ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2018 | Ananda vikatan nambikkai Awards

வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (08/01/2019)

கடைசி தொடர்பு:14:59 (08/01/2019)

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2018

விதைக்கப்பட்டவர்கள்  - தூத்துக்குடி போராளிகள்

ப்புக்காற்று வீசும் பூமியில் உதிரம் சிந்தப்பட்டது, இந்த ஆண்டின் துயரம் மட்டுமல்ல, இனிக் காலத்தால் அழிக்க முடியாத களங்கம்; 2018, மே 22 - இந்த நாள், தமிழ் வரலாற்றில் ரத்தத்தால் சிவந்த கறுப்பு நாள். இத்தனைக்கும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களும் சரி, தூத்துக்குடியில் போராடியவர்களும் சரி, கேட்டதெல்லாம் என்ன? சுவாசிக்கச் சுத்தமான காற்று, உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம்... அவ்வளவுதான். 99 நாள்கள் வரை அமைதியாகத்தான் நடந்தது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம். நூறாவது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததைக் காரணம் காட்டி, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தங்கள் நிலத்தையும் கடலையும் காற்றையும் பாழ்படுத்தும் ஒரு நிறுவனத்தை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை, காவல்துறை 13 உயிர்களைக் குடித்து அடக்கியது. களத்தில் நின்றவர்கள், உத்வேகத்தில் போராடச் சென்றவர்கள், ஆர்வத்தில் உடன் சென்றவர்கள் என அடக்குமுறைக் குண்டுகளுக்கு இரையான 13 உயிர்களும் தூத்துக்குடியின் பிரச்னையை உலகப் பிரச்னையாகக் கொண்டு நிறுத்தினர். `தீவிரவாதிகள் பின்னால் இருந்து இயக்குகிறார்கள், சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள்’ என்று போலீஸும் அரசும் கூறியவை பொய்யில் நனைத்த வார்த்தைகள் என்பதற்கு உதாரணம், 17 வயது மாணவி ஸ்னோலின் மரணம். அவரோடு கார்த்திக், மணிராஜ், கந்தையா, தமிழரசன், ரஞ்சித்குமார், ஜெயராமன், செல்வ சேகர், காளியப்பன், சண்முகம், அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள். அரசு வன்முறை அம்பலப்படுவதற்குக் காரணமான, வீரஞ்செறிந்த மக்கள் போராட்டத்துக்கு விதையான இந்தத் தியாகிகள், தமிழகம் மறந்துவிடக்கூடாத வரலாற்று நாயகர்கள்.


உயிர்ப்புமிக்க அறிவுஜீவி - அ.மார்க்ஸ்

கா
ல் நூற்றாண்டாக மனித உரிமைகளுக்காகப் போராடும் களப்போராளி. ஆணவக்கொலைகள். சாதி மோதல்கள், துப்பாக்கிச்சூடு, மதக்கலவரங்கள், லாக்கப் மரணம், போலி என்கவுன்டர்கள், பொய் வழக்குக் கைதுகள் என அநீதிகள் எங்கு நடந்தாலும் அங்கெல்லாம் அ.மார்க்ஸின் உண்மையறியும் குழு சென்று மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும். தமிழகம் மட்டுமல்ல, காஷ்மீர், இலங்கை, அயோத்தி என வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணித்துப் பதிவுகள் செய்தவர். இவர், வெறும் செயற்பாட்டாளர் மட்டுமல்லர். தமிழின் முக்கியமான எழுத்தாளர், கோட்பாட்டாளர், இலக்கிய விமர்சகர்.

 மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கிய அந்தோணிசாமி என்கிற ராமதாஸ், அ.மார்க்ஸின் அப்பா. இயல்பிலேயே இடதுசாரி இயக்கப் பரிச்சயம் இருந்ததால் மார்க்சியம் சார்ந்தும் பல்வேறு சிந்தனைகள் சார்ந்தும் அ.மார்க்ஸ் எழுதிய நூல்கள் நூற்றைத் தாண்டும். தனக்கென்று   கருத்தியல் இருந்தாலும், தவறுகள் என்று தான் கருதுவதைச் சுட்டிக்காட்டத் தயங்காதவர். அதனால் இடதுசாரிகள், பெரியாரியர்கள், தமிழ்த்தேசியவாதிகள், தலித்தியவாதிகள், சிறுபான்மையினர் என நட்புச்சக்திகளால் விமர்சிக்கப்பட்டாலும் தான் நம்பும் கருத்தை உறுதியாய் வலியுறுத்துபவர். மார்க்சியம், மனித உரிமைகள், மதவாத எதிர்ப்பு, சிறுபான்மையினர் ஆதரவு, சாதி எதிர்ப்பு, பண்பாட்டு அடிப்படைவாத எதிர்ப்பு, பெண்ணியம், மாற்றுக்கல்வி, மாற்று மருத்துவம், கல்விப் பிரச்னைகள், உலகமயமாக்கல், காந்தியம் என்று அ.மார்க்ஸ் அறியாத களங்கள் குறைவு. தன் தோழர்களுடன் இணைந்து இவர் நடத்திய `நிறப்பிரிகை’ இதழ், தமிழ் அறிவுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம். குறையாத ஊக்கத்துடன் தொடர்ந்து போராடும் அ.மார்க்ஸ் தமிழ் வரலாற்றில் தவிர்க்க முடியாத சிந்தனையாளர்.


வரலாற்றின் தடயம் - அமர்நாத் ராமகிருஷ்ணன்

 சி
ந்துவெளிச் சமூகநாகரிகத்துக்கு இணையான நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதை அகழ்வாய்வுகள் மூலம் அழுத்தமாய் நிறுவியவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். சிவகங்கை மாவட்டம், வைகைக் கரைக் கிராமமான கீழடியில் அவர் நடத்திய அகழ்வாய்வு, இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதச்செய்யும் வலுமிக்க ஆதாரங்களை அள்ளித்தந்தது. தமிழ்ச் சமூகத்தின் பெருமிதத்துக்குச் சான்றாக,  பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பொருள்கள் அங்கு மீட்கப்பட்டன. அவையெல்லாம் கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதற்குப் பரிசாக மத்திய அரசு வழங்கியது, அசாமுக்குப் பணிமாறுதல். ஆனால் `அமர்நாத்தான் கீழடி அகழாய்வுப் பணிகளைத் தொடர வேண்டும்’ என்று பலரும் கோரிக்கையுடன் கோர்ட் வாசல் ஏறினார்கள். தமிழர் வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களைத் தொடர்ந்து வெளிக்கொணர உழைக்கும் அமர்நாத், தமிழருக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்!


கதாவிலாசன் - எஸ்.ராமகிருஷ்ணன்

வீனத் தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமை எஸ்.ராமகிருஷ்ணன். உலக இலக்கியங்களில் தீவிர வாசிப்பும் இலக்கற்ற பயணங்களுமாக இந்திய வரைபடத்தில் ரேகைகளாய் நெளிந்தோடும் அத்தனை பாதைகளையும் நடந்து அறிந்த தேசாந்திரி. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள், சிறார் நூல்கள், சினிமா கட்டுரைகள் என எழுத்தின் அத்தனை பரிமாணங்களையும் கையாள்பவர். ‘அட்சரம்’ எனும் இலக்கிய இதழை நடத்தியவர். தமிழ் தொடங்கி உலக இலக்கியம் வரை பல மணி நேரங்கள் இடைவிடாது உரையாற்றும் பேச்சாற்றல் கொண்டவர். `சஞ்சாரம்’ நாவலுக்காக இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன், தீராத இலக்கியத் தேடலின் அடையாளம்.


