மத்திய - மாநில அரசுகளின் புதிய வியூகம்... ஏழு பேரை விடுதலை செய்ய முடிவு? | Seven tamils convicted in Rajiv case will be released due to parliament election?

வெளியிடப்பட்ட நேரம்: 03:41 (04/03/2019)

கடைசி தொடர்பு:10:48 (04/03/2019)

மத்திய - மாநில அரசுகளின் புதிய வியூகம்... ஏழு பேரை விடுதலை செய்ய முடிவு?

மத்திய - மாநில அரசுகளின் புதிய வியூகம்... ஏழு பேரை விடுதலை செய்ய முடிவு?

``ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம்’’ என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

பேரறிவாளன்  உள்ளிட்ட ஏழுபேர் விடுதலை எப்போது

இதைத் தொடர்ந்து, சிறையில் உள்ள பேரறிவாளன், ``தமிழக அரசு தீர்மானம் இயற்றி இருக்கும் நிலையில், தங்களை விடுவிப்பதில் தாமதம் ஏன்? அதற்கான காரணம் என்ன?’’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஆளுநர் மாளிகைக்கு மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவுக்கும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. அதேநேரத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தன் மகனை விடுவிக்கக்கோரி தமிழகம் முழுவதும் அறப்பயணம் மேற்கொண்டார். இதேபோல் நளினி, முருகன் தரப்பிலிருந்தும் தங்களை விடுதலை செய்யக் கோரி குரல் கொடுத்து வந்தனர். அதோடு இருவரும் சிறையில் உண்ணாவிரதம் இருந்தும் பார்த்துவிட்டனர். ஆனாலும், ஆளுநர் பிடிகொடுப்பதாக இல்லை. 

 

அற்புத்ம்மாள் உண்ணாவிரதம்

இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசியபோது, ``ஏழுபேரை விடுதலை செய்யக்கோரி பல்வேறு வழிகளிலும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தோம். தமிழக அரசு இதுதொடர்பாகத் தீர்மானம் இயற்றி ஆறு மாத காலம் ஆகிவிட்டது. இந்தச் சூழலில் அரசுத் தரப்பிலிருந்து எங்களுக்குத் தற்போது ஒரு முக்கியத் தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், சிறையில் இருக்கும் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் வரும் (மார்ச்) 10-ம் தேதிக்குள் விடுதலை செய்யப்படலாம் என்பதுதான். முக்கியமான நபரிடம் இருந்து வந்த தகவல் இது என்பதால், மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்கிறோம். ஆளுங்கட்சி சார்பில் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெறுவதால், இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பதை தள்ளிப் போட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், ஏழு பேரையும் விடுதலை செய்து அரசின் மீதான மக்களின் நம்பிக்கையைப் பெறலாம் என்று கருதி, அவர்கள் இதுகுறித்து முடிவு எடுக்கலாம் என்று எண்ணுகிறோம். காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அது எங்களுக்கு முக்கியம் அல்ல. நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்தால் போதும்’’ என்றார். 

இதுதொடர்பாக பேரறிவாளன் வழக்கறிஞர் சிவக்குமார் கூறுகையில், ``இன்னும் எத்தனை போராட்டங்கள்தான் நடத்துவது என்று எங்களுக்கே தெரியவில்லை. மார்ச் 9-ம் தேதி, ஏழுபேரின் விடுதலையை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்த உள்ளோம். 

இந்தப் போராட்டத்துக்கு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம். இந்தப் போராட்டத்தின் முடிவில் சிறையில் உள்ள ஏழுபேரும் உறுதியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். அதேநேரத்தில் வரும் 10-ம் தேதிக்குள் அவர்களை விடுதலை செய்ய வாய்ப்பிருப்பதாக அரசுத் தரப்பிலிருந்து தகவல் வந்துகொண்டிருக்கிறது’’ என்றார். 

28 ஆண்டுக்காலம் சிறையில் இருந்து, கடுமையான சட்டப் போராட்டத்துக்கு கிடைக்காத ஏழு பேரின் விடுதலை, தேர்தல் ஆதாயத்துக்காகக் கிடைத்து, மனித அறத்தை மீட்கும் என்றால் அதுவும் நன்மைக்கே. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்..!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close