``புத்தகமும் எழுத்தும் அவரது பெருங்காதல்..!"- `பாபாசாகேப் அருகிருந்து' ஒரு பார்வை #BookReview | A review on the tamil translation of the book, ambedkar:the attendant details

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (29/01/2019)

கடைசி தொடர்பு:11:29 (29/01/2019)

``புத்தகமும் எழுத்தும் அவரது பெருங்காதல்..!"- `பாபாசாகேப் அருகிருந்து' ஒரு பார்வை #BookReview

என் மக்கள் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விழித்துக்கொள்ளும் வரை எனக்கு உறக்கமில்லை' என்கிறார். உலகத்தில் ஒடுக்கப்படும் எந்த ஒரு உயிரும் விழித்துக்கொள்ளும் வரை அம்பேத்கருக்கு உறக்கமில்லைதான்.

``புத்தகமும் எழுத்தும் அவரது பெருங்காதல்..!

ம்பேத்கரின் தனிமனித வாழ்வைப் பதிவுசெய்யும் Ambedkar:the attendant details என்கிற புத்தகத் தொகுப்பு, தமிழில் `பாபாசாகேப் அருகிருந்து' என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

உணவு, உடை, இருப்பிடம் போல மனிதனுக்குக் கல்வியும் அத்தியாவசியம் என்று எண்ணும் அனைவருக்குமே அம்பேத்கர் ஆதர்சம். அவர் கல்வி உரிமையைச் சுவாசித்தார். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான வழி, கல்வி மட்டுமே என்பதில் அவர் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். வட்டக் கண்ணாடி, கசங்காத குர்தா அல்லது நீல நிறக் கோட்டு, சூட்டு எனக் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களிலும் ஓவியங்களிலும் நாம் பார்த்துப் பழகிய பீமாராவ் அம்பேத்கர் என்னும் அடையாளம் தன்னைப் பற்றிய வரலாற்றோடு முரண்பட்டிருந்ததா?.தலைப்புச் செய்திகளுக்கும் வரலாற்றுக்கும் அப்பால் அவர் எப்படியானவர்?. அதற்கான சாட்சியம், ஆங்கிலத்தில் சலிம் யூசுப்ஜியால் தொகுக்கப்பட்ட `Ambedkar: The attendant details' என்னும் புத்தகம். அம்பேத்கரைத் தனிப்பட்ட முறையில் அறிந்த, அவரோடு நெருக்கமாக இருந்தவர்கள், அவரைப் பற்றிய தங்களுடையக் குறிப்புகளில் எழுதியதன் தொகுப்பு. இதைத் தமிழில் `பாபாசாகேப் அருகிருந்து' என்கிற தலைப்பில் எழுத்தாளர் பிரேமா ரேவதி மொழிபெயர்த்திருக்கிறார். 

பிரேமா ரேவதிநாட்டின் 70-வது குடியரசு தினத்தைக் கொண்டாடி முடித்திருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதை அதிகாரபூர்வமாகக் கொண்டாடும் தினம். அதுகுறித்தான அம்பேத்கரின் மனநிலை, சட்டம் இயற்றப்பட்ட காலத்திலும் அதற்குப் பிறகுமாக புத்தகத்தில் இரண்டு இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரது `பாகிஸ்தான்' நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை மாற்றி எழுதிய தேக்கர்ஸ் பதிப்பக ஆலோசகர் யு.என்.ராவ், `அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதம வடிவமைப்பாளராக வரலாறு என்றுமே அவரை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும்' என்கிறார். மற்றொரு பகுதியில் எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்துக்கும் அம்பேத்கருக்குமான உரையாடல் இடம்பெறுகிறது. அதில் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் சில தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார் அவர். தான் குழுவின் உறுப்பினர் மட்டுமே என்று பதிலளிக்கிறார் அம்பேத்கர். `அப்படியென்றால் நீங்கள் சிங்கங்களின் முன்னால் ஆடு ஆகிவிட்டீர்களா?' எனக் கேட்கவும், `இல்லை முதலில் நான் பெருமளவுக்குக் கத்தினேன். இப்போது நான் கர்ஜித்துக் கொண்டிருக்கிறேன்' எனக் குறிப்பிடுகிறார். சட்ட உருவாக்கத்தின் காலங்களில் பல இரவுகளில் அவர் தன் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறார். அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர், நள்ளிரவில் அம்பேத்கரைச் சந்தித்ததாக ஒரு நிகழ்வு புத்தகத்தில் இடம்பெறுகிறது. `நேரு, காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தேன்.ஆனால், அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், தாங்கள் இந்த நேரத்திலும் விழித்துக்கொண்டிருக்கிறீர்களே எனக் கேட்கிறார் அந்த அமெரிக்கர். அம்பேத்கர், `நேருவும், காந்தியும் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுடைய மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள். அதனால் அவர்களுக்கு உறக்கம் சாத்தியப்படுகிறது. ஆனால், என் மக்கள் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விழித்துக்கொள்ளும்வரை எனக்கு உறக்கமில்லை' என்கிறார். உலகத்தில் ஒடுக்கப்படும் எந்த ஒரு உயிரும் விழித்துக்கொள்ளும்வரை அம்பேத்கருக்கு உறக்கமில்லைதான். 

