ஜெயலலிதாவைத் திட்டிய பியூஷ் கோயல்; அ.தி.மு.க-வுடன் 'சீட்' பேரம்! | Piyush Goyal is holding a seat deal with AIADMK

வெளியிடப்பட்ட நேரம்: 10:12 (17/02/2019)

கடைசி தொடர்பு:10:12 (17/02/2019)

ஜெயலலிதாவைத் திட்டிய பியூஷ் கோயல்; அ.தி.மு.க-வுடன் 'சீட்' பேரம்!

ஜெயலலிதாவைத் திட்டிய பியூஷ் கோயல்; அ.தி.மு.க-வுடன் 'சீட்' பேரம்!

தேர்தல் மேகங்கள் சூழ ஆரம்பித்துவிட்டன. பி.ஜே.பி-யின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், டெல்லியில் இருந்து சென்னை வந்து, அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் பி. தங்கமணியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி முடித்திருக்கிறார். தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கிறார்கள். 

சென்னையில் தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் இல்லத்தில் நள்ளிரவுவரை சுமார் மூன்று மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. அதன்பின் உடனடியாக தனி விமானம் மூலம் டெல்லி சென்றுவிட்டார் பியூஷ் கோயல். அ.தி.மு.க.விடம் 12 தொகுதிகள் வரை கேட்டு, விடப்பிடியாகப் போராடி வருகிறது பி.ஜே.பி. இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த பியூஷ் கோயல் வருவார் என பி.ஜே.பி. வட்டாரம் சொல்லிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது அதிக இடங்களை அ.தி.மு.க-விடம் வாங்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் தனி விமானத்தில் வந்தெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். 

பியூஷ் கோயல்

யார் இந்த பியூஷ் கோயல்? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அ.தி.மு.க-வையும் இவர் எந்த அளவுக்கு திட்டித் தீர்த்தார் என்கிற வரலாற்றைப் பார்ப்போம். 2016 சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி. தனித்துப் போட்டியிட்டது. அப்போது பி.ஜே.பி-க்கு ஆதரவாக, தமிழகத்தில் பிரசாரம் செய்தார் பியூஷ் கோயல். அப்போது பி.ஜே.பி.யின் சென்னை அலுவலகத்தில் பியூஷ் கோயல் அளித்த பிரஸ்மீட் முக்கியத்துவம் வாய்ந்தது. 

மத்திய அரசின் உதய் மின் திட்டத்தை, முதல்வராக இருந்த ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். அந்தத் திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ப்பதற்காக, அப்போது மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பொறுப்பை வகித்த பியூஷ் கோயால், தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார். ஆனால், ஜெயலலிதா அவரையோ, மத்திய அரசையோ சட்டை செய்யவில்லை. அந்தக் கோபத்தை தன் பிரஸ்மீட்டில் எதிரொலித்தார் பியூஷ் கோயல்.

"இந்திய மாநிலங்களிலேயே தனி மாநிலமாக, தமிழ்நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே மத்திய அரசு அடைய முடியாத மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். தமிழக முதல்வரைச் சந்திக்க முடியவில்லை. அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களிடம் பலமுறை பேச முயன்றேன். எந்தப் பலனும் இல்லை. இந்தியாவின் 28 மாநிலங்களில் என்னால் சகஜமாகக் பேச முடியும். ஆனால், தமிழகத்தில்  மின்துறை அமைச்சர் எல்லா விஷயத்தையும் கேட்டுவிட்டு, 'அம்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன்' என்கிறார். அ.தி.மு.க. கட்சி எம்.பி-க்கள் யாரும் நாடாளுமன்றத்தில் வாயைக்கூட திறக்க முடியாது. சென்னையில் எழுதித்தரப்பட்ட உரையைத்தான் அவர்கள் அப்படியே படிப்பார்கள்.'' என ஜெயலலிதாவையும், அ.தி.மு.க-வையும் விளாசித் தள்ளினார்.

 அதே அ.தி.மு.க-விடம்தான், இப்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டுக்காக பேரம் பேசிக் கொண்டிருக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவையும், அ.தி.மு.க-வையும் எதிர்த்துவிட்டு, இப்போது கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்திச் சென்றுள்ளார். 

அப்போது, பியூஷ் கோயலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்,''தமிழக முதல்வரைச் சந்திக்க முடியவில்லை என்பது அப்பட்டமான குற்றச்சாட்டு. பியூஷ் கோயல், அரசியல் ஆதாயத்துக்காகப் பொய் சொல்கிறார்'' என்றார், இப்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம். அவரும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடியும் இப்போது, அதே பியூஷ் கோயலுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். இதையெல்லாம் சமாதியில் இருந்து எழுந்துவந்து ஜெயலலிதா பார்க்கவா போகிறார்? 

பியூஷ் கோயல்

1998 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, அ.தி.மு.க-வுடன் பி.ஜே.பி. கூட்டணி அமைத்தது. அப்போது பி.ஜே.பி. தலைவர்கள் அனைவருமே ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் வந்து சந்தித்துதான் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தங்கமணியும், வேலுமணியும் பியூஷ் கோயல் தங்கிய இடத்திற்குப் போய் சந்தித்து, இப்போது கூட்டணி பற்றிப் பேசியுள்ளனர். பெரியகட்சி என்ற அடிப்படையில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; அந்தக் கட்சியைத் தேடித்தான் கூட்டணிக் கட்சிகள் வந்து பேச்சு நடத்துவார்கள். ஆனால், அ.தி.மு.க-வோ இப்போது பி.ஜே.பி-யைத் தேடிப் போவது காலத்தின் கொடுமை. காரணம், கட்சியின் சக்திவாய்ந்த தலைவராக இருந்த ஜெயலலிதா உயிரோடு இல்லை. ஏன், பிரதமராக இருக்கும் மோடியே, கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பால் முதல்வர் பதவியில் நீக்கப்பட்டு, முதல்வர் பதவியில் இல்லாத ஜெயலலிதாவை அவரின் போயஸ் கார்டன் வீட்டிற்குத் தேடிச் சென்று பார்த்தார். அந்த ஆளுமை இப்போதைய அ.தி.மு.க. தலைவர்களிடம் இல்லை. வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் போன்றோர், போயஸ் கார்டனில் தவம் கிடந்த வரலாறுகள் எல்லாம் எடப்பாடிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் தெரியாதது அல்ல. ஜெயலலிதாவைவிட பிரதமர் மோடியிடம் இவர்களுக்கு பயம் அதிகம். 

எந்த முதல்வரைச் சந்திக்க முடியவில்லை என பியூஷ் கோயல் அன்றைக்குச் சொன்னாரோ, அவரை அடுத்த இரண்டே மாதத்தில் அதாவது, 2016 ஜூலையில் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். கோட்டையில் ஜெயலலிதாவைச் சந்தித்த பியூஷ் கோயல், ஊடகங்களைச் சந்திக்காமல் எஸ்கேப் ஆனார். ஏர்போர்ட்டில் அவரை ஒரு வழியாக மறித்தனர் பத்திரிகையாளர்கள். ''முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியவில்லை என முன்பு சொன்னீர்களே... இப்போது எப்படிச் சந்தித்தீர்கள்?'' என கேள்வி எழுப்பியபோது, ''வரலாற்றை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் எதிர்காலத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறேன்" என்றார். ஆம், எதிர்க்காலத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது பி.ஜே.பி.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close