திடீர் ரத்து, பயணிகள் அலைக்கழிப்பு: ஜெட் ஏர்வேஸ், இண்டிகோவில் தள்ளாட்டம் ஏன்?! | Jet Airways, IndiGo flights cancelled, fliers resort to high last-minute fares

வெளியிடப்பட்ட நேரம்: 16:59 (13/02/2019)

கடைசி தொடர்பு:16:59 (13/02/2019)

திடீர் ரத்து, பயணிகள் அலைக்கழிப்பு: ஜெட் ஏர்வேஸ், இண்டிகோவில் தள்ளாட்டம் ஏன்?!

மதுரை விமான நிலையத்தில் பணியாற்றி வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானப் பராமரிப்பு இன்ஜினீயரை ராஜினாமா செய்யும்படி கோரியதாகவும், அவ்வாறு ராஜினாமா செய்யாவிட்டால் அவருக்குப் பணி நீக்க உத்தரவு வழங்கப்படும் என்றும், அப்படி வழங்கப்பட்டால் அது அவரது பணி வாழ்க்கையில் கரும்புள்ளியாக மாறிவிடும் என்றும் ஹெச்.ஆர் அதிகாரியால் மிரட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டி, நாடு முழுவதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 70 விமான பராமரிப்பு இன்ஜினீயர்கள், கடந்த வியாழக்கிழமையன்று "உடல் நலக்குறைவு" (sick) என்று கூறி ஒட்டு மொத்தமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்

விமானிகள், இன்ஜினீயர்களின் திடீர் விடுப்புப் போராட்டம், விமானிகள் பற்றாக்குறை, கடைசி நேரத்தில் ரத்தாகும் விமானச் சேவைகள் எனக் கடந்த சில தினங்களாக நடந்தேறும் அவலங்களால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் மீது, பயணிகள் தரப்பிலிருந்து அதிக புகார்கள் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஜெட் ஏர்வேஸ்

அதிகரிக்கும் நிதி நெருக்கடியால், விமானிகள் உள்ளிட்ட தனது ஊழியர்களுக்குச் சம்பளம் கூட சரிவர கொடுக்க முடியாமல் தவித்து வருகிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். இதனால் விமானிகள், அவ்வப்போது பணிக்கு வர மறுத்து விடுமுறையில் சென்று விடுகின்றனர். பின்னர் அவர்கள் தாஜா செய்யப்பட்டு, மீண்டும் பணிக்கு அழைத்து வரப்படுகின்றனர். இத்தகைய நெருக்கடியால், பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களிலிருந்து இயக்கப்படும் விமானச் சேவைகளை மட்டும் வைத்துக்கொண்டு, சிறு நகரங்களிலிருந்து இயக்கப்படும் சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது ஜெட் ஏர்வேஸ். 

அந்த வகையில், கடந்த வார இறுதியிலிருந்து மதுரை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் தனது சேவைகளை நிறுத்த ஜெட் ஏர்வேஸ் முடிவு செய்த நிலையில், ராய்ப்பூரிலிருந்தும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இம்பால் உள்ளிட்ட 4 இடங்களுக்குமான சேவைகளையும் நிறுத்தத் திட்டமிட்டிருந்தது. 

இன்ஜினீயர்கள் போராட்டம்

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் பணியாற்றி வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான பராமரிப்பு இன்ஜினீயரை ராஜினாமா செய்யும்படி கோரியதாகவும், ராஜினாமா செய்யாவிட்டால் அவருக்குப் பணி நீக்க உத்தரவு வழங்கப்படும் என்றும், அப்படி வழங்கப்பட்டால் அது அவரது பணி வாழ்க்கையில் கரும்புள்ளியாக மாறிவிடும் என்றும் ஹெச்.ஆர் அதிகாரியால் மிரட்டப்பட்டதாகத் தெரிகிறது. இதை எதிர்த்து நாடு முழுவதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 70 விமான பராமரிப்பு இன்ஜினீயர்கள், கடந்த வியாழக்கிழமை ``உடல் நலக்குறைவு" (sick) என்று கூறி ஒட்டு மொத்தமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மும்பை விமான நிலையத்தில் 20 பேர் பங்கேற்ற நிலையில், பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.