பாபாசாகேப் அம்பேத்கர் - மகாத்மா காந்தி

மேலும், அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையிலான அரசியலும் உறவும் புத்தகம் முழுவதும் பேசப்படுகிறது. `நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் காந்தி இல்லை விவேகானந்தர்தான்' என்பது அவர் நிலைப்பாடு. தம் மக்களுக்கு காந்தி துரோகம் இழைத்துவிட்டதாகச் சொல்கிறார். தேசபக்தியின் திசையில் காந்தியைவிட, தான் 200 மைல் முன்னிருப்பதாகச் சொல்கிறார். காந்தியைப் பின்பற்றும் எவரையும் கடுமையாக விமர்சிக்கிறார். இருந்தும் அவருக்குக் காந்தியின் மீது ஒரு மென்மையான பார்வை இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள். அம்பேத்கரை சட்ட உருவாக்கக் குழு உறுப்பினராகப் பரிந்துரைத்தவர் காந்திதான் என்கிற வரி அதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து, முதன்முறையாக வெளிநாடு சென்று படித்துவிட்டு வந்த ஒருவர் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டாலும் கரகோஷத்தோடு வரவேற்கப்பட்டாலும் அவரைச் சமூகம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. வேலை கிடைப்பது சிக்கலாக இருக்கிறது. கிடைத்த வேலையிலும் சம்பளம் குறைவு. படிப்பறிவு இல்லாத அவரின் மனைவி ரமாபாய், அந்த சொற்ப பணத்தைக் கொண்டு எப்படியோ வீட்டை நிர்வகிக்கிறார். அம்பேத்கரின் மனைவியாக அவரும் சமூகத்தில் பல பரிகாசங்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்கிறார். இலக்கு ஒன்றாக இருப்பவர்களுக்கு இடர்கள் கவனச் சிதறலை ஏற்படுத்துவதில்லை. சம்பளம் குறைவாக இருந்தாலும் தனக்கான புத்தகங்களை வாங்குவதில் எவ்வித சமரசமும் இல்லாதவர் அம்பேத்கர். அவருடைய தனிப்பட்ட பேரார்வங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாத வகையில்தான் ரமாபாயும் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டி இருந்தது. இத்தகைய மனைவியின் மீது அவர் எத்தகைய காதல் கொண்டிருந்தார் என்பதை புத்தகத்தின் ஒரு பகுதி விவரிக்கிறது. `எங்களுடைய முதல் குழந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தது. வறுமை காரணமாக, எங்களால் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. நாளடைவில் ரமாபாயின் உடலும் நலிவடைந்தது. மற்றொரு குழந்தை பிறந்தால் அதைப் பெற்றுக்கொள்ளும் வலிமை அவருக்கு இல்லை என டாக்டர் சொல்லிவிட்டார். அதனால் அதன் பிறகு நாங்கள் இருவரும் உறவு கொள்ளாமல் வாழ்ந்தோம். அவள் அத்தனை பலவீனமாக இருந்தாள். அவளைக் காப்பாற்ற என்னுடைய சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்தேன். ஆனாலும், அவள் இந்த பூமியில் இருந்து தவறிவிட்டாள்" என்று கண்ணீர் மல்க உருகியிருக்கிறார். அந்தச் சமயத்தில் பாபாசாகேப் ஒரு குழந்தையைப் போல அழுததை இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது.

