``2,000 ரூபாய் திட்டத்துக்கான பட்டியலில் கட்சிக்காரர்களே அதிகம்!’’ - புலம்பலில் அரசு ஊழியர்கள் | "2000 rupees scheme benefits mainly the party members!" accuses Government Officers

வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (23/02/2019)

கடைசி தொடர்பு:15:40 (23/02/2019)

``2,000 ரூபாய் திட்டத்துக்கான பட்டியலில் கட்சிக்காரர்களே அதிகம்!’’ - புலம்பலில் அரசு ஊழியர்கள்

``18 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பதாகத் தரவு சொல்கிறது. ஆனால், தமிழக அரசு 60 லட்சம் பேரை இந்தத் திட்டத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறது!"

``2,000 ரூபாய் திட்டத்துக்கான பட்டியலில் கட்சிக்காரர்களே அதிகம்!’’ - புலம்பலில் அரசு ஊழியர்கள்

வாக்காளர்களைக் கவர்வதற்காக இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடுகள் உள்ளிட்ட இலவசத் திட்டங்களை  தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் மாறிமாறி வழங்கி வந்தன. அந்த வரிசையில் தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், சிறப்பு நிதித் திட்டம் என்ற பெயரில் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு உதவியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது, தமிழக அரசு. இந்தத் திட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ரெக்கைக் கட்டிப் பறந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, வாக்காளர்களுக்கு மறைமுகமாக ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் முறையைத்தான் தற்போது நேரடியாகச் சிறப்பு நிதி திட்டம் என்ற பெயரில் கொடுக்கிறார்கள் என விமர்சனம் எழுந்துள்ளது.

இது ஒருபுறம் என்றால், மறுபுறம், தமிழக அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிராக சட்டப்பஞ்சாயத்து இயக்கம் எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையில், ``இது, அரசின் கொள்கை முடிவு. அதில், நீதிமன்றம் தலையிட முடியாது" என்று தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்து அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவர் சிவ.இளங்கோ பேசுகையில், ``இந்த வழக்கு விசாரணையின்போது ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தில் குழப்பம் உள்ளது என்ற வாதத்தை நாங்கள் வைத்தோம். குறிப்பாக, தற்போது அரசு சார்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள டேட்டா தவறு என்று கூறியிருந்தோம். 

தமிழக அரசு

மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி, உலக வங்கி ஆகியவை கொடுத்த அறிக்கையின்படி, '18 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்குக்சிவ இளங்கோ கீழ் இருப்பதாகத் தரவு சொல்கிறது. ஆனால், தமிழக அரசு 60 லட்சம் பேரை இந்தத் திட்டத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறது' என்றோம். அப்போது, அதுகுறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குத் தமிழக அரசு அளித்த பதில் மிகவும் வேடிக்கையானது. அதாவது, 110 வீதியின்கீழ் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள 60 லட்சம் பேருக்கு 2,000 ரூபாய் என அறிவித்துவிட்டு, நீதிமன்றத்தில் அப்படியே மாற்றி, வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள் மற்றும் ஏழைகளுக்கு இந்த நிதியைக் கொடுப்பதாகக் கூறினார் அரசுத் தரப்பு வழக்கறிஞர். அந்த வாதத்தை எதிர்த்து, '18  லட்சம் பேர்தான் அரசாங்கத்தின் பட்டியல்படி, இதில் ஏழைகள். மற்றவர்கள் எங்கிருந்து வந்தார்கள்' எனக் கேட்டோம். அதற்கு அரசுத் தரப்பில் இருந்து பதில் இல்லை. பின்னர், இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நீதிபதிகள், `இது, அரசாங்கத்தின் கொள்கை முடிவு. அதில் தலையிட முடியாது' என்று வழக்கைத் தள்ளுபடி செய்தனர். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளோம்" என்றார் .

இந்த நிலையில், 2000 ரூபாய் சிறப்பு நிதித் திட்டத்தில் பணியாற்றும் மாநகராட்சி பரப்புரை ஊழியர் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். ``இந்தத் திட்டத்தில் அரசு கொடுத்துள்ள  டேட்டா, சரியானது இல்லை. 1996-க்கு முன்பு எடுத்த பட்டியலைக் கொடுத்துள்ளது. அதில் கொடுக்கப்பட்ட விவரமும் முழுமையாக இல்லை. எடுத்துக்காட்டாக, 'முருகன் எட்டாவது தெரு என்று மட்டுமே உள்ளது. முழுமையான முகவரி விவரமில்லாமல் பட்டியல் இருக்கிறது. அதைவைத்து அந்த நபரை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அதே தெருவில் முருகன் என்ற பெயருடையோர் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில், எப்படி நாம் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களைக் கண்டுபிடிக்க முடியும்?

இது, ஒரு பிரச்னை என்றால், அப்படியே அந்த முகவரியைத் தேடிப்பிடித்து போனால் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள நபராகச் சொல்லப்படும் நபர் கார், பிளாட் என வசதியாக இருக்கிறார். இப்படியிருந்தால், எப்படி அவரை இந்த வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க முடியும்? குறிப்பாக ஒரு நகராட்சிக்கு, 19,000 பேர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள் என்று பட்டியலில் இருந்தால், அதில் 9,000 பேர் உண்மையாக வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள் இருப்பார்கள். எஞ்சிய 10,000 பேர் வசதியானவர்களாகவே இருக்கிறார்கள். அதேபோன்று, இந்தப் பட்டியலில் கட்சிக்காரர்களையும் சேர்த்து வருகிறார்கள். இதைப் பார்க்கும்போது, மிகப் பெரிய முறைகேடு நடக்கிறது என்பது நமக்குத் தெரிந்தது. அதனால் என்னுடைய வேலையே போனாலும் பரவாயில்லை என்று அரசாங்கம் கொடுத்த பட்டியலை அழித்துவிட்டு, இந்தப் பகுதியில் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள நபர்கள் இல்லை என்ற பட்டியலைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்" என்றார் சற்றே கவலையுடன்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close