`ஆய்வு மாணவரா, அடிமையா..?!' - பி.ஹெச்.டி பட்டம் பெற மாணவர்கள் படும் பாடு! #VikatanInfographics | The hardships faced by PhD scholars in India

வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (10/01/2019)

கடைசி தொடர்பு:18:04 (10/01/2019)

`ஆய்வு மாணவரா, அடிமையா..?!' - பி.ஹெச்.டி பட்டம் பெற மாணவர்கள் படும் பாடு! #VikatanInfographics

புனிதமயமாக்கப்படும் பேராசிரியர் - மாணவர் உறவுகளால், மாணவர்கள் சுதந்திரமாகச் செயல்படுவது தடைசெய்யப்படுகிறது. அது சிறப்பான ஆய்வுகள் வெளியாகாமல் இருப்பதில் முடிகிறது.

`ஆய்வு மாணவரா, அடிமையா..?!' - பி.ஹெச்.டி பட்டம் பெற மாணவர்கள் படும் பாடு! #VikatanInfographics

ராகேஷ் பி.ஹெச்.டி ஆய்வுப்படிப்பு மாணவர். தமிழகத்தின் பழைமையான பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வருகிறார். வேறொரு கல்லூரியில் முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு, பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி படிப்பைப் பயில கிராமத்திலிருந்து கிளம்பி வந்தவர். கல்வித்தகுதி முறையாக இருந்த போதிலும், பழைமையான பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்க அவருக்கு உதவியது அவருக்குத் தெரிந்த கார் டிரைவிங். ``இன்டர்வியூல கேள்வி எல்லாம் கேட்ட பிறகு, கார் டிரைவிங் தெரியுமா, லைசன்ஸ் இருக்கான்னு பேராசிரியர் கேட்டார். தெரியும்னு சொன்னேன்" என்பவர் இப்போது ஆய்வு மாணவராக இருப்பதோடு, தன் பேராசிரியருக்கு கார் ஓட்டுநராகவும் செயல்படுகிறார்; சம்பளம் எதுவும் இல்லாமல். 

ராகேஷ் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் பி.ஹெச்.டி ஆய்வுப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் நிலை இதுதான். பேராசிரியர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; மாற்றுக் கருத்துக்கு அனுமதி இல்லை. பேராசிரியர்களின் தனிப்பட்ட வேலைகளுக்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். சில இடங்களில், பேராசிரியரின் குடும்பத்தாரும் ஆய்வு மாணவர்களைக் கட்டுப்படுத்துவதைப் பார்க்க முடியும். இவற்றில் எதையும் எதிர்த்து நிற்க முடியாது. எதிர்த்தால் ஆய்வுப்பட்டம் பெற முடியாது அல்லது ஆய்வுப்படிப்பின் காலம் இன்னும் நீட்டிக்கப்படும். 

இந்தியாவில் பி.ஹெச்.டி ஆய்வு மாணவர் ஒருவரின் வாழ்க்கை என்பது ஓர் அடிமையின் வாழ்க்கை முறையோடு ஒத்தது. ஆய்வு தரும் மன அழுத்தங்களுடன் வெளிப்படையாகப் பேச முடியாத அளவுக்குப் பேராசிரியர்களின் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் பி.ஹெச்.டி ஆய்வு மாணவர்கள்.

பி ஹெச் டி ஆய்வு மாணவர்கள்

அகில இந்திய அளவில் தமிழ்நாடு பி.ஹெச்.டி மாணவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் நிற்கிறது. ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், பி.ஹெச்.டி ஆய்வுப்பட்டம் பெற்றவர்களில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. இளைஞர்களை அதிக அளவில் கொண்டுள்ள இந்தியாவில், இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆய்வு மேற்கொண்டும், தரமான ஆய்வுகள் உருவாகாமல் இருப்பதற்கான காரணம் இதுதான். 

