டி.ஹெச்.எஃப்.எல் மீது ரூ. 31,000 கோடி கடன் மோசடி புகார்! ஏன், எதற்கு? | Cobrapost accuses DHFL promotors of siphoning off Rs 31,000 crore

வெளியிடப்பட்ட நேரம்: 09:27 (31/01/2019)

கடைசி தொடர்பு:09:27 (31/01/2019)

டி.ஹெச்.எஃப்.எல் மீது ரூ. 31,000 கோடி கடன் மோசடி புகார்! ஏன், எதற்கு?

டிஹெச்எஃப்எல் நிறுவனம், மோசடி பணத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பங்குகளாகவும், சொத்துகளாகவும் முதலீடு செய்துள்ளதோடு, இலங்கையில் கிரிக்கெட் அணி ஒன்றையும் விலைக்கு வாங்கியுள்ளது. மேலும், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தாராளமாக நன்கொடையும் வாரி வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

பிரபல வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான டிஹெச்எஃப்எல்,  ரூ.31,000  கோடி நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், இவ்வாறு மோசடி மூலம் சுருட்டப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பங்குகள் மற்றும் சொத்துகளாக முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் 'கோப்ரா போஸ்ட்' இணையதளம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்கு விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 

டிஹெச்எஃப்எல்

`கோப்ரா போஸ்ட்' என்ற ஆங்கில இணையதளம், கடந்த காலங்களில் வெளியிட்ட பல்வேறு புலனாய்வு தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அந்த இணையதளம் தற்போது திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (டிஹெச்எஃப்எல்) என்ற வீட்டுக் கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனம்,  32 வங்கிகளில் கடன்பெற்று மேற்கூறிய நிதி மோசடியை செய்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளது. 

பன்னாட்டு வங்கிகள், பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பினாமி பெயர்களிலும், தொழில் முறை பங்குதாரர்கள் பெயரிலும் கடனாக பெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை, டிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் பிரதான பங்குதாரர்களான கபில் வதாவன், அருணா வதாவன் மற்றும் தீரஜ் வதாவன் ஆகிய 3 பேருக்குச் சொந்தமான ஆர்.கே.டபுள்யோ டெவலப்பர்ஸ், ஸ்கில் ரிலேட்டர்ஸ் மற்றும் தர்ஷன் டெவலப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குத் திருப்பி விட்டுள்ளது. இந்த 3 நிறுவனங்களுமே, ஷெல் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் போலி கம்பெனிகள் எனக் கூறப்படுகிறது. ஷெல் நிறுவனங்கள் என்றால் எந்த ஒரு வர்த்தகமும் தொழிலும் நடக்காமல் நிதிமுறைகேடுகள் செய்வதற்கென்றே தொடங்கப்பட்ட நிறுவனங்களாகும். 

இந்த நிறுவனங்கள் மூலம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பங்குகளாகவும், சொத்துகளாகவும் முதலீடு செய்துள்ளது டிஹெச்எஃப்எல். இந்த மோசடி பணத்தில் இலங்கையில் கிரிக்கெட் அணி ஒன்றை விலைக்கு வாங்கியதும் அடக்கம்.   இதில் இன்னொரு திருப்பமாக, மோசடி செய்து சுருட்டிய பணத்தில்,  பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு டிஹெச்எஃப்எல்  குழுமம் சார்பில் நன்கொடை வாரி வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் பாஜகவுக்கு மட்டும் 19.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நன்கொடை, ஆர்.கே.டபுள்யோ டெவலப்பர்ஸ், ஸ்கில் ரிலேட்டர்ஸ் மற்றும் தர்ஷன் டெவலப்பர்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் 2014-15 மற்றும் 2016 -17-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக லாபம் ஈட்டும் நிறுவனங்கள் அதன் நிகர லாபத்தில் 7.5% வரை நன்கொடை வழங்கச் சட்ட விதிகள் அனுமதிக்கிறது. ஆனால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகவோ அல்லது வழங்கும் நன்கொடையை விட குறைந்த லாபம் ஈட்டியதாகவோ இருக்கக்கூடாது. 

கட்சிகளுக்கு நன்கொடை

ஆனால், டிஹெச்எஃப்எல் நிறுவனம், கடந்த பல மாதங்களாகவே கடும் நிதி சிக்கலைச் சந்தித்து வந்தது. இந்த நிலையில், அதன் நிதி நெருக்கடிக்குக்  காரணம் என்ன என்பதும், வங்கிகளிடம் கடனாக வாங்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் எங்கே மடைமாற்றி விடப்பட்டது என்பதும் தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல் மூலம் அம்பலமாகி உள்ளது. 

