ஃப்ளிப்கார்ட், அமேசானுக்கு `கிடுக்கிப்பிடி'... ஆன்லைன் தள்ளுபடிகளுக்கு தடா?! | How the Govt's New FDI policy affect Flipkart and Amazon?

வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (29/12/2018)

கடைசி தொடர்பு:11:34 (29/12/2018)

ஃப்ளிப்கார்ட், அமேசானுக்கு `கிடுக்கிப்பிடி'... ஆன்லைன் தள்ளுபடிகளுக்கு தடா?!

இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களை மட்டுமின்றி, வாடிக்கையாளர்களையும் பாதிக்கவிருக்கிறது.

ஃப்ளிப்கார்ட், அமேசானுக்கு `கிடுக்கிப்பிடி'... ஆன்லைன் தள்ளுபடிகளுக்கு தடா?!

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே, அமேசான் கிரேட் இந்தியன் சேல்... இந்த இரண்டும்தான் இந்தியாவின் பண்டிகைக்கால ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாக்களில் மிகப்பெரியவை. எப்போதும் இல்லாத அளவு விலை குறைப்பு, மொபைல்களின் எக்ஸ்க்ளூசிவ் விற்பனை, புதிய மொபைல்களின் வரவு, ஃபிளாஷ் சேல்கள், அதிரடி தள்ளுபடிகள், அசத்தல் கேஷ்பேக்குகள் என இந்த இணைய ஷாப்பிங் திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் களைகட்டும். இந்த ஆண்டும்கூட இப்படித்தான். ஆனால், அடுத்த ஆண்டு முதல் அப்படி நடப்பது மிகக்கடினம். காரணம், அரசின் புதிய விதிமுறைகள். இதனால் இந்திய இ-காமர்ஸ் துறையின் சூப்பர்ஸ்டார்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய இரண்டுமே, கலக்கத்தில் இருக்கின்றன. அதிரடி தள்ளுபடிகள், எக்ஸ்க்ளூசிவ் மொபைல் சேல்கள் என எதையெல்லாம் வைத்து இந்நிறுவனங்கள் இதுவரை வாடிக்கையாளர்களை ஈர்த்ததோ, அதையெல்லாம் மொத்தமாக கைவிடச்சொல்லியிருக்கிறது அரசு.

என்ன நடந்தது?

இ-காமர்ஸ் துறையில்  நடந்திருக்கும் இந்த சலசலப்புகளுக்கெல்லாம் காரணம், கடந்த 26-ம் தேதி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இ-காமர்ஸ் துறைக்கான FDI கொள்கையில் செய்திருக்கும் மாற்றங்கள்தான். இதில் இ-காமர்ஸ் நிறுவனங்களை சிக்கலுக்குள்ளாக்கியிருப்பவை நான்கு மாற்றங்கள். அவை, 

1. (ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற) இ-காமர்ஸ் நிறுவனங்களோ அல்லது அதன் துணை நிறுவனங்களோ, ஏதேனும் நிறுவனங்கள் அல்லது விற்பனையாளர்களின் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருந்தால், அந்நிறுவனங்களின் பொருள்களை தங்கள் தளங்களில் விற்பனை செய்யக்கூடாது.

2. இ-காமர்ஸ் நிறுவனங்கள் எந்தவொரு நிறுவனத்தையும், தங்கள் தளத்தில் மட்டும்தான் பொருள்களை விற்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்த கூடாது.

ஃப்ளிப்கார்ட்

3. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் கேஷ்பேக் ஆபர்களை அளிப்பதும், பிற நிறுவனங்களுக்கு அவற்றைத் தராமல் இருப்பதும் இனி கூடாது. 

