இந்தியாவோ, பாகிஸ்தானோ போர் ஏற்படுத்தும் வலி ஒன்றுதான்! #SayNoToWar | Be it India or Pakistan pain remains the same

வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (28/02/2019)

கடைசி தொடர்பு:11:49 (03/03/2019)

இந்தியாவோ, பாகிஸ்தானோ போர் ஏற்படுத்தும் வலி ஒன்றுதான்! #SayNoToWar

போரில் சுடப்பட்டு, இறந்து சவப்பெட்டியில் வீடு திரும்பும் ராணுவ வீரன் மீது போர்த்தியிருக்கும் கொடியையும் அணிந்திருக்கும் சீருடையின் நிறத்தையும் மாற்றிவிட்டால் இந்தியாவோ, பாகிஸ்தானோ வலி ஒன்றுதான்.

இந்தியாவோ, பாகிஸ்தானோ போர் ஏற்படுத்தும் வலி ஒன்றுதான்! #SayNoToWar

70 ஆண்டுகளைக் கடந்தும் காஷ்மீர் மக்களைத் துரத்திக்கொண்டிருக்கிறது இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர். இரு நாடுகளுக்கும் இடையில் காஷ்மீர் மக்கள் மாட்டிக்கொண்டிருக்க, இந்தியத் துணைக் கண்டத்தின் மற்ற பகுதிகளும் இதற்கான விலையைக் கொடுத்து வருகின்றன. நான்கு பெரிய போர்களையும் ஆயிரக்கணக்கான எல்லை மீறல்களையும், லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளையும் இரண்டு நாடுகளும் இந்த 70 ஆண்டுகளில் சந்தித்துவிட்டன.

புல்வாமா தற்கொலைத் தாக்குதலில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 40 பேரைப் பலிகொடுத்த பின், பாகிஸ்தான் மீது தாக்குதலைத் தொடுத்தது இந்தியா. புல்வாமா தாக்குதலில் தொடங்கி சமீபத்திய நிகழ்வுகளின் தொடர்ச்சியில் அபிநந்தன் என்ற இந்தியப் போர் விமானி, பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளதோடு, `நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுதலை செய்யப்படுவார்’ எனவும் அறிவித்துள்ளார். எனினும், இரு நாடுகளும் போருக்காகத் தங்களைத் தயார் செய்துகொண்டிருக்கின்றன. 

மனித இனம் தோன்றியதிலிருந்து போர்கள் தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன. மதங்களுக்காக, இனங்களுக்காக, நிலத்துக்காக, செல்வத்துக்காக எனக் காலம்காலமாக நடந்த போர்கள் இன்றும் அதே காரணங்களின் அடிப்படையில் தொடர்கின்றன. பதிவு செய்யப்பட்ட மனித வரலாற்றில், மொத்தம் 8% ஆண்டுகளில் மட்டுமே மனிதர்கள் போரிடாமல் இருந்துள்ளனர். 

போர் வீரர்கள்

தற்போதைய இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நிகழ்வுகள் வெறும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான சண்டையாகச் சுருக்கிவிட முடியாது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் 70 ஆண்டுக்கால வரலாறு இருக்கிறது. பிரிவினையின்போது, தாங்கள் வாழ்ந்த பகுதியை விட்டு வெளியேறாமல், அங்கேயே வாழ விரும்பிய மதச்சிறுபான்மையினர் இருக்கின்றனர். போர் மூண்டால் சண்டை ராணுவங்களிடையே மட்டும் இருக்காது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பயிலும் காஷ்மீர் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களே இதற்குச் சாட்சி.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், பி.ஜே.பி இந்தச் சூழலைத் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துவதாக அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கர்நாடக பி.ஜே.பி தலைவர் எடியூரப்பா, `பாகிஸ்தான் மீதான தாக்குதல் கர்நாடகாவில் 22 தொகுதிகளுக்கு மேல் பெற்றுத் தரும்’ எனக் கூறியது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. போர் மூளும் அபாயத்தில் இரண்டு நாட்டு குடிமக்களும் இருக்கும்போது, பிரதமர் மோடி `உலகின் மிகப்பெரிய வீடியோ கான்பரன்சிங்’ என்று விளம்பரம் செய்து பி.ஜே.பி தொண்டர்களைச் சந்திக்கிறார். இந்திய வீரர் ஒருவர் பாகிஸ்தான் பிடியில் இருக்கும் நேரத்தில், பி.ஜே.பி தொண்டர்கள் #MeraBoothSabseMajboot என்ற உலகளாவிய ட்ரென்டிங் மூலம், `என் வாக்குச்சாவடி அனைவரையும்விட பலமானது’ என உறுதியெடுத்துத் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். 