களம் நிற்கும் கலைஞன் - பிரகாஷ்ராஜ்

ன் அபார நடிப்பாற்றலால் எப்போதோ தமிழ்நாட்டின் செல்லமானவர். இன்று, கலையைத் தாண்டியும் கருத்துச் சுதந்திரம் காக்க களமிறங்கியிருக்கிறார். கௌரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு மதவாத பாசிசத்துக்கு எதிராகத் தொடர்ச்சியாகச் செயற்பட்டுவருகிறார் பிரகாஷ்ராஜ். கர்நாடகத்தில் இடதுசாரிகள், தலித் அரசியலாளர்கள், முற்போக்கு எண்ணம் கொண்ட கலைஞர்கள் ஆகியோருடன் இணைந்து மாற்று அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். இவருடைய செயற்பாடுகளால் இந்துத்துவ பயங்கரவாத இயக்கம் ஒன்றின் கொலைப்பட்டியலிலும் இருக்கிறார். பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாகச் சொல்லும் மீ டூ இயக்கத்தைத் திரையுலகில் பல நடிகர்கள் எதிர்த்தாலும் உறுதியாக அதை ஆதரித்தவர் பிரகாஷ்ராஜ். `கேள்வி கேளுங்கள்’ என்னும் இயக்கத்தைக் கர்நாடகத்தில் மக்கள் மத்தியில் கொண்டுசேர்த்ததில் பிரகாஷ்ராஜுக்குக் கணிசமான பங்குண்டு. கருத்துரிமைக்காகத் தொடர்ந்து ஒலிக்கும் பிரகாஷ்ராஜின் குரல், காலத்தின் குரல்!


ஜனநாயகன் - விஜய் சேதுபதி

மிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே நடிப்பின் பல பரிமாணங்களைக் காட்டிய கலைஞன். 2018 - நல்ல நாள் பார்த்துவைத்த நகைச்சுவைப் பொங்கல், `ஜுங்கா’ காமெடி மங்காத்தா, இழந்த காதலின் மென் நினைவுகளைக் கிளறிவிடும் `96’, கலைஞனின் அர்ப்பணிப்பு பகிர்ந்த `சீதக்காதி’ என்று விஜய்சேதுபதி விருந்து படைத்த ஆண்டு. திரைக்கு வெளியே சேதுபதிக்கு இன்னொரு முகமுண்டு. அது சமூக உணர்வுள்ள கலைஞன் என்ற அழகிய முகம். ஒப்பனைகளுக்கு அப்பால் அது உண்மை முகம். 7 தமிழர் விடுதலைக்காக எழுச்சிக்குரல் கொடுத்தது, அனிதாவின் தற்கொலைக்குக் கலங்கி, தமிழர்களின் கல்வி உரிமையை அழிக்கும் நீட்டுக்கு எதிராய்ப் போர்க்கொடி எழுப்பியது, பொறுக்க முடியாத விஷயமென்றால் அரசுக்கு எதிராகவும் போர்க்குரல் ஒலிப்பது, விளம்பர வருவாயை ஏழைக் குழந்தைகளின் கல்விப் பணிக்கு ஒதுக்கியது என எல்லாவற்றிலும் தன் சமூக அக்கறையை ஆழமாக விதைத்தவர் மக்களின் செல்வன். சாதிப்பிரிவினைகளுக்கு எதிராகவும் உரத்து ஒலிக்கும் குரல் விஜய் சேதுபதியுடையது. ஒரு நல்ல கலைஞனாய், சமூக உணர்வுள்ள மனிதனாய்த் தன்னை அடையாளப்படுத்தும் விஜய் சேதுபதி, தமிழ் இளைஞர்களுக்கான சிறந்த முன்னுதாரணம்.


மண் காக்கும் மனிதர் - ஈஞ்சம்பாக்கம் சேகர்

துப்புநிலங்கள் காக்க சமரசமின்றிப் போராடும் போராளி ஈஞ்சம்பாக்கம் சேகர். தமிழகம் முழுவதும் வறட்சியில் சிக்கினாலும் சதுப்பு நிலங்கள் சேகரித்து வைக்கும் நீரை வைத்து சென்னை பிழைத்துக்கொள்ளும். ஆனால், குப்பைகளைக் கொட்டவும், தீம் பார்க்குகள் கட்டவும் நாம் எடுத்துக்கொண்டவை சதுப்பு நிலங்கள்தாம். ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சேகர், சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை எதிர்த்துத்தான் பல ஆண்டுகளாகப் போராடிவருகிறார். பல தொழிலதிபர்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று, பல முக்கியமான தீர்ப்புகளை வாங்கியிருக்கிறார். வீட்டுக்குள் பாம்புகளை விடுவது, வாகனங்களை எரிப்பது எனத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்தாலும் பயப்படாமல் பணி தொடர்கிறார். இவரைப் போன்ற மனிதர்களால்தான் இயற்கை வளங்கள் இன்னமும் எஞ்சி நிற்கின்றன.


சிக்ஸர் சீனியர் - தினேஷ் கார்த்திக்

16
ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் பயணம், இப்போது உயரம் தொட்டு உச்சம் எட்டியிருக்கிறது. இந்த ஆண்டு நடந்த நிதாஸ் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் எட்டே பந்துகளில் 29 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்து எல்லோரையும் சிலிர்க்க வைத்தவர். சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தபின்னும் தமிழ்நாட்டுக்காக விக்கெட் கீப்பராக இன்னமும் விளையாடிக்கொண்டிருக்கிறார் தினேஷ் கார்த்திக். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் தினேஷ் தளபதிதான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சூப்பர் ஹிட் கேப்டன் தினேஷ் கார்த்திக். ஒருமுறை தேசிய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டாலே  துவண்டுபோகும் வீரர்களுக்கு மத்தியில், ஒவ்வொரு முறையும் இந்திய அணிக்காக கம்பேக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் கார்த்திக். 2019 உலகக் கோப்பைக்கு இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில், தினேஷ் கார்த்திக்குக்காகக் காத்திருக்கிறது தவிர்க்க முடியாத ஓர் இடம்!