4. இ-காமர்ஸ் நிறுவனங்களின் வேலையானது, பொருள்களை வாங்குபவர் மற்றும் விற்பவருக்கு இடையேயான ஒரு சந்தையாக (Online Marketplace) இருப்பது மட்டுமே. எனவே, பொருள்களின் விலையில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது முறைமுகமாவோ  தலையிடக்கூடாது. 100 சதவிகிதம் அந்நிய முதலீட்டில் இயங்கும் நிறுவனங்கள், சொந்தமாக சேமிப்புக்கிடங்குகளை வைத்திருப்பது கூடாது. அப்படி வைத்திருந்தால் அவை ஆன்லைன் மார்க்கெட் பிளேஸ் என்பதிலிருந்து, இன்வென்ட்டரி (Inventory based model) அடிப்படையிலான சேவையாக மாறிவிடும். அந்த சேவைக்கு FDI அனுமதி இல்லை. வெறும் மார்க்கெட்பிளேஸ் அடிப்படையிலான இ-காமர்ஸுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மேலும், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது அதன் துணை நிறுவனம், தன்னுடைய பொருள்களை 25 சதவிகிதத்துக்கும் மேலாக ஒரே இ-காமர்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்தால், அந்த நிறுவனம் மற்றும் அதன் சேமிப்புக்கிடங்கு ஆகிய இரண்டும் அந்தக் குறிப்பிட்ட இ-காமர்ஸ் இணையதளத்தால் கட்டுப்படுத்தப்படுவதாகக் கருதப்படும். அதாவது, அந்த இ-காமர்ஸ் நிறுவனம் சொந்தமாக இன்வென்ட்டரி வைத்து விற்பனை செய்வதாகக் கருதப்படும். எனவே, 25 சதவிகிதத்துக்கு மேல், எந்தவொரு இ-காமர்ஸ் நிறுவனமும் ஒரே நிறுவனத்திடமிருந்து பொருள்களை விற்பனை செய்யமுடியாது.

இந்த விதிமுறைகளுக்கேற்பத்தான் வர்த்தகம் நடைபெறுகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தணிக்கை அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறைகள் அனைத்தும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

கடை

இவற்றால் யாருக்கு நஷ்டம்?

மேற்கண்ட விதிமுறைகளைப் படிக்கும்போதே அவை நிறுவனங்களின் வர்த்தகத்தில் எதுமாதிரியான தாக்கங்களை உண்டாக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டால் பெரியளவில் அடி வாங்கவிருப்பது அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய இரு நிறுவனங்கள்தான். இந்த இரண்டு நிறுவனங்களைத் தவிர பிற இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்த மாற்றங்களை வரவேற்றுள்ளதிலிருந்தே அதைப் புரிந்துகொள்ளலாம். மேலும், இந்த நான்கு மாற்றங்களுமே இந்த இரண்டு நிறுவனங்களின் பிசினஸ் மாடலை மொத்தமாகப் பாதிக்கிறது. உதாரணமாக ஷியோமி மொபைல்களின் ஃபிளாஷ் சேல்களைச் சொல்லலாம். ஒவ்வொருமுறை புதிய மொபைல்களை ஷியோமி வெளியிடும்போதும், இந்த இரண்டு நிறுவனங்களில் ஏதோ ஒன்றில்தான் மொபைலை வெளியிடும். இந்நிறுவனங்களும் அமேசான் எக்ஸ்க்ளூசிவ், ஃப்ளிப்கார்ட் எக்ஸ்க்ளூசிவ் என அவற்றை விற்கும். ரியல்மீ, ஒப்போ, ஒன்ப்ளஸ் என எல்லா மொபைல் விற்பனையும் இப்படித்தான். ஆனால், இந்த விதிமுறையின்படி இனி இப்படி விற்கக்கூடாது. ஒன்ப்ளஸ் 6 அமேசானில் விற்றால், அதை அந்நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டிலும் விற்கலாம். அதற்கு அமேசான் எந்தத் தடையும் விதிக்கமுடியாது. இப்படி இ-காமர்ஸ் நிறுவனங்களின் முக்கிய வர்த்தகமான மொபைல் விற்பனையில் கைவைத்திருக்கிறது இந்தப் புதிய மாற்றம். 

அடுத்தது 25 சதவிகித கொள்முதல் கட்டுப்பாடு. இதற்கு உதாரணமாக அமேசானின் Cloudtail India நிறுவனத்தைக் குறிப்பிடலாம். அமேசான் நிறுவனம் பிறநிறுவனங்களிடமிருந்து பொருளை நேரடியாக வாங்கி விற்பதில்லை. மாறாக, பொருள்களை அமேசான் தளத்தில் விற்க மட்டுமே உதவுகிறது. அப்படியெனில், பொருள்களை உற்பத்தி செய்பவர்களிடமிருந்து அமேசானுக்குப் பொருள்களை அனுப்பிவைப்பது யார்? அதற்காக இருப்பவைதான் ஜாயின்ட் வென்ச்சர் நிறுவனங்கள். இவற்றின் பணி, பொருள்களை உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து, அதை அமேசான் ஆர்டர் கொடுக்கும்போது டெலிவரி செய்வது. அப்படி இயங்குவதுதான் Cloudtail India. இந்நிறுவனம் அமேசான் மற்றும் கட்டமரான் வென்ச்சர் நிறுவனத்தின் ஜாயின்ட் வென்ச்சர். இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் நிறுவனம்தான் இந்த கட்டமரான் வென்ச்சர்ஸ். இதேபோல அப்பாரியோ ரீட்டெயில் என்னும் நிறுவனமும் அமேசானுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த இரண்டு நிறுவனங்கள்தான் அமேசான் இந்தியாவின் பெரும்பாலான பொருள்களை விற்பனை செய்கின்றன. ஆனால், இனி இவற்றிடமிருந்து 25 சதவிகிதத்துக்கும் அதிகமாக அமேசானால் கொள்முதல் செய்யமுடியாது. (இதேபோல ஃப்ளிப்கார்ட்டும் WS ரீட்டெயில் நிறுவனத்துடன் இணைந்திருந்தது. ஆனால், சமீபத்தில் அந்நிறுவனம் அங்கிருந்து விலகிவிட்டது.)

