அரசு சம்பளம் வாங்கிய போலி மருத்துவர்... மரணங்களுக்குக் காரணமானவர் கைது! | A nurse trainer has been a doctor for one year

வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (31/01/2019)

கடைசி தொடர்பு:17:01 (31/01/2019)

அரசு சம்பளம் வாங்கிய போலி மருத்துவர்... மரணங்களுக்குக் காரணமானவர் கைது!

அரசு கொடுக்கும் பணத்தில்தான் இந்தப் போலி மருத்துவருக்கும் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். இந்த நிறுவனம் வேலைக்கு அமர்த்திய அனைத்து மருத்துவர்களின் நம்பகத்தன்மை தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.

அரசு சம்பளம் வாங்கிய போலி மருத்துவர்... மரணங்களுக்குக் காரணமானவர் கைது!

``அரசு அவசர சிகிச்சைப் பிரிவில் போலி டாக்டர்! - பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மகன்?'' -  என்று 23.1.19 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். செவிலியர் பயிற்சி பெற்ற ஒருவர், ஒரு வருட காலத்துக்குப் போலி மருத்துவராகப் பணியாற்றியிருக்கிறார். குறைந்தபட்சம் அவருடைய சான்றிதழ்களைக்கூடச் சரிபார்க்கவில்லை, அவரை வேலைக்குச் சேர்த்த நிறுவனம். இதுதான் பல உயிர்கள் பறிபோக காரணம் என்கிறார்கள், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இத்தனைக்கும் காரணமாகப் போலி மருத்துவர் ரேச்சல் ஜெனிபர், தற்போது தேனாம்பேட்டை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

போலி மருத்துவர்

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில், நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்குவோருக்கு உடனடியாகச் சிகிச்சை அளிப்பதற்கான அரசு அவசரச் சிகிச்சை மையம் இயங்கிவருகிறது. அந்த அவசர சிகிச்சை மையத்துக்கு, ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்துவருகிறது, சென்னையில் இயங்கிவரும் ‘GVK EMRI’ என்ற நிறுவனம். அவர்கள்தான் ரேச்சல் ஜெனிபர் என்பவரை அந்த மருத்துவமனையில் வேலைக்குச் சேர்த்துள்ளனர். சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினர் இவர்மீது நீலாங்கரை காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கொடுத்துள்ளனர். ஆனால், உடனடியாக இவர்கள் புகாரைப் பெற்றுக்கொள்ளாமல், காலந்தாழ்த்தியது காவல் துறை. இதற்குள் ஜெனிபரை வேலைக்குச் சேர்த்த 'GVK EMRI' நிறுவனம், தங்களை ஏமாற்றி வேலைக்குச் சேர்ந்துவிட்டதாக ஜெனிபர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஜெனிபரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். ``தினேஷ், வாசுதேவன் மற்றும் சிவகுருநாதன் என்ற மூன்று மருத்துவர்கள்தான் தன்னை வேலைக்குச் சேர்த்தார்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து, நேற்று (30.1.19) ஜெனிபரைக் கைதுசெய்திருக்கிறோம். அவர்மீது 419, 420, 465, 468 மற்றும் 471 உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் அவர்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும், மருத்துவச் சட்டத்தின் அடிப்படையிலும், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஜெனிபரை வேலைக்குச் சேர்த்த மூன்று மருத்துவர்களிடமும் அடுத்தடுத்து விசாரணை நடத்தப்படும். ஜெனிபர் சொன்னது உண்மையானால், அவர்களும் கைது செய்யப்படுவார்கள்'' என்றார் இன்ஸ்பெக்டர் விஜயகுமார்.

வழக்கறிஞர் பாலாஜி

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் ஜெனிபர் வேலை செய்தபோது கிட்டத்தட்ட 12 பேர் இறந்திருக்கிறார்கள். ``தற்போது இறந்தவரின் குடும்பம் இதுகுறித்து பேசத் தயாராக இருக்கிறது" என்கிறார், சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் வழக்கறிஞர் பாலாஜி. மேலும் அவர் கூறுகையில், '' `GVK EMRI' நிறுவனம் ஜெனிபர் குறித்த விவரங்களை அழித்துவருகிறது. இதுகுறித்தும் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2018 மார்ச் மாதமே ஜெனிபர் மீது சிலர் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதையெல்லாம் மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. இதனால், பல உயிர்கள் போயிருக்கின்றன. இதுகுறித்த விசாரணையில் உள்ளோம். ஜெனிபரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் நிறுவனத்தின் பின்னணி பெரியது. இ.சி.சி., தாய் உள்ளிட்ட அரசு மருத்துவச் சேவைகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் இடத்தில் இருக்கும் ஒரே தனியார் நிறுவனம், இதுமட்டும்தான். கிட்டத்தட்ட 1,400 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் இவர்களுக்கு மட்டுமே செல்கிறது. அரசு கொடுக்கும் பணத்தில்தான் இந்தப் போலி மருத்துவருக்கும் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். இந்த நிறுவனம் வேலைக்கு அமர்த்திய அனைத்து மருத்துவர்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகி இருக்கிறது'' என்றார்.

``பி.எஸ்.சி நர்ஸிங் படித்தவர்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும்போது பிரிஷ்க்ரிப்ஷன் எழுதலாம் என்று சொல்லி, என்னை தினேஷ் வேலைக்குச் சேர்த்தார். அவர் எனக்கு அனுப்பிய மெயிலும் என்னிடம் இருக்கிறது. என்னிடம் உரிய முறையில் விளக்கம் கேட்காமல் போலீஸில் புகார் செய்திருக்கின்றனர்'' என்று ஜெனிபர் நம்மிடம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


டிரெண்டிங் @ விகடன்