பிற்படுத்தப்பட்டவர்களும், பின்தங்கியவர்களும்... 10 சதவிகித இடஒதுக்கீட்டில் இதைச் செய்தார்களா? | Reservation for 10 percent economically backward and what has been missed

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (12/01/2019)

கடைசி தொடர்பு:19:05 (12/01/2019)

பிற்படுத்தப்பட்டவர்களும், பின்தங்கியவர்களும்... 10 சதவிகித இடஒதுக்கீட்டில் இதைச் செய்தார்களா?

எட்டு லட்சத்துக்கும் குறைவாக வருடாந்திர வருமானமும், ஐந்து ஏக்கர் நிலமும் 1000 சதுர அடிக்குமான சொந்த வீடும் உடைய உயர்வகுப்பு மக்கள் இந்த நாட்டில் 90 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள் என்றால் அவர்களில் 10 சதவிகிதம் என்பதற்கான அளவீடு என்ன?

பிற்படுத்தப்பட்டவர்களும், பின்தங்கியவர்களும்... 10 சதவிகித இடஒதுக்கீட்டில் இதைச் செய்தார்களா?

வேர்கள் விரவி விழுதுகள் படர்ந்திருக்கும் ஆலமரத்துக்கு ஆதார விதை ஒன்றுதான் இருக்க முடியும். இந்திய அரசியல் சாசனத்தின்  அப்படியான ஆதாரம்தான் சமூக நீதி மற்றும் கல்வி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக் கொள்கை. அதனைக் கருத்தில் கொண்டுதான் ஜனநாயகத்தின் மற்ற எந்தச் சட்டமும் இதுநாள்வரை வரையறுக்கப்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கை  வரையறுக்கப்பட்ட போது அது சீர்திருத்தச் செயலாக்கமாகக் கொள்ளப்பட்டது (affirmative action). தற்போது மத்தியில் பி.ஜே.பி. அரசு, பொதுப்பிரிவினரில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு என்ற புதிய சட்டத் திருத்தத்தை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் நிறைவேற்றியுள்ளது. இது அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக் எனக் கருதப்பட்டாலும் அரசியல் சாசனத்தின் சீர்திருத்தச் செயலாக்கத்துக்குப் புறம்பானதாக அமைந்துள்ளது.

இந்தப் பொருளாதார இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்துவதற்கான அரசியல் சட்டத் திருத்த மசோதா, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எந்தவித முன்னறிவிப்போ அல்லது கமிட்டி ஆய்வுக்கோ உட்படுத்தப்படாமல் பல கட்சிகளின் ஆதரவும், சில கட்சிகளின் எதிர்ப்புடனும் அவசரகதியாக நிறைவேற்றப்பட்டது. இரண்டு அவைகளிலும் பெரும்பாலான கேள்விகளுக்கு அரசு தரப்பு பதில் சொன்னாலும், இந்த சட்டத் திருத்தம் உச்ச நீதிமன்ற ஆய்வுக்கு உள்ளாகும் நிலையில் அவர்கள் எழுப்பக் கூடிய கேள்விகள் பற்றிய விவாதத்தில் மௌனமாகவே இருந்தனர்.

இடஒதுக்கீட்டில்

உச்ச நீதிமன்றம் ஏன் கேள்வி எழுப்பும்? 

உயர்சாதி மக்களுக்கான இடஒதுக்கீட்டு முறையை முதலில் 1991-ல் அப்போதைய பிரதமராக இருந்த காங்கிரஸ் கட்சியின் நரசிம்ம ராவ்தான் செயல்படுத்தினார். பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய உயர்சாதி மக்களுக்கு அரசுப் பணிகள் மற்றும் பொது சேவைத் துறையில் 10 சதவிகித இடஒதுக்கீடு தரப்படும் என்று அறிவித்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் அவருடைய இந்த ஒதுக்கீட்டை உடனடியாக முடக்கியது. வறுமை என்பது மட்டுமே ஒடுக்கப்படுவதற்கான அல்லது பிற்படுத்தப்படுவதற்கான அளவீடு இல்லை என்றும் பொருளாதார அடிப்படையில் சாதியப் பிரிவுகளைக் கட்டமைத்து இந்த ஒதுக்கீட்டைத் தரமுடியாது என்று கூறியது. 

பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள், எப்படி?

2014-ல் பொதுத் தேர்தலுக்கு முதல் நாள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஒன்பது மாநிலங்களில் இருக்கும் ஜாட் சமூகத்திற்கு இதரப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இட ஒதுக்கீடு அளித்தது. மண்டல் கமிஷன் அறிக்கை மற்றும் 1991-ல் நரசிம்மராவ் கொண்டு வந்த இடஒதுக்கீடை அடுத்துத் தொடரப்பட்ட இந்திரா சஹானி வழக்குத் தீர்ப்பை ஆதாரமாகக் கொண்டு தேசியப் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் உருவாக்கிய கொள்கை வரையறைகளை, அவை மீறுபவையாக இருந்தன. இந்தக் கொள்கை வரையறையின்படி 3:2:1 என்கிற விகிதத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் படிநிலை, கல்விநிலை மற்றும் பொருளாதாரநிலை இது கணக்கிடப்படும். ஒவ்வொரு நிலைக்கும் நிர்ணயிக்கப்பட்ட தனித்தனிக் குறியீடுகள் உண்டு.

இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

கொள்கைக்கு எதிரானதாக இருப்பதை அடுத்து இந்தியச் சமூக அறிவியல் ஆய்வுக் கழக உதவியுடன் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. ஆய்வின்படி அவர்கள் சமூகநிலையில் பின் தங்கியவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது. அவர்கள் கல்வி அளவிலும் பின் தங்கியவர்கள் இல்லை என்றும். அரசுத்துறைப் பணிகளிலும், சேவைத் துறையிலும், கல்வி நிறுவனங்களிலும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த போதுமான நபர்கள் இருக்கிறார்கள் என்கிற விவரத்தையும் அந்தக் கருத்துக் கணிப்பு சொன்னது. இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அந்த இடஒதுக்கீட்டை முடக்கியது.

இந்திரா சஹானி வழக்குத் தீர்ப்புதான், பின் தங்கியவர்கள் என்றால் யார்? அவர்கள் எந்த அடிப்படையில் பின் தங்கியவர்கள் என்பதை நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்ய ஏதுவாக இருந்தது. அதே தீர்ப்பைத்தான் தற்போதைய 10 சதவிகித இடஒதுக்கீட்டிலும் பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

அரசியல் சாசனத்தின் உட்பிரிவு 15(4)ன் படி, அரசியல் சாசனப் உட்பிரிவு 29-ன் கீழ்வரும் உட்பிரிவு15 அல்லது வகைமை (2) ஆனது, எந்த வகையிலும் சமூக அல்லது கல்வியின் அடிப்படையில் பின்தங்கிய மக்களுக்கும் பட்டியலினச் சமூகத்துக்கும் பட்டியல் பழங்குடிகளுக்கும் அவர்களின் மேம்பாட்டுக்காக அரசு அளிக்கும் சலுகைகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. 

அரசியல் சாசன உட்பிரிவு 16ன் படி: சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசுப் பணிகளில் போதிய அளவு இல்லை என்கிற அடிப்படையில் மத்திய அரசால் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்குத் தரப்படும் இடஒதுக்கீட்டை இந்த உட்பிரிவு எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது

உட்பிரிவு 15 (4)  சமூக அல்லது கல்வியின் அடிப்படையில் மட்டுமே என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டாலும், பொருளாதார அடிப்படையில் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எங்கும் குறிப்பிடவில்லை. இந்த உட்பிரிவைத்தான், தற்போது மத்திய பி.ஜே.பி. அரசு தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளது. 

இதில் என்ன தவறுகிறது? 

இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான வரையறையை மண்டல் கமிஷனும் இந்திரா சஹானி வழக்குத் தீர்ப்பும் அறுதியிட்டது போல இந்த பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய உயர்சாதி மக்களுக்கான வரையறையை அரசு எந்த கமிஷன் கொண்டு அறுதியிட்டது? 

எட்டு லட்சத்துக்கும் குறைவாக வருடாந்திர வருமானமும், ஐந்து ஏக்கர் நிலமும் 1000 சதுர அடிக்குமான சொந்த வீடும் உடைய உயர்வகுப்பு மக்கள் இந்த நாட்டில் 90 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள் என்றால் அவர்களில் 10 சதவிகிதம் என்பதற்கான அளவீடு என்ன? எட்டு லட்சத்துக்கும் கீழ் வருடாந்திர வருமானம் இருக்கும் எல்லோரையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியாது. அரசு வேலைகளிலும், கல்வித் தளங்களிலும் இவர்களுக்கு ஒதுக்கீடு இருக்கும் என்னும் நிலையில் அந்த அளவீட்டை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம். 

புதிய இடஒதுக்கீட்டில் பிரச்னை கஜேந்திர பாபுஇந்த இடஒதுக்கீடு மற்றும் அளவீடுச் சிக்கல்கள் தொடர்பாக பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் தலைவர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசியதன் சில சாராம்சங்களை இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது “முதலில் இந்த நோக்கம் ஏழைகளுக்கானது என்னும் நிலையில், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும்.சுயநிதிப் பிரிவுகளை அகற்ற வேண்டும். ஒரு ஏழை மாணவர் அரசுக் கல்லூரியில் பட்டய ஆராய்ச்சிப்படிப்பு முடிக்க 5,000 ரூபாய் போதுமானது. ஆனால் சுயநிதிக் கல்லூரிகளில் அது சாத்தியமா? இதைச் சரிசெய்வதை விட்டுவிட்டு நாங்கள் தனியாரையும் ஊக்கப்படுத்துவோம். அதே சமயம் ஏழைகளை மீட்க இடஒதுக்கீடு கொடுப்போம். அதனால் அவர்கள் நிலை மாறிவிடும் என்பது என்ன வகையிலான அளவீடு? இரண்டாவது, இடஒதுக்கீட்டின் தத்துவம் என்ன? 

பலநூற்றாண்டுகளாக இந்தியாவில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனைத்து வகையிலான கல்வியையும் கற்கலாம் என்கிற உரிமை இருந்தது. அவர்கள் மட்டுமே ஆசிரியராக இருக்கத் தகுதியானவர்களாக இருந்தார்கள். ஆனால், இது தவறு என்பதால் காலங்காலமாக தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்துக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தேவை என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. அதுதான் அரசியல் சாசனம். இதனைச் சீர்திருத்த நடவடிக்கை (affirmative action) என்பார்கள். இன்றைக்கும் துப்புரவுத் தொழிலை சமூகத்தின் குறிப்பிட்ட மக்கள்தான் செய்கிறார்கள். துப்புரவுத் தொழிலை குறிப்பிட்டச் சமூகம் மட்டும்தான் செய்ய வேண்டும் என்கிற இயற்றப்படாத சட்டம் மாற்றப்பட்டு சமூகத்தின் உயர் பிரிவாகக் கூறிக் கொள்பவர்களும் துப்புரவுத் தொழிலில் ஈடுபடட்டும், செருப்பு தைக்கும் தொழில் செய்யட்டும். சாதிய வன்மத்தை உயர்த்திப் பிடிக்கும் ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டம் இயற்றப்படட்டும். அதுவரை இடஒதுக்கீட்டுத் தத்துவத்தில் மாற்றம் இருக்கக் கூடாது” என்றார். 

பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு என்னும் நிலையில் மேலே குறிப்பிட்டிருக்கும் தொழில்களிலும் அவர்களுக்கான வேலைவாய்ப்பு இருக்குமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்