அறச்சுவடி - உமா வாசுதேவன்

ண்ணகி நகரில் சூப் கடை நடத்திவருபவர் உமா. படித்தது 6-ம் வகுப்பு வரை மட்டுமே. ஆனால், மூன்று ஆசிரியைகளை சம்பளத்துக்குப் பணியில் அமர்த்தி 300 மாணவர்களுக்கும் மேல் கண்ணகி நகரில் பயிற்சி வகுப்புகள் நடத்திக்கொண்டிருக்கிறார். சைதாப்பேட்டை, புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை எனச் சென்னையின் எல்லாப் பேட்டைகளிலிருந்தும் பெயர்த்தெடுக்கப்பட்டு, கண்ணகி நகரில் ஏழைமக்கள் குடியமர்த்தப்பட்டதில் பல நூறு குழந்தைகள் பள்ளியிலிருந்து நின்றுவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பச் சொல்லி உமா வலியுறுத்த, பெரும் மாணவர் கூட்டம் மீண்டும் பாடப்புத்தகத்தின் வாசனை உணர்ந்திருக்கிறது. உமாவின் பயிற்சி வகுப்புகள் மூலம் ப்ளஸ் 2 படித்த 25 மாணவர்கள் வெற்றிகரமாகத் தேர்ச்சிபெற்றுக் கல்லூரிக்குள் நுழைந்திருக்கிறார்கள். சூப் கடை மற்றும் கணவர் வாசுதேவனின் ஆட்டோ வருமானத்தில் இவ்வளவையும் செய்துவரும் உமாவின் பெருங்கனவு, கண்ணகி நகர்ப் பகுதிகளில் அமைந்திருக்கும் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில், பல ஆயிரம் சம்பளத்தில் தங்கள் பகுதி மாணவர்களும் வேலை பார்க்கவேண்டும் என்பதே.


சேவை செவிலியர் - சாந்தி அருணாசலம்

ருத்துவத்தை வெறும் பிணிபோக்கும் பணியாக மட்டுமல்லாமல் பிரியத்துக்குரிய பணியாக ஆக்கிக்கொண்டவர் செவிலியர் சாந்தி அருணாசலம். கடந்த 25 வருடங்களாக சென்னை மனநல மருத்துவமனைக் காப்பகத்தில் பணிபுரியும் செவிலித்தாய் சாந்தி அருணாசலம். மனநலப் பிரச்னை குணமாகியும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லாமல் உள்ளேயே இருக்கும் பலருக்கு சாந்திதான் தாய், தங்கை, அம்மா, அப்பா; கடவுள் எல்லாம். மூர்க்கமாகி அவர்கள் தன்னை அடிக்க வந்தாலும், அன்புடன் அணைக்க வந்தாலும் அவர்களை சாந்தி அணுகும் விதத்தைக் கண்டு மனநல மருத்துவர்களே வியக்கின்றனர். மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே இருக்கும் சிறிய வீட்டில்தான் வசிக்கிறார். சாந்திக்குத் தெரிந்த ஒரே உலகம் இந்த மருத்துவமனை நோயாளிகள்தாம். அவர்களுக்குத் தெரிந்த ஒரே உலகமும் சாந்திதான். 

ஆனந்த விகடன் இலக்கிய விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

பெருந்தமிழர் விருது  - இந்திரா பார்த்தசாரதி

55 ஆண்டுகளாகத் தன் படைப்புப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்பவர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை எனப் படைப்பிலக்கியத்தின் எல்லா வெளிகளிலும் இயங்கும் இவர் எழுதிய முதல் சிறுகதையே, ஆனந்த விகடனில் ‘முத்திரைச் சிறுகதை’யாக வெளியானது.

`வெறும் ஏமாற்றமும் விரக்தியும் தோல்வி மனப்பான்மையும் மட்டுமே இலக்கியமாகிவிடக் கூடாது’ என்று தனது எழுத்துக்கான வரையறையை வகுத்துக்கொண்டு இடைவிடாது இயங்குபவர்.
தந்திரபூமி, குருதிப்புனல், சுதந்திரபூமி, வேதபுரத்து வியாபாரிகள், ஆகாசத்தாமரை, மாயமான் வேட்டை, திரைகளுக்கு அப்பால் போன்ற நாவல்களும், மழை, போர்வை போர்த்திய உடல்கள், கால எந்திரம், நந்தன் கதை, ஒளரங்கசீப், ராமானுஜர், கொங்கைத் தீ, பசி போன்ற நாடகங்களும் இந்திரா பார்த்தசாரதி தமிழுக்குக் கொடுத்த கொடைகள். சிறுவயது முதலே தமிழ், ஆங்கில இலக்கியங்களில் ஆழக்கால் பதித்தவர் இந்திரா பார்த்தசாரதி. கூர்மையான அரசியல் பார்வையும், அங்கதமும் கொண்டு உளவியல்பூர்வமாக எழுதக்கூடிய தமிழின் தனித்துவப் படைப்பாளி. டெல்லி பல்கலைக்கழகம், போலந்து நாட்டு வார்ஷா பல்கலைக்கழகங்களில் தமிழ் இலக்கியம், தத்துவம் பண்பாட்டுப் பாடப்பிரிவுகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தின் நிகழ்த்து கலைத்துறைத் தலைவராக இருந்தவர். மத்திய தர வர்க்கத்தின் உள்மன உறுத்தல்களையும் மனக் குழப்பங்களையும் நுணுக்கமான புனைவுகளோடு எழுத்தாக்கும் இந்த மாபெரும் எழுத்துக்கலைஞன் 88 வயதிலும் சிறிதும் சுணக்கமின்றி இயங்கிக் கொண்டிருக்கிறார். `சாகித்ய அகாடமி’, `பாரதிய பாஷா பரிஷத்’, `சரஸ்வதி சம்மான்’ எனச் சிறந்த அங்கீகாரங்களைக் குவித்துள்ள இந்தத் தீவிரப் படைப்பாளிக்கு விகடன் சூட்டும் மகுடம், பெருந்தமிழர் விருது!


சிறந்த நாவல் - வீரயுக நாயகன் வேள்பாரி - சு.வெங்கடேசன்

வெளியீடு : விகடன் பிரசுரம்

மிகச் சொற்பமாகக் கிடைத்த இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு பாரியை, அவன் ஆண்ட பறம்பு மலையை, அதன் வளத்தை, அதைக் கைப்பற்ற மூவேந்தர்கள் தொடுத்த போரை,  காதலிலும் வீரத்திலும் குழைத்தெடுத்த கவிமொழியால் சு.வெங்கடேசன் உயிர்ப்பித்த நாவல். இயற்கை அறிவு, அறவுணர்வு, அழகியல் நாட்டம், வீர சாகசம், பண்பாட்டு விழுமியங்கள் எனத் தமிழரின் வாழ்வியல் எவ்வளவு நாகரிக வளர்ச்சி பெற்றிருந்தது என்பதையும் மொழி, கலை, மெய்யியல், வானியல் எனச் சிந்தனைத் தளத்தில் எவ்வளவு நுட்பமாக விளங்கினார்கள் எனவும் சித்திரிக்கும் மிக முக்கியமான வரலாற்றுப் படைப்பு இது.


சிறந்த சிறுகதைத் தொகுப்பு - மாயக்குதிரை - தமிழ்நதி

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

ரசியல் ஆழமிக்க படைப்புகளில் ஒரு துளியும் கலையம்சம் குன்றிவிடாமல் எழுதுவது தமிழ்நதியின் பெரும்பலம்.  தமிழ்நதியின் வழக்கமான மொழிநடை இத்தொகுப்புக் கதைகளில் இன்னும் செழுமையேறி, கதை பயணிக்கும் தளங்களுக்கே வாசகர்களைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது. தவிர்க்க முடியாத சூழலில் வெளிநாடுகளில் அகதியாகத் தஞ்சம் புகுந்தவர்களின் வாழ்நிலையும் அங்கு வாழ நேர்கையில் அறிமுகமாகும் புதிய பழக்கங்களும் எப்படி வாழ்க்கையின் பகுதியாகின்றன,  ஈழப்போருக்கு முன் குடியிருந்தவர்களைத் தேடி அலையும் அவலப் பயணம் என்று வெவ்வேறு கருப்பொருள்களைக்கொண்ட கதைகள் இவை. ஈழத்தமிழ் இலக்கியத்தில் போராட்டத்தின் வரலாற்றை, துயரத்தின் வடுக்களை, வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை வலிமையாய் முன்வைக்கும் மிகமுக்கியமானதொரு சிறுகதைத் தொகுப்பு இது.