70 ஆண்டுகளாகத் தொடர்ந்து, இரு நாட்டு மக்களிடமும் மற்ற நாடு மீது மேற்கொள்ளப்பட்ட வெறுப்பு பிரசாரங்கள் தற்போதைய சூழலில் அறுவடை செய்யப்பட்டுள்ளன. எனினும் இரு நாடுகளிலும் போருக்கு எதிரான பிரசாரங்களைப் பலர் முன்னெடுத்து வருகின்றனர். 

மோடி இம்ரான் கான்

போர் என்பது மனிதர்களை மனிதர்களே கொத்துக்கொத்தாகக் கொல்லும் செயல். அரசுகளைக் காப்பாற்றத் தோன்றிய மதங்களும், அரசர்களின் கதைகளை மட்டுமே கூறிய பண்டைய இலக்கியங்களும், போர்களை ஆண்மைக்குரிய, வீரமான செயலாக சித்திரித்துள்ளன. போர்களில் சாமானிய மனிதர்கள் உயிரிழப்பார்கள்; உடல் பாகங்களை இழப்பார்கள்; வீசப்படும் குண்டுகளுக்குக் குழந்தைகளுக்கோ, பெண்களுக்கோ வித்தியாசம் தெரியாது. ஆயுதங்களை விற்பவர்களையும் போருக்கான சூத்திரங்களை உருவாக்குபவர்களையும் தவிர மற்ற யாருக்கும் போர் எந்தப் பயனையும் தராது.         

போருக்கு எதிரான பிரசாரங்கள் மேற்கொள்பவர்களிடம் பயங்கரவாதத்தையும் எதிர்க்க வேண்டும் என்கிறார்கள். மனிதர்களின் மீது அன்பு செலுத்துபவர்கள் பிற மனிதர்களுக்கு எந்த வகையில் கொடூரம் நிகழ்ந்தாலும் எதிர்ப்பார்கள். பயங்கரவாதம் என்பது உதிரிகளாக இருக்கும் குழுக்கள் செய்வது மட்டுமல்ல, அமைப்பாக நிலைநிறுத்திக்கொண்டு மக்களை ஆளும் அரசுகள் மேற்கொள்ளும் தீவிரவாதத்தையும் எதிர்க்க வேண்டும். பாகிஸ்தான் அரசு பலுசிஸ்தான் பகுதியில் மேற்கொள்ளும் படுகொலைகளையும், இந்திய அரசு தண்டகாருண்ய காடுகளில் மேற்கொள்ளும் படுகொலைகளையும், இரு அரசுகளும் காஷ்மீரில் மேற்கொள்ளும் படுகொலைகளையும் நிச்சயம் எதிர்க்க வேண்டும். ஐ.நா சபையின் மனித உரிமைக்கான அமைப்பு காஷ்மீரில் நிகழும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பதிலை அளித்துள்ளன. `ஒத்துழைக்க முடியாது’ என்பதே அந்தப் பதில். 

காஷ்மீரின் கடும் குளிரில் மனிதர்கள் வரைந்து வைத்த கோட்டின் ஒரு பக்கம் நின்றுகொண்டு, கையில் துப்பாக்கியுடன், தனக்கு மேல் இருப்பவர்களின் கட்டளையை நிறைவேற்றுகிறான் சிப்பாய் ஒருவன். தனக்குக் கட்டளையிட்டவர்களால் எதிரி என அறிவிக்கப்பட்ட நாட்டின் கொடியைத் தாங்கிப் பிடித்து, ஆயுதம் ஏந்தி நிற்பவனை நோக்கிச் சுடுகிறான். இருவரும் சுடுவதில் ஒருவன் இறக்கிறான். இந்த முறைப்படுத்தப்பட்ட கொலைதான் போர். இதை இரண்டு அணுசக்தி நாடுகள் மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது.

புல்வாமா தாக்குதல்

போரில் சுடப்பட்டு, இறந்து சவப்பெட்டியில் வீடு திரும்பும் ராணுவ வீரன்மீது போர்த்தியிருக்கும் கொடியையும் அணிந்திருக்கும் சீருடையின் நிறத்தையும் மாற்றிவிட்டால் இந்தியாவோ, பாகிஸ்தானோ வலி ஒன்றுதான். மனித இறப்பும் ஒன்றுதான். நாகரிகம் அடைந்த இரு நாடுகளும், நாட்டு மக்களும் இதை உணர வேண்டும். 

நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவித்து, புல்வாமா தாக்குதல் விசாரணைக்குப் பாகிஸ்தான் ஒத்துழைப்பதாக அறிவித்திருக்கிறது. இதன்மூலம் போர் தடுக்கப்படும் என நம்பலாம். ராணுவங்கள் இல்லாத, போர்கள் இல்லாத உலகம் இன்னும் கனவாகவே இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close