"15-ம் தேதிக்குள் கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்'' - நளினி நம்பிக்கை | I believe the governor will take a good decision by coming 15th - Nalini

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (03/01/2019)

கடைசி தொடர்பு:19:30 (03/01/2019)

"15-ம் தேதிக்குள் கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்'' - நளினி நம்பிக்கை

நளினி

ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை மாநில அரசே முடிவுசெய்துகொள்ளலாம்" என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.அதையடுத்து, கடந்த செப்டம்பர்  9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில்,பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டு நான்கு மாதங்கள் ஆன நிலையில், அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதிகாத்துவருகிறார், தமிழக ஆளுநர்.

இந்த நிலையில், சிறையில் உள்ள பேரறிவாளன், "தமிழக அரசு தீர்மானம் இயற்றியிருக்கும் நிலையில், தம்மை விடுவிப்பதில் தாமதம் ஏன்? அதற்கான காரணம் என்ன" என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஆளுநர் மாளிகைக்குக் கடிதம் அனுப்பிய நிலையில், அதற்கு இதுவரை எந்தப்  பதிலும் இல்லை. இதனால், பேரறிவாளனின் தாயார் நாளுக்கு நாள் நம்பிக்கை தளர்ந்துவருவதாக வேதனை கூறியிருந்தார்.

இந்த நிலையில், அதே வழக்கில் தண்டனை பெற்றுவரும் நளினியோ, வரும் 15-ம் தேதிக்குள் கவர்னர் நல்ல முடிவு எடுத்துவிடுவார் என்று நம்பிக்கை தெரிவித்தாக அவருடைய வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசியபோது, ஏழு பேர்விடுதலை தொடர்பான விவகாரத்தில் கவர்னர் அமைதிகாத்து வருவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக  சட்ட ஆலோசகர்களுடன் கலந்து பேசிவருகிறேன். குறிப்பாக, நீண்ட நாள் நிரந்தர பாரோலுக்கு விண்ணபிக்கலாமா? அல்லது கவர்னர் முடிவு எடுப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த என்ன செய்யலாம் என்றும் இந்த ஆலோசனை இருந்தது. இது தொடர்பாக நளினியிடம் பேசியபோது, வரும்15-ம் தேதிக்குள் கவர்னர் நல்லமுடிவு எடுத்துவிடுவார் என்று நம்புகிறேன். அதனால், நமது செயல்பாடுகளைத் தள்ளிவைப்போம் என்று கூறினார். அதனால் இந்த விவகாரத்தில் அமைதிகாத்துவருகிறோம். வரும் 15-தேதிக்கு மேல் கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றால், மீண்டும் சட்ட ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்" என்றார் புகழேந்தி!