`முகிலன் கடத்தப்பட்டிருக்கலாம்!’ - மனித உரிமை ஆணையத்தில் புகார் | where is mukilan - complaint filed in Human Rights Commission...

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (19/02/2019)

கடைசி தொடர்பு:19:30 (19/02/2019)

`முகிலன் கடத்தப்பட்டிருக்கலாம்!’ - மனித உரிமை ஆணையத்தில் புகார்

சூழலியல் போராளி முகிலன் காணாமல் போய் நான்கு நாள்கள் ஆன நிலையில், அவரை மீட்டுத் தரக் கோரி, மாநில மனித உரிமை ஆணையத்திற்கு சமூக ஆர்வலர்கள் புகார் மனுக்கள் அனுப்ப உள்ளனர் . 

சுற்றுச்சூழல் போராளியான முகிலன், நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுத் திரும்பியபோது, கடந்த 2017-ம்  ஆண்டு கூடங்குளம் போராட்ட வழக்குக்காக போலீஸாரால் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்பு வெளியில் வந்தவர், ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவந்தார். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம், சில காவல் துறை உயரதிகாரிகள்தான் என்றும், காவல் துறை, ஸ்டெர்லைட் வேதாந்தாவின் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நிகழ்த்தியதாகவும், அதற்கான வீடியோவையும் ஆவணங்களையும்   சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதன் பின் ஊருக்குத்  திரும்புவதற்காகக் கடந்த வெள்ளிக்கிழமை இரவு எழும்பூர் ரயில் நிலையம் வந்த முகிலன், காணாமல் போனார். 

மக்களின் போராட்டங்களுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வருவதால், அவரை யாராவது கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. அவரை ஆஜர்படுத்தக் கோரி, ஆட்கொணர்வு மனு தாக்கல்செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த விசாரணை வரும் 22 -ம் தேதி நடைபெற உள்ளது. முகிலனை மீட்டுத் தரக் கோரி, மாநில  மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் மனு அனுப்ப உள்ளதாகக் கூறியுள்ளார் மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன். இதுகுறித்துப் பேசியவர், காவல் துறை அதிகாரிகள் மற்றும்  தமிழக முதலமைச்சருக்குத் தெரிவித்த பிறகும், முகிலன் குறித்த எந்தத் தகவலும் இதுவரை  அரசு தரப்பிலிருந்து தரவில்லை. அவர் காணாமல் போய் நான்கு நாள்கள் ஆகிறது. அவருடைய நிலை என்ன என்பது குறித்து ஒரு தகவலும் இல்லை.இதனைத் தொடர்ந்துதான், இன்று மாநில மனித உரிமை ஆணையத்திற்கு முகிலனை மீட்டுத் தரக் கோரி புகார் மனு அனுப்பி உள்ளோம். எங்களுடைய அமைப்பு சார்பில் அந்தப் புகாரைத் தர முடியாது என்பதால், என்னுடைய சார்பில் தனிப்பட்ட நபரை வைத்து இந்தப் புகாரைக் கொடுக்க உள்ளேன்  என்றார். 

 

 


[X] Close

[X] Close