ஷாப்பிங்

இதேபோல பங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்களின் பொருள்களையும் இந்நிறுவனங்கள் இனி விற்கமுடியாது. இதுவும் இந்நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சிக்கல்தான். உதாரணமாக, அமேசானின் சொந்த பிராண்ட் அமேசான் பேசிக்ஸ். ஃப்ளிப்கார்ட்டின் சொந்த பிராண்ட் ஸ்மார்ட்பை. மிந்த்ரா நிறுவனத்தின் சொந்த நிறுவனம் மிந்த்ரா ஃபேஷன் பிராண்ட். சொந்தமாகப் பொருள்களை வைத்து விற்கமுடியாத காரணத்தால், இப்படி துணைநிறுவனங்கள் மூலம் சொந்தப் பொருள்களை விற்பனை செய்கின்றன இந்நிறுவனங்கள். ஆனால், தற்போது இவற்றிற்கும் தடை விழுந்திருக்கிறது. இவை அனைத்துமே அந்தந்த தாய் நிறுவனங்களின் பங்குகளைக் கொண்டவை. இவற்றை விதிமுறைப்படி சம்பந்தப்பட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களின் தளத்தில் விற்கமுடியாது. இதுவும் இவர்களுக்குச் சிக்கலே.

அடுத்தது, கேஷ்பேக் ஆஃபர்கள். புதிய விதிமுறையால் ஒரு குறிப்பிட்ட மொபைல் மாடலுக்கு அல்லது குறிப்பிட்ட தளத்துக்கு இவ்வளவு கேஷ்பேக் என இனி அறிவிக்கமுடியாமல் போகலாம். இது வங்கிகள், பேமன்ட் நிறுவனங்கள் அனைத்துக்குமே சிக்கல்தான்.

சரி... இதெல்லாம் யாருக்காக?

சிறு, குறு நிறுவனங்களுக்காகவும், ஆன்லைனில் அல்லாத பிற வணிகர்களுக்காகவும்தான் என்கிறது அரசு. அது உண்மையும்கூட. ``இந்த இ-காமர்ஸ் நிறுவனங்களால் அதிகளவில் பாதிக்கப்படுவது நாங்கள்தான்" எனப் பலமுறை அரசிடம் இவர்கள் முறையிட்டிருக்கிறார்கள். தற்போதுதான் அதற்கு செவிமடுத்திருக்கிறது அரசு. விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலும் அதற்கு முக்கிய காரணம். சரி, இந்த விதிமுறைகள் எப்படி சரியாகும் என உங்களுக்குத் தோன்றலாம். ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். 

