வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (09/01/2019)

கடைசி தொடர்பு:22:00 (09/01/2019)

`இட ஒதுக்கீடுதான் தமிழகத்தை தனித்துவமாக்குகிறது!'- தம்பிதுரை

ரேந்திர மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்களும் பெயருக்குப் பின்னால் சாதியை சேர்த்துக்கொள்வதாக தம்பிதுரை பேசியிருப்பது அரசியல் களத்தில் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது . 

மோடி

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை மக்களவையில் நேற்று (8.1.2019)  நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தச் சட்டத்திருத்தத்துக்கு பலதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி வருகின்றன. இது குறித்து கோவை விமான நிலையத்தில் பேசிய ``அ.தி.மு.க எம்.பி-யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை ``பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் ஊழலுக்கும். அநீதிக்கும் வழிவகுக்கும். சமூக நீதிக்கட்சியை உருவாக்கிய காலத்தில் உயர் சாதி, கீழ்சாதி என்ற முறை ஒழிந்து சமத்துவம் ஏற்பட வேண்டும் என்றால், கல்வியில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற அவசியத்தை எண்ணி அதற்காக சர் பிட்டி தியாகராயர், மாதவன் நாயர், நடேசன் முதலியார் போன்றோர் போராடினார்கள். அதற்கேற்றவாறு நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அதை நிறைவேற்றியும் அவர்கள் காண்பித்தார்கள். சாதியை முழுமையாக ஒழித்து மனிதன் மனிதாக இருக்க வேண்டும் என்பதற்காக திராவிட இயக்கங்களையும் அவர்கள் உருவாக்கினார்கள். 

தம்பிதுரை

வர்ணாசிரம தர்ப்படி பிராமணர், சத்திரியர், சூத்திரர் என்று வகுத்துள்ளனர். வேதம் ஓதுபவர்கள் பிராமணர்கள். நாட்டை ஆள்பவர்கள் சத்திரியர், வியாபாரம் செய்பவர்கள்  வைசியர் மற்ற தொழில் செய்யும் அனைவரும் சூத்திரர்கள். அப்படி என்றால் நாம் எல்லாம் சூத்திரர்கள். இப்படி பிறப்பால் ஒருவரை சாதியை வைத்து அடையாளப்படுத்தும் இந்த முறையை ஒழிக்க  நீதிக்கட்சியும், திராவிடக்  கட்சிகளும் போராடியதால்தான் நாம் யாரும் தற்போது பெயருக்குப் பின்னால் சாதியைச் சேர்த்துக்கொள்வதில்லை. நான் தம்பிதுரை என்று தான் என் பெயரை சொல்கிறேனே தவிர , 'தம்பிதுரை கவுண்டர் 'என சொல்வதில்லை. 

பிற மாநிலங்களில் பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் கூட சாதிப் பெயரை  தங்களுடைய பெயருக்குப் பின்னால் சாதியை  போட்டுக் கொள்கிறார்கள். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, கர்நாடகாவில் தேவகவுடா, தெலுங்கானாவில் சந்திர சேகர ராவ்..., மேற்கு வங்கத்தில் மம்தா  பானர்ஜி, உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் என பல தலைவர்களும் தங்களுடைய பெயருக்குப் பின்னால் சாதியை சேர்த்துக் கொள்கிறார்கள். ஏன் பட்டேல் என்பதையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.. ஏன்?குறிப்பாக மோடியே 'நரேந்திரன்' என்ற தனது பெயருக்குப்  பின்னால் மோடி என்று போட்டுக்கொள்கிறார். இப்படி பலரும் சாதியைச் சேர்த்துக்கொள்ளும்  நிலை பல மாநிலங்களில் இன்னும் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே இட ஒதுக்கீடு பெற்று மனிதன் மனிதாக வாழ வேண்டும் என்ற விழிப்பு உணர்வால் நாம் யாரும் சாதியை போட்டுக்கொள்வதில்லை" என்றார் 

தம்பிதுரையின் இந்தப் பேச்சு அரசியல் களத்தில் உற்று நோக்க வைத்துள்ளது.