`பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் என்ன நடந்தது?’ ஒரு இன்ஃபோகிராப் பயணம்! #VikatanInfographic | The reason behind go back modi hashtag trending in twitter

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (07/03/2019)

கடைசி தொடர்பு:12:28 (16/03/2019)

`பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் என்ன நடந்தது?’ ஒரு இன்ஃபோகிராப் பயணம்! #VikatanInfographic

எந்த நாளில், #GoBackModi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில், இந்திய அளவில் ட்ரெண்டாகிறதோ, அந்த நாளில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

`பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் என்ன நடந்தது?’ ஒரு இன்ஃபோகிராப் பயணம்! #VikatanInfographic

பாரதப் பிரதமர் மோடி எப்போது தமிழகம் வருகிறார் என்பதைச் செய்தித்தாள்களில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. எந்த நாளில் #GoBackModi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில், இந்திய அளவில் டிரெண்டாகிறதோ, அந்த நாளில் பிரதமர் தமிழகம் வருகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தபோதும் இந்திய டிரெண்டிங்கில் இடம் பிடித்தது #GoBackModi ஹேஷ்டேக். சில சமயங்களில், இந்த ஹேஷ்டேக் உலக அளவிலான டிரெண்டிங்கிலும் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் தமிழகம் வரும்போதெல்லாம் #GoBackModi ஹேஷ்டேக் டிரெண்டாவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்...

பிரதமர் மோடி

இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் கொடிகட்டிப் பறக்கும் பி.ஜே.பி-க்கு, சிம்மசொப்பனமாக விளங்குவது தென் மாநிலங்கள்தான். அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பி.ஜே.பி-க்கான வாக்குகள், நோட்டாவுக்கும் கீழாகவே இருந்ததைப் பார்த்தோம். தமிழ்நாட்டில் மட்டும்தான் இதுபோன்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளதா என்றால், இல்லை என்பதுதான் பதில். 2016-ம் ஆண்டு கேரள சட்டமன்றத் தேர்தலின்போது, அங்குள்ள பழங்குடி குழந்தைகளின் இறப்பு விகிதத்தைச் சோமாலியாவோடு ஒப்பிட்டுப் பேசினார் பிரதமர் மோடி. இதனால் ஆத்திரமடைந்த கேரள மக்கள், தங்களின் எதிர்ப்பை ட்விட்டரில் காட்டினர். 2000-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான `நரஷிம்மன்’ படத்தில் வில்லனைப் பார்த்து `போ மோனே தினேஷா’ என்று மோகன்லால் சொல்லும் வசனம் கேரளத்தில் மிகவும் பிரபலம். அந்த வசனத்தைச் சற்று மாற்றி `போ மோனே மோடி’ என்று ஹேஷ்டேக் உருவாக்கி, ட்விட்டரில் உலக அளவில் டிரெண்ட் செய்து அதிரவிட்டனர் சேட்டன்கள். 

அதேபோல 2017-ம் ஆண்டு, கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ``கர்நாடகா மற்ற மாநிலங்களைவிட மிகவும் பின் தங்கியுள்ளது. வளர்ச்சியே அடையாத மாநிலமாக உள்ளது’’ என்று கூறினார். அதன் பின் காங்கிரஸ் கட்சியினர் `பரியோலு மோடி’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்க, கர்நாடக நெட்டிசன்களும் அதைப் பயன்படுத்தத் தொடங்கினர். கன்னட திரையுலகின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களுள் ஒன்றான `உபேந்திரா’வில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலின் முதல் வரியில் வரும் `பரி யோலு’ என்ற வார்த்தையைக் கொண்டு உருவாக்கிய ஹேஷ்டேக் என்பதால் சற்று நேரத்திலேயே இந்திய அளவில் டிரெண்டானது. கன்னடத்தில், `பரி யோலு’ என்றால் அனைத்தும் பொய் என்று அர்த்தமாம்.