அலிப்பூர் வீட்டில் தனது நூலகத்தில் அம்பேத்கர்

சட்ட அமைச்சராகவே பதவி வகித்திருந்தாலும் தனக்கு 22,00,000 ரூபாய் வரை கடன் திருப்ப வேண்டி இருப்பதாக ஓரிடத்தில் சொல்கிறார் அம்பேத்கர். நாட்டின் மிகச் சிறந்த நூலகத்தின் உரிமையாளருக்கு இந்தக் கடன் சுமை இருந்திருக்க அத்தனை வாய்ப்புகளும் இருக்கின்றன. தன் வருமானத்தில் பத்து சதவிகிதம் புத்தகங்களுக்காகச் செலவிட வேண்டும் என்கிறார். புத்தகங்களைப் பொறுத்தவரையில் வருமானத்தைக் கடந்து செலவிடவும் அவர் தயங்கியிருக்கவில்லை. சில சமயம் 200 ரூபாய்க்குக்கூட புத்தகங்களை வாங்கியிருக்கிறார். தங்க நிற எழுத்துகளை உடைய குரான் புத்தகத்தை ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார். இப்படி அந்தப் புத்தகக் காதலனின் நூலகத்தில் மொத்தம் 45,000 நூல்கள் இருந்ததாகப் பதிவு செய்கிறார்கள் அவருக்கு அருகிலிருந்தவர்கள். வெளிநாட்டில் கிடைக்காத சில அரிய ஆவணங்கள்கூட அவரின் நூலகத்துக்கு வந்து எடுத்துச் செல்லப்பட்டதாகப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாபாசாகேப் நூலகத்தில் இருந்த புத்தகங்கள், அவற்றை அவர் வாசிக்கும் முறை. புத்தகங்கள் மற்றும் செய்தி சேகரிப்புகள் தொடர்பாக அவரின் ஞாபகத்திறன் பற்றிய குறிப்புகள் என அத்தனையும் வியக்கத்தக்க வகையிலேயே இருக்கின்றன. `புத்தகம் படிப்பதும் எழுதுவதும் அவருக்குப் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அவருடைய சர்வத்தையும் ஆகர்ஷித்த பெருங்காதல்' என்னும் ஒற்றைவரியை பலமுறை கோடிட்டு ரசிக்கலாம். மொழிபெயர்ப்பாளருக்குப் பாராட்டுகள். 

புத்தகங்களும் எழுத்தும் பிடித்தவருக்கு எழுதுகோலும் கொள்ளைப் பிரியம். தடிமனான ஃபவுண்டைன் பேனாக்களால் அவரது எழுதும் அறை நிரம்பியிருந்தது. பேனாக்கள் பிடித்த கரங்கள் சமையலறைக் கரண்டியையும் பிடித்து தனக்கும் தன்னைப் பார்க்க வந்தவர்களுக்கும் சமைத்திருக்கிறது. ஏழு வகைப் பதார்த்தங்களை தன்னைப் பார்க்க வந்த அன்னை மீனாம்பாளுக்கும் அவருடன் வந்தவர்களுக்குமாகச் சமைத்திருக்கிறார் அம்பேத்கர். புத்தகத்தின் ஆங்கில வடிவத்தின் அட்டைப்பக்கத்தில் ஆண்கள் சூழ அமர்ந்திருக்கும் அம்பேத்கர், தமிழ் மொழிபெயர்ப்பின் அட்டைப்படத்தில் தலித் பெண் செயற்பாட்டாளர்கள் சூழ வெள்ளைக் கோட்டு, சூட்டு அணிந்தபடி அமர்ந்திருக்கிறார். உண்மையில் கல்வி அறிவின் மீது பேரார்வம் உடைய தலித் பெண்களைச் சந்திப்பதை அவர் வழக்கமாக்கிக் கொண்டார். பெண்களால்... பெண்களுக்குக் கொடுக்கப்படும் கல்வியால் அதன் வழியாக உருவாக்கப்படும் சமூகத்தால் எதையும் மாற்ற முடியும் என்கிற அசாத்திய நம்பிக்கை அவருக்கு இருந்திருப்பது அவரது வாழ்வியலைப் படிப்பதில் புலனாகிறது. பெண்கள் கல்வி, பெண்கள் மீதான அவரது நம்பிக்கை எனப் தொகுப்பில் பேசப்படுவதால், அம்பேத்கர் குறித்த இன்னும் சில தலித் பெண்களின் பார்வையும் சலீம் யூசுப்ஜியின் இந்த தொகுப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சிறு நெருடல் மட்டும் ஏற்படுகிறது.

