``தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"- சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தகவல் | contempt of court file will be tamilnadu chief secretary says social activist

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (09/01/2019)

கடைசி தொடர்பு:20:37 (09/01/2019)

``தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"- சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தகவல்

கிராம நிர்வாக அலுவலர்கள்  பணியை முறைப்படுத்தகோரி  வழக்கில் தமிழக அரசு மீது நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு

கிராம நிர்வாக அலுவலர்கள், தாங்கள் பணி செய்யும் கிராமத்திலேயே தங்கி பணி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அதன் மீது தலைமைச் செயலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளது . 

இது தொடர்பாக பேசிய, ``சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ, ``கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் சேரும்போதே அந்தந்த கிராமங்களில் தங்கிப் பணி செய்ய வேண்டும் என்பது அரசின் விதிமுறை. அதை ஏற்றுக்கொண்டுதான் பணியில் சேருகிறார்கள். ஆனால், அவ்வாறு தங்கி அவர்கள் பணி செய்வதில்லை. கிராம நிர்வாக அலுவலராக வருபவர்கள் பணி செய்யும் கிராமத்திலேயே தங்கி பணி செய்தால்தானே அங்குள்ள மக்களின் பிரச்னை புரியும். சில நேரத்தில் அந்த மக்களுக்கு ஏதேனும் அவசரம் என்றாலும் அவர்கள் ஈசியாக அணுகவும் முடியும்.

கிரிஜா வைத்தியநாதன்

வருமானச் சான்று, ஜாதிச் சான்று, நில அளவை போன்ற பணிகளுக்கு மட்டும் கிராம அலுவலர்கள் நியமிக்கப்படுவதில்லை. அவரவர் கிராம மக்களின் பிரச்னை கண்டு, அவர்களுக்கு ஒரு சேவையாளராக வி.ஏ.ஓ-க்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், அப்படியான பணியை பெரும்பாலான கிராம அலுவலர்கள் மேற்கொள்வதில்லை. காரணம், அவர்கள் அந்தக் கிராமத்தில் தங்கி வேலை செய்வதில்லை. சிட்டாடங்கள் வாங்கும் பணிக்குகூட ஒரு விவசாயி பெரும் அலைச்சலை சந்திக்கவேண்டியிருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கிராம அலுவலர்களின் பணியை ஒழுங்குமுறைபடுத்தக் கோரி போராட்டம் நடத்தினோம். ஆனால், அதற்கு அரசிடம் எந்த ரெஸ்பான்சும் இல்லை. இந்த நிலையில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2016-ல்  வழக்கு தொடர்ந்திருந்தோம்.

சிவ இளங்கோ சட்டப் பஞ்சாயத்து இயக்கம் அந்த வழக்கைத் விசாரித்த நீதிமன்றம் அனைத்து கிராம அலுவலர்களும் அந்த அந்த கிராமத்தில் தங்கி பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் அதை மாநில அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய்த்துறை செயலர், வருவாய்த்துறை ஆணையர் ஆகியோருக்கு மனு அனுப்பியிருந்தோம். அந்த மனுவில், அனைத்து அலுவலர்களும் அந்த அந்த கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவிட்ட மூன்று மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். அதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. ஆனால், 2016-ம் ஆண்டு வந்த உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. அதைத் தொடர்ந்தே.தலைமைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், வருவாய்த்துறை ஆணையர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம் " என்றார்.