go back modi

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஓரிரு முறைதான் இதுபோன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டானது. ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து #GoBackModi ஹேஷ்டேக் டிரெண்டாவதற்கான காரணம், `ஜல்லிக்கட்டு தொடங்கி பல்வேறு பிரச்னைகளில் தமிழகத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டதுதான்’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ``இந்த ஹேஷ்டேக், தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்டு, டிரெண்ட் செய்யப்படுகிறது. மக்கள் அனைவரும் பி.ஜே.பி பக்கம்தான் இருக்கிறார்கள்’’ என்று பி.ஜே.பி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், எந்தக் கட்சி சார்புமில்லாத சாமான்ய தமிழ் ட்விட்டர் வாசிகள் பலரும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்துவதால்தான் இந்திய அளவிலோ அல்லது உலக அளவிலோ இது டிரெண்டாகிறது என்ற எதிர்க் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கடந்த மூன்றுமுறை பிரதமர் தமிழகம் வந்தபோது, பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் #TNWelcomesModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தினர். அது ஒரு முறைகூட #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங்கில் முந்தவும் இல்லை, உலக அளவிலான டிரெண்டிங்கிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 2018-ம் ஆண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தாமதப்படுத்தியபோது, தமிழகத்தில் பி.ஜே.பி எதிர்ப்பு வலுத்திருந்தது. அந்தச் சமயத்தில் ராணுவத் தளவாடக் கண்காட்சியைத் திறந்து வைக்கச் சென்னை வந்தார் மோடி. எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டியதால், சென்னை விமான நிலையத்திலிருந்து வான்வழியாகவே ஹெலிகாப்டர் மூலம் ராணுவத் தளவாடத்துக்குச் சென்றார் பிரதமர். அப்போதுதான், முதல்முறையாக மிகப் பெரிய டிரெண்டானது #GoBackModi ஹேஷ்டேக். ஆட்சிக்கு வந்தபின், இதுவரை 11 முறை தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. குறிப்பாகத் தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில், கடந்த 65 நாள்களுக்குள்ளாக மட்டும் நான்கு முறை தமிழகம் வந்துள்ளார். இந்த 11 முறையில், ஒருமுறை மட்டுமே மக்கள் பிரச்னைக்காக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது மட்டும் சேதமடைந்த இடங்களைப் பார்வையிட்டார். அதன்பின், கஜா புயல் தவிர்த்து, தமிழகத்தில் நடைபெற்ற எந்தயொரு துயரச் சம்பவத்துக்கும், அவர் ட்விட்டரில்கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. 

பிரதமர் மோடி

கர்நாடக பெருமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்தனை, ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு வருத்தம், உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்காக வருத்தம், போர்ச்சுகல் நாட்டில் காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களுக்கு வருத்தம், மாஸ்கோ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வருத்தம் எனப் பல்வேறு ட்வீட்களை பதிவு செய்த பிரதமர், டெல்லியில் 150 நாள்களுக்கும் மேலாகப் போராடிய தமிழக விவசாயிகளுக்காக, நீட் தேர்வால் மரணமடைந்த அனிதா மற்றும் பிரதீபாவுக்காக, ராமநாதபுரம் மீனவர்களுக்காக, தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்காக, குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக எனத் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட எவருக்காகவும் வாய்திறக்கவில்லை. இவை அனைத்தையும் மனதில் கொண்டுதான் #GoBackModi ஹேஷ்டேக்கை மிகப் பெரிய அளவில் தமிழக மக்கள் டிரெண்ட் செய்கிறார்கள் என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் பதிவு செய்கின்றன. 

1957-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்போதைய பிரதமர் நேரு, தமிழகம் வந்தபோது, தமிழ்நாட்டின் தலைவர்கள் மீது குற்றம்சாட்டினார் என்பதற்காகத் தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டினர். அதேபோல 1977-ம் ஆண்டு எமெர்ஜென்சிக்குப் பின் சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களுக்கு வந்த  காங்கிரஸ் கட்சித் தலைவரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்திக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. ஆனால், அந்த இரு தலைவர்களுமே, கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த பின்பும் அதே ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தில் அமோக வெற்றிபெற்றனர். இது பிரதமர் மோடி விஷயத்தில் நடைபெறாது என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பி.ஜே.பி வெற்றிபெறுவது என்பது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close