சிறந்த கவிதைத் தொகுப்பு

ழ என்ற பாதையில் நடப்பவன் - பெரு.விஷ்ணுகுமார்

வெளியீடு: மணல்வீடு பதிப்பகம்

வீன வாழ்வின் போலித்தனங்களை, சிடுக்குகளை, நுட்பமான அன்றாடத் தருணங்களை விநோதங்களின் காட்சி மொழியில் கவிதையாக்கியுள்ள ஆழமான தொகுப்பு. மனிதர்களாகிய நம்மோடு இந்த உலகில் வாழ்ந்திருக்கும் அஃறிணைகளின், பொருள்களின் வாழ்வை அதன் உயிர்ப்புள்ள இருப்பை மிகக் கவனமாகப் பதிவுசெய்கிறார் பெரு.விஷ்ணுகுமார். தனது அனுபவம், அறிந்த வாழ்வு மற்றும் நிலப்பரப்பு என்றில்லாமல், உலகளாவிய நடப்புகளின் அவதானிப்போடு அறிவார்த்தமான வகையில் தனது கவிதையின் பேசுவெளியை விரித்துச் செல்வது இக்கவிதைகளின் தனிச்சிறப்பு.


சிறந்த கட்டுரைத் தொகுப்பு  - எதிர்ப்பும் வெறுப்பும் -  பா.பிரபாகரன்

வெளியீடு: உயிர்மை பதிப்பகம் 

யர்கல்வி கற்கச் செல்லும் தமிழக மாணவர்கள் சந்திக்கும் உளவியல் சிக்கல்கள், பாபர் மசூதி இடிப்பு என்னும் வரலாற்று வன்முறையின் 25வது ஆண்டு, மதம் அறமா உளவியலா என்ற பரிசீலனை, லியனார் ஜெலியட் என்னும் அம்பேத்கரிய ஆய்வாளர் குறித்த ஆச்சர்ய அறிமுகம், சமூக உளவியல் சார்ந்த கட்டுரைகள் என்று வாழ்க்கையின் பல்வேறு பக்கங்களையும் பரிமாணங்களையும் குறித்துத் தீவிர உரையாடலை முன்வைக்கிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு. அதிகாரத்தின் பிறப்பும் இருப்பும் சமூகத்தில் என்னமாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதுதான் இந்தக் கட்டுரைகளின் மையச்சரடு. சமூகம் குறித்த ஆழமான பார்வைகளைப் பெறவும் விரிவான சிந்தனைகளுக்கு நகரவும் வாசிக்கவேண்டிய கட்டுரைத் தொகுப்பு.


சிறந்த சிறுவர் இலக்கியம் - மரப்பாச்சி சொன்ன ரகசியம்

யெஸ்.பாலபாரதி

வானம் பதிப்பகம் 

‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ சமகாலத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால் மிக்க ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுகிறது. பெண்குழந்தைகள்மீது காலந்தோறும் பாலியல் வன்முறை நடத்தப்பட்டே வருகிறது. பல வீடுகளில், நெருங்கிய உறவினர்களாலேயே இந்தக் கொடுமை நிகழ்த்தப்படுவதால், குழந்தைகளை வளர்ப்பது இன்னும் சிக்கலாகிப் போய்விட்டது. இந்தச் சூழலில், குழந்தைகளிடம்  பாதுகாப்பான தொடுதல் தொடங்கி பல்வேறு விஷயங்களைப் புரிய வைக்கவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அந்தக் கடமையை அழகான ஒரு கதையாகச் சொல்கிறது இச்சிறார் நாவல்.


சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை - ஆந்திரேயி மக்கீன்


தமிழாக்கம்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

காலச்சுவடு பதிப்பகம்

காதலும் மனித நேயமும் இந்த நாவல் முழுக்க விரவிக்கிடக்கின்றன. நாவலின் மற்றுமொரு கதாபாத்திரமாகவே வருகிறார் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செக்கோவ். சிறுகதைகளின் ஆதியையும் அந்தத்தையும் வெட்டிவிட்டால், உண்மை புலப்படுமாம். இந்நாவலின் பல இடங்களில் ஆந்திரேயி மக்கீனின் வாழ்க்கை அவ்வாறாகவே நமக்குக் கண்முன் விரிகிறது. பிரெஞ்சு அரசின் `செவாலியே’, `ஒஃபீசியே’ விருதுகளைப் பெற்ற; புதுவைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பிரெஞ்சுத் துறைத் தலைவர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இந்நூலினை நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆந்திரேயி மக்கீனின் பிற நாவல்களும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என ஆர்வத்தைத் தூண்டும் மிக முக்கியமானதொரு மொழிபெயர்ப்பு நாவல்.


சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு

உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது

சிமாமண்டா என்கோஜி அடிச்சீ; தமிழாக்கம்: வடகரை ரவிச்சந்திரன்

பாரதி புத்தகாலயம் பதிப்பகம்

நைஜீரியர்களின் அரசியல் போராட்டம், இளைஞர்களின் வேட்கை, குழுமோதல்கள், உறவுகளை அணுகும் விதம், அரசின் மீதான விமர்சனம், நம்பிக்கைகள், புலம்பெயர்ச் சிக்கல்கள் என நைஜீரிய மக்களின் வாழ்க்கைச் சூழலை அனைத்துப் பரிமாணங்களுடன் இதிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும் அதற்குரிய சட்டகத்தில் நின்று வெளிப்படுத்துகின்றன. உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட கதைகளோ என்று யோசிக்கும் அளவுக்கு இக்கதைகளிலுள்ள நேரடித்தன்மைகள் நம்மை அலைக்கழிக்கின்றன. இக்கதைகளின் சிறப்பியல்பே இவற்றை எழுதிய சிமாமண்டா என்கோஜி அடிச்சீயின் மொழியிலுள்ள அங்கதம்தான். அதேசமயம் கதைக்களனாக ஆசிரியர் தேர்ந்தெடுக்கும் விஷயங்களும் அது ஏற்படுத்திய தாக்கமும் வாசக மனப்பரப்பில் ஊடாட்டம் செய்யக்கூடியவை. இவ்வளவு செறிவும் நுட்பமும் கொண்ட கதைகளை உள்வாங்கி மொழிமீதான மிகுந்த அக்கறையுடன் மொழிபெயர்த்திருக்கிறார் வடகரை ரவிச்சந்திரன்.


சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு  - அன்னா ஸ்விர் கவிதைகள் 

தமிழில்: சமயவேல் தமிழ்வெளி பதிப்பகம்

போலந்துக் கவிஞர் அன்னா ஸ்விர் பெண்ணியம், போர், உடல், வாதை, காமம், கொண்டாட்டம் என வாழ்வின் அர்த்தத்தையும் அர்த்தமின்மையையும் கவிதைகளாக்குகிறார். தீவிரவாதமும் போர்ச்சூழலும் பெரும் சிக்கலாக உருவாகிக்கொண்டிருக்கும் தற்காலச் சூழலில், போரின் அபத்தங்களையும் கோரங்களையும் அவல நகைச்சுவைச் சித்திரங்களாக முன்வைக்கும் அன்னா ஸ்விரின் கவிதைகள் நமக்கு அவசியமானவை. இரண்டாம் உலகப்போரில் வார்ஸா நகரமும் அதன் ஒரு மில்லியன் மக்களும் மொத்தமாக அழிந்துபோனதன் வலி மிகுந்த நினைவு, அவருடைய கவிதைகள் முழுக்க இழையோடி விம்முகின்றன. தமிழின் மிக முக்கியமான கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் விமர்சகருமான சமயவேல் இக்கவிதைத் தொகுப்பினைத் தமிழாக்கம் செய்துள்ளார். அழகியலும் பண்பாடு சார்ந்த நுண்ணுணர்வும் ஆழமான அரசியல் பார்வையும் கொண்ட சமயவேலின் ஆளுமை மொழிபெயர்ப்பில் வெளிப்படுகிறது.


சிறந்த சிற்றிதழ் - இடைவெளி

பொருளாதார பலம் இன்றி, வணிக ரீதியான ஆதரவின்றி, தீவிரமாகத் தொடர்ந்து இயங்கும் சிற்றிதழ் உலகின் புதிய வரவு  ‘இடைவெளி.’ மிக விரிவான நேர்காணல்கள், விவாதங்கள், விமர்சனங்கள், படைப்புகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியம், சினிமா, பண்பாடு, அரசியல், நுண்கலைகள் சார்ந்த கட்டுரைகள் என ஆழமும் நுட்பமும்கொண்ட தன்மையில் வெளியாகிறது இடைவெளி. நேர்த்தியான வடிவமைப்பு, புதியவர்களின் பங்களிப்பு, தொடர்ச்சியான வருகை என நம்பிக்கையூட்டுகிறது. காத்திரமான கட்டுரைகளையும் படைப்புகளையும் தாங்கி வெளிவரும் ‘இடைவெளி’ இதழ், தமிழ் அறிவுச்சூழல் செழுமை பெற உதவும்.


சிறந்த வெளியீடு - பிரமிள் படைப்புகள் - கால சுப்ரமணியம்
பிரமிள் அறக்கட்டளை & லயம்

விதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், ஓவியம், மொழிபெயர்ப்பு என விரிவான தளங்களில் தமிழில் செயல்பட்ட ஒப்புமையற்ற ஆளுமை, பிரமிள். அவர் தனது வாழ்நாளில் எழுதிய மொத்தப் படைப்புகளில் ஒற்றைச் சொல்லும் தவறிடாது, தொகுத்து ஆவணப்படுத்தியிருக்கிறார் அவரின் நண்பரும் ஆய்வாளருமான கால சுப்ரமணியம். ‘யாழ் என்ற கையெழுத்துப் பத்திரிகையில் 1957-ல் எழுதிய கவிதை முதல், தனது மரணத்துக்கு முந்தைய காலம் வரை பிரமிள் எழுதிய எழுத்துகள் கால வரிசைப்படி, வகைமை சார்ந்து பகுக்கப்பட்டுள்ளன.  3,400க்கும் மேலான பக்கங்கள், 6 தொகுப்புகளாகத் தரமாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நூல்களின் முகப்புகள் பிரமிளின் ஓவியங்களைக்கொண்டே அலங்கரிக்கப்பட்டிருப்பது கூடுதல் நெருக்கத்தைத் தருகிறது. பத்தாண்டுகள் இடைவிடாத முயற்சியால் இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் கால சுப்ரமணியம். 

 

 இசையின் திசை
கோவிந்த் வஸந்தா

செண்டை மேளம் ஒலிக்கும் சேர நாட்டுக்காரர். ‘தைக்குடம் ப்ரிட்ஜ்’ என்னும் தனியிசைக் குழுவின் மூலம் இளைஞர்களை மயக்கிய இசைக்கலைஞன். தமிழில் ‘ஒருபக்கக் கதை’ படம் மூலம் அறிமுகமான இவருக்கு 2018, ஹாட்ரிக் ஹிட்டடித்த ஆண்டு. ‘அசுரவதம்’ படத்தில் பின்னணி இசையின் மூலம் கதையோட்டத்தின் திகிலைத் தொடர்ந்து தக்கவைத்தார். ‘96’ படத்தில் கோவிந்த் வசந்தா தீட்டியது இழந்துபோன உறவின், கலைந்துபோன கனவின் இன்னிசை. ‘சீதக்காதி’யில் நாடகக் காட்சிகளுக்கும், அதன்பின்னான காட்சிகளுக்கும் பின்னணி இசையில் வேறுபாடு காண்பித்து ரசிக்க வைத்தார். இசையால் இதயம் நனைத்த கோவிந்த் வஸந்தா, தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கை வரவு!


 போர்முரசு
இசை என்கிற ராஜேஸ்வரி

எல்லோருக்கும் இசை பிடிக்கும். ஆனால், இந்த இசைக்குப் போராட்டங்கள்தான் பிடிக்கும். மணற்கொள்ளைக்கு எதிராகக் களமாடும் களப்போராளி இவர். காவிரி ஆற்றங்கரைக்குப் பக்கத்தில் பிறந்து வளர்ந்தவர், மணல் கொள்ளையைக்கண்டு ஒருகட்டத்தில் பொறுக்கமுடியாமல் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்தார். ‘காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு முழுவீச்சில் இயங்கிவருகிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள 12 மணல் குவாரிகளில் 10 மூடப்பட்டதில் இசையின் பங்களிப்பு முக்கியமானது. நூறு வருடப் பழைமைவாய்ந்த ஆலமரம் வெட்டப்பட்டதற்கு எதிராக, பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு எதிராக, மீனவர் பிரிட்ஜோவைச் சுட்டுக்கொன்றதற்கு எதிராக, நெடுவாசல், கதிராமங்கலம், கூடங்குளம் எனப் பல போராட்டங்களிலும் உரத்து ஒலிக்கிறது இசையின் முழக்கம்.


 

குறுஞ்சித்திரன்
சந்தோஷ் நாராயணன்

இரண்டே அடிகளில் உலகை அளந்த வள்ளுவர் வழியில் மினிமலிச ஓவியங்கள் மூலம் உலகை அளந்துகொண்டிருக்கும் கலைடாஸ்கோப் கலைஞன், சந்தோஷ் நாராயணன். புத்தகக் கண்காட்சியின் புதிய வரவான புத்தகங்களில் கணிசமான புத்தகங்களின் அட்டையை சந்தோஷ் நாராயணன்தான் வடிவமைக்கிறார். புத்தகங்களின் அட்டைப்படம், திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,  வாட்டர் கலர் பெயின்டிங் என ஓவியத்தின் பன்முகப் பரிமாணங்களில் ‘ஹிட்’ அடித்தவர்.  சச்சினின் சாதனைகளை வைத்து உருவாக்கிய கான்செப்ட் ஆர்ட், சச்சினால் பாராட்டப்பட்டது சந்தோஷ் நாராயணனின் சந்தோஷத் தருணம். ஓவியம் மட்டுமன்றி பாரம்பர்ய வாழ்வு முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த உரையாடல்களை முன்னெடுப்பதிலும் முன்னணியில் நிற்கிறார் சந்தோஷ் நாராயணன். 