Snapdeal CEO

ஒரு நகரத்தில் கடை வைத்திருக்கும் ஒருவர், ஒரு மொபைல் நிறுவனத்திடமிருந்து மாதம் 100 மொபைல்கள் கொள்முதல் செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்த 100 மொபைல்களுக்கும் அந்த மொபைல் உற்பத்தி நிறுவனம் சலுகை விலை அளிக்கும். இதேபோல ஒரு இ-காமர்ஸ் நிறுவனம், அதிக ஆர்டர் வரும் என்பதால் அந்த மொபைல் நிறுவனத்திடமிருந்து மாதம் 1,00,000 லட்சம் மொபைல்கள் வாங்கும். எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால், அந்த நிறுவனம் நிச்சயம் அந்தக் கடைக்காரரை விடவும், இந்த இ-காமர்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனத்துக்கே அதிக சலுகைவிலை அளிக்கும். எனவே அவர்களால் அதிகம் லாபம் பார்க்க முடியும். இதுமட்டுமின்றி, ஒருவர் நேரடியாக கடைக்குச் சென்று மொபைல் வாங்கும்போது அதன் விலை 10,000 ரூபாயாக இருக்கும். அதுவே ஆன்லைனில் 9,500 ஆக இருக்கும். இப்போது மொபைல் வாங்கும் ஒருவர் இருவரில் யாரைத் தேர்வு செய்வார்? ஆன்லைனைத்தானே? அப்படியெனில் அதே பொருளை வாங்கிவிற்கும் அந்தக் கடைக்காரரின் நிலை? அதுவும் நேரடி ஹோல்சேல் கடைகள் என்றாலாவது தூரம், நேரம் இதெல்லாம் பிரச்னை. ஆனால், இ-காமர்ஸ் சேவை எல்லா இடத்திலும் இருப்பதால் நேரடியாக அனைத்து வணிகர்களையும் பாதிக்கிறது என்கின்றனர். இந்த உதாரணத்தை உடைகள், எலெக்ட்ரானிக் பொருள்கள், புத்தகங்கள் என எதற்கு வேண்டுமானாலும் பொருத்திப்பார்க்கலாம். இப்படி ஒரே பொருளில், ஒரே வணிகத்தில் இந்நிறுவனங்கள் சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன என்பதுதான் அவர்களின் வாதம். 

தற்போது அரசு, இ-காமர்ஸ் நிறுவனங்களிடம் இந்த மாற்றங்கள் மூலம் சொல்லியிருப்பதும் வர்த்தகத்தின் சமச்சீர் தன்மை குலையாமல் இருக்க வேண்டும் என்பதைத்தான். இதுமட்டுமின்றி வியாபாரிகள் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு, அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை மீறி தந்திரமாக விற்பனைகளை மேற்கொள்கின்றன என்பது. அதாவது, விதிமுறைகளின்படி இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருள்களின் மீது எவ்வித உரிமையும் இல்லை. மேலும், அவற்றின் விலையையும் இவர்கள் கட்டுப்படுத்தக்கூடாது. ஆனால், இந்நிறுவனங்கள் ஜாயின்ட் வென்ச்சர் நிறுவனங்கள் மூலம் இதைச் சாதிக்கின்றன. உதாரணமாக உற்பத்தியாளர்களிடமிருந்து பொருள்களை கொள்முதல் செய்யும் ஜாயின்ட் வென்ச்சர் நிறுவனங்கள் அவற்றின் விலைமீது தாக்கம் செலுத்துகின்றன. இதுவும் FDI விதிமுறைகள்படி தவறே.

Discounts

தற்போது இந்தப் புதிய மாற்றங்கள் பயனடையப்போவது ஸ்னாப்டீல், ஷாப்க்ளூஸ் போன்ற பிற சிறிய இ-காமர்ஸ் நிறுவனங்களும், சில்லறை வணிகர்களும்தான். அதுவும் எந்தளவுக்கு என்பது போக போகத்தான் தெரியும். இவர்களின்றி நேரடியாகப் பயனடையப் போகும் இன்னொரு சாரர் பிக் பஜார், மெகாமார்ட் போன்ற மொத்த ஹோல்சேல் வணிகர்கள். இ-காமர்ஸ் நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடிகளால் சிறு வியாபாரிகள் மட்டுமின்றி, இவர்களுமே பாதிப்படைந்தனர். தற்போது இந்த மாற்றங்கள் இவர்களுக்கு சிறிய அளவில் ஆசுவாசம் அளிக்கலாம். சரி, ஃப்ளிப்கார்ட், அமேசான் இரண்டும் என்ன சொல்கின்றன?

இ-காமர்ஸ் தொடர்பான இவ்வளவு பெரிய கொள்கைமுடிவு எடுக்கப்போகும் அரசு இதுகுறித்து எங்களிடம் கலந்தாலோசிக்கவே இல்லை என்கின்றனர் இவர்கள். விரைவில், அரசிடம் இதுகுறித்து முறையிடுவார்கள். அதன்பின்பு அரசு ஏதேனும் மாற்றங்கள் செய்யுமா, அல்லது இந்த விதிமுறைகளுக்கேற்ப இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் பிசினஸ் மாடலை மாற்றியமைக்குமா என்பதெல்லாம் அதன் பின்னரே தெரியும். வாடிக்கையாளர்கள் முதல் வணிகர்கள் வரை இந்த மாற்றங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு அடுத்த சில மாதங்களில் காலம் விடைசொல்லிவிடும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்