பல்வேறு வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மூலம்  டிஹெச்எஃப்எல் குழுமம் வாங்கியுள்ள கடன் சுமார் 97,000 கோடி ரூபாய் இருக்கும் என்றும், இதில் வங்கிகளிடம் வாங்கிய கடன் மட்டுமே 50,000 கோடி ரூபாய் இருக்கும் என்றும் தெரிவித்துள்ள கோப்ரா போஸ்ட், நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-யிடமிருந்து 11,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது. 

 எந்த ஒரு நிறுவனத்துக்குக் கடன் வழங்கும்போதும் சொத்து உத்தரவாதம் மட்டுமின்றி, கடன் பெறும் நிறுவனங்களின் தனிப்பட்ட உத்தரவாதமும் பெறப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இந்த நிறுவனம் வாங்கிய கடன் தொகை, போலி நிறுவனங்களுக்கும், குடிசை மாற்று திட்டங்களுக்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் திருப்பி விடப்பட்டதால், அந்தக் கடனைத் திரும்ப வாங்குவது என்பது அத்தனை சாத்தியமானது அல்ல. மக்களின் பணம் ஏறக்குறைய 1 லட்சம் கோடி ரூபாய், சூறையாடப்பட்டுவிட்டதாகவே கருத வேண்டும். 

டிஹெச்எஃப்எல்  நிறுவனத்தின் புரோமோட்டர்களாக செயல்பட்ட வதாவன்கள், மோசடியாக வந்த பணத்தை திருப்பி விடுவதற்காக 45 நிறுவனங்களைப் பயன்படுத்தி உள்ளனர். இந்த நிறுவனங்கள் 14,282 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளன. இதில் 34 நிறுவனங்கள் பெற்ற சுமார் 10,500 கோடி ரூபாய் கடன் எவ்வித உத்தரவாதமும் இல்லாத பாதுகாப்பற்ற கடன்கள். இதில் 34 நிறுவனங்களில் 11 நிறுவனங்கள் ஷகானா குழுமத்துக்குச் சொந்தமானவை என்பதோடு, அவை 3,800 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளதும் புலனாய்வில் தெரியவந்துள்ளதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. இந்த ஷாகானா குழுமத்தின் பிரதான பங்குதாரர் முன்னாள் சிவசேனா எம்.எல்.ஏ-வான தால்வி ஷிவ்ராம் கோபால் ஆவார். அதேபோன்று இந்தக் குழும கம்பெனிகளின் இயக்குநர்களில் ஒருவரான ஜிதேந்திரா ஜெயின், பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பதோடு, நீதிமன்றக் காவலிலும் இருந்தவர். 

போலி நிறுவனங்களுக்கு கடன்

மேற்கூறிய 34 நிறுவனங்களுக்கும் எவ்வித தொழிலோ அல்லது வருமானமோ கிடையாது. வெறும் 1 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டதாகவே காண்பிக்கப்பட்டுள்ளன. அதேசமயம்,  பெரிய அளவில் வரவு செலவு நடைபெற்றது போன்ற கணக்கு அறிக்கையை, ஆடிட்டரால் தணிக்கை செய்யப்பட்டது போன்று, அதற்கென்றே இருக்கும் ஏஜென்சிகள் மூலம் பெற்று தாக்கல் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவற்றுக்கு ஒரே முகவரியே கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களும் அதே பாணியில்தான் கொடுக்கப்பட்டுள்ளன.  

இது ஒருபுறம் இருக்க, டிஹெச்எஃப்எல் நிறுவனமும் தனது நிதி நிலை அறிக்கையில், தான் வழங்கும் கடன்கள் மற்றும் அதைத் திருப்ப செலுத்துவதற்கான நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டது.  மேலும், இந்தக் கடன் மோசடியில் அரசியல் தொடர்பு இருப்பதும் அம்பலமாகி உள்ளது. டிஹெச்எஃப்எல் நிறுவனம் வழங்கிய கடனில் சுமார் 1,160 கோடி ரூபாய் குஜராத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு, அவை மேற்கொண்ட புராஜக்ட்டுகளுக்காக வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாகவும் கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது. 

குற்றச்சாட்டுக்கு மறுப்பு 

இந்த நிலையில், மேற்கூறிய நிதி மோசடி குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தையில் டிஹெச்எஃப்எல் பங்கின் விலை செவ்வாய்க்கிழமை 11 சதவிகிதம் சரிந்து, 164.50 ரூபாய் என்ற நிலைக்குச் சரிந்து, வர்த்தக முடிவில் 170.05 ரூபாயில் நிலைகொண்டது. 

இதனிடையே தங்கள் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டை  மறுத்துள்ள டிஹெச்எஃப்எல் நிறுவனம், இவை அடிப்படை ஆதாரமற்றது என்றும், தீய நோக்கமுடையது என்றும் தெரிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்