தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நடக்கும் அந்த 7 விஷயங்கள்! | election date announcement before the 7 happening

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (16/02/2019)

கடைசி தொடர்பு:21:05 (16/02/2019)

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நடக்கும் அந்த 7 விஷயங்கள்!

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நடக்கும் அந்த 7 விஷயங்கள்!

நாடாளுமன்ற 16-வது மக்களவையின் (2014-2019) ஆயுள் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அல்லது நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் கலைக்கப்படும்போது அல்லது முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டால் குறிப்பிட்ட கால இடைவெளியில் பொதுத்தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் அஸ்திவாரம். தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அதிகாரம், கடமை, செயல்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவு. இதேபோல் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 14-வது பிரிவு, நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள் காலம் முடிவதற்கு முன், புதிய மக்களவை அமைப்பதற்கான தேர்தலை நடத்த வழிவகை செய்கிறது.

தேர்தல் ஆணையம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவில் பணியாளர்களையும், தேர்தல் நடத்துவதற்குத் தேவைப்படும் சாதனங்களையும் உரிய இடங்களுக்கு அனுப்பி, வாக்குப்பதிவை நடத்துவது என்பது மிகப்பெரும் சவால் நிறைந்த பணி. அதை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் முதலில் தொடங்கும். தேர்தலுடன் தொடர்புடைய அனைவருடனும் தேர்தல் ஆணையம் முதலில் ஆலோசனை நடத்தும். தொடர்புடைய துறைகள், நிறுவனங்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்படும். அமைதியாக வாக்குப்பதிவு நடத்த ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் ஆணையம் மேற்கொள்ளும். வாக்குப்பதிவு நடைபெறும் தேதிகளை உள்ளடக்கிய அட்டவணை போன்ற முக்கியமான விஷயங்களை முடிவு செய்வதற்காக, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளுடன் ஆலோசனையை எலக்‌ஷன் கமிஷன் நடத்துவது வழக்கம்.

இந்த அடிப்படையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த விரிவான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது ஆணையம். வாக்குப்பதிவு நடைபெறும் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு கீழ்க்கண்ட விஷயங்களை ஆணையம் கருத்தில் கொண்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்.

1. தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தும்.

2. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் கூட்டத்தை ஆணையம் கூட்டும். இதில் தேர்தலை  எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் நடத்துவதை உறுதி செய்வதற்குத் தேவையான உத்தரவுகள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும். 

3. மாநிலத் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், உள்துறைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாநில மற்றும் யூனியன் பிரதேச ஒருங்கிணைப்பு காவல்துறை அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். சட்டம் - ஒழுங்கு மதிப்பீடு, ஒவ்வொரு மாநிலத்தின் குறிப்பிட்ட பிரச்னைகள், மாநிலவாரியாக தேவைப்படும் மத்திய ஆயுதக் காவல்படையினர் போன்றவை பற்றியெல்லாம் இந்தக் கூட்டத்தில் விவாதிப்பார்கள். தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையின்கீழ் இந்தியா முழுவதும் தேர்தலை நடத்த அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் கோரப்படும்.

தேர்தல் - மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்

4. நாடு முழுவதும் நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையிலும், பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக, மத்திய, மாநில காவல்துறையினரை போதிய அளவுக்கு ஈடுபடுத்துவது அவசியமாகும். போலீஸ் படைகளைத் திரட்டுவது, அவர்களைப் பணியில் ஈடுபடுத்துவது, அதிகத் தொலைவு இல்லாத வகையில் காவல்படையினரை வேறு இடங்களுக்கு அனுப்புவது போன்றவை குறித்துத் திட்டமிடப்படும். இதற்காக உள்துறை அமைச்சகம், மத்திய ஆயுதக் காவல்படையினர், மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல்துறைகளின் ஒருங்கிணைப்பு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் பலசுற்று ஆலோசனைகளை நடத்தும். இந்தப் படையினரைத் திறம்படப் பயன்படுத்த எந்தெந்த வகைகளில் எல்லாம் ஒருங்கிணைப்புத் தேவை என்பது குறித்து மத்திய உள்துறைச் செயலாளருடனும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும். 

5.தகவல் தொடர்பு சாதனங்களை முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, தேசிய அளவில் தேர்தலுக்காக தகவல் அமைப்புத் திட்டத்தை உருவாக்குவது குறித்து தொலைத் தொடர்புத் துறைச் செயலாளருடனும், பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களின் உயர் அலுவலர்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விரிவான ஆலோசனை நடத்துவார்கள். 

6. ரயில்வே அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடனும், தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ளும். மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் மத்திய ஆயுதக் காவல் படையினரையும், காவல் துறையினரையும் எவ்வித இடையூறுமின்றி குறித்த காலத்தில் அனுப்பி வைப்பதற்குத் தேவைப்படும் சிறப்பு ரயில்கள் பற்றி அப்போது முடிவு செய்வார்கள்.

7. நாடு முழுவதும் வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில்தான் அமைக்கப்படும். தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதால், தேர்தல் தேதிகளை முடிவுசெய்யும் முன், பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வுகள் கருத்தில் கொள்ளப்படும். மத்திய மற்றும் மாநிலக் கல்வித்துறை நடத்தும் தேர்வுகள் பற்றிய அட்டவணைகளைக் கவனத்தில் கொண்டு, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் அதைக் கருத்தில் கொண்டும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் முக்கிய பண்டிகைகள், விழாக்கள் ஏதும் இல்லாதவாறும் பார்த்துக் கொள்ளப்படும். ஒருசில மாநிலங்களில் விவசாயப் பணிகள், பயிர் அறுவடை, பருவ மழை தொடர்பான விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை பற்றியும் தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அதற்கேற்ப தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இறுதி செய்வார்கள். ஒரு மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும், அந்த மாநிலத்தில் உள்ள சூழலைக் கருத்தில் கொண்டும் அந்த மாநிலத்தில் எத்தனை கட்டங்களாகத் தேர்தல் நடத்துவது என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close