முகிலன் காணாமல் போனதன் பின்னணியில் விலகாத சில மர்மங்கள்! #WhereIsMugilan | Environmental activist Mugilan has been missing for the past few weeks and no one knows about his whereabouts

வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (04/03/2019)

கடைசி தொடர்பு:18:39 (04/03/2019)

முகிலன் காணாமல் போனதன் பின்னணியில் விலகாத சில மர்மங்கள்! #WhereIsMugilan

முகிலன் காணாமல் போக்கடிக்கப்பட்டதுக்குப் பின்னணியில் மணற்கொள்ளை கும்பல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாக ஒரு பக்கம் காவல்துறையும் மறுபக்கம் ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமமும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

முகிலன் காணாமல் போனதன் பின்னணியில் விலகாத சில மர்மங்கள்! #WhereIsMugilan

சூழலியலாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் ஆட்கொணர்வு மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், ஆஜரான சிபிசிஐடி தரப்பு இந்த வழக்கில் இதுவரை 148 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும், மக்களிடம் துண்டறிக்கைகள் கொடுக்கப்பட்டு இவரைக் கண்டால் தகவல் தெரிவிக்கும்படி சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சென்னை எழும்பூர் ரயில்வே காவல்நிலையம் இன்னும் அத்தனை கேமிரா காட்சிகளையும் ஒப்படைக்காத நிலையில் முகிலன் விவகாரத்தில் சரிவர எந்த முடிவுக்கும் செல்லமுடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. முகிலன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், சிபிசிஐடி விசாரணையும் சரிவர நடைபெறவில்லை என்றும் முகிலன் தொடர்பாக ஆசீர்வாதம் என்பவரிடம் விசாரிக்க வந்த சிபிசிஐடி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, ``செயற்பாட்டாளர் ஹென்றி டிபெய்ன் பெயரில் டிபெய்ன் என்றால் என்ன, வழக்கறிஞர் ஏன் கட்டணமில்லாமல் இந்த வழக்கை நடத்துகிறார்?” என்பது போன்ற கேள்விகளைதான் கேட்கிறார் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் உட்பட முழுவிவரத்துடன் வருகின்ற 18 மார்ச் 2019ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

முகிலன் 15 பிப்ரவரி 2019 அன்று சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக மிக முக்கிய வீடியோ ஆவணம் ஒன்றை வெளியிட்டார். மறுநாள் மதுரையில் சில பணிகள் இருந்ததால் அன்றிரவு சென்னை டு மதுரை மகால் விரைவு ரயிலில் அவர் பயணிப்பதாக இருந்தது. ஆனால், மறுநாள் அவர் மதுரை சென்றடையவில்லை. அதன் பிறகு முகிலன் காணவில்லை எனச் சொல்லப்பட்டு, 15 நாள்களுக்கும் மேலாகத் தேடப்பட்டு வருகிறார். எழும்பூர் ரயில்வே காவல் இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைத்துள்ளது. முகிலன் காணாமல் போனதற்கு என்னவெல்லாம் காரணம் இருந்திருக்கலாம் என்று பல கோணத்தில் சி.பி.சி.ஐ.டி தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது. தனிப்பட்ட அளவில் சமூக இயக்கங்கள் ஒன்றிணைந்து முகிலன் மீட்பு இயக்கம் அமைக்கப்பெற்று அதன் குழுவும் இதுபற்றி விசாரித்து வருகிறது. இதற்கிடையே முகிலன் காணாமல் போனது தொடர்பான சில கேள்விகள் இன்னும் விடை கிடைக்கப்பெறாத புதிர்களாகவே இருக்கின்றன. 

Where Is Mugilan

1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ ஆவணத்தை வெளியிட்ட முகிலன், பிப்ரவரி 15-ம் தேதி இரவு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு ரயில் ஏறினாரா, இல்லையா?

2. தன்னுடன் வந்த நண்பரைக் கரூருக்கு ரயில் ஏற்றிவிட்டு எழும்பூர் ரயில்வே நிலையத்திலிருந்து முகிலன் வெளியே வந்ததாக சி.சி.டி.வி கேமிரா காட்சிகள் சொல்கின்றன. அதன்பிறகு மீண்டும் அவர் ரயில் நிலையம் சென்றாரா, இல்லையா?

3. அவர் பயணிக்க இருந்த மகால் அதிவிரைவு ரயில் எழும்பூர் ரயில்நிலையத்தின் நான்காவது பிளாட்பாரத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. நான்காவது பிளாட்பாரத்தின் சிசிடிவி கேமிரா காட்சிகள் மட்டும் பதிவு செய்யப்படவில்லை என்று ரயில்வே போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. நான்காவது பிளாட்பார கேமிரா மட்டும் வேலை செய்யாதது ஏன்?

4. முகிலனின் அலைபேசி சிக்னல் ஒலக்கூர் அருகே தொடர்பை இழந்ததாகக் கூறப்படுகிறது. மேல்மருவத்தூர் ரயில்நிலையத்துக்கும் திண்டிவனம் ரயில்நிலையத்துக்கும் இடையே இருக்கும் ஒலக்கூரில் அவரது அலைபேசி தொடர்பு இழக்கக் காரணம் என்ன,  தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது நிகழ்த்தப்பட்டதா?

5. முகிலன் காணாமல் போக்கடிக்கப்பட்டதுக்குப் பின்னணியில் மணற்கொள்ளை கும்பல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாக ஒரு பக்கம் காவல்துறையும் மறுபக்கம் ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமமும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவர்களில் ஒரு தரப்புகூட அதிகாரபூர்வமாக வெளியே வந்து இது தொடர்பாக எவ்வித விளக்கமும் அளிக்காமல் மௌனம் காப்பது ஏன்?

6. ரயில்நிலையத்தை விட்டு வெளியே சென்ற முகிலன் ஓர் ஆட்டோ ஓட்டுநரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. யார் அந்த ஆட்டோ ஓட்டுநர், அவரிடம் முகிலன் என்ன பேசினார்?

7. `முகிலன் எங்கே?’ என்ற வெல்ஃபேர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் முகநூல் பதிவின் கீழ் திருப்பரங்குன்றம் காவல்துறை ஆய்வாளர் நாகராஜன் `சமாதி’ எனப் பதில் அளித்தது ஏன்?

8. முகிலன் மறுநாள் (16/02/2019) மதுரை சென்றடைந்தாரா, இல்லையா?

மேற்கண்ட கேள்விகளின் மர்மம் விலகினால் மட்டுமே காணாமல் போக்கடிக்கப்பட்ட முகிலனை விரைந்து மீட்க முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close