 குழந்தைகள் கூட்டாளி
இனியன்

விளையாட்டுப் பிள்ளைகள் பலர் உண்டு. ஆனால் பிள்ளைகளின் விளையாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட குழந்தைகள் செயற்பாட்டாளர் இனியன். ‘பல்லாங்குழி’ எனும் அமைப்பை நடத்திவருகிறார். தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து, நாம் மறந்துபோன பாரம்பர்ய விளையாட்டுகளை அவர்களோடு இணைந்து ஆடுகிறார்.150க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை ஆவணப்படுத்தியிருக்கிறார். குழந்தைகளின் உலகில் அவரை நுழைய வைத்தது, ஒரு விஷப்பூச்சி. சில வருடங்களுக்கு முன், தூங்கிக்கொண்டிருந்த இனியனின் கையில் விஷப்பூச்சி ஒன்று கடித்துவிட,  விஷம் ஏறிய கையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைகள் நடந்தபிறகு, 15 நாள்கள் உலகத்தொடர்பே அற்று, கோமாவில் கிடந்தார். இயல்பு நிலைக்குத் திரும்பியவர், இனி, குழந்தைகளுக்கான செயல்பாடே தன் வாழ்வின் பணி என்று முடிவெடுத்து, இயங்கிவருகிறார். அப்போது ஆரம்பித்த பயணம் 125க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளைத் தாண்டியும் நீண்டுகொண்டிருக்கிறது. 


நீதியின் குரல்
அருள்தாஸ்

அநீதிக்கு எதிராய்ப் போராடுவர்களின் ஆத்மார்த்த தோழன் அருள்தாஸ். தமிழகத்தில் எங்கெல்லாம் கொத்தடிமைமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் ஊடகங்களின் உதவியோடு அருள்தாஸ் கொத்தடிமைகளை மீட்டெடுத்த கதைகள் ஏராளம். 25 இளைஞர்களுடன் குடிக்கு எதிராக, கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடைப்பயணம், பழங்குடிகள் கிராமங்களுக்குச் சென்று அவர்களுக்கான நிலமும் பட்டாவும் வாங்கித் தருதல், உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்காக உதவி பெற்றுத் தருவது, இரண்டாயிரம் முறைக்குமேல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பல விஷயங்களை ஆவணப்படுத்தியது என நீண்டுகொண்டே போகின்றன அருள்தாஸின் களச்செயல்பாடுகள்.


 இதயம் தொடும் இணையம்
பிளாக் ஷீப்

யூடியூப் சேனல்களில் பிளாக்‌ ஷீப் கொஞ்சம் தனித்துவமானது. ‘ஃபன் பண்றோம்’, ‘நாட்டி நைட்ஸ்’ என்று கலகல பக்கங்கள் ஒருபக்கம் என்றால், `விக்கிலீக்ஸி’ல்  ஸ்டெர்லைட், கதிராமங்கலம், நெடுவாசல் என்று மக்கள் பிரச்னைக்குக் குரல்கொடுப்பது முதல் பாலியல் கல்வி வரை காணொலிகளில் சிரிப்பும் சீரியஸும்தான் இவர்கள் அடையாளம். சின்னத்திரைக்கு நிகராக, தீபாவளியின்போது யூடியூப் செலிபிரிட்டிகள் பலரையும் ஒன்றிணைத்து நிகழ்ச்சிகளை இணையத்தில் ஒளிபரப்பிக் கவனிக்கவைத்தார்கள். பேரிடர் நேரங்களில் களப்பணிகளிலும் கைகோக்கிறார்கள்.  ‘நவயுக ரத்தக்கண்ணீர்’ என்று மேடைநாடகத்திலும் கால்பதித்துக் கைத்தட்டல் வாங்கினார்கள். இப்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெள்ளித்திரையிலும் களமிறங்கியிருக்கும் ப்ளாக்‌ ஷீப்க்குக் காத்திருக்கிறது பெரிய எதிர்காலம்.


 அறிவியல் தூதன்
 பிரேமானந்த் சேதுராஜன்
அறிவியல் என்றால் மிரண்டு ஓடியவர்களைத் தனது யூடியூப் சேனலின் முன் கட்டிப்போட்டவர் பிரேமானந்த். ’Let’s Make Engineering Simple’ எனப் பொறியியலையும் அறிவியலையும் எளிய தமிழில் சுவாரஸ்யமாய்ச் சொல்வது இவர் சிறப்பு. இணையத்தில் மட்டுமன்றி களத்திலும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான முன்னெடுப்பில் தமிழகம் முழுவதும் பயணிக்கிறது இவரின் குழு. கோடையில் குழந்தைகளுக்கு அறிவியல் முகாம், பள்ளிதோறும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான பயிற்சிகள் என அடுத்த தலைமுறையிடம் அறிவியலைக் கொண்டு செல்வதில் இவரது முனைப்பு பாராட்டுக்குரியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க வேலையை உதறிவிட்டு வந்த பிரேமானந்த் இன்று தன் தாய்மண்ணில் அறிவியல் ஆர்வத்தை விதைத்துக்கொண்டிருக்கிறார்.


தற்சார்பு தமிழச்சி
நிவேதா

பன்மெய்ப்புல சவால் கொண்ட குழந்தை நிவேதா. கேட்கும், பேசும் திறன் குறைவு, காலூன்றிச் சரியாக நடக்க முடியாது, உடலில் தொடர்ச்சியான நடுக்கம் என பல சவால்கள். ஒன்றரை வயதில் இந்த உடல்பிரச்னைக்குள்ளான நிவேதாவுக்கு இப்போது இருபத்தெட்டு வயது. தனிமையிலும் மன அழுத்தத்திலும் இருந்தவர் ஒருகட்டத்தில் அதிலிருந்து வெளியேற என்ன செய்வதென்று தெரியாமல், வீட்டில் நாம் பயன்படுத்திக் குப்பைத்தொட்டியில் வீசும் பொருள்களைக் கலைப்பொருள்களாக மாற்றத் தொடங்கினார். National Institute for Empowerment of Persons with Multiple Disabilities என்ற மத்திய அரசு அமைப்பு, நிவேதாவைத் தற்சார்புத் திறனாளியாக தேசிய அளவில் அங்கீகரித்துக் கௌரவித்திருக்கிறார்கள். தன்னைப்போல உள்ளவர்களுக்கு மட்டுமன்றி, பல தரப்பினர்க்கும் பெரும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார் நிவேதா.


