"போலீஸ் பாதுகாப்புடன் சந்தோஷமாக இருக்கிறேன்" - கனகதுர்கா | come back my happiest life says kanaga durga

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (07/02/2019)

கடைசி தொடர்பு:20:10 (07/02/2019)

"போலீஸ் பாதுகாப்புடன் சந்தோஷமாக இருக்கிறேன்" - கனகதுர்கா

 சபரிமலை ஐய்யப்பன்  கோவிலுக்குச்  சென்ற  கனகதுர்கா

ச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பாதுகாப்புடன் அனுப்பிவைத்தது கேரள அரசு. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இருவரையும் எதிர்த்து தாக்குதல் நடத்த முயற்சிகளும் நடந்தன. இதையடுத்து கனகதுர்கா, வீட்டிற்குக்கூட செல்லமுடியாமல் போலீஸ் பாதுகாப்பில் இருந்துவந்தார். பதற்றம் தணிந்து, தனது மாமியார் வீட்டுக்குச் சென்ற கனக துர்காவை, அவருடைய மாமியார் மற்றும் கணவரும், வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி, வீட்டை விட்டு விரட்டினர். அதோடு, 'கோயிலுக்குள் நுழைந்து பாவம் செய்துவிட்டாய். எனவே, பகிரங்கமாக பொது இடத்தில் மன்னிப்பு கேட்டால் மட்டுமே அனுமதி என்றும் வீட்டுக்குள் வரக் கூடாது என்றும் தடுத்தனர்.  

 அதன்பிறகு, 'எந்த நிலையிலும் நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்' என்று கனக துர்கா கூறியிருந்தார். அதோடு, கனக துர்காவை அவருடைய மாமியார் அடித்துத் துன்புறுத்தினார். அந்தத் தாக்குதலில் காயமடைந்த கனகதுர்கா, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால், வீட்டுக்குள் நுழைவதற்கு உரிமை கோரி, நீதிமன்றத்தில் கனகதுர்கா வழக்குத் தொடர்ந்திருந்தார். அதேபோன்று, அவருடைய மாமியார் சுமதி அம்மாவும், தனது மருமகள் வீட்டுக்குள் நுழையத் தடை விதிக்கக் கோரி  நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த நிலையில், குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நேற்று ( 7.2.2019) அதிரடியாக ஒரு தீர்ப்பை அளித்துள்ளது .அதில், கனக துர்கா அவருடைய கணவரின் வீட்டில் வசிப்பதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளது என்று கூறியது.இந்த உத்தரவையடுத்து, கனக துர்காவின் கணவர் கிருஷ்ணமுன்னி, குழந்தை மற்றும் தனது அம்மாவுடன் வீட்டை விட்டு வெளியேறி வீட்டுச் சாவியை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, கனக துர்கா போலீஸ் பாதுகாப்புடன் அவருடைய கணவரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். 

இதுகுறித்து அவரிடம் பேசியபோது, "போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு வந்திருக்கிறேன். நான் வீட்டுக்குள்  நுழைவதற்கு முன்பாகவே என்னுடைய கணவர், மாமியார், குழந்தையை அழைத்துக்கொண்டு வேறு இடத்திற்குச் சென்று வீடு எடுத்துத் தங்கியுள்ளார்.  இது எனக்கு மட்டும் கிடைத்த தீர்ப்பு அல்ல, ஒட்டுமொத்த பெண்களுக்கே கிடைத்த தீர்ப்பு. தற்போது, போலீஸ் பாதுகாப்புடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். நிறைய சவால்களை எதிர்கொண்டு, தற்போதுதான் இயல்பான வாழ்கையை வாழ்த்தொடங்கியுள்ளேன். அதனால் எனது  சந்தோஷம் மீண்டும் திரும்பியுள்ளது. இதற்கிடையே, மீண்டும் சபரிமலைக்குச் செல்ல உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, அடுத்த சீசன் வரும்போது கட்டாயம் சபரி மலைக்குச் செல்வேன்" என்றார்