ஒரு முறை கந்தலான ஆடை அணிந்த சில பெண்கள் நாக்பூரில் அவரைச் சந்திக்க வருகின்றனர். அவருக்காகச் சாமந்தி மாலை ஒன்றைக் கோத்து எடுத்து வருகிறார்கள் அவர்கள். அத்தனை வறுமையானவர்கள், அந்தச் சாமந்தி மாலைக்காக எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்று நெகிழ்கிறார். அப்போது அவர் சொன்ன வாசகம் உரிமைக்காகப் போராடும் எவரும் நெஞ்சில் ஏந்தியிருக்க வேண்டியது. `நான் உங்களுக்குச் சத்தியம் செய்து கொடுக்கிறேன். நான் என்னுடைய கல்வியை முயன்று பெற்றது போலவே உங்கள் குழந்தைகளும் கல்வி பெற்று முன்னேற வழிசெய்வேன். நீங்கள் அமைதியான, திருப்தியான, மாண்பான வாழ்வைப் பெற என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன். இதை என்னால் செய்ய முடியாமல் போனால் நான் ஒரு துப்பாக்கியால் என்னை மாய்த்துக் கொள்வேன்!". இந்த வார்த்தைகளை உச்சரித்தவர், தற்போது இருந்திருந்தால், கல்வி உரிமை பறிக்கப்பட்டதால் தன்னை மாய்த்துக்கொண்ட அனிதாவுக்காக எப்படிக் கொதித்து எழுந்திருப்பார் என்கிற சிந்தனையைத் தவிர்க்க முடியவில்லை. தனக்குக் கிடைத்த அதே உரிமை பிறருக்கும் கிடைக்கும்வரை விடுதலை என்பது முழுமை அடைவதில்லை. இதுதவிர 1937-ல் பம்பாய் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவர் `மனிதன்' சின்னத்தில் வேட்பாளராக நின்றிருக்கிறார். சமூகம் மறந்த மனிதர்களைப் பற்றிச் சிந்தித்தவர், வேறு என்ன பொருத்தமான சின்னத்தைத் தேர்ந்தெடுத்துவிடக்கூடும்?. (மனிதன் சின்னத்தை வேறு எவரும் ஓட்டுச் சின்னமாகத் தேர்ந்தெடுத்ததாக தேர்தல் ஆணையப் பதிவுகளும் இல்லை, இருந்தால் தெரியப்படுத்தவும்). 

 தனது ராஜகிருஹா இல்லத்தில் குடும்பத்துடன் அம்பேத்கர்

இந்தக் குறிப்புகள் தவிர, பிடித்துச் சமைப்பது, முள்ளங்கி வெந்தயக் கீரை எனப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவது, தாவரங்களின் அறிவியல் பெயரைப் பிசகாமல் சொல்வது, கணக்கில் பலவீனம், வயலின் இசைப்பது, லுங்கி அணிவது, உரத்துச் சிரிப்பது, அவ்வப்போது உச்சகட்டமாக எழும் கோபம், அவரிடம் இருந்த பூனை, நாய்கள் என அம்பேத்கரின் அறியப்படாத வாழ்க்கைப் பக்கங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.  

 

`அறம் கொண்டாட்டத்தோடு இருக்குமா? இருக்கும். கொள்கையைக் கொண்டாட்டமாக ரசித்து வாழ்ந்திருக்கிறது ஒரு பெருவாழ்வு' என்கிற உள்வாங்குதலோடு நிறைவடைகிறது புத்தகம்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்