யாரைக் குறிவைக்கிறது ஐ.டி ரெய்டு? | Tax evasion probe IT raid 74 places in Tamil Nadu

வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (29/01/2019)

கடைசி தொடர்பு:16:17 (29/01/2019)

யாரைக் குறிவைக்கிறது ஐ.டி ரெய்டு?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ரெய்டுகள் சூழ் மாநிலமாக மாறிவிட்டது தமிழகம். புதிய ஆண்டின் முதல் ரெய்டு ஆரம்பமாகிவிட்டது. வணிகம் மற்றும் பிரபல ஜவுளி நிறுவனங்களை குறி வைத்து களமிறங்கியிருக்கிறது வருமான வரித்துறை. வணிக நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் வீடுகள் என மொத்தம் 74 இடங்களில் சோதனை நடத்தியிருக்கிறது வருமான வரித் துறை.

ஐ.டி.ரெய்டுஜி.எஸ். ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம், லெஜென்ட் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகக் கண்டறியப்பட்டு, அந்த நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. `பெரம்பூரில் ஒரு தி.நகர் ரங்கநாதன் தெரு' என்ற அடைமொழியோடு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது ரேவதி ஸ்டோர். இந்த நிறுவனம் நகைக்கடை, ஜவுளிக்கடை, பர்னிச்சர், சூப்பர் மார்கெட் என விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தைக் குறிவைத்து சோதனைகள் நடந்திருக்கின்றன. இதேபோல 
தி.நகர், பாடி பகுதிகளில் உள்ள சரவணா ஸ்டோர் கடைகளும் சோதனைக்கு உள்ளாகியிருக்கின்றன. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் வீடுகளும் தப்பவில்லை. வரி ஏய்ப்பு மட்டுமல்லாது ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் முறைகேடு தொடர்பாகவும் வருமானவரித் துறை தொடர்ந்து ஆய்வு செய்து வந்த நிலையில்தான் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டிருக்கிறதாம்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி இறுதியிலோ மார்ச் முதல் வாரத்திலோ தேர்தல் தேதியைத் தேர்தல் கமிஷன் அறிவிக்கலாம். அதற்கு முன்பே அரசியல் கட்சிகள் களமிறங்கத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இப்படித் தயாராகும் கட்சிகளுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள், அந்தக் கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்குப் பணம் தருவதை மட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவும் இந்த ரெய்டுகள் நடத்தப்படுவதாக உள் விவகாரங்களை அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.