 அறம் செய்யும் அட்சயம்
நவீன்

பிச்சைக்காரர்கள் மீது கவனம் செலுத்தும் கருணை மனிதர் திருச்சியைச் சேர்ந்த நவீன். ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களின் தெருக்களில், சாலையோரங்களில் ஆதரவற்றுச் சுற்றியலைந்த, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட யாசகர்களைச் சந்தித்து கவுன்சிலிங் கொடுத்திருக்கிறார். வேலையில் சேர்த்துவிடுவதற்கான ஏற்பாடுகள், அவர்களின் குடும்பத்தினரைக் கண்டறிந்து சேர்த்து வைப்பது என நவீனால் மறுவாழ்க்கை அடைந்த யாசகர்களின் எண்ணிக்கை இதுவரை 237. தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்துகொண்டே, இந்த சேவையையும் தொடர்கிறார். இதற்காகவே ‘அட்சயம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி நிறைய இளைஞர்களை அதில் சேர்த்து இயங்குகிறார் நவீன்.


இரட்டைக்குரல் துப்பாக்கி
விவேக் - மெர்வின்

‘ஒரசாத’ என்ற ஒற்றைப்பாடல் மூலம் கேட்பவர்களின் உள்ளங்களையும் உயிரையும் உரசிப்போனவர்கள் விவேக் - மெர்வின் என்னும் இரட்டையர்கள். பெரும் நட்சத்திரங்களின் படப்பாடல்கள் யூடியூபில் மூன்று கோடி ஹிட்ஸ் பெற்ற அதே ஆண்டில், இவர்களின் ‘ஒரசாத’ பாடல் யூடியூபில் மட்டும் ஐந்து கோடியைத் தொட்டிருக்கிறது. தமிழர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் அதிகம் இடம்பெற்றது ‘ஒரசாத’ தான். எந்த உச்ச நட்சத்திரங்களும் இல்லாமல், பெரிய விளம்பரங்கள் இல்லாமல் கடைக்கோடி கிராமங்கள் வரை இணையம் மூலம் சென்றடைந்த இவர்கள், தனியிசைக் கலைஞர்களுக்குத் தந்த நம்பிக்கை மிகப்பெரியது. 2018ன் தொடக்கத்தில் இவர்கள் இசையில் வெளியான படம் ‘குலேபகாவலி’. இப்போது கல்லூரிக் கலை நிகழ்ச்சிகளில்  தவறாமல் ஒலிக்கும் தாளம், அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘குலேபா’தான். ஜென் இஸட் இளைஞர்களின் இசை ரசனையைச் சரியாகப் புரிந்துகொண்ட இந்த இரட்டையர்கள் இனி வரும் காலங்களில் படைக்கப்போகும் இசை சாம்ராஜ்யம் அந்த இளைஞர்களுக்கானது.

 

ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த டிவி சேனல் -  டிஸ்கவரி கிட்ஸ் தமிழ்!

டிவி தொடங்கி யூட்யூப் வரை குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் குவிந்துகொண்டிருக்கும் நிலையில் குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள், எதைப் பார்க்கிறார்கள் எனக் கண்காணிப்பது அவசியம். பெற்றோரையே குழந்தைகள் அவமானப்படுத்துவதுபோலக் காட்சிகள் அமைப்பது, கறுப்புநிறக் குழந்தைகளை வில்லனாக்குவது, சென்னை மொழி பேசுபவர்களைத் திருடர்களாக்குவது எனக் குழந்தைகளுக்கான சேனல்களில் புகுத்தப்படும் கருத்தியல் வன்முறைகள் ஏராளம். இதற்கு மாறாக, குழந்தைகளுக்கான நல்ல கதைகளை, எதிர்காலச் சந்ததிக்கு நம்பிக்கை அளிக்கிற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பிவருகிறது ‘டிஸ்கவரி கிட்ஸ்.’ இந்தச் சேனலில் ஒளிபரப்பாகும் ‘லிட்டில் சிங்கம்’ குழந்தைகளிடையே வைரல் ஹிட். அழகுத்தமிழில் உலகத்தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிவரும் டிஸ்கவரி கிட்ஸுக்குக் குழந்தைகள் சார்பில் அன்பின் ஸ்மைலிகள்!  


சிறந்த டிவி நிகழ்ச்சி  - சூப்பர் சிங்கர் 6 - விஜய் டிவி

ல இசை ஜாம்பவான்கள் கலந்துகொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய, ‘சூப்பர் சிங்கர்-6’வது சீஸனும் திறமையாளர்கள் பலரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இசைப் பின்புலமில்லாத, கிராமத்துப் பின்னணியைக் கொண்ட ஜெயந்தி, அவரது பிரியத்துக்குரிய பாடகியான எஸ்.ஜானகியின் பாடல்களைப் பாடியதோடு அவரையே நேரிலும் சந்திக்கவைத்து, நெகிழ்ச்சி நிமிடங்களை ஜெயந்திக்குப் பரிசாக்கியது சூப்பர் சிங்கர். ஆறாவது சீஸனின் இன்னோர் அசத்தலான சாதனை, ‘மக்களிசை’ என்கிற வார்த்தை. இளம் கிராமிய இசைத் தம்பதியான செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி இணையர் ஒவ்வொரு எபிசோடிலும் தெறிக்க விட்டார்கள். செந்தில் கணேஷ் டைட்டில் வென்ற போது, உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். இன்னொரு வின்னரான ராஜலட்சுமி, தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையை நெசவாளர் குழந்தைகளின் கல்விச் செலவுக்குப் பயன்படுத்தப்போவதாக அறிவித்து நிகழ்ச்சிக்கு மேலும் அர்த்தம்கூட்டினார்.


சிறந்த நெடுந்தொடர் - செம்பருத்தி

ஜீ தமிழ் தொலைக்காட்சி


ங்க மொழியில் ஹிட் அடித்து, தெலுங்குக்குத் தாவிய கதை. அதை ஜீ தமிழ் டிவி, இங்கேயும் இறக்குமதி செய்ய... மக்கள் வரவேற்பில் மெகாஹிட் அடித்தது இந்த `செம்பருத்தி.’  பணக்கார அம்மா, மகன், அந்தக் குடும்பத்துக்குக் காலங்காலமாக உழைத்துக் கொட்டும் ஏழை அப்பா, அவரின் மகள்... இவர்களுக்கு இடையே சுழலும் கதைப்பின்னல், பணக்காரப் பையனுக்கும் ஏழைப் பெண்ணுக்கும் மலரும் காதல், அதனால் உண்டாகும் பிரச்னைகள் என சராசரி கதைக்களத்தையும், பரபரப்புத் திரைக்கதையோடு பக்காவாகத் தந்ததில் வெற்றிபெற்றது இந்தத்தொடர். சினிமாக்களைப்போல தமிழ் நெடுந்தொடர்களும் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு மாறிவிட்ட நிலையில், பிரமாண்ட `செட்'கள் அமைத்து, அதற்குள்ளேயே சுழலும் சம்பவங்கள் என்று கதையமைத்ததில், `செம்பருத்தி’க்கு கிடைத்தது தொலைக்காட்சி ரசிகர்களின் அமோக வரவேற்பு.


