மீறல்தான்!”

விசாரணைக் கைதியாக இருந்தாலும் அவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் சூழலில், நோயாளிகளுக்கான சூழல் சுதந்திரம் என்பது முக்கியமாகும். இதுகுறித்துப் பேசிய மருத்துவர் ரவீந்திரநாத், ``பத்மா போன்ற இருதய நோயாளிகள் தகுந்த இருதயநோய் நிபுணர்கள் கண்காணிப்பிலேயே இருக்கவேண்டும். அவரது இருதயத் துடிப்பை பரிசோதனை செய்யும் கருவி அவர் இருக்கும் இடத்தில் இருக்கவேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவு வசதிகள் செய்து தரப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், இப்படியான நோயாளிகளுக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். இது எதுவும் சிறையில் இருக்க வாய்ப்பில்லை. மருத்துவர்களும் எல்லா நேரங்களிலும் அங்கே இருப்பதில்லை. இப்படியான ஆரோக்கியமற்ற சூழலில் நோயாளியைச் சிறையில் வைத்திருப்பது நிச்சயம் மனித உரிமை மீறல்தான்” என்றார்.   

சிறைத்துறை செவிமடுக்குமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்