``அமைச்சர் நோட்டீஸ் வாங்குவாரா, இல்லையா?” - டெண்டர் முறைகேடு வழக்கில் நீதிபதிகள் அதிரடி | submit first preliminary enquiry report court order to DVAC

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (29/01/2019)

கடைசி தொடர்பு:20:40 (29/01/2019)

``அமைச்சர் நோட்டீஸ் வாங்குவாரா, இல்லையா?” - டெண்டர் முறைகேடு வழக்கில் நீதிபதிகள் அதிரடி

அமைச்சர் மீதான ஊழல் வழக்கில் முதல்கட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அமைச்சர் வேலுமணி

மைச்சர் வேலுமணி மீதான ஊழல் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்த வழக்கு விசாரணையில் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

  2014 -2015 உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது சென்னை, கோவை மாநகராட்சிகளில் நடந்த ஒப்பந்தங்களில் முறைகேடு செய்திருப்பதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டியது. கே.சி.பி இன்ஜினீயர்ஸ் லிமிடெட், செந்தில் அண்ட் கோ, வரதன் இன்பராஸ்ட்ரெக்சர் கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்களுக்கு அமைச்சர் விதிகளை மீறி ஒப்பந்தங்களை வழங்கியதாகவும், இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியது. அதுவும் குறிப்பாக கே.சி.பி என்ற நிறுவனம். அமைச்சருக்கு நெருக்கமானவருடைய  நிறுவனம் ஆகும். அவர்தான் ராஜன் சந்திரசேகர்.

அமைச்சர் வேலுமணிக்கு நெருங்கியவர் மட்டுமல்லாமல், கோவை மாவட்ட அ.தி.மு.க இளைஞர் அணி அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் `நமது அம்மா’ பத்திரிகையின் பப்பளிஷரும் ஆவர். இப்படி நெருக்கமானவருக்கு பலவகையிலும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர் முறைகேடு செய்துள்ளார் என்று கூறியிருந்தது அறப்போர் இயக்கம்.

அறப்போர் இயக்கம்

இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் தெரிவித்திருந்தது. அந்தப் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தாதையடுத்து நீதிமன்றத்துக்குப் போனது அறப்போர் இயக்கம். தற்போது அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக 'முதல் கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக' தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் வரும் மார்ச் 28-க்குள் முதல் கட்டவிசாரணை அறிக்கையைச் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த நிலையில் இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், அமைச்சர்  வேலுமணியின் ஒப்பந்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பியிருந்தோம். அவர்கள் விசாரணை நடத்தாத நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கின் விசாரணையில்தான் முதல்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. இந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கின் விசாரணையின்போது எங்கள் தரப்பில் இருந்து வாதங்களை வைத்திருந்தோம். அதில் அமைச்சரின் ஊழல் குறித்து அவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். குறிப்பிட்ட முகவரியில் அமைச்சர் வேலுமணி இல்லை என்று அந்தத் தபால் திரும்பி வந்தது. அதன் பின்னர், நேரடியாகவும் கொடுக்க முயற்சி செய்தோம். அந்த பிரைவேட் நோட்டீஸையும் வாங்காமல் திருப்பி அனுப்பி விட்டார். இது குறித்து நீதிபதிகளிடம் தெரிவித்த நிலையில், அதைக் கேட்ட நீதிபதிகள் நோட்டீஸ் வாங்குவாரா, இல்லையா? சப்ஸ்டியுஷன் சர்வீஸ் செய்ய உத்தரவிடவா என்று கேட்டுவிட்டு சப்ஸ்டியுஷன் சர்வீஸுக்கு (செய்தித்தாள் போன்ற பொது வெளியாக நோட்டீஸை கொடுக்க) உத்தரவிட்டுள்ளனர்’’ என்றார் ஜெயராம் வெங்கடேசன். 

.