சிறந்த சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்

மாகாபா ஆனந்த் - விஜய் டிவி


‘சினிமா காரம் காபி’ மூலம் விஜய் டிவியின் கதவு இவருக்காகத் திறந்தபிறகு தன் திறமையின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தினார் மாகாபா ஆனந்த். பாடல் சிடி விற்பனை செய்யும் கடையில் வேலை செய்த மாகாபாவுக்கு, அந்தப் பாடகர்களின் ஷோவையே தொகுத்து வழங்கும் வாய்ப்பை அவருடைய உழைப்பும் தன்னம்பிக்கையும் பெற்றுத்தந்தன. சூப்பர் சிங்கருக்குள் இவர் தொகுப்பாளராக வந்தபிறகு பாடல்களுக்காக மட்டுமன்றி இவருடைய பகடிகளுக்காகவும் ஷோ களைகட்டியது. நடுவர்களையும், சக தொகுப்பாளரையும் தன் டைமிங் காமெடிகளால் கவர்ந்தார். எந்த நட்சத்திரம் வந்தாலும் அவர்களோடு உரையாடும்போது நெருக்கத்தோடு மரியாதையும் கலந்து இவர் தொகுத்து அளிக்கும் பாணிக்கு ஆடியன்ஸ் அப்ளாஸ் எப்போதுமே அள்ளும்.


சிறந்த சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளினி 

அர்ச்சனா-  ஜீ தமிழ் தொலைக்காட்சி


‘காமெடி டைம்’ அர்ச்சனாவாகத் தன் பயணத்தைத் தொடங்கி இன்று ‘சூப்பர் மாம்’ அர்ச்சனாவாக வீடுதோறும் நம்மில் ஒருவராய் மாறிவிட்டவர். பல ஆண்டுகளாக மீடியாத் துறையில் தடம்பதித்து வருபவர். ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்னர் அட்டகாசமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘அதிர்ஷ்டலட்சுமி’ நிகழ்ச்சி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். 120க்கும் மேற்பட்ட எபிசோடுகளை அவருக்கே உரித்தான கலகலப்புடன் வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கி மறுபடியும் அவருக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். இப்போது அவருடைய மகள் ஜாராவுடன் இணைந்து ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். என்ட்ரி கொடுத்தாலே எப்படிப்பட்ட நிகழ்ச்சிகளையும் கலகலப்பாக்கும் அர்ச்சனா, இன்றைய தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் விருப்பப்பட்டியலில் முதன்மையானவர்.


சிறந்த பண்பலை - ரெயின்போ எஃப்எம்

பாடல்கள் ஒளிபரப்புவதற்கு மட்டுமல்ல பண்பலைகள், பயனுள்ள தகவல்களை பரப்புவத்றகும்தான் என்பதற்கான முன்னுதாரணமாகத் திகழ்கிறது ரெயின்போ எஃப்எம். கடந்த 25 வருடங்களாக அதே நோக்கத்துடன் சென்னை மக்களிடையே ஒலித்துக்கொண்டிருக்கிறது ரெயின்போ. கல்வி, விளையாட்டு, பொது அறிவு, போக்குவரத்து, அறிவியல், அரசியல் என்று பலதுறைகளைப் பற்றிய விழிப்பு உணர்வுடன் இவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் சமூக அக்கறையையும் காற்றினில் கலக்கிறார்கள். ஆபாச வரிகள் கொண்ட பாடல்களை ஒளிபரப்பாமல் இருப்பது, முந்தித் தர வேண்டுமென உறுதியாகாத செய்திகளை அறிவிக்காமல் தவிர்ப்பது என்று இந்தப் பண்பலை பின்பற்றுகிற அறம் வியக்கவைக்கிறது. சினிமாவுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் ரெயின்போ இந்தியா, வண்ணக் கோலங்கள், தமிழகத்தின் மாஸ்டர் மைண்ட், மரபுக்கு மாறுவோம், மாற்றத்தை நோக்கி எனப் பல்சுவை நிகழ்ச்சிகளில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்களையும் அள்ளித்தரும் ரெயின்போ, பண்பலைகளில் ஒரு தனியலை.


சிறந்த பண்பலைத் தொகுப்பாளர் - கார்த்திக் பாலா  - ரேடியோ சிட்டி

‘க்ரைம் டைரி வித் கார்த்திக்’ - சென்னை, கோவை, மதுரை வட்டார மக்கள் சண்டே மதியம் வெறித்தனமாக வெயிட் செய்வது இவரின் இந்த ஷோவைக் கேட்கத்தான். டைட்டிலுக்கேற்ப, வாரம் ஒரு க்ரைம் கதை. கொலை, திருட்டு எனப் பல தளங்களில் பயணிக்கும் அந்தக் கதைகள் எல்லாமே கார்த்திக் பாலாவின் சிந்தனையில் உதிப்பவை. அதை எக்கச்சக்க த்ரில் சேர்த்து வழங்குகிறது அவரின் குரல். இதற்குக் கைகொடுக்கிறது அவரின் 12 ஆண்டுக்கால ஆர்.ஜே அனுபவம். ஆர்.ஜேக்கள் படபடவெனப் பேசவேண்டும், ஆனால், குறைவாகத்தான் பேசவேண்டும் என்ற விதிகளை உடைத்துத் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருக்கிறார் கார்த்திக்.  சண்டே மேட்னி நேரத்தில் டிவி பக்கம் ஒதுங்கவே சோம்பல் முறிக்கும் மக்களை ரேடியோ பக்கம் கும்பல் கும்பலாக இழுத்து வந்து, அவர்களுக்கு ‘ரேடியோ டிராமா’ வழியே கதை சொல்லும் உத்தியில் அனைவரையும் கவர்கிறார் இந்த ஆர்.ஜே கதைசொல்லி!


சிறந்த பண்பலைத் தொகுப்பாளினி - சாரு - ரேடியோ மிர்ச்சி

கொங்கு மண்டலத்தைத் தன் மாயக்குரலால் கட்டிப்போட்டிருக்கும் வித்தைக்காரர். கன்வென்ஷனல் கட்டங்களுக்குள் அடங்காத கலாட்டா குரலி. இவரின் `மோர் மொளகா' முன் மதிய நேரத்தில் வீட்டில் இருப்பவர்களுக்குப் பக்காவான பேச்சுத்துணை, வேலை பார்ப்பவர்களுக்கு பிரேக்கில் சந்திக்கும் `டீ'மேட்! சாருவின் ஷோவில் எதுவும் பேசலாம், எல்லாமே பேசலாம்! முதல்நாள் காதலைக் கொண்டாடும் ஜாலி கேடியாய் ஒலிக்கிறார்; அடுத்தநாளே பாலியல் சீண்டல்களை சமாளிப்பது பற்றிப் பாடமெடுக்கிறார். `ஓ இது லேடீஸ் ஒன்லி ஷோ போல’ என யோசிக்கும் ஆண்களிடம் `வாட்ஸப் டூட்.. காலா FDFS அனுபவம் எப்படி?’ எனக் கைகுலுக்குகிறார். இந்த வெரைட்டி விருந்தும் ப்ரெண்ட்லி குரலும்தான் சாரு ஸ்பெஷல். இதனாலேயே காலேஜ் போகும் டீனேஜ் குரூப் தொடங்கி வேலைக்குப்போகும் அங்கிள் ஆன்டிகள் வரை எல்லாரும் இவர் ரசிகர்கள். `ஏன்னு கேக்குற கேள்வியும் அதுக்கு பதில் தேடுற விவாதமும்தான் இப்போ அவசியத் தேவை. வாங்க பேசுவோம்!’ எனக் குரலில் நம்பிக்கை பொதிந்து புன்னகைக்கிறார் சாரு. 


டிரெண்டிங் @ விகடன்