இதனால், முக்கிய விமான நிலையங்களிலிருந்து விமானங்களை இயக்க முடியாமல் தவித்தது ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம். அதைத் தொடர்ந்து இன்ஜினீயர்களுடன் நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அவர்கள் பணிக்குத் திரும்பினர். அதேசமயம், இந்தப் போராட்டம் காரணமாக பல விமானங்களைத் தாமதமாக இயக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஜெட் ஏர்வேஸ். 

குறைக்கப்படும் சேவைகள்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெட் ஏர்வேஸ் செய்தித்தொடர்பாளர், `அனைத்து விமான நிறுவனங்களுமே அவ்வப்போது தங்களது விமானச் சேவை இயக்கங்களை மறு ஆய்வு செய்வது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் லாபம் அதிகமாக கிடைக்கும் விமான வழித்தடங்கள் எவை, நஷ்டம் ஏற்படுவது எவை என ஆய்வு செய்தது. இதன் விளைவாக, 7 இடங்களிலிருந்து இயக்கப்படும் உள்நாட்டுச் சேவைகளைக் கைவிடுவது என முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் மும்பை, டெல்லி போன்ற இடங்களிலிருந்து கூடுதல் சேவைகளை இயக்க முடியும். இதனால், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைந்த அளவுக்கே இருக்கும். ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டே இந்த விஷயத்தை நாங்கள் கையாண்டுள்ளோம்’ என்றார். 

இதனிடையே ஜெட் ஏர்வேஸ் தனது விமான சேவைகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து படிப்படியாகக் குறைத்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் மும்பை விமான நிலையத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. பிப்ரவரி 7-ம் தேதி விமான வாடகைத் தொகையைச் செலுத்தாததற்காக அதன் 4 விமானங்கள் தரை இறக்கப்பட்டன. 

மும்பை விமான நிலையத்தில்...

இதனால், விமான சேவை ரத்து குறித்து முன்கூட்டியே தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை எனப் பயணிகள் புகார் தெரிவித்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால், மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. 

இண்டிகோவிலும் குழப்பம்

இதற்கிடையே, ஒரு காலத்தில் குறைந்த கட்டணம் மற்றும் லாபம் பார்க்கும் விமான நிறுவனமாகப் பெயரெடுத்த இண்டிகோ விமான நிறுவனமும் இதேபோன்ற நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதால், அந்த நிறுவனமும் விமானிகளின் பற்றாக்குறையால் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களிலிருந்து 30-க்கும் அதிகமான விமான சேவைகளை ரத்து செய்தது. இவற்றில் பெரும்பாலானவை கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னை விமான நிலையங்களிலிருந்து இயக்கப்படுபவை. கொல்கத்தாவிலிருந்து 8 சேவைகளும், ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து தலா 4 சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தச் சேவை ரத்து குறித்து கடைசி நேரத்தில் தகவல் தெரிவித்து, தங்களைப் பெரிதும் அவலத்துக்கு உள்ளாக்கியதாக இண்டிகோ மீது பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ரத்து செய்த விமானத்துக்குப் பதிலாக, கடைசி நேரத்தில் கொடுக்கப்படும் அதிகக் கட்டணச் சேவை விமானத்தில் செல்லுமாறும், அதில் விருப்பமில்லாவிட்டால் மாற்று ஏற்பாடாகச் செய்துள்ள அதிக பயண நேரம் ஆகக்கூடிய இணைப்பு விமான சேவையை (connecting flights) பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், இதனால் தாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பயணிகள் வேதனை தெரிவித்தனர். 

பல பயணிகள் ட்விட்டரில் இண்டிகோ விமான நிறுவனத்தைக் கடுமையாகத் திட்டியும்,விமர்சித்தும் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். 

இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், வானிலை காரணமாக விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், அதனாலேயே விமான சேவைகளை மாற்றியமைக்கும் நிலை ஏற்பட்டதாகவும் இண்டிகோ விளக்கமளித்துள்ளது. ஆனால், இந்த விளக்கத்தைப் பயணிகள் ஏற்கவில்லை.

இண்டிகோ மீதும் புகார்

ஆக மொத்தத்தில், ஏர் இந்தியாவைப் போன்று தனியார் விமான நிறுவனங்களும் தள்ளாடத் தொடங்கி விட்டன. மேலும் பல ஊர்களிலிருந்து விமான சேவைகள் மூடப்படுவதற்குள் பிரச்னை எங்கே என்பதைக் கண்டு அதைக் களையவும், உரிய சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முன் வரவேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்