இட ஒதுக்கீடு, கல்வித்தகுதி முதலான அடிப்படைகளில் மாணவர்கள் ஆய்வுப்படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது போல தெரிந்தாலும், வேறு காரணங்களே மாணவர்கள் தேர்வுக்கு அடிப்படையாக அமைகின்றன. ``முதுகலை படிப்பு முடிக்கும் போதே பேராசிரியர்கள் நம்மைக் கணித்து விடுவார்கள். அவர்களுக்குத் தோதாக இருந்தால், நமக்கு சீட் நிச்சயம். பல மாணவர்கள் பி.ஹெச்.டி, எம்.ஃபில் முதலான சீட்களுக்காகப் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியதாகிறது. கருத்தரங்குகளில் ஆய்வு சமர்ப்பிப்பதை விட, அதே கருத்தரங்குகளில் பேராசிரியரின் உத்தரவுக்கு அடிபணிந்து டீ காய்ச்சுவது, உணவு பரிமாறுவது முதலான வேலைகள் பி.ஹெச்.டி பட்டத்தை உறுதிசெய்யும்" என்கின்றனர் ஆய்வு மாணவர்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன், மதுரை கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைப் பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்த முயன்ற செய்தி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. எனினும் நிர்மலாதேவி விவகாரம், இப்படியான குற்றங்களில் சிறு உதாரணம் மட்டுமே. பி.ஹெச்.டி ஆய்வுப்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் ஆய்வு மாணவிகளுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் வெளி உலகுக்குத் தெரிய வருவதே இல்லை. ஆண் மாணவர்களுக்கு உழைப்பு ரீதியான சுரண்டல் என்றால், பெண் மாணவர்களுக்கு உழைப்பு மட்டுமன்றி, பாலியல் சுரண்டலும் நிகழ்கின்றன. 

சமீபத்தில், அமெரிக்காவின் மிசௌரி - கான்சாஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்தியப் பேராசிரியர் அஷிம் மித்ரா மீது குற்றம் சாட்டப்பட்டு, பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் நடத்தப்படும் இதழில் செய்தி வந்தது. பேராசிரியர் அஷிம் மித்ரா தன் ஆய்வு மாணவர்களைத் தனிப்பட்ட பணிகளுக்காகப் பயன்படுத்துவதாக அந்த இதழ் கூறியது. பேராசிரியர் அஷிம் மித்ரா அந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். அவரது ஆய்வு மாணவர்கள் யாரும் வெளிப்படையாக அவரைக் குற்றம் சாட்டுவதற்குத் தயாராக இல்லை என்பதால் அந்தச் செய்தி முடித்து வைக்கப்பட்டது.

இந்தியாவில் பி.ஹெச்.டி மாணவர்கள்

இந்தியாவில் இருக்கும் பேராசிரியர்களும், அமெரிக்கா வாழ் இந்தியப் பேராசிரியரும் இப்படி ஒரே மாதிரியாக மாணவர்களை நடத்துவதற்கான அடிப்படை காரணமாக இந்தியாவின் கலாசாரப் பின்புலம் உதவுகிறது. இந்தியாவின் சாதிய நிலவுடைமை கட்டுமானம் பேராசிரியர்கள் ஆய்வு மாணவர்களை அடிமைகளாக நடத்த வைக்கிறது. `மாதா, பிதா, குரு, தெய்வம்', `குரு சொல்லைத் தட்டக் கூடாது' முதலான கருத்தாடல்கள் தொடர்ந்து பேராசிரியர் - மாணவர் உறவுகளைத் தீர்மானிக்கின்றன.  

புனிதமயமாக்கப்படும் பேராசிரியர் - மாணவர் உறவுகளால், மாணவர்கள் சுதந்திரமாகச் செயல்படுவது தடைசெய்யப்படுகிறது. அது சிறப்பான ஆய்வுகள் வெளியாகாமல் இருப்பதில் முடிகிறது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி ஆய்வுப்படிப்பைப் படித்து வந்த ரோஹித் வெமுலா, மத்திய அரசின் அரசியல் அழுத்தங்களின் காரணமாக பல்கலைக்கழகத்தின் தண்டனைகளுக்கு உள்ளானார்; அதை எதிர்த்துப் போராடினார். அதன் நீட்சியாகத் தற்கொலை செய்துகொண்டார். 

இந்தியா முழுவதும் பட்டியல் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும், சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஆய்வுப்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் போது சாதி, மத ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். டெல்லி ஜே.என்.யூ.வில் தற்கொலை செய்து கொண்ட தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன், இன்று வரை என்ன ஆனார் என்பதே தெரியாமல், `காணாமல்' போன நஜீப் அகமது முதலானோர் இப்படியான ஒடுக்குமுறைகளுக்கு எடுத்துக்காட்டு.

சாதி, மத ரீதியில் ஒடுக்கும் பேராசிரியர்கள் ஒரு பிரிவு. மற்றொரு பிரிவு பேராசிரியர்கள் நிலக்கிழார்களாகவும், வள்ளல்களாகவும் தங்களைக் கருதிக்கொண்டு செயல்படுபவர்கள். ``எனக்குக் கீழ் இவ்வளவு தலித் மாணவர்கள் இருக்கிறார்கள்; இவ்வளவு சிறுபான்மை மாணவர்கள் இருக்கிறார்கள்" என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வதற்காகவே வள்ளல் தன்மையோடு நடந்துகொள்கிறார்கள் இவர்கள்.

ரோஹித் வெமுலா போராட்டம்

``எங்க பேராசிரியர் முதுகலை மாணவர்களின் வகுப்புக்குச் செல்ல மாட்டார். அதை எதிர்த்துக் கேள்விகேட்ட அந்த மாணவர்களைத் தாக்குவதற்காக எங்களை அடியாள்களாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்" என்று கூறுகிறார் தமிழகத்தின் பழைமையான பல்கலைக்கழகம் ஒன்றில் பி.ஹெச்.டி ஆய்வு மேற்கொள்ளும் மாணவர் ஒருவர். எல்லாப் பேராசிரியரும் தங்கள் ஆய்வு மாணவர்களை அடிமையாக நடத்துவதில்லை. பல நல்ல பேராசிரியர்களும் இருக்கிறார்கள். 

அரசுப் பல்கலைக்கழகங்களில் நிலைமை இப்படியாக இருக்க, தனியார் பல்கலைக்கழகங்கள் பி.ஹெச்.டி ஆய்வுப்பட்டங்களை விலைக்கு விற்கின்றன. ஒவ்வொரு படிப்புக்கும், பாடத்துக்கும் ஏற்றவாறு `ரேட் கார்ட்' இருக்கிறது. பேராசிரியரைச் சந்திக்காமல், இரண்டு ஆண்டுகளுக்குப் பணம் தந்துவிட்டால் போது, `முனைவர்' பட்டம் பெற்றுவிடலாம். 

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் செர்ஜி ப்ரின் என்ற இளைஞரின் பி.ஹெச்.டி ஆய்வுதான் இன்று உலகம் முழுவதும் அனைவரும் பயன்படுத்தும் `கூகுள்' சேவையாக மாறியிருக்கிறது.  

ஆனால், இந்தியாவில் ஆய்வுப்படிப்புகள் மிக மோசமான சூழலை அடைந்துள்ளன. இந்தியா முழுவதும் பேராசிரியர்களின் கைகளில் அகப்பட்டு, துயரங்களைப் பகிர முடியாமல், பரிதாபத்திற்குரிய நிலையில் வாழும் பி.ஹெச்.டி ஆய்வு மாணவர்களின் நிலையை ஆய்வுசெய்வதற்கு, நிச்சயம் ஐந்து ஆண்டுகள் போதாது. இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும். ஆய்வுப்படிப்புக்கான நல்லதொரு சூழல் உருவாக, அரசு தலையிட வேண்டும்; பேராசிரியர் - மாணவர் உறவுகளில் நிகழும் கலாசார அடிமைத்தனம் நீக்கப்பட வேண்டும்.            


டிரெண்